சனி, 6 செப்டம்பர், 2025

சைவ சமயம் 1

  உள்ளுறை


 


1 தமிழகத்துக் கோவில்கள் 

2 சங்க காலத்தில் சைவ சமயம் 

3 பல்லவர் காலத்தில் சைவ சமயம் 

4 சோழர் காலத்தில் சைவ சமயம் 

5 திருக்கோவில் வளர்ச்சி 

6 கல்வெட்டுகளும் சைவசமயமும் 

7 சைவத்திருமுறைகள் - I 

8 சைவத்திருமுறைகள் - II 

9 சித்தாந்த சாத்திரங்கள் 

10 சைவ சமய வரலாறு 


சைவ சமயம் 


 


1. தமிழகத்துக் கோவில்கள்


 


தமிழகத்தில் இன்றுள்ள கோவில்கள் எப்பொழுது தோன்றின? அவற்றிற்கு மூலம் என்ன? கோவிற் கலைஉணர்வு தமிழர்க்கே உரியதா? பண்டைக் காலத்தில் கோவில்கள் எவற்றிற்குப் பயன்பட்டன? நம்து கடமை என்ன? என்பன போன்ற கேள்விகட்கு விடைகாணலே இவ்வாராய்ச்சிக் கட்டுரையின் நோக்கமாகும்.


 


கோவிலும் கல்வெட்டும்


"செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திர சித்தன் (மகேந்திர பல்லவன்--அப்பர் காலத்தவன்) அமைத்த கோவில் இது" என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டு என்னும் இடத்துக் கோவிலிற் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 615 - 630 ஆகும்.


இக்கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன:--


(1) மகேந்திரன் காலத்திற்கு முன் தமிழகத்தில் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம் உலோகம் இவற்றால் ஆனவை.

(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழர் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆயின், அவை மண், மரம் முதலியவற்றாலாகிய அழியத்தக்கன.[1]

(3) இங்ஙனம் அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான்.[2]

--------

1]. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங்கோவிலுள் இருக்கிறது. அதன் அற்புத வேலைப்பாடு வியக்கத்தக்கது. 

[2]. Longhurst - 'The Pallava Architecture', Part 1, pp 22-23.


 


தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆயது. அங்கங்கு இணைப்புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டன. இங்ஙனம் அமைந்த கோவில்களே அவை. இத்தகைய கோவில்களை இன்றும் மலையாள நாட்டிற் காணலாம். இங்ஙனம் கோவில்களை அமைப்பதில் தமிழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி. பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பல கோவில்கள் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய்விடுமு.[3]


 


"விமானங்கள் - 'தூயது, கலப்பு, பெருங்கலப்பு' என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் 'தூய விமானம்' எனப்படும்; இரண்டைக் கொண்டு அமைவது 'கலப்பு விமானம்' எனப்படும்; பல பொருள்களால் அமைவது 'பெருங் கலப்பு விமானம்' ஆகும்; [4] என்பது கட்டக்கலைநூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக்காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் உண்மையும் அறியலாம்.

------


[3]. R. Gopinatha Rao - 'Epigraphia Indica'. Vol.15, P15.

[4]. Ramraz - 'Essay on Indian Architecture,' PP. 48-49.


 


இனித் தமிழகத்தில் மகேந்திரனுக்கு முன்பே கோவில்கள் இருந்தமைக்குக் கல்வெட்டுகளே சான்றாதல் காண்க. (1) திருக்கழுக்குன்றத்துக் கோவிற் பெருமானுக்குக் கந்த சிஷ்ய பல்லவன் (கி. பி. 436-460) நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்த சோழன் கல்வெட்டு கூறுகிறது. (2) 'தென்னவனாய் உலகாண்ட' கோச்செங்கணான் (கி. பி. 450-500) திருவக்கரையில் பெருமானுக்கு ஒரு கோவில் கட்டியிருந்தான். (அதிராசேந்திரன் அதனைக் கல்லாற் புதுப்பித்தான்) செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலின் கருவறையைக் கல்லாற் புதுப்பித்தார்; [5] அவர் திருக்கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார். [6]

-----------------


 


[5]. K. A. N. Sastry's Cholas Vol.II, Part I, P. 486: Vol.1. P. 385.

[6]. M. E. R. 36 of 1931.


 


சங்க காலத்துக் கோவில்கள்


 


பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்திற்குரிய கோவில்கள் இருந்தன. முருகன், திருமால், காடுகிழாள் முதலிய தெய்வங்கட்குக் கோவில்கள் இருந்தன. தொகை நூல்களில் சிவபெருமான், முருகன், திருமால், பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்படுகின்றனர். "ஆலமர் செல்வற்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை, ஆய்வேள் அளித்தனன்" என்று புறநானூறு புகலல் காண்க. இதனால் அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தமை நன்கறியலாம்.


 


கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் 

காணப்படும் கோவில்கள் பல.


மணிமேகலையில்,

"காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்

அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்

ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்

நால்வேறு வருணப் பால்வேறு காட்டி

இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த

குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்"


 


எனவரும் அடிகள் - வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமையை வலியுறுத்துகின்றன. சுடுமண் (செங்கல்) கோவில்கள் குன்றுகள்போல உயர்ந்திருந்தன என்பது அறியத்தக்கது.


 


அற்புத வேலைப்பாடு 


 


இக்கோவில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நோறிகயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,

"ஒருதிறம் சாரார் அரைநாள் அமயத்து

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்

தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்

பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்து"

எனவரும் நெடுநெல்வாடை அடிகளாலும்,


"அறக்களத் தந்தனர் ஆசான் பெருங்கணி

சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று

மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்

பால்பெற வகுத்த பத்தினக் கோட்டம்"

எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் நன்குணரக் கிடைத்தல் காண்க.


 


அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்றுமதில் உடையன; உயர்ந்த வாயில்களைப் பெற்றன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) உடையன; அம்மண்ணீடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது மணிமேகலை [7] மதுரைக் காஞ்சி [8] முதலிய நூல்கள் நுவலும் செய்தியாகும்.


 


இக்கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலோகத்-தகடுகளும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இங்ஙனமே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன.


 


"விண்பொர நிவந்த வேயா மாடம்", "சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு" [9] 

"நிரைநிலை மாடத்து அரமியந் தோறும்" [10] இவ்வாறு அமைந்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை யுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல்வாடை (வரி 76-88)அடிகள் அறிவிக்கும் அரிய செய்தியாகும். சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடனக் கோலத்தைக் காட்டி அருளினன் என்பது புராணச் செய்தி.

------


 


[7]. சக்கரவாளக்கோட்டம், வரி. 42-48, 58-59; மலர்வனம் புக்க காதை 113-127.

[8]. மதுரைக்காஞ்சி, வரி, 352-355.

[9]. பெரும்பாண் ஆற்றுப்படை, வரி, 405. 

[10]. மதுரைக் காஞ்சி; வரி, 451.


 


பதஞ்சலி முனிவர் காலம் கி. மு. 150 என்று ஆராய்ச்சியாளர் அறைவர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர் ஏற்ற சிதம்பரத்தில் உள்ள திருக்கோவில் கி. மு. 150-க்கு முற்பட்டதாதல் அறிக. அங்குள்ள நடராசர் மண்டபம் மரத்தால் கட்டப்பட்டிருத்தலும் அதன் பழைமைக்குச்சான்றாகும். [11]

--------


 


[11]. Navaratnam's "S. I. Sculpture." PP. 56-57. 


கி. பி. 450 முதல் 500-க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கோட்சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பரும் சம்பந்தரும் இதனைத் தம் பதிகங்களிற் குறித்துளர்.


 


தேவாரகாலத்துக் கோவில்கள்


 


தேவாரகாலத்தில் தமிழகத்தில் ஏறத்தாழ 500 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் ஆனவை. அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில், (3) மணிக்கோவில், (4) ஆலக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலிய பலவகைப்படும். இவற்றுள் தம் காலத்தில் பெருங்கோவில்கள் 78 இருந்தன என்று அப்பரே அறைந்துள்ளார். பெரிய கோவில்களைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்துள்ள (பெரியகோவில் திருச் சுற்றில் உள்ள) சிறிய கோவிலே 'இளங்கோவில்' எனப்படும். பிறவும் இளங்கோவில் எனவும் பெயர் பெறும். எனவே, தேவார காலத்திற்கு முன்பே பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? இதனால், அவை முதலிற் கட்டப்பட்ட காலம் மிகப் பண்டையது என்பதும் வெளியாகுமென்றோ? தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம் தூங்கானை மாடம் கோவில் அமைப்பைக்கொண்டு நன்கறியலாம். விமானம் 'தூங்கும் யானை' வடிவில் அமைந்ததாகும். திரு இன்னம்பர், திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திருஅதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் (மூலத்தானம்) தேர் போன்ற அமைப்பு உடையவை; உருளைகளும் குதிரைகளும் பூட்டப்பெற்றவை. திருச்சாய்க்காட்டுக் கோவிலை ஒட்டித் தேர் போன்ற விமானம் ஒன்று உருளைகளுடன் உள்ளது.


 


பழைய கோவில்கள்


 


இந்த விமான அமைப்புடைய தேர்போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில் மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக் கோவில்களைப்போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான். சான்றாக, நகரியில் உள்ள சில கோவில்களைக் காணலாம். அவை கி.மு. 250-இல் ஆக்கப் பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள் [12] உள்ளன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப்

பட்டவையே யாகும்.

------


 


[12] O.C. Gangooly's 'Indian Architecture,' P. 13.


"மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் கோவில்கள் எல்லாம், பல்லவர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டுக் கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம்" என அறிஞர் லாங்ஹர்ஸ்ட் குறித்தல் காண்க.


 


திராவிடக்கலை


 


கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆசிரியர் கைக்கொண்டனர். [13] "தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆசிரியர் கடன் பெற்றனர். இவை பிற்காலத்தில் இந்து சமயக் கோவில்களிற் காணப்பட்டன. இவற்றையே பௌத்தர் மேற்கொண்டனர். [14] விமான வகைகள் பல, தென் இந்தியாவில் உண்டு. அவை யாவும் கல்லறைகளிலிருந்து தோன்றின என்னல் தவறாகாது. தென் கன்னடக் கோட்டத்தில் உள்ள முதுபித்ரி என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில் மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந்நாட்டில் உண்டு. இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.[15]

------------------


[13]. Dr. N.V. Ramanayya's 'origin of S-I Temple' p. 44 

[14] Ibid. PP 39-54, 

[15] Ibid. PP 72-75.


 


தென்னாட்டுக் கட்டடக்கலை


தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள் இவற்றிற் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற்றனவே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு வளர்ச்சியுற்றாற் போலவே தமிழகக் கட்டடக் கலையும் வளர்ச்சிபெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனார் கோவில் வேலைப்பாட்டைக் கொண்டும் செவ்விதின் அறியலாம். [16]

---- 


[16]. Prof. Dubriel's 'Dravidian Architecture,' PP. 1-10, 22


 


கோவில்கள் பயன்பட்ட வகை


 


1. சங்க காலத்துக் கோவில்கள் அழியக்கூடிய பொருள்களால் ஆனவை. ஆதலால் நமக்குக் கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. பின்வந்த பல்லவர்கள் கற்கோவில்களை அமைத்தனர். ஆதலின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவர்க்குப் பின் வந்த சோழர் பழைய கோவில்களைக் கற்கோவில்களாக மாற்றினர். ஆதலின் அழியா நிலையுடைய கல்வெட்டுக்கள் தோன்றின. அவை கோவில் அறப்பணிகளைக் குறிக்க எழுந்தன ஆயினும், அரசர், மரபு, போர்கள், அரிய செயல்கள் இன்ன பிறவும் முதலிற் பொறிக்கப்பெற்றிருந்தன. அக் குறிப்புக்களே இன்று தமிழக வரலாறு கட்ட அடிப்படையாக இருந்து உதவுகின்றன.


 


2. கோவிலை அடுத்துச் சமய வளர்ச்சிக்குரிய மடங்கள் இருந்தன. அவை சமயக் கல்வியைப் புகட்டின; விழாக்களைக் காணவந்த அடியார்கட்கு உண்டியும் உறையுளும் உதவின. அம்மடங்கட்குப் பலர் தானம் அளித்துப் பாதுகாத்து வந்தனர்.


 


3. கோவிலை அடுத்து மருத்துவச்சாலை இருந்தது. இதனை எண்ணாயிரம், தஞ்சாவூர்ப் பெரிய கோவிற் கல்வெட்டுக்களால் அறியலாம்.


 


4. நடனம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் கோவிலில் வளர்க்கப்பெற்றன. இவற்றிற் பண்பட்ட பெண்மணிகள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர், உருத்திர கணிகையர் எனப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் 400 பேர் இருந்தனர்; காஞ்சி-முத்தீச்சுவரர் கோவிலின் 42 அடிகள்மார் இருந்தனர். பெருங்கோவில்களில் எல்லாம் நடன அரங்கு, இசை அரங்கு, நாடக அரங்குகள் இருந்தன.


 


5. கோவிலில் 'தருக்க மண்டபம், 'பிரசங்க மண்டபம்' என்பனவும் இருந்தன என்பது திருவொற்றியூர்க் கோவிற் கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். பாரதம், ஆகமம் போன்ற நூல்களைப் பொதுமக்கட்குப் படித்துக்காட்டக் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 


6. கோவில் திருச்சுற்று மாளிகையில் நூல் நிலையம் இருந்தது. அது 'சரசுவதி பண்டாரம்' எனப் பெயர் பெற்றது.


 


7. கோவிலில் ஊரவையார் கூடி ஊராட்சி பற்றிய செயல்களை ஆராய்ந்தனர்; ஊர் வழக்குகளைத் தீர்த்தனர்.


 


8. கோவில்கள் போர்க்காலத்தில் கோட்டைகளாக விளங்கின. அதனாற்றான் தஞ்சைப் பெரிய கோவில், திருப்பாசூர்க் கோவில், திருப்புகலூர்க் கோவில், பந்தணை நல்லூர்க் கோவில் முதலியவற்றைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன.


 


9. இவை அனைத்திற்கும் மேலாகக் கோவில்கள் ஓவிய சிற்பக் கலைகட்குத் தாயகமாக விளங்கின. இன்று நமது பழம் பெருமையை உலகிற்குக் காட்டி நிற்பன இந்த இரண்டே அல்லவா? இவற்றைத் தம் அகத்தே கொண்டுள்ள கோவில்களே இன்று நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்துள்ளன என்னல் மிமையாமோ?


 


இன்றைய நிலை


 


இங்ஙனம் இவ்வுலக வாழ்வில் பேரின்பம் துய்த்தற்குரிய ஒப்பற்ற இடமாகக் கோவில்கள் விளங்கின. இவ்வுயரிய நோக்கம் கொண்டே அவை கட்டப்பட்டன. ஆயின், நாளடைவில் அறிவற்ற-பக்தியற்ற-பழம்பெருமையும் வரலாறும் உணராத பலர் கைகளில் கோவில் ஆட்சி சென்றமையாலும், பூசை முதலியன உணர்ச்சியற்ற முறையில் நடைபெற்றமையாலும், பெறலாலும் கோவில்கள் தம்பொலிவிழந்து விட்டன. அவற்றைப் பண்டைச் சிறப்பில் பாதியளவிலேனும் கொண்டு நிறுத்தல் தமிழறிஞர்-சமயப் பிரியர் நீங்காக் கடமையாகும்.


 


செய்யவேண்டுவன


 


1. சைவர் கோவில்களில் தேவாரப் பாடசாலைகள் தேவை; பெருமாள் கோவில்களில் நாலாயிரப் பிரபந்த பாடசாலைகள் தேவை; வழிபாடு தமிழிலேயே நடைபெறல் வேண்டும்.


 


2. குருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும். பத்தாம் வகுப்புத் தேறியவர்க்குப் பல்கலைக் கழகத்துச் சார்பில் 4 ஆண்டுகள் வரலாறு - சமயம் -ஓவியம்-சிற்பம்-நடனம் -இசை- கட்டடக் கலைகளில், ஓரளவு பயிற்சி அளித்துத் தேர்வு வைத்துப் பட்டம் தரல் வேண்டும். அப்பட்டதாரிகளே குருக்களாக அமையவேண்டும். அந்நிலையிற்றான் கோவில்கள் சாத்திரீய முறையில் விளங்கும்; யாவும் தூய்மையாக இருக்கும். இஃது அறிஞர் உடனே செய்யத்தக்கதாகும்.


 


3. கோவில் இயக்கநராக (Executive Officers) வருபவர் பல கலைகளில் புலமை உடையவராக இருத்தல் வேண்டும்.


 


4. இவை அனைத்திற்கும் மேலாக 'நம் நாடு, நம் நாட்டுக் கோவில்கள், நம் நாட்டுச் சமயங்கள், நம் நாட்டுக் கலைகள் - இவற்றைப் பாதுகாத்தலும் போற்றுதலும் வளர்த்தலும் நமது கடமை' என்பதை உளமார உணர்ந்து பாடுபடும் ஒருமைப்பாடு குருக்களிடமும் பிற (கோவில்) அலுவலரிடமும் இருத்தல் வேண்டும்.


 


இங்ஙனம் யாவும் அமையுமாயின், பண்டை வரலாற்றை இன்று கண்டு (making the Past real) பேரின்பமும் பெருவாழ்வும் பெற வழியுண்டு, இம்முயற்சிக்குத் தமிழர் ஒன்றுபட்ட மனமே வேண்டற்பாலது. இஃது எப்பொழுது கைகூடும்?

------------------------------



 


2. சங்க காலத்தில் சைவ சமயம் 

(கி.மு. - கி. பி. 300)


 


சைவத்தின் பழைமை


 


சிந்து வெளி நாகரிகம் உலகிற்குத் தெரிந்தது முதல் சைவ சமயத்தின் பழைமையும் கால எல்லை கடந்து நிற்கின்றது. இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைப் பொருள்களில் சிவ லிங்கங்கள் குறிப்பிடத்தக்கன. சிறியவும் பெரியவுமான சிவலிங்கங்களைக் கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளர் வியப்புற்ற, 'சைவ சமயம் கணித்தறிய முடியாத பழைமை உடையது,' என்று கூறியுள்ளனர். இந்த லிங்கங்களைப் பயன்படுத்திய சிந்துவெளி மக்கள் திராவிடரே என்பது ஆராய்ச்சியாளர் பலரது முடிவு.


இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் இருந்தவர் முண்டர், கோலர் என்ற பண்டை இனத்தவரும் திராவிடருமே ஆவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இவ்விரு இனத்தவருள் லிங்க வழிபாடு எவருக்கு முதலில் உரியதாக இருந்தபோதிலும், சிந்துவெளி நாகரிக காலத்தில் திராவிட மக்களுக்கும் உரிதாக இருந்தது என்று கூறுதல் தவறாகாது என்பதும் அவ்வாராய்ச்சியாளர் கருத்து. இந்த லிங்க வணக்கம் பல நாடுகளில் பரவி இருந்தது என்பதைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் பல சான்றுகளுடன் விளக்கி எழுதியுள்ளனர். அவ்விவரங்களை அறிய, சைவ சமயம் மிக்க பழைமையுடையது என்னும் உண்மை தெரிகின்றது.


 


தொல்காப்பியத்தில்


 


பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். பயனுள்ள விளைச்சல் அற்ற இடம் பாலை எனப்படும். காடும் காடு சூழ்ந்த இடமும் முல்லையாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். ஒவ்வொரு நில மக்களும் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகன் வழிபடப்பட்டான். பாலநில் தேவைதையாகக் கொற்றவை வழிபடப்பட்டாள். கண்ணன் முல்லை நில மக்களால் வழிபடப்பட்டான். மழைக்கு அதிதேவதையான இந்திரன் மருதநில மக்கள் வணக்கத்துக்கு உரியவனானான். கடலரசானான வருணன் நெய்தல் நில மக்களாளல் வழிபடப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு நிலத்திற்கும் அமைந்த தெய்வத்தைத் தவிரக் கடவுள் என்ற ஒரு பொருள் வழிபடப்பட்டு வந்ததாகவும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் அப்பொருள் சிவன் என்ற பெயரை உடையதாக இருந்தது என்பதற்குத் தொல்காப்பியத்தில் சான்றில்லை.


 


தொகை நூல்களில் 


 


எட்டுத் தொகை நூல்கள் எனப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை என்பற்றிலும், திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாடல்களிலும் சிவனைப்பற்றிய குறிப்புகள் மிகப்பலவாகக் காண்கின்றன. ஆயினும், அவற்றுள் 'சிவன்' என்னும் பெயர் காணப்படவில்லை. அக்கடவுள் - 'தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன்,' 'முக்கட் செல்வன்', 'கறைமிடற்று அண்ணல்,' 'நீலமணி மிடற்று அண்ணல்', 'முது முதல்வன்,' 'நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்,' 'மழை தலை வைத்தவன்,' 'புங்கம் ஊர்பவன்,' 'முக்கணான்.' 'ஆலமர் செல்வன்,' முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறான். அவன் சடையிலும் மார்பிலும் கொன்றைமாலை அணிந்தவன்; முடிமேல் பிறைச் சந்திரனைச் சூடியவன்; முடிமீது மேகத்தையும் கங்கையையும் தாங்கியவன்; வேதத்தை வாயில் உடையவன்; அதனை அந்தணர்க்குச் சொன்னவன்; எட்டுக் கைகளை உடையவன்; புலித்தோல் ஆடையன்; உமாதேவியைப் பாதியாகக் கொண்டவன்; அரிய தவம் செய்பவன்; உயிர்கட்குப் பாதுகாவலன்; முப்புரங்களை எரித்தவன்; எரித்த அச்சாம்பலைப் பூசிக்கொண்டவன்; அவன் பல வடிவங்களைக் காட்டியும் ஒருக்கியும் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுபவன். ஊழி இறுதியில் அவன் ஆடும் கூத்து 'கொடுகொட்டி' எனப்படும். அவன் முப்புரங்களை அழித்து ஆடும் கூத்துப் 'பாண்டரங்கம்' எனப்படும். அவன் புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொன்றை மாலை தோளில் அசையப் பிரமன் தலையொன்றை ஏந்தி ஆடும் கூத்து 'காபாலம்' எனப்படும். அவன் உமையம்மை யுடன் இமயமலைமீதுள்ளான். இவைபோன்ற குறிப்புக்கள் தொகைநூல்களிற் காணப்படுகின்றன.


 


சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்


 


சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களிலும் பத்துப்பாட்டுள் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் தெய்வங்கள் வரிசையில் சிவபிரான் முதலிடம் பெற்றுள்ளான்.


 


"நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் 

பதிவாழ் சதுக்கப் பூதமீ றாக"

என்பது மணிமேகலை.


 


"பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்..."

என்பது சிலப்பதிகாரம்.


 


சேரன் செங்குட்டுவன் சிவனருளால் பிறந்தவன், சிவபூசை செய்தவன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அவனது அவையில் சேரநாட்டுச் சாக்கையான் ஒருவன் சிவபிரான் ஆடிய கொடுகொட்டிக் கூத்தை ஆடிக்காட்டினான்.


 


இந்த நூல்களிலும் 'சிவம்' என்னும் சொல் இல்லை. ஆயின், சைவம் என்னும் சொல்

மணிமேகலையில் காணப்படுகிறது.


 


சைவவாதி 


 


மணிமேகலை ஒவ்வொரு மதவாதியிடமும் சென்று அவர்தம் மதக்கொள்கையையும் கடவுள் தன்மையையும் கேட்டறிந்தாள். அவள் சைவவாதியிடம் சென்று, "உன் கடவுள் எத்தைகையவர்?" என்று கேட்டாள். அதற்குச் சைவவாதி, "என் இறைவன் இருசுடன் இயமானன் ஐம்பூதம் என்ற எட்டினையும் உயிராகவும் உடம்பாகவும் உடையவன்; கலைகளை உருவாக உடையவன்; உலகங்களையும் உயிர்களையும் படைத்து விளையாடுபவன்; அவற்றை அழித்து உயிர்களின் களைப்பைப் போக்குபவன்; தன்னைத் தவிரப் பெரியோன் ஒருவனைப் பெற்றிராதவன். அவன் ஈசானன்," என்று பதில் கூறினான்.


 


முருக வழிபாடு


 


குறிஞ்சி நிலத்துக்கே உரிய முருகன் வடவர் கூட்டுறவால் சுப்பிரமணியன் என்றும் கார்த்திகேயன் என்றும் சிவகுமாரன் என்றும் பெயர்பெற்றான்.[1] அவன் கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் பிறந்தவன் என்று பரிபாடல் கூறுகிறது.

-------

[1]. T. K. Sesha Ayyangar's Ancient Dravidians


 


அவன் கொற்றவை மகன், உமையின் மகன் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இப்பாடலில் திருப்பங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருஏரகம், பழமுதிர்ச்சோலை, மலைகள் என்னும் ஆறிடங்கள் முருகனுக்குகந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. முருக வழிபாட்டைப் பற்றிய பழந்தமிழ்ச் செய்திகளும் நாற்பத்தெட்டு வயதுவரை பிரமசரிய விரதம் காக்கும் அந்தணரது வழிபாட்டுச் செய்திகளும் திருமுருகாற்றுப் படையுள் கூறப்பட்டுள்ள*ன.


 


பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டு பாடல்கள் இருக்கின்றன. முருகன் சூரபத்மனை வென்றவன்; ஆறு தலைகளும் பன்னிரண்டு கைகளையும் உடையவன்; தேவசேனாபதி; மும்மூர்த்திகட்கு முதல்வன்; வள்ளி தெய்வானையர்க்குக் கணவன்; திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் கோவில் இருக்கின்றது. அக்கோவிலில் இருந்த மண்டபச் சுவர்களிலும், மேற்கூரையிலும் பல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றுள் இரதி, மன்மதன், பூனை உருவாகக் கொண்ட இந்திரன், அகலிகை, கௌதமன் முதலியோரைக் குறிக்கும் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பாண்டி யன் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டனர். கோவில் களில் ஆடல், பாடல்கள் நிகழ்ந்தன. பண் அமைத்த பாடல்களைப் பாடி மக்கள் முருகனை வழி பட்டனர். இவை போன்ற செய்திகள் பரிபாடலில் காணப்படுகின்றன.


 


கொற்றவை வணக்கம்


 


தமிழ் நாட்டுப் பாலை நிலத்துத் தேவதையாகிய கொற்றவை வடவர் கூட்டுறவால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள்; [2] அதனால் கௌரி, சமரி, முதலிய புதிய பெயர்களைப் பெற்றாள்; அவள் வேடர்களுக்கு அதி தேவதை. அவள் நஞ்சுண்டும் சாகாதவள்- பேய்க்கணங்களை உடையவள்; முதலில் பாலைநிலத் தேவதையாக இருந்து வேடர் தொழுகைக்கு உரிய வளாக இருந்த கொற்றவை, பிறதிணைக்குரிய தெய் வங்கள் நகரங்களிற் குடியேறினாற்போலவே, நகரங் களிற் கோவில் கொண்டாள். மதுரை நகர மேற்கு வாயிலில் கொற்றவைக்குக் கோவில் இருந்தது.

----

[2]. T.R.Sesha Ayyangar's Ancient Dravidians.


 


கண்ணகி கணவனை இழந்து நகரை விட்டுப் போகை யில், கொற்றவை கோவில் வாசலில் தன் வளையல் களை உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் குறிக் கின்றது. பிரிந்தவர் மீண்டும் வந்து சேர்ந்தால், பின்பு பிரியாது உறைதல்வேண்டும் என்று மக்கள் கொற்றவையை வரம் வேண்டல் மரபு; கையில் காப்பு நூல் கட்டி நோன்பிருத்தல் வழக்கம். இக் கொற்றவை வணக்கமே நாளடைவில் சக்தி வணக்க மாக மாறியது; சக்தியையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஒரு பிரிவு 'சாக்தேயம்' அல்லது 'வாமம்' என்று பெயர் பெற்றது; சைவசமயப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.


 


சைவமும் வைணவமும்


 


சிவனுக்கும் முருகனுக்கும் கோவில்கள் அமைந்தவாறே, திருமாலுக்கும் தமிழகத்தில் கோவில்கள் இருந்தன. முல்லை நிலக் கடவுளான திருமால் நாளடைவில் நகரங்களிலும் கோவில் கொண்டான்; கண்ணன் அண்ணனான பலராம வணக்கம் தமிழகத்தில் இருந்தது. சங்க காலத்தில் இந்நால்வர் (திருமால், பலராமன், சிவன், முருகன்) வணக்கமும் சிறப்புற்றிருந்தன. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நக் கீரர் பாடிய ஒரு செய்யுளில் அவனை இந்நால்வரு டனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்; "நீ சினத்தில் சிவனையும், வலிமையில் பலராமனையும், பகைவரை அழிப்பதில் மாயோனையும், கருதியதை முடிப்பதில் முருகனையும் ஒப்பாவாய்". 'வெள்ளை', 'காரி' 'குரால்', 'சேய்' என்று நிறம் பற்றி எருது களுக்கு இவ்வாறு பெயர் கூறி, அவற்றுக்கு முறையே பலராமன், மாயோன், முக்கண்ணன், முருகன் என்னும் கடவுளரையும் அவர்தம் நிறம், மாலை, உடை முதலியவற்றையும் பொருந்த வைத்துக் கலித்தொகையில் உவமை கூறப்பட்டுள்ளது.


 


பரிபாடலில் திருமாலைப் பாடிய கடுவன் இள எயினனார் என்ற புலவரே முருகனையும் வாயார வாழ்த்தியுள்ளார். கேசவன், அச்சுதன் என்ற வைணவப் பெயர்களைக் கொண்ட புலவர் இருவர் முருகனைப் பாடியுள்ளனர். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு என்ற மூன்றிலும் கடவுள் வாழ்த்தாகச் சிவனையும், குறுந்தொகையில் முருகனையும், நற்றிணையில் திருமாலையும் பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் வட நாட்டு யாத்திரைக்குப் புறப்படும் முன் சிவபூசை செய்து சிவப்பிரசாதத்தைத் தன் முடியில் தாங்கியிருந்தான்; பின்னர் வந்த திருமால் பிரசாதத்தைத் தன் தோளில் தாங்கினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதே நூலில் சிவனுக்குரிய ஐந்தெழுத்தும் திருமாலுக்குரிய எட்டெழுத்தும் சம நிலையில் மதிக்கும்படி அடியவர்க்குக் கூறப்பட்டுள்ளது.


 


கோவில்கள்


 


சிவன், முருகன், திருமால், பலராமன், கொற்றவை முதலிய தெய்வங்கட்குக் காவிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி போன்ற பெரிய நகரங்களில் கோவில்கள் இருந்தன. நீல நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமரத்தடியில் இருந்த சிவனுக்கு ஆய்வேள் அளித்தான் என்று புறநானூறு கூறுவதால், ஆய் நாட்டில் (பொதிகை மலைப் பகுதியில்) சிவன் கோவில் இருந்தமை தெளிவு. "தொண்டை நாட்டுக் குளங்கள் சிலவற்றில் தாமரை மலர்கள் பூத்திருக்கும். அவை தெய்வங்கட்கு உரியவை," எனவரும் பெரும்பாணாற்றுப் படைக் குறிப்பினால், அக்குளங்களை அடுத்த ஊர்களில் கோவில்கள் இருந்தமையும், கடவுளர் உருவங்கள் இருந்தமையும் பெறப்படும். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள செங்கம், சங்க காலத்தில் செங்கண்மா எனப்பட்டது. அதனை ஆண்ட நன்னனது நவிரம் என்ற மலையில் காரியுண்டிக் கடவுள் எனப்பட்ட சிவபிரான் கோவில் இருந்தது. பண்டைக்காலக் கோவில்கள் - கோவில், நியமம், நகரம், கோட்டம் எனப் பெயர் பெற்றன. சமணர் பௌத்தர் கோவில்கள் 'பள்ளி' என்று வழங்கப்பட்டன.


 


கோவில் அமைப்பு


 


கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும் அரசன் அரண்மனையையும் குறித்தது. இதனல் அரசன் வாழ்ந்த அரண்மனையும் கோவிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன என்று என்று கொள்ளுதல் பொருந்தும். இரண்டும் சுற்று மதில்களை உடையவை; உயர்ந்த வாயில்களை உடையவை; வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை; வாயில்களுக்குத் துருப்பிடாயாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன; சாந்து பூசப்பெற்ற மாடங்கள் உயரமாக்க் கட்டப்பட்டிருந்தன; மேற்கூரை சாந்து வேயப்பட்டிருந்தது. சில கோவில்களில் உலோகங்களாலான கூரைகளும் இருந்தன. மதுரைச் சிவன் கோவிலில் வெள்ளி வேயப்பட்ட கூரை இருந்தது. அப்பகுதி 'வெள்ளியம்பலம்' என்று பெயர்பெற்றது.


 


லிங்க வழிபாடு


 


லிங்க வழிபாடு வேதகாலத்துக்கு முற்பட்ட சிந்துவெளி மக்களிடமிருந்தது என்பது முன்னரே கூறப்பட்டது. வேத காலத்தில் இந்தியப் பழங்குடி மக்களிடத்தில் அவ்வழிபாடு இருந்தது; இதிகாச காலத்தில் எல்லோரிடமும் பரவியது. லிங்கம் சிவபெருமானான மகாதேவனைக் குறிக்கும் மூர்த்தமாகக் கருதப்பட்டது. குடிமல்லம், களத்தூர், குடுமியான் மலை என்னும் இடங்களிலுள்ள லிங்கங்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டின என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். கல் லிங்கத்தைப் போலப் பலர்கூடும் பொதுவிடங்களில் (அம்பலங்களில்) மரத்தூண்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை 'கந்து' எனப்பட்டன. அவற்றில் தெய்வ உருவங்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கள் அவற்றின்மீது மலர்களைச் சூடினர்; அவற்றின் அருகில் அவியா விளக்கு ஏற்றி வைத்தனர். அவை பீடமற்ற (ஆவுடையாரில்லாத) லிங்கங்கள் போன்றவை. இத்தகைய லிங்கல்கள் பல கோவில்களில் இருப்பதை இன்றும் காணலாம். * [* இத்தகைய தூண்களை வழிபடும் வழக்கம் கிரிட் தீவில் பண்டைக் காலத்திற் சிறப்புற்றிருந்தது. Origin and Spread of the Tamils, P. 50. ] சிவபிரான் 'ஆலமர் செல்வன்' என்று பழைய நூல்களிற் குறிக்கப்படலால், 'தென்முகக் கடவுள்' வடிவம் சங்க காலத்திலேயே இருந்திருத்தல் வேண்டும் என்று கூறலாம்.


 


விழாக்கள்


 


1. கார்த்திகை விழா - கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளன்று இரவில் தெருக்களில் விளக்குகள் வைத்து அவற்றுக்கு மாலைகள் இட்டு மக்கள் விழாக் கொண்டாடினர் என்பது அக நானூற்றுப் பாடல்களால் தெரிகின்றது.


 


2. திருஆதிரை விழா -- இது மார்கழி விழா என்றும் பெயர்பெறும். சிவபெருமான் 'ஆதிரை முதல்வன்' எனப்பட்டான். இவ்விழாச் சிவத் தொடர்பானது.


 


3. தைவிழா--தைந்நீராடல்; தத்தம் விருப்பக் கடவுளரை வணங்குதல். இதுவே பிற்கால மார்கழி நோன்பு என்று அறிஞர் கூறுவர்.


 


4. முருக விழா -- முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்ட பெருவிழா.


 


இவைபோன்ற பல செய்திகளைக் காண்பதால், சங்ககாலக் கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன என்பதும், திருமேனிகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன என்பதும் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா இருபத் தொருநாள் சிறப்பாக நடைபெற்றது. எல்லாக் கோவில்களிலும் பூசைகள் நடைபெற்றன. ஆடல் பாடல்கள் நிகழ்ந்தன, பல சமயப் பெரியோர்கள் தத்தம் மடங்களில் அற உபதேசம் செய்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.


 


சமய அணிகள்


 


பழந்தமிழ்ப் பிள்ளைகளுக்கு காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஐந்தின் வடிவமாக அமைத்து அணிவிக்கும் அணி ஐம்படைத்தாலி எனப்பட்டது. இது போலவே சிவபிரானுடைய மழு, வாள், இடபம் இவற்றை போலப் பொன்னால் செய்து மக்கள் அணிந்திருந்தனர் என்று கலித்தொகை கூறுகிறது.


 


சிவனார் பெயர்கள்


 


சங்க கால மக்கள் இறையனார். உருத்திரன், சத்திநாதன், பெருந்தேவன், வெண்பூதி, பேரெயில் முறுவலார் முதலிய சிவனைக் குறிக்கும் பெயர்களைப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்கினர். பெருந்தேவன் என்பது மகாதேவன் என்னும் பெயர்ப்பொருளை உடையது. பேரெயில் முறுவலார் என்பது சிவன் முறுவலால் திரிபுரங்களை எரித்ததைக் குறிக்கும் பெயராகும். வெண்பூதி என்பது திருநீற்றை அணிந்தவர் என்பதைக் குறிக்கும்.


 


முடிவுரை


 


இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால், சங்க காலத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் முதலிய பல்வேறு சமயங்கள் இருந்தன என்பதும், ஆயினும், இந்நாட்டுக்கே உரியவை சைவமும் மாயோன் வணக்கமும் என்பதும், கோவில்கள் இருந்தன என்பதும், அவற்றில் விழாக்கள் நடை பெற்றன என்பதும், கடவுளர் வரிசையில் சிவபெருமான் முதலிடம் பெற்றிருந்தான் என்பதும், வடவர் கூட்டுறவால் முருக வணக்கமும், திருமால் வணக்கமும், கொற்றவை வணக்கமும், சிவ வணக்கமும், தமிழ் வணக்கமும் ஆரிய வணக்கமும் கலந்த புதிய நிலையினை அடைந்தன என்பதும் அறிய முடிதல் காண்க. வரலாற்றுப் பேராசிரியரான T. R. சேஷ அய்யங்கார் எழுதியுள்ள, "பண்டைத் திராவிடம்" என்னும் ஆங்கில நூலில் இவை பற்றிய விவரங்களை நன்கு காணலாம்.

-------------------



3. பல்லவர் காலத்தில் சைவ சமயம் 

(கி.பி. 300-900)


 


முன்னுரை


 


சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஏறத் தாழ அறுநூறு வருட காலம் (கி.பி. 300-900) வரைப் பல்லவர் என்ற புதிய மரபினர் பேரரசு செலுத்தி வந்தனர். அவருள் கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவர் சிறப்புற்றவர். அவர்கட்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் தமிழகத்தில் செங்கற் கோவில்கள் கட்டப்பட்டிருந்தன. கி. பி.4,5,6 ஆம் நூற்றாண்டு களில் திருமூலர், காரக்காலம்மையார் போன்ற நாயன்மார் இருந்து சைவ சமயத்தை வளர்த்து வந்தனர். வட நாட்டிலிருந்து வந்த திருமூலர், மூவாயிரம் செய்யுட்களைக் கொண்ட திருமந்திரம் என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்நூல் அக் காலச் சைவ சமய உட்பிரிவுகளையும் கொள்கைகளை யும் நன்கு விளக்குவதாகும்.


 


மகேந்திரவர்மன் 


 


கி.பி, 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியை ஆண்ட மகேந்திரவர்மன் காலம் பல்லவர் வரலாற்றில் பொற்காலமாகும். இவனது காலமுதல் பல்லவராட்சி பெயரும் புகழும் பெற்றது. மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களாக்கிய கொற்றவன் மகேந்திரனேயாவன். இவன் முதலில் சமணனாக இருந்து அப்பரைத் துன்புறுத்தியவன்; பின்பு சைவனாக மாறியவன்; மாறிப் பாடலிபுரத்தில் (இன்றைய திருப்பாதிரிப்புலியூரில்) இருந்த புகழ் பெற்ற சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக்கொண்டு திருவதிகை யில் தன் பெயரால் குணபரஈசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினவன். மகேந்திரன் இவ்வாறு சமயம் மாறியதை அவனது திருச்சிராப்பள்ளிக் குகைக்கோவில் கல்வெட்டும் உணர்த்துகின்றது. [1] இவன் வல்லம், தளவானூர், சீய மங்கலம், பல்லவபுரம் (பல்லாவரம்), திருச்சிராப்பள்ளி என்னும் இடங்களில் சிவனுக்காக குகைக்கோவில் களை அமைத்தவன். ஒவ்வொரு கோவிலும் இவன் விருதுப் பெயர்களுடன் ஈசுவரம் என்று முடியும். இவன் இசையிலும் நடனத்திலும் பெரும் பற்றுடையவன். இவன் காலத்துச் சித்தன்னவாசல் நடிகையர் ஓவியங்கள் ஓவியப் புகழ் பெற்றவை. இசையிலும் நடனத்திலும் பெருவியப்புடைய இவன் காலத்தில் அக்கலைகள் உயர் நிலையில் இருந்தன என்பதை, இவன் காலத் தவரான அப்பர் பாடிய திருப்பதிகங்களிலும் காணலாம்.

-------

[1]. S.I.I. i33


 


“வேறு துறையிலிருந்து குணபரனைத் திருப்பிய ஞானம் அவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த லிங்கத்தால் நாட்டில் நீண்ட காலம் பரவட்டும், “புருஷோத்தமன் தன் மனத்தில் சிவனை உறுதி யாகப் பற்றி இருப்பவன்” என்பனவும், குடுமி யான் மலையிலுள்ள இவனது இசை பற்றிய கல் வெட்டில், ”சித்தம் நமசிவாய” என்று சிவனுக்கு வணக்கம் கூறும் பகுதியும் இவனது ஆழ்ந்த சிவப்பற்றை நன்கு உணர்த்துவனவாகும். [2]


 


நரசிம்மவர்மன்


 


மகேந்திரன் மகனான நரசிம்ம வர்மன் சிறந்த வைணவன்; இரண்டாம் புலிகேசியை வென்று 'மகாமல்லன்' எனப் பெயர்பெற்றவன். பெரும்பாணாற்றுப் படையில் பட்டினம் எனப் பெயர் பெற்றிருந்தது, இவன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு 'மகாமல்லபுரம்' எனப் பெயர் பெற்றது. இவன் அம் மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் கோவில்களை (இக்காலத்தில் இரதங்கள் எனப்படுகின்றவை) அமைக்கத் தொடங்கினான். இன்று அருச்சுனன் ரதம், தர்மராசர் ரதம் என்று சொல்லப்படுபவை இவன் அமைக்கத் தொடங்கிய சிவன்கோவில்களேயாகும். திருக்கழுக்குன்றம் சிவன் கோவிலுக்குத் தன் முன்னோன் செய்த தானத்தை இவன் புதுப்பித்தான். [3]

---------------

[2]. S.I.I.i. 33, 34: A. S. P. P. 245.

[3]. 65 of 1909


 


பரமேசுவர வர்மன்


 


மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் ரதம், கணேசர் மண்டபம், இராமாநுசர் மண்டபம் என்பன இப்பரமேசுவரன் அமைத்தவை. இவை மூன்றும் சிவன் கோவில்களே. [4] இவன் காஞ்சியை அடுத்த கூரத்தில் ஒரு சிவன் கோவிலைக் கட்டினான். இவன் சிறந்த சிவபக்தன்; உருத்திராக்கத்தால் ஆன சிவலிங்கத்தை முடியாகத் தரித்திருந் தவன். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கற்கோ வில்களில் இருக்கும் கல்வெட்டுக்கள் இவனது சிவ நெறிப் பற்றை நன்கு விளக்குகின்றன.

-------

[4]. S. I. I.i. 18, 19, 20.


 


இராசசிம்மன்


 


இவன் மேற்சொல்லப்பட்ட முதலாம் பரமேசு வரனுக்கு மகன். இவ்வரசன் கற்களை அடுக்கிக் கோவில் கட்டிப் புகழ்பெற்றவன். மாமல்லபுரம் கடற்கரையில் க்ஷத்திரிய சிம்ம பல்லவேசுவரம், இராசசிம்ம பல்லவேசுவரம் என்ற இரண்டு சிவன் கோவில்கள் இவனால் கட்டப்பட்டவை. [5] இவனால் குடையப்பட்ட கோவில்களும் பலவாகும். இவன் கட்டிய எல்லாக் கோவில்களிலும் உலகப் புகழ் பெற்றதும் சிறந்த சிற்ப வேலைப்பாடு கொண்டதும் காஞ்சி- கயிலாசநாதர் கோவிலேயாகும். அதன் பழையபெயர் இராசசிம்ம பல்லவேசுவரம் என்பது. திருச்சுற்றுச் சுவர்களில் புராண வரலாறுகளை உணர்த்தும் சிற்பங்கள் பல இன்றும் கண்டு களிக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள சுவர் களில் பிறைகள் உள்ளன. அவற்றில் சிவனது உயர்வையும் நடனத்தையும் குறிக்கும் சிற்பங்கள் உள. சிவபெருமானுடைய பலவகை நடனங்கள் இக்கோவில் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இராசசிம்மன் காஞ்சியில் கட்டிய மதங்கீசர்கோவிலி லும் அயிராவதேசுவரர் கோவிலிலும் இத்தகைய நடனச் சிற்பங்களைக் காணலாம்.

--------

[5]. 565 of 1912


 


இராசசிம்மன் சிவசூடாமணி, சங்கர பக்தன், ஆகமபிரியன், சிவனிடம் அடைக்கலம் பூண்டவன் ரிஷப லாஞ்சனன், சைவ சித்தாந்தப்படி நடப்பவன், சிவனைத் தன் முடிமேல் தரித்துள்ளவன் என்று கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவற்றால், இவன் சிறந்த சிவ பக்தன் என்பதும், சைவ சித்தாந்தத்தை நன்கு அறிந்தவன் என்பதும், தன் தந்தையைப் போலவே உருத்திராக்க மணிகளான லிங்கத்தை முடியில் தரித்தவன் என்பதும் விளங்குகின்றன. இப்பெரு மகன் “அசரீரி கேட்டவன்” என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இக்குறிப்பு, பூசலார்நாயனார் புராண வரலாற்றுடன் தொடர்புகொண்டதாகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். பூசலார் வாழ்ந்த திரு நின்றவூர் (இன்றைய திண்ணனூர்ச்) சிவன்கோவி லில் பூசலார் உருவம், பல்லவன் உருவம், அவன் காலத்துத் தூண்கள் காணப்படுகின்றன. எனவே, அக்கோவில் இராசசிம்மன் காலத்தது என்று கூறுவது பொருந்தும். இவன் மனைவியும் மகனும் சிறந்த சிவ பக்தர்கள் என்பதையும் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்களால் அறியலாம்.


 


பின்வந்த இரண்டாம் பரமேசுவரன் திருவதி கைச் சிவன் கோவிலைக் கற்றளியாக்கினான். இரண் டாம் நந்திவர்மன் காலத்தில் பல கோவில்கள் புதுப் பிக்கப் பட்டன. இவன் மகனான நந்திவர்மன் காலத்தில் காஞ்சிபுரம்-திருமேற்றளியில் ஒரு மடம் இருந்தது.


 


மூன்றாம் நந்திவர்மன்


 


இவன் நந்திவர்மன் மகன். இவன் சிறந்த சிவ பக்தன். தென்னாறு எறிந்த நந்திவர்மன், குமார மார்த்தாண்டன் எனப் பல விருதுப் பெயர்கள் இவனுக்கு உண்டு. இவன் பொன்னேரிக்கு அடுத்த திருக்காட்டுப் பள்ளியில் புதிதாய்க் கட்டப்பட்ட சிவன் கோவிற்கு அசிசிற்றூரையே தானமாக அளித்தான்; [6] திருவதிகை வீரட்டானேசுவரர்க்குமுன் விளக்கெரிக்க 100 கழஞ்சு பொன் அளித்தான்.[7] குமார மார்த்தாண்டன் என்ற தன் விருதுப்பெயர் கொண்ட விளக்கு ஒன்றைத் திருவிடைமருதூர்ச் சிவனுக்கு அளித்தான்; [8] திருவொற்றியூர்ச் சிவன் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான். [9] திருத்தவத்துறை மகாதேவர் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான். [10] திருக்கடைமுடி மகாதேவர்க்கு நிலதானம் செய்தான். [11] இவன் மனைவியருள் ஒருத்தியான மாறம்பாவையாலும் பிறராலும் இவனாட்டியில் அறங்கள் செய்யப்பெற்றவை - திருநெய்த்தானம், செந்தலை, திருவல்லம், திருக்கடைமுடி, திருப்பராய்த்துறை, குடிமல்லம், நியமம், வெண்குன்றம், என்ற இடத்துக் கோவில்கள் ஆகும், [12] குன்றாண்டார் கோவிலில் திருஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க ஒருவன் அரிசி தானம் செய்தான். [13] இவன் காலத்தில் திருவல்லம் கோவிலில் திருப்பதிகம் ஓதப்பட்டு வந்தது என்பது தெரிகிறது. [14].

----------

(6) S.I.I.ii 98,       (7) S.I.I.8.309,       (8) 197 OF 1907.

(9) 162 of 1938.       (10) 27 of 1931.       (11) II of 1899. 

(12) 52 of 1895. 11 of 1899. S.I.I.3 p.93. 283 of 1901. 180 of 1907. E. I. 2. p 224, 13,16 of 1899,73 of 1900.

(13) 347 of 1914.       (14) S.I.I. 3 93,


 


இவன் சுந்தரர் காலத்தவன்


 


இந்நந்திவர்மன் செய்த திருப்பணிகள் அவன் சிறந்த சிவபக்தன் என்பதை உணர்த்துகின்றன. இவன் மனைவியான மாறன்பாவை பல கோவில் திருப்பணிகள் செய்தவள். இவ்வேந்தன் "சிவனை முழுதும் மறவாத சிந்தையன்" என்றும் "பைந்தமிழை ஆய்கின்ற நந்தி" என்றும் நந்திக் கலம்பகம் கூறுகின்றது. இப்பெருமகனையே, "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்" என்று சுந்தரர் தமது திருத்தொண்டத்தொகையில் பாராட்டினார் என்று அறிஞர் கூறுகின்றனர். இவன் வரலாறு பெரிய புராணத்தில் வரும் கழற்சிங்க நாயனார் புராணத்துள் காணலாம்.


 


பிற்பட்ட பல்லவர்


 


மூன்றாம் நந்திவர்மன் மகனான நிருபதுங்கன் காலத்தில் சைவசமயம் வளர்ச்சி பெற்றது. புதிய கோவில்கள் கட்டப்பட்டன. பழைய கோவில்கள்களில் திருப்பணிகள் நடைபெற்றன. பின்வந்த அபராசிதன் காலத்தில் திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோவில் கட்டப்பட்டது. இவன் தனது பக்திச் சிறப்பாலும் துறவு உள்ளத்தாலும் 'பெருமானடிகள்' என்று பெயர் பெற்றான்.[15] இவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர், சத்தியவேடு என்னும் இடத்துக் கோவில்கள் சிறப்புற்றன. இவன் மனைவியான மாதேவடிகள் சிறந்த பக்தியுடையவள். இந்த அபராசிதனோடு பல்லவராட்சி முடிவுற்றது.

--------

[15] 433 of 1905.


 


கோவிலாட்சி


 


பல்லவர் காலக் கல்வெட்டுக்களை நன்கு ஆராயின், பல கோவில்களில் இக்காலத்திலிருப்பது போன்ற கோவிலாட்சி இருந்தது என்பது தெரிகிறது. பெரிய கோவில்கள் அமிர்த கணத்தார் எனப்பட்ட குழுவினராட்சியில் இருந்தன. ஊரவையாரும் கோவிலாட்சியைக் கவனித்து வந்தனர். சில கோவில்களை, அவற்றை அடுத்திருந்த மடத்தார் கவனித்து வந்தனர். கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன. நாடோறும் பூசைகள் நடைபெற்றன. அவற்றுக்கு அரசரும் பொது மக்களும் பொருளும் நிலமும் அளித்தனர். இவ்வாறு கோவிலாட்சி சிறப்புற நடைபெற்றமையால்தான் அப்பரும் சம்பந்தரும் தலயாத்திரை செய்து, கோவிலையடுத்த மடங்களில் தங்கிச் சைவப் பிரசாரம் செயதல் முடிந்தது. தமக்கு வேண்டிய பட்டாடைகளையும் கோவில் பண்டாரத்திலிருந்து கொடுக்கும்படி அருள்புரியவேண்டும் என்று சுந்தரர் நாகைக்காரோணத்தில் வேண்டியதை நோக்கக் கோவில் பண்டாரம் (பொக்கிஷசாலை) நல்ல நிலையில் இருந்தது என்பதை அறியலாம்.


 


பல்லவர் காலத்து நாயன்மார்


 


பல்லவர் காலத்தில் சேரமான் பெருமாள் சேர நாட்டையும், நெடுமாறர் பாண்டிய நாட்டையும் ஆண்டனர். மகேந்திரன் முதலிய பல்லவ வேந்தர் சோழப் பெருநாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்த்து ஆண்டனர். சோழர் முடியிழந்து பல்லவர்க்கடங்கிய சிற்றரசராய், பழையாறையைத் தலைநகராகக் கொண்ட சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். திருக்கோவிலூரை ஆண்ட மெய்ப்பொருள் நாயனார், திருமுனைப்பாடி நாட்டையாண்ட நரசிங்கமுனையரையர், மிழலை நாட்டையாண்ட பெருமிழலைக் குறும்பர், கொடும்பாளூரை ஆண்ட இடங்கழியார் என்பவர் சிற்றரசர் மரபினராவர்.


 


சிறுத்தொண்ட நாயனார் பல்லவர் சேனைத்தலைவர். கலிக்காம நாயனாரும் அவர் மாமனாரான மானக்கஞ் சாறரும் கோட்புலி நாயனாரும் சோழர் சேனைத் தலைவர். இவ்வாறு நாடாண்ட பேரரசரும் சிற்றரச ரும் அவர்தம் சேனைத்தலைவரும் சிவநெறிச் செல்வ ராக இருந்தமையாற்றான், சைவ சமயம் தமிழ்நாடு முழுதும் தழைத்தோங்கத் தொடங்கியது. பொது மக்களுள் எல்லா வகுப்பினருள்ளும் சிவனடியார் தோன்றினர். அறுபத்து மூவருள் பிராமண நாயன்மார்கள் பதினான்கு பேர்; வணிக நாயன் மார் அறுவர்; வேளாள நாயன்மார் பதின்மூவர்; குருக்கள் மரபினர் நால்வர். வேட்கோவர், வேடர், இடையர், வண்ணார், பரதவர், சாலியர், பாணர், பறையர், சான்றார் முதலிய வகுப்புக்களிலும் நாயன்மார் தோன்றினர். இந்த விவரங்களால் சைவ சமயம் பல்லவர் காலத்தில் எல்லா வகுப்பு மக்களாலும் போற்றி வளர்க்கப்பட்டது என்பது அறியப்படும்.


 


அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்மையாகக் கண்டித்து நாடெங்கும் சைவ சமயப் பிரசாரம் செய்தனர். நாயன்மார் சிலர் கோவில் தொண்டுகளில் ஈடுபட்டனர்; வேறு சிலர் சிவனடியார்களுக்குத் தண்ணீர்ப்பந்தல், உணவு முதலியவற்றை வழங் கினர். சிலர் சிவன் கோவில்களைக் கட்டினர், சிலர் அடியார்க்கு வேண்டிய உடைகளையும் பொருள்களையும் உதவினர்.


 


இந்நாயன்மார் வீட்டுப் பெண்மணிகள் சைவ சமயத் தொண்டுகளில் பெரு மகிழ்ச்சியோடு ஈடு பட்டனர். அப்பரது தமக்கையாரான திலகவதியார் திருவதிகைக் கோவிலில் சிவத்தொண்டு செய்து வந்தார். அப்பர் சமணத்திலிருந்து சைவராக உதவி செய்தவர் அவரேயாவர். நெடுமாறரைச் சைவ ராக்க மங்கையர்க்கரசியார் மேற்கொண்ட முயற்சி பெரிதாகும். அவரது முயற்சி இன்றேல் பாண்டிய நாட்டில் சைவம் பரவி இராது. தம் மகனை அறுத்துச் சமைக்க உடன்பட்ட சிறுத்தொண்டர் மனைவி யாரின் (வெண் காட்டு நங்கை) சமயப் பற்றுக்கு எல்லை கூற முடியுமோ? அடியாருக்குச் சமைக்க வயலில் விதைத்த நெல்லைக்கொண்டு வரும்படி யோசனை கூறிய இளையான்குடி மாறர் மனைவியார், நெல் வாங்கத் தம் தாலியைத் தந்த குங்குலியக் கலையார் மனைவியார், விளக்கெரிக்கப் பணம் வேண்டித் தம்மை விற்க உடன்பட்ட கலியநாயனார் மனைவியார் முதலிய மாதரசியார் சிவ பக்தியை என்னென்பது! இத்தாய்மார்களின் ஒத்துழைப்பு இன்றேல், நாயன்மார்கள் சமயத்திருப்பணி செய் திருத்தல் இயலுமா? சைவ சமயம் நன்கு வளர இப் பெண்மணிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாக இருந்ததென்பது உறுதி.


 


சாதி வேறுபாடு இல்லை


 


இக்காலத்திலுள்ள கொடிய சாதி வேறுபாடு கள் நாயன்மார் காலத்தில் பாராட்டப்படவில்லை. பிராமணான சம்பந்தர் திருநாவுக்கரசருடைய கல்வியறிவு, அநுபவம், முதுமை, பக்தியின் சிறப்பு இவற்றைக் கருதி, அவரை ‘அப்பரே' (Father) என்றழைத்தார். பிராமணரான அப்பூதி அடிகள் வேளாளரான திருநாவுக்கரசருடன் (தம் குடும்பத் தாருடன்) இருந்து உணவுண்டார்; அப்பருக்குப் பாத பூசை செய்தார். சிவப் பிராமணரான சுந்தரர் உருத்திரக் கணிகையரான பரவையாரையும், வேளாளப் பெண்மணியராகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டது கவனிக்கத்தக்கது. சிவநேசச் செட்டியார் தம் மகளை மணந்துகொள்ளும்படி பிராமணரான சம்பந்தரை வேண்டியதும், வேளாளரான கோட்புலியார் தம் இரு பெண்களையும் மணந்துகொள்ளும்படி ஆதி சைவரான சுந்தரரை வேண்டினமையும் கவனிக்கத்தக்கது. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் யாம்வணங்கும் கடவுளரே," என்று திருநாவுக்கரசர் பாடியிருத்தல் காண்க. இவை அனைத்தையும் நோக்க, அக்காலச் சிவனடியார்கட்குள் சாதி வேற்றுமை காட்டப்படவில்லை என்பதும், பக்தி ஒன்றுக்கே மதிப்புத் தரப்பட்டது என்பதும் தெரிகின்றன. அனைவரும் கலந்து ஒன்றாய்ப் பழகுதல், பாடுதல், உண்ணுதல், உறங்குதல் சமய வள்ர்ச்சிக்குத் தேவையானது என்பது கருதப்பட்டது. மேலும் சாதி வேறுபாடுகள் அற்ற சமணத்தையும் பௌத்தத்தையும் வெல்ல முயன்ற சைவத்தில் அவ்வேறுபாடுகள் இருத்தல் இழிவென்று கருதியிருத்தல் இயல்புதானே!


 


கோவில் நிகழ்ச்சிகள் 


 


மூவர் பாடிய திருமுறைகளை ஆராயின், பெரும்பாலான கோவில்களில் பல விழாக்கள் நடைபெற்றன என்பது தெரிகிறது. எல்லாக் கோவில்களிலும் கடவுளர் திருமேனிகள் இருந்தன என்பதும் தெரிகின்றது. சுந்தரர் காலத்தில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் அவருக்கு முற்பட்ட ஐம்பது நாயன்மார்கட்கு உருவச் சிலைகள் இருந்தன. இசையும் நடனமும் பல கோவில்களில் வளர்க்கப்பட்டன என்பது திருமுறைகளால் தெரிகிறது. இறைவன் "ஏழிசையாய் இசைப்பயனாய்" இருப்பவன். "பண் அவனே;" "பண்ணின் திறனும் அவனே" என்பது நாயன்மார் கண்ட உண்மை. சமய தத்துவங்களில் உயர்ந்தது நாத தத்துவம் . நாதத்திலிருந்து இசை தோன்றுகிறது. இறைவனே இசை வடிவமாய் இருக்கிறான் என்பது சைவ சமயக்கொள்கை. இதனால் இசையோடு தோத்திரங்களைப் பாடுவதால், இறைவன் மகிழ்வான். அருள் புரிவான் என்று சம்பந்தர் கூறியுள்ளார். "தமிழோடு இசை கேட்கும் இச்சையில் நித்தம் சம்பந்தர்க்கு காசு நல்கினீர்" என்று சுந்தரர் கடவுளை நோக்கிக்கூறியிருத்தல், இசையை இறைவன் விரும்புகிறான் என்பதை உணத்துகிறதன்றோ? இந்த விவரங்கள் கோவிலில் இசை பயிலப்பட்டதன் காரணத்தை விளக்க வல்லன.


 


பல கோவில்களில் நடனமாதர் இருந்து சமயத் தொடர்பான நடனங்களை ஆடினர். வீணை, கின்னரம், குடமுழா, கொக்கரை, முழவம், குழல், பறை, தாளம், யாழ், பிடவம், கல்லலகு, சச்சரி, கொடுகொட்டி, தக்கை, பேரி, தண்ணுமை, தகுணிதம், சங்கிணை, சல்லரி, தத்தலகம், துந்துபி, மொந்தை, தண்டு, கல்லவடம், கூடரவம் முதலிய பல்வேறு இசைக் கருவிகள் கோவில்களிற் பயன்பட்டன. இவ்விவரங்களை நோக்க, இசையும் நடனமும் சைவ வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன என்பது தெரிகிறது.


 


ஆடலும் பாடலும்


 


இசை அனைவர் உள்ளத்தையும் உருக்க வல்லது. அது குழல், யாழ், வீணை இவற்றுடன் பயிலப்படுகையில் மிக்க இனிமை பயக்கும். பக்திச்சுவை பொருந்திய பாடல்கள் இசைக் கருவிகளுடன் பாடப்படும்பொழுது மக்கள் உள் ளங்களைக் கவரும் என்பது உறுதி. அப்பாடல்கள் மக்களது தாய்மொழியில் பாடப்பட்டமையால், மக்கள் உள்ளங்களில் அவற்றின் பொருள் பதிந்து, பக்தியை உண்டாக்கின. விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் பண்ணிசையுடன் சிவபெரு மான் ஆடிய பலவகை நடனங்களையும் பிற நடன வகைகளையும் நடனமாதர் நடித்துக் காட்டினமை மக்கட்குச் செவி விருந்தும் விழி விருந்துமாய் அமைந்தன. இவ்விரு கலைகளும் காம இன்பத் தைப் பயப்பவை என்று சமண-பௌத்தரால் விலக்கப்பட்டவை. அம்மை-அப்பனான மாதொரு பாகனை வழிபட்ட சைவர்கட்கு இவை வெறுப்பைத் தராது, இன்பத்தையே தந்தன. இசையும் நடனமும் பொதுமக்களைக் கோவில்கட்கு இழுத் தன; உள்ளங்களைக் குழைவித்தன; கலைகளின் அருமையை உணர்த்தின; கலையே உருவான கடவுளிடம் மனத்தைச் செலுத்தின; தம்மை மறந்து ஆடவும் பாடவும் செய்தன. சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்கள் திருமூலரால் கூறப் பட்டன; அவை சிற்பங்களாகக் கைலாசநாதர் கோவிலில் காட்சியளித்தன; தேவார ஆசிரியர் காலத்தில் அவற்றை நடன மகளிர் ஆடிக் காட்டினர். இறைவனுக்கே ‘நடராஜர்’ என்ற பெயர் உண்டெனின், அவன் சமயம் நடனக் கலையை ஒரு பகுதியாகக் கொண்டது என்பது கூறாதே அமையும் அன்றோ? துறவு நிலையிலிருந்து முத்தி பெறலாம்; இன்றேல், இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனைப் பாடியாடிப் பரவுவதாலும் முத்தி அடையலாம் என்னும் பக்திநெறிப்போதனை இல்லறத்தார் உள்ளங்களைக் கவர்ந்தது. மக்கள் பண்ணிறைந்த பாடல்களைப் பாடியும் ஆடியும் இறைவனை வழிபடலாயினர். இவ்வாறு எல்லோரும் எளிதிற் பின்பற்றும்படியான பக்தி நெறியை நாயன்மார் போதித்தமையாற்றான் சைவசமயம் நாட்டில் நன்கு பரவலாயிற்று.

--------- 



4. சோழர் காலத்தில் சைவ 

Read more at: https://www.shaivam.org/to-know/saiva-samayam-katturai-rasamanikkanar/#gsc.tab=0

            -------------------

Read more at: https://www.shaivam.org/to-know/saiva-samayam-katturai-rasamanikkanar/#gsc.tab=0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி