முருகன் - |
சீர்மேவும் எட்டிக்குடி வாழும் ...... வேல் வேல் தெய்வானை தன்னுடைய மணாளனே ...... வா வா பார்புகழும் சிந்துதமிழ் பாட ...... வேல் வேல் பன்னிருகை யாண்டிநீ முன்னருள ...... வா வா எச்சரிக்கை யென்றிடும்பன் கூற ...... வேல் வேல் இருபுறம் காவடிகள் நின்றிடுதே ...... வா வா பச்சைமயி லேருகின்ற பாலா ...... வேல் வேல் பக்ஷம்வைத்து என்கலியை தீர்த்திட ...... வா வா அன்பான சந்நிதியில் வந்து ...... வேல் வேல் ஆறுமுக வேலவனே ஆதரிக்க ...... வா வா நாதமொடு கீதங்களு முழங்க ...... வேல் வேல் நாதாந்த மெய்பொருளே நம்பினனே ...... வா வா காணிக்கை கொண்டுவெகு கோடி ...... வேல் வேல் காத்திருக்கிறார் சுவாமிமலை ஆண்டவனே ...... வா வா மச்சங்களின் காவடிகளும் ...... வேல் வேல் மகிழ்ச்சியாய் வந்திருக்கு கண்டிடவும் ...... வா வா ஆற்றுமணல் சர்க்கரையு மாய ...... வேல் வேல் அன்பான காவடிகள் வந்திருக்கு ...... வா வா எத்தனை அலகுகளோ பூண்டு ...... வேல் வேல் எண்ணிகரந்த காவடிகள் வந்திருக்கு ...... வா வா வெள்ளிரதக் காவடிகள் கோடி ...... வேல் வேல் வெகுகாவடி வந்திருக்கு கண்டிடவும் ...... வா வா மெய்முழு தலகுகளும் பூண்டு ...... வேல் வேல் மேதினியோர் நெருங்கிட வந்திருக்கு ...... வா வா அலகுமேல் காவடிகள் நிருத்தி ...... வேல் வேல் ஆலவட்டம் பறக்குதே ஐயனேநீ ...... வா வா கானமயில் காவடிகள் கோடி ...... வேல் வேல் கொண்டுவந்து நின்றிருக்கு கண்டிடவே ...... வா வா பூந்தேரும் ரதங்களும் வருகுதே ...... வேல் வேல் பூமிமுழு காடுமயில் வாகனனே ...... வா வா அபிஷேக சாமான்க ளெடுத்து ...... வேல் வேல் ஆடிவரும் காவடிகள் கண்டிடவும் ...... வா வா தேவர்கள் நெருங்கிவரக் கூடி ...... வேல் வேல் தேசங்களி லுள்ளவர்கள் தெரிந்திட ...... வா வா வேதியர்க ளொருபுறம் கூடி ...... வேல் வேல் வீதிகளில் வேதங்களும் முழங்குதே ...... வா வா தங்கரதக் காவடிகளும் ...... வேல் வேல் சந்நிதியில் வந்துவிளை யாடுது ...... வா வா ஆலவட்டம் சாமரங்கள் பிடித்து ...... வேல் வேல் அசைந்தாடும் காவடிகள் வந்திருக்கு ...... வா வா எத்தனைவித காவடி வருமே ...... வேல் வேல் எண்ணிடவு முடியுமோ புண்ணியனே ...... வா வா அன்பான சந்நிதியின் முன்னே ...... வேல் வேல் அடியார்கள் வந்திருக்கோம் ஐயனேநீ ...... வா வா மூலகண பதிக்கிளை யோனே ...... வேல் வேல் முப்பொருளு மானசிவ சற்குருவே ...... வா வா ஆண்டிமக னாண்டிமலை யாண்டி ...... வேல் வேல் ஆண்டிசிலை யாண்டிமக னாண்டியே ...... வா வா மந்திரஞ்சேர் மெய்ப்பொருளே உன்னை ...... வேல் வேல் வாலையம்ம னீன்றெடுத்த மாமுனியே ...... வா வா அன்பருள மேவுகின்ற மணியே ...... வேல் வேல் அரகரா ஆறுமுக தெய்வமேநீ ...... வா வா உம்பர்குலம் வாழவந்த நாதா ...... வேல் வேல் ஓம்நமசி வாயகுரு தேசிகனே ...... வா வா தென்பொதிகை அகத்தியரும் பணியும் ...... வேல் வேல் சிவபெருமான் செல்வனே அன்புதர ...... வா வா பூரணமாய் நின்றபரம் பொருளே ...... வேல் வேல் பூரிப்புட னிச்சமயம் புண்ணியனே ...... வா வா நாடுகின்ற மெய்ப்பொருளே சுவாமி ...... வேல் வேல் நாதாந்த வட்சணியாள் பாலகனே ...... வா வா தேடுகின்ற மெய்ப்பொருளே ஐயா ...... வேல் வேல் சீக்கிரமே எங்களுடன் சேர்ந்திடவே ...... வா வா சுப்பையனே சுவாமிமலை நாதா ...... வேல் வேல் துதிக்கின்றோம் உன்னடியார் அன்புடனே ...... வா வா ஆடுகின்ற நாதாந்த பொருளே ...... வேல் வேல் அடிமையைக் காத்தருள ஐயனேநீ ...... வா வா கோலமயில் மீதினிலே குமரா ...... வேல் வேல் குமரனே வுன்னருளைக் கொடுத்திட ...... வா வா ஈராறு பன்னிருகை வேலா ...... வேல் வேல் இருவினை நீங்கிடவும் வந்தருள ...... வா வா அரகரா திருச்செந்தூர் வேலா ...... வேல் வேல் ஆறுமுக தேசிகனே ஐயனேநீ ...... வா வா சரவண பவகுரு நாதா ...... வேல் வேல் சுவாமிமலை மீதமர்ந்த சற்குருவே ...... வா வா கண்டவர்கள் கன்மவினை யோட ...... வேல் வேல் அண்டர்களும் வந்திருக்கா ரையனேநீ ...... வா வா கார்த்திகையில் வந்துனது பாதம் ...... வேல் வேல் கண்டவர் துயரமது நீங்கிடவும் ...... வா வா சித்திரைப் பருவத்தில் காண ...... வேல் வேல் சீர்பெறவும் வந்திருக்கா ரையனேநீ ...... வா வா பங்குனி உத்திரமதிற் காண ...... வேல் வேல் தங்கி யிருக்கிறாருந்தன் சந்நிதியில் ...... வா வா அபிஷேகம் நடப்பதை பார்க்க ...... வேல் வேல் அனைவர்கள் வந்திருக்கா ரையனேநீ ...... வா வா எலுமிச்சம் நாரத்தம் பழங்கள் ...... வேல் வேல் ஏகமாக பன்னீரது வந்திருக்கு ...... வா வா எண்ணெயபி ஷேகமதை பார்க்க ...... வேல் வேல் எண்ணிரைந்த கோடிஜனம் வந்திருக்கு ...... வா வா சந்தனாபி ஷேகமதைக் காண ...... வேல் வேல் சர்வ ஜனங்கள்வந்து நிற்கிறார்கள் ...... வா வா விபூதி அபிஷேகமதைப் பார்க்க ...... வேல் வேல் வாஞ்சையர்கள் கூடிவந்து நிற்கிறார்கள் ...... வா வா காவி வஸ்திரமிடையி லுடுத்தி ...... வேல் வேல் கண்டத்தி லுத்ராக்ஷமாலை காணவுமே ...... வா வா கையினில் வேலாயுதத்தின் காக்ஷி ...... வேல் வேல் கண்டிடவுந் தேவர்களும் வந்திருக்கார் ...... வா வா எட்டிக்குடி சந்நிதியைப் பார்க்க ...... வேல் வேல் இந்திரலோகம் கயிலை ஈடல்லவோ ...... வா வா இடும்பன் சந்நிதியினில் வந்து ...... வேல் வேல் இறக்கிடும் காவடிக்கு இடமில்லை ...... வா வா பரம சற்குருவடி வேலா ...... வேல் வேல் பரம னுடையதிரு பாலகனே ...... வா வா தென்பொதிகை வாழும்குரு முனிக்கு ...... வேல் வேல் தெரிய வுபதேசமும் செய்தவனே ...... வா வா அண்டர்கள் கிடுகிடென நடுங்க ...... வேல் வேல் அசுரர்கள் வேரறுத்த ஐயனே ...... வா வா தேவர்கள் சேனாதிபதியும் நீயே ...... வேல் வேல் தெய்வானை மகிழ்ந்திடும் செல்வனேநீ ...... வா வா முக்கனி சர்க்கரைபாலும் திரட்டி ...... வேல் வேல் முனிவர்கள் கூட்டத்துடன் வந்திருக்கிறார் ...... வா வா முத்துக்குமரேசா முருகையா ...... வேல் வேல் முப்புர மெரித்தவனின் புத்திரனே ...... வா வா ஆறுபடை வீடதனில் மேவும் ...... வேல் வேல் ஆறுமுகத் தையனேநீ அன்புடனே ...... வா வா சத்துரு சங்கார வடிவேலா ...... வேல் வேல் சாமிமலை மீதமர்ந்த சற்குருவே ...... வா வா ஆதிசிவ ரூபமய மான ...... வேல் வேல் அகண்ட பரஞ்சுடரே ஐயனேநீ ...... வா வா ஏரகத் தமர்ந்தகுரு சாமி ...... வேல் வேல் எங்கள்வினை தீர்ந்திடவு மெழுந்தருள ...... வா வா காவியுடை தண்டுகமண்டமும் ...... வேல் வேல் கையில்வடி வேலுடனே காட்சிதர ...... வா வா தங்கவேள்பிள்ளையுன்னை ஸ்துதிக்க ...... வேல் வேல் தற்பரனே யென்கவலை நீங்கிடவும் ...... வா வா |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக