ஆலய வரலாறு
புங்குடுதீவு மடத்துவெளி கிராமத்தில் இன்று ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலாக கோலோச்சிக்கொண்டிருக்கும் சிங்காரவேலனின் சந்நிதி ஆரம்ப காலத்தில் இருந்தே ”இளந்தாரி நாச்சிமார் கோவில் என்ற தொன்மை பெயர் கொண்டழைக்கப்படடதாகும் . இவ்வாலயத்தின் வரலாறு பற்றிய தகவல்களை திட்டவட்டமாக பெற்றுக்கொள்ளமுடியாத போதிலும் இவ்வாலயம் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளிநாச்சியார் என்னும் பெண்மணி அயல் கிராமத்திலிருந்து மடத்துவெளிக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின் மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து அவ்வீட்டில் மூன்றுநாட்கள் தங்க வைக்கப்.பட்டிருந்தார்
மூன்று தங்கியிருந்த வள்ளி நாச்சியார் மூன்றாம் நாள் காலையில் வீட்டின் முன்புற வயலில் இறங்கியபோது அவ்வயல் சொந்தக்காரர் அவளை வயலில் இறங்கவிடாது தடுத்ததோடு ”நீர் புகுந்தவீடு எங்களுடன் சேர்ந்துவாழும் தரமுடையதல்ல” என்றும் ஏளனம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த வள்ளிநாச்சியார் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் பார்க்கும் இம்மண்ணிற்கு தான் மருமகளாக இருக்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தனது தாலியைக் கழற்றி தான் நின்ற வரம்பில் காணப்பட்ட கல் ஒன்றின் மீது வைத்து ஒரு சிரட்டையால் மூடிவிட்டுப் பிறந்தகம் சென்றார் என்றும் இதனால் வேதனையுற்ற அவரது கணவர் சாதியெனும் பெயரால் தான் தாழ்த்தி ஒடுக்கப்படும் நிலை தனது மனைவிக்கும் ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்தில் அத்தாலி இருந்த கல்லையே நாச்சியாராகப் பாவனை செய்து வழிபட்டு வந்தார் என்றும், அவர் மறுமணம் செய்யாது நாச்சியாரை வழிபட்டு வந்தமையால் ”இளந்தாரி நாச்சிமார் கோவில்” என்ற பெயர் வந்துள்ளது என்றும் மூதாதையர்கள் கூறுகின்றார். இதனை ஒரு கர்ணபரம்பரைக் கதையாகவே கெள்ளமுடியும்.
இளந்தாரி நாச்சிமார் ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலத்தில் அமைந்தமையாலும், வள்ளிநாச்சியாரின் இல்லறவாழ்வு அஸ்தமனமாவதற்கு வயலே காரணமாக அமைந்தமையாலும் வயலூர் நாச்சிமார் கோவில் எனவும் பின்னர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அக்கோவிலின் தெற்குப்புறத்தில் பாரிய அரசமரம் ஒன்று நிழல் பரப்பி நின்றுள்ளது. இம்மரத்தில் நாகபாம்பு ஒன்று பள்ளி கொண்டிந்ததாகவும், இவ்வரசமரத்தின் வேரானது பக்கத்தில் இருந்த சுண்ணாம்புக் கல்லிலான மடப்பள்ளிக் கட்டிடத்தினுள் ஊடுருவிக் கை கால்களைக் கொண்ட ஒரு மனித உருவில் காட்சி தந்ததாகவும் கண்டவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாலயப் புனரமைப்பின்போது இம்மரம் வெட்டி அழிக்கப்பட்டது. இவ்வரசமரம் இங்கிருந்தால் இளந்தாரி நாச்சிமாரின் வரலாற்றைக் கூறும் ஓர் ஆதராமாக இருந்திருக்கும்.
இவ்வாலயம் 1960 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் புனரமைப்புச் செய்யப்பட்டது. இதன் உரித்துடையாளராக திரு. வேலுப்பிள்ளை சபாபதிப்பிள்ளை அவர்கள் காணப்படுகின்றார். இவ்வாலயம் அமைந்திருந்த காணியின் உடைமையாளராக இவர் காணப்பட்டுள்ளார். . இந்நிலையில் இக்கிராமத்தைச் சேரந்த யாழ். பிரபல வர்த்தகர் திரு. வி. அருணாசலம் அவர்கள் முன்வந்து ஆலயத்தைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டார். பழைய ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டுப் பிரமாண்டமான வகையில் புனரமைக்கப்பட்டது. கருவறையில் முருகப்பெருமானின் வேலாயுதமும், ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நாச்சிமாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இத்துடன் இவ்வாலயத்தின் பெயரும் மடத்துவெளி ”ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில்” எனப்பெயர் மாற்றம் செய்யபட்டது. ஆலயத்தின் நித்திய,நைமித்திய பூசைகளில் நேர ஒழுங்கு இறுக்கமாகக் கடைப்பிடிக்கபட்டது. இதனால் அவ்வாலயம் சின்ன நல்லூர் என்று அழைக்கப்படும் அளவிற்குப் பிரபல்யம் அடைந்தது. இவ்வாலயத்தை சிறந்த முறையில் புனரமைத்ததோடு, நேர ஒழுங்கினைக் கொண்ட ஒரு சிறப்பான பூசைமுறையினையும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஆலயத்தின் வரலாற்றில் திரு.வி.அருணாசலம் அவர்கள் என்றும் நிலைத்து நிற்கின்றார்.இவரது கடடமைப்பின்படி காலை 5 மணி . மதியம் 11 மணி , மாலை 5 மணி என மூன்றுவேளைகளில் ஆயத்தமணி ஒலிக்கும் .அதேபோல காலை 6 மணி . மதியம் 12 மணி . மாலை 6 மணி வேளைகளில் பூசை மணிஒலிக்க மூன்று வேளை நித்திய பூசை நடைபெறும் . ,திருவிழாக்காலங்களில் பகல் இரவு திருவிழாவுக்கென நேர அடடவனை தயாரிக்கப்பட்டுநிமிசக்கணக்கில் கூட தவறாமல் பார்த்துக்கொள்ளும் ஆன்மீகச்செம்மல் திரு.அவர்கள் .காலை மாலை திருவிழாவில் கூட்டுப்பிரார்த்தனை மங்கலவாத்தியம் கொடிஸ்தம்பபூசை வசந்தமண்டபபூசை தீபாராதனை . .சுவாமி எழுந்தருளல் இருப்புக்கு வருதல் என அச்சோதடாக நீராடடவனைப்படி நிகழும் வகையில் ஒழுங்கு படுத்தியிருப்பார் . காலையும் மாலையும் 12 மணிக்கு முடிவுறும் நியமம் உண்டு
இவரைத் தொடர்ந்து அவ்வாலயத்தின் திருப்பணிகளை முன்னெடுத்துச் சென்றவர் கொழும்பு பிரபல வர்த்தகர் திரு.வி.இராமநாதன் அவர்கள். இவருக்கு இக்கிராமமக்கள், மடத்துவெளி சனசமூக நிலைய இளைஞர்கள் ஆகியோர் பக்கத்துணையாக இருந்துள்ளனர். இக்காலப்பகுதியில் ஆலயத்திற்கு ஒரு பரிபாலனசபை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஆசிரியர் திரு. இ.குலசேகரம்பிள்ளை அவர்களும், செயலாளராக திரு.க.தியாகராசா ஆசிரியா் அவர்களும், பொருளாளராக திரு.அ.ப.பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு.வ.வே.இளையதம்பி, திரு.இரட்ணசபாபதி ஆசிரியர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நீண்டகாலம் தொடர்ந்து கடமையாற்றியுள்ளனர். இச்சபையின் போஷகராக திரு. வி.இராமநாதன் அவர்கள் இருந்துள்ளார். ஆலயத்திருப்பணி வேலைகள் இச்சபையினூடாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. ஆலயத்தைச் சுற்றி உட்கொட்டகை, சித்திரத்தேர், தேர்முட்டி பிரதானவீதியிலஇருந்து ஆலயத்துக்கான வீதி அன்னதானமடம் போன்ற பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புங்குடுதீவிலேயே முதன்முதலில் முழுசித்திரத்தேர் இந்த ஆலயத்தில் ஓடியது என்ற பெருமைக்குரியது .இவ்வாலயத்தில் பல்லாண்டுகளாக சிறந்தததொரு கூட்டுப்பிரார்த்தனை சபை திரு க.அம்பலவாணர் அவர்களின் ஒருங்கிணைப்பில் பஜனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது பின்வந்த காலங்களில் ந. . தர்மபாலன் து. இரவீந்திரன் தலைமையின் கீழும் நிர்வாகம் இயங்கி .வந்தது ,ஆலயத்தின் பல்லாண்டு கால நிர்வாக சபைகளில் பின்வருவோரும் இணைந்து ஆலயத்தின் வளர்ச்சிக்கு . வழி சமைத்தனர் வே சபாபதி.எ.வீ+..இளையதம்பி வ.வே .இளையதம்பி வி .அருணாசலம் .இ குலசேகரம்பிள்ளை க தியாகராசா அ .ப.பாலசுப்பிரமணியம் வி. சுப்பிரமணியம் வி..அம்பலவாணர் . க.. கு,கதிர்காமு நா பரராஜசிங்கம் ப..கனகலிங்கம் கனகலிங்கம் கி..சௌந்தரநாயகி எ.நா.. விநாயகமூர்த்தி தம்பிப்பிள்ளை ச.இராசதுரை .ந.தர்மபாலன். து.இரவீந்திரன் . போ, நாகேசு.சி.. சந்திரபாலன் எ,. தியாகலிங்கம் .,இ.கு.கிருபானந்தன் இந்த ஆலயத்தின் திருவெம்பாவை பூசைகளும் சிறப்பாக நடைபெறும் இவைகூட திருவிழாக்களை போன்று நேர கால அடடவனையின் படியே நிகழும்அதிகாலை 4 மணி ஆலய கதவுகள் திறக்கப்படும் காலை 6.45 க்கு விழாக்கள் .நிறைவுறும் இந்த விழாக்காலத்தில் கூட்டுப்பிரார்த்தனை சபையினர் கிராமத்தின் வீதிகள் தோறும் பஜனை பாடி சென்று சங்கு சேமக்கலம் இசைத்து பள்ளியெழுப்பும் நிகழ்வும் சிறப்பானதாகும்
இக்கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் திரு. இ.மாணிக்கம் அவர்களால் அவரது மனைவியாரின் ஞாபகார்த்தமாக நான்கு புறமும் சுற்றுமதில்களுடனான அன்னதான மடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இம்மடத்தில் 1987ஆம் ஆண்டிலிருந்து மடத்துவெளி சனசமூகநிலையத்தினரால் ”அமுதகலசம்” என்ற பெயரில் அன்னதான சபை அமைக்கப்பட்டு திருவிழாக் காலங்களில் பத்து நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரபல வர்த்தகர் திரு. பா.பாலசுந்தரம் அவர்கள் அவரது தந்தையாரின் நினைவாகத் தண்ணீர் பந்தல் அமைத்து திருவிழாக்காலங்களில் அடியார்களுக்குத் தாகசாந்தி செய்து வந்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தீவகத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக புங்குடுதீவிலிருந்து பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் ஆலயம் நித்திய நைமித்திய பூசைகளின்றி பொலிவிழந்திருந்தது. இக்காலகட்டத்தில் பரிபாலன சபைத் தலைவராக திரு. சோ.சிவலிங்கம் அவர்களும், செயலாளராகத் திரு. கு.கிருபானந்தா அவர்களும், பொருளாளராகத் திருமதி. கி.சௌந்தரநாயகி அவர்களும் செயற்பட்டுள்ளனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர் மிகக்குறைவான மக்களே ஆலய சுற்றாடலில் இடம் பெயராது தங்கியிருந்த நிலையில் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த திரு. தம்பிப்பிள்ளை அவர்கள் பூசையின்றிப் பொலிவிழந்து இருந்த ஆலயத்தை நாளாந்தம் சுத்தம் செய்து திருவிளக்கேற்றி வந்துள்ளார். 1998ஆம் ஆண்டு இவ்வாலயப் பரிபாலனசபைத் தலைவர் திரு. சோ.சிவலிங்கம் அவர்கள் தனது கிராமத்திற்குத் திரும்பும் வரை இவர் இப்பணியை இவர் தொடர்ந்து செய்துள்ளார். ஏனைய ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் இக்கிராமத்திற்கு திரும்பாத நிலையில் தலைவர் திரு.சோ.சிவலிங்கம் இவர்கள் இங்கு மீளக்குடியேறியுள்ள மக்களுடன் சேர்ந்து ஆலயத்திற்கு நாளாந்தம் திருவிளக்கேற்றி வந்துள்ளார்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆலயத்திற்கு இராஜகோபுரம் ஒன்றை அமைப்பதற்காக போஷகர் திரு.வி.இராமநாதன் அவர்களால் ஆசிரியர் திரு.க.தியாகராசா, ஆசிரியர் திரு.இ.குலசேகரம்பிள்ளை, திரு.வி.இராமநாதன் ஆகியோரை உள்ளடக்கிய ”கோபுரத்திருப்பணிச்சபை” அமைக்கப்பட்டது. இச்சபை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கோபுரத்திருப்பணிக்கான நிதி திரட்டலில் ஈடுபட்டது. இதனால் இச்சபைக்கு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் இக்கிராம மக்களால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இக்கோபுரத் திருப்பணி இடப்பெயர்வு, யுத்தசூழல் காரணமாக பின்தள்ளபட்டு 2011 ஆம் ஆண்டிலிருந்து கோபுரத்திருப்பணி வேலைகளும், மணிமண்டப வேலைகளும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இத்திருப்பணி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போசகர் திரு.வி.இராமநாதன் அவர்களின் திடீர் இறப்பு திருப்பணி வேலைகளில் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது மகள் திருமதி. சசிகலா சுந்தரலிங்கம், மருமகன் திரு.சே. சுந்தரலிங்கம், பிரபல வர்த்தகர் திரு.வை.கனகலிங்கம் ஆகியோர் இணைந்து திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.இருந்தாலும் முழுத்திருப்பணி முடிவுற்று மீளக்கட்டியெழுப்ப பெரும்நிதி தேவைப்பட்ட்து
இந்நிலையில் 2012 இல் கனடாவிலிருந்து நாடு திரும்பிய திரு.அ.சண்முகநாதன் (முன்னாள் பயிர்செய்கை உத்தியோகத்தர்) அவர்களிடம் ஆலய திருப்பணி வேலைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரால் ஆலய பரிபாலனசபை அமைக்கப்பட்டு ஆலய திருப்பணி வேலைகள் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டன. ஆலயத்திற்கு புதிய யாப்பு உருவாக்கப்பட்டதோடு பொதுக்கோயிலாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆலய பரிபாலனசபையின் தலைவராக திரு.அ. சண்முகநாதன், செயலாளராக திரு.க.சதீபன், பொருளாளராக திரு.ந.சசிதரன் ஆகியோரைக் கொண்டதான பரிபாலனசபை அமைக்கப்பட்டது. பரிபாலனசபையினருக்கு புலம்பெயர் வாழ் மக்களிடமும், உள்ளுர் மக்களிடமும் இருந்து கிடைத்த நிதி உதவியுடன் ஆலய திருப்பணி வேலைகள் முடிவடைந்து 28.06.2013 இல் மகா கும்பாபிசேகம் இனிதே நிறைவடைந்துள்ளது. தற்போது ஆலயத்திற்கு நிரந்தர பூசகர் நியமனம் செய்யப்பட்டு நித்தியபூசைகள் ஒழுங்கு முறைப்படி நடைபெற்று வருகின்றன.2013 கும்பாபிஷேகம் நடந்த காலம் முதல் 2023 திருவிழாக்காலம் வரை தலைவராக இருந்த திரு அ . சண்முகநாதன் ஒய்வு பெற தொடர்ந்து க. குலசேகரமும் தலைவரானார் .2024 முதல் இப்பொது வரை சு.சண்முகநாதன் தலைவராக இயங்கி வருகிறார் .இந்த நிர்வாக காலத்தில் மீண்டும் ஆலயம் கடந்த ஜுலை மாதம் திருப்பணிவேலைகள் செய்யும் முகமாக பாலஸ்தானம் செய்யப்பட்டு . உள்ளது அடுத்த ஆண்டு 2026 இல் கும்பாபிஷேகம் செய்ய திடடம் இடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக