
கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக் கடற்கரையில் ஒரு முறை நான் கண்டிருக்கிறேன். கரு நிறக் கடலின் நடுவில் மெதுவாக சிவந்த பந்து தோன்றுவதும் அது மெல்ல மெல்ல மேல் எழுவதும் அதே நேரத்தில் மெதுவாக கடலின் நிறம் நீலமாக மாறுவதும் பகலவன் முழுவதும் தோன்றி ஆனால் இன்னும் கடலை நுனி தொட்டுக் கொண்டு இருக்கும் போது அலைகளில் தெரியும் நீண்ட சிவப்புக் கோடும் ஆகா நேரே கண்டால் தான் அதன் அழகு தெரியும்; புரியும்.
உலகத்தவர் யாராயினும் இந்தக் காட்சியைக் கண்டால் மனம் உவப்பர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்தக் காலத்தில் மட்டும் இன்றி எந்தக் காலத்திலும் அப்படித் தான். இல்லையா? திருமுருகாற்றுப்படை எழுதிய காலத்தும் அப்படித் தான் இருந்திருக்கும். அதனால் தான் முருகனைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் சிவந்த சூரியன் கடலில் எழுவதும் அதனைக் கண்டு உலகோர் மகிழ்வதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்குத் தோன்றியிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இந்த அருமையான காட்சியை கண் முன்னே நிறுத்துகிறார் நக்கீரனார்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு...
உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் தோன்றி (வலிவுடன் தோன்றி) உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல...
இது தான் நக்கீரனாருக்கு முதலில் தோன்றிய உவமை. எத்தனை அழகான உவமை பாருங்கள்.

பிற்கால வழக்கின் படி நீல நிற மயிலின் மேல் சேயோன் முருகன் அமர்ந்து வருவது நீலத்திரைக்கடலின் மேல் செங்கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
அகரத்திலும் உகரத்திலும் கவிதையை, காப்பியத்தைத் தொடங்குவது மரபு. 'அகர முதல' என்று தொடங்கினார் பொய்யாமொழிப் புலவர். 'உயர்வற உயர் நலம்' என்று திருவாய்மொழியைத் தொடங்கினார் நம்மாழ்வார் மாறன் சடகோபன். 'உலகெலாம்' என்று திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தை தொடங்கினார் சேக்கிழார் பெருமான். 'உலகம் யாவையும்' என்று இராமாவதாரமெனும் கம்பராமாயணத்தைத் தொடங்கினார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். இந்த மரபு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக திருமுருகாற்றுப்படையும் 'உலகம்' என்று தொடங்குகிறது.

வலன் என்பதற்கு வலம் என்றும் வலிமை என்றும் இரண்டு பொருள் சொல்லப்படுகிறது. வலம் என்று கொண்டால் கதிரவன் உலகத்தை வலம் வருகிறான் என்ற கருத்து தோன்றுகிறது. உலகம் கதிரவனை வலம் வருகிறது என்பதை நாம் இப்போது அறிவோம். அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். அதனைச் சொல்கிறார் போலும். கதிரவன் உலகை மட்டுமில்லை மேரு மலையை/இமய மலையை/கயிலை மலையை வலம் வருகிறான் என்றதொரு கருத்தும் பழங்காலத்தில் இருந்தது. அதனையும் சொல்கிறார் போலும்.
வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது என்னலாம். செயல் திறனிலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன். உருவத்திலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன்.
அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இருப்பான். அந்தக் குளிர்ச்சியும் இங்கே முருகனுக்கு உவமை ஆகின்றது போலும்.
பலர் புகழ் ஞாயிறு என்று சொல்லும் போது 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் தொடங்குவது நினைவிற்கு வருகிறது. சங்க காலத்தில் ஞாயிறு பலர் போற்றும் வகையில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இந்த இரு இலக்கியங்களின் மூலமும் அறியலாம்.
இன்னொரு அழகும் இந்த இரு அடிகளில் காணலாம். சிறிதே தமிழ்ப்பயிற்சி கொண்டவரும் எந்த வித உரை உதவியும் இன்றி விளங்கிக் கொள்ளும் படி இந்த இரண்டு அடிகளும் இருக்கின்றன. உலகம், உவப்ப, வலன், திரிதரு, பலர், புகழ், ஞாயிறு, கடல், கண்டு என்று ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அமைந்திருக்கின்றன பாருங்கள். உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று தான் பாடத் தோன்றுகிறது.
47 comments:
//வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது //
குமரன்,
கட்டுரை மிக நன்று !
சேயோன் என்றால் சிவப்பு என்றும், காலை சூரிய ஒளியை நிறத்துடன் ஒப்பிட்ட முருகன் குறித்த கருத்துக்களை அண்மையில் தான் எதோ ஒரு நூலில் படித்தேன். மாலை செம்மஞ்சள் நிறத்தை சிவபெருமானுக்கு ஒப்பிட்டு இருந்தது.
//அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். //
சுழன்றும் ஏர் பின்னது உலகம் - என்று திருவள்ளுவர் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கு கதிவரவனை குறிப்பிடவில்லை என்பதால் மட்டுமே கதிவரவனைப்பற்றி எல்லோருமே நீங்கள் குறிப்பிட்ட அந்த கருத்தை கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.
பாராட்டிற்கு நன்றி கோவி.கண்ணன்.
சேயோன் என்பதற்கு நேற்று தான் இராம.கி. ஐயாவும் பொருள் உரைத்தார். சேய் என்பதற்கு சேய்மையும், சிவப்பும் என இரு பொருள்கள் உண்டு. அந்த வகையில் சேயோன் என்ற சொல்லை பாட்டனுக்குப் பாட்டனைக் குறிககவும் சிவந்தவனைக் குறிக்கவும் புழங்கலாம்/புழப்பட்டிருக்கிறது என்றார். அப்படிச் சொல்லும் போதே சேயோன் என்று முருகனையும் சிவனையும் குறிக்கும் வழக்கமும் உண்டு என்று சொன்னார்.
காலையில் செங்கதிராம் உச்சி
வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பரா
சக்தி நீல வானத்தினிலே
என்ற பாட்டும் நீங்கள் சொன்னதைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்னும் குறட்பா உலகம் சூரியனைச் சுற்றுகிறது என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். உலகம் தன்னைத் தானே சுற்றுகின்ற சுழற்சியையோ காலச் சுழற்சியையோ தான் அது சுட்டுகிறது என்று நினைக்கிறேன். ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் உலகமும் ஏர் பின்னது என்று ஒரு இடத்திலும், பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் உலகம் ஏர்த்தொழிலின் பின்னே தான் செல்ல வேண்டியிருக்கிறது என்று இன்னொரு இடத்திலும் காலச் சுழற்சியில் ஓயாமல் சுழலும் உலகம் என்று இன்னொரு இடத்திலும் இந்தக் குறளின் முதல் அடிக்குப் பொருள் படித்திருக்கிறேன். எங்கேயும் சூரியனை உலகம் சுற்றுவதைப் பற்றியும் உலகத்தைச் சூரியன் சுற்றுவதைப் பற்றியும் சொல்லவில்லை. அதனால் இந்தக் குறள் சூரியனை உலகம் சுற்றுகிறது என்று சொல்லவில்லை. வேறு இடங்களில் உலகத்தைக் கதிரவன் சுற்றுகிறான் என்ற கருத்தினைப் படித்திருக்கிறேன். ஏதேனும் இலக்கியச் சான்று கிடைத்தால் சொல்கிறேன்.
///காலையில் செங்கதிராம் உச்சி
வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பரா
சக்தி நீல வானத்தினிலே//
இதை நீங்கள் குறிப்பிட்ட பிறகு என்னால் அதைச் சொல்லாமல் இருக்க முடியாது. உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் படித்ததை பகிர்தல் என்ற வகையில் ...
ஒன்றே இறைவன் என்ற பொருளில் ஒளியை வழிபட்டு அதனை சிவன் என்று சொல்லி ... அதன் பிறகு அந்த சிவனை அம்மை அப்பானாக வழிபட ஆரம்பித்த போது 'நீல' நிற ஒளியை சக்தியின் அடையாளமாக வழிப்பட்டதாகவும்... பெண்ணை வணங்குவதா என்ற சிலரின் ஆணாதிக்க மாற்று சிந்தனையில் தோன்றியதே 'நீல' நிற திருமால் என்று அண்மையில் தான்...மறைமலை அடிகளாரின் 'தமிழர் மதம்' என்ற நூலில் இன்னும் விளக்கமாக படித்தேன். உங்களுக்கு ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன். ஏற்காவிட்டாலும் 'போகிற போக்கில்' எழுதுபவர் அவரை சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
:)
ரொம்ப அழகான உவமை ஒன்றினை அறிய தந்துள்ளீர்கள் குமரம். நன்றி.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகத்தை விட்டு விட்டீர்களே குமரன்! :-)
//அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இரு