செவ்வாய், 9 செப்டம்பர், 2025

திருநீற்றுப்பதிகம்


தென்னன் உடல் உற்ற தீப்பிணி தீர்த்த பாடல்கள்


ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - பெரும் வலிமை உடைய எருதின் மேல் ஏறும் மதுரையம்பதி உடைய சொக்கநாதரின் மடைப்பள்ளித் திருநீற்றைப் போற்றி

புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் - சீர்காழியைச் சேர்ந்த பூவுலகில் வாழ் தேவனாம் திருஞான சம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் - தெளிவுடன் தென்னாட்டை உடைய மன்னனாம் பாண்டியன் தன் உடலில் உற்ற வெப்பு நோய் தீரும் படி

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே - மொழிந்த இப்பாடல்கள் பத்தும் வல்லவர் நற்குணங்களுடன் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்.

***

ஆளுடையபிள்ளையார் திருஞானசம்பந்தர் அருளிய திருவாலவாய்ப்பதி திருநீற்றுப் பதிகம் நிறைவுற்றது.

அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே


குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப் பட்ட பொருளாளர் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக் கண் திகைப்பிப்பது நீறு - கமண்டலம் ஏந்தும் கையர்களான சமணர்களும் சாக்கிய குலத்தில் பிறந்த புத்தரைப் பின்பற்றும் பௌத்தர்களும் கூட்டமாய் கூடும் போது அவர்களைத் திகைக்கச் செய்வது திருநீறு. (அவர்கள் வாதங்களை அழித்து அவர்களை திகைக்க வைப்பது திருநீறு)

கருத இனியது நீறு - எண்ணத்தில் நினைத்து தியானிக்க இனியது திருநீறு

எண் திசைப் பட்ட பொருளாளர் ஏத்தும் தகையது நீறு - எட்டு திசைகளில் இருக்கும் மக்கள் எல்லோராலும் ஏத்தும் தகைமை உடையது திருநீறு

அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே - தேவர் அசுரர் மனிதர் என்று எல்லாரும் பணிந்து ஏத்தும் திருவாலவாயான் திருநீறே.

Sunday, July 20, 2008

மாலொடு அயன் அறியாதது


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே


மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு - திருமாலும் பிரம்மனும் அறியமுடியாத வண்ணம் உள்ளது திருநீறு.

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு - மேல் உலகங்களில் வாழும் தேவர்கள் தங்கள் உடலில் விளங்குவது வெண்ணிற திருநீறு

ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு - உடம்பினால் ஏற்படும் துன்பங்களைத் தீர்த்து நிலையான இன்பம் தருவது திருநீறு

ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே - ஆலகால விடத்தை உண்ட கழுத்தையுடைய எங்கள் திருவாலவாயான் திருநீறே.

Wednesday, July 16, 2008

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே


இராவணன் மேலது நீறு - இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு - பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு - பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு - தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு - எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே - அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே.

Sunday, July 13, 2008

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு - திரிபுராசுரர்களின் முப்புரம் எனும் மூன்று கோட்டைகள் சிரித்தெரி கொளுத்தியது திருநீறு.

இருமைக்கும் உள்ளது நீறு - இம்மை மறுமை எனும் இருமைக்கும் உறுதுணையாக உண்மையாக உள்ளது திருநீறு.

பயிலப்படுவது நீறு - கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற நிலையில் கல்வி கரையின்றி இருக்கும் போது எதனைக் கற்றால் எல்லாவற்றையும் கற்றதாகுமோ அப்படிப்பட்டது திருநீறு.

பாக்கியமாவது நீறு - இம்மைக்கும் மறுமைக்கும் நல்வினைப்பயனாவது திருநீறு.

துயிலைத் தடுப்பது நீறு - அறியாமையையும் அந்தகன் கைப் பாசத்தால் வரும் அருந்துயிலையும் தடுப்பது திருநீறு.

சுத்தமதாவது நீறு - அணிபவர்களையும் நினைப்பவர்களையும் பேசுபவர்களையும் சுத்தம் ஆக்கும் சுத்தங்களில் சுத்தம் அதாவது திருநீறு.

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே - கூர்மையான ஒளிவீசும் திருசூலத்தை ஏந்திய திருவாலவாயான் திருநீறே!

Thursday, July 10, 2008

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு


அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

அருத்தம் அதாவது நீறு - நீங்காத செல்வம் ஆவது திருநீறு

அவலம் அறுப்பது நீறு - துயரங்களை நீக்குவது திருநீறு

வருத்தம் தணிப்பது நீறு - மன வருத்தங்களை எல்லாம் தணிப்பது திருநீறு

வானம் அளிப்பது நீறு - வானுலகத்தை தருவது திருநீறு

பொருத்தம் அதாவது நீறு - அணிபவர்களுக்கெல்லாம் பொருந்துவது திருநீறு

புண்ணியர் பூசும் வெண்ணீறு - புண்ணியம் செய்தவர்கள் அணியும் வெண்ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - செல்வம் கொழிக்கும் மாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே.

***

நிலையில்லாச் செல்வங்களை வேண்டி நாம் அவனிடம் செல்லாமல் நிலைபேறான வைத்தமாநிதியான ஐயனையே வேண்டி செல்லும் படி நம்மைச் செய்வது திருநீறு. பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தருவதால் வேறு பொருட்செல்வமே தேவையில்லை; திருநீறே பொருள் என்னும் சொல்லுக்கே பொருளதாவது.

நிலையில்லாச் செல்வங்களைத் தேடி அலையும் போதும் துயரங்கள் வருகின்றன. அவை கிடைத்தாலோ அவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்ற துயரம். அந்தச் செல்வங்கள் தொலைந்தாலோ பெருந்துயரம். இப்படிப்பட்டத் துயரங்களையெல்லாம் தீர்த்து பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தந்து அவலம் அறுப்பது திருநீறு.

நிலைபேறில்லாச் செல்வங்களால் வந்த மனவருத்தங்களும் வைத்தநிதி (வங்கிக்கணக்கு), பெண்டிர், மக்கள், குலம், கல்வி போன்றவற்றால் வந்த மனவருத்தங்களும் தணிப்பது திருநீறு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் பொய்யாமொழிக்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து வானத்தையும் அளிப்பது திருநீறு.

உயர்வு தாழ்வு இன்றி எந்த வித வேறுபாடும் இன்றி யார் அணிந்தாலும் பொருத்தமாய் இருப்பது திருநீறு.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப அவன் அருள் பெறும் புண்ணியம் செய்தவர்கள் அணிவது வெண்ணிறத் திருநீறு.

இப்படிப்பட்ட திருநீறு அணிந்து பெருஞ்செல்வத்தை அடைந்து திருமகள் அருள் நிறைந்த அடியவர்கள் வாழும் திருமாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே இப்பெருமைகளை உடையது.

Monday, July 07, 2008

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு


பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே

பூச இனியது நீறு - நெற்றியிலும் உடலெங்கும் பூசுவதற்கு இனியது திருநீறு

புண்ணியம் ஆவது நீறு - நல்வினைப்பயன்களைத் தருவ்து திருநீறு

பேச இனியது நீறு - பெருமைகளை எடுத்துப் பேச இனிமையாக இருப்பது திருநீறு

பெரும் தவத்தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு - பெரும் தவம் செய்யும் அடியவர்களுக்கெல்லாம் அவர் தம் 'மற்றை நம் காமங்களைத்' தீர்ப்பது திருநீறு

அந்தமதாவது நீறு - இறுதி நிலையாவது திருநீறு

தேசம் புகழ்வது நீறு - ஊர் உலகமெல்லாம் புகழ்வது திருநீறு

திருவாலவாயான் திருநீறே - மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

***

மிக எளிமையான பாடல்.

அதிகாலை எழுந்ததும் இறைவன் திருவடிகளைத் தொழுது நெற்றி மணக்கத் திருநீறு பூசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பூசி உணர்ந்தவர்களுக்குத் தெரியும் அதன் இனிமை. அந்த திருநீறை அணிந்து கொண்டு யார் முன்னால் சென்றாலும் அதனைப் பார்ப்பவர்களுக்கும் அதன் புனிதத்தால் நல்ல உணர்வுகள் தோன்றி நல்ல செயல்கள் செய்ய நல்ல தூண்டுதல் கிடைக்கிறது. நமக்கும் திருநீறு அணிந்ததால் உள்ளம் தூய்மை பெற்று நல்வினைகளில் ஈடுபாடு தோன்றுகிறது. அப்படி புண்ணியங்கள் ஆவது திருநீறு. இதன் பெருமைகளைப் பேசத் தொடங்கினால் கேட்பதற்கும் இனியதாக இருக்கிறது. பேசுவதற்கும் இனியதாக இருக்கிறது. திருநீறின் பெருமைகளே பெருமை. முற்பிறவித் தவத்தாலும் நம் முன்னோர் செய்த தவத்தாலும் நமக்குத் திருநீறு அணியும் எண்ணம் தோன்றி நம் ஆசைகளை அறுக்கிறது. ஐயன் வள்ளுவன் சொன்னதைப் போல் பற்றற்றானின் பற்றைப் பற்றி மற்ற பற்றுகளை விட அணி செய்கிறது திருநீறு. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று இறைவனை வேண்டத் தூண்டுகிறது திருநீறு. ஆதி பகவன் முதற்றே உலகு என்று எல்லோருக்கும் தெரியும். அந்தமும் அவனே என்று சொல்லாமல் சொல்லி நிற்பது திருநீறு. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் பொய்யாமொழிப் புலவர். ஊர் உலகம் தேசமெல்லாம் போற்றிப் புகழும் படி நிற்பது திருநீறு. இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே.

Wednesday, June 25, 2008

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

காண இனியது நீறு - அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு

கவினைத் தருவது நீறு - அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு - உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு

மாணம் தகைவது நீறு - மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

மதியைத் தருவது நீறு - நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு

சேணம் தருவது நீறு - விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு. (கடினமான நேரங்களில் மன அமைதியைத் தருவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே

***

முதல் இரண்டு அடிகள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு கடினமாகத் தோன்றியது கடைசி இரு அடிகள். கொடுத்துள்ள பொருள் தவறாக இருப்பின் திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

திருத்தங்கள் 07 நவம்பர் 2006 அன்று செய்யப்பட்டது. திருத்தங்களைச் சொன்ன நண்பர்களுக்கு மிக்க நன்றி.

Monday, June 23, 2008

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு


முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே


முத்தி தருவது நீறு - பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுதலை தருவது திருநீறு

முனிவர் அணிவது நீறு - முக்கண்ணனை அறியும் முனிவர்கள் அணிவது திருநீறு

சத்தியம் ஆவது நீறு - நிலையில்லாத இந்த உலகத்தில் என்றும் நிலையானது திருநீறு

தக்கோர் புகழ்வது நீறு - நம் அன்பிற்கும் பணிவிற்கும் தக்கோரான அடியார்கள் புகழ்வது திருநீறு

பத்தி தருவது நீறு - அணிபவர்களுக்கு பக்தியெனும் இறையன்பைத் தருவது திருநீறு

பரவ இனியது நீறு - போற்றிப் புகழ இனியது திருநீறு

சித்தி தருவது நீறு - நினைத்ததை அடைய வைக்கும் நல்வலிமையைத் தருவது திருநீறு

திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் தென்மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

Sunday, June 22, 2008

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு


வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு - வேதங்களில் எல்லாம் புகழப்பட்டுள்ளது திருநீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு - உலகத்தில் எல்லாவிதமான துயர்களையும் தீர்ப்பது திருநீறு

போதம் தருவது நீறு - ஞானத்தைத் தருவது திருநீறு

புன்மை தீர்ப்பது நீறு - நம் குறைகளைத் தீர்ப்பது திருநீறு

ஓதத் தகுவது நீறு - போற்றிப் புகழத் தகுந்தது திருநீறு

உண்மையில் உள்ளது நீறு - என்றும் உண்மையாக நிலைத்திருப்பது திருநீறு

சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - குளிர்ந்த நீர் வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டுள்ள திருவாலவாயான கூடல் நகரானின் திருநீறே.

Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே


மந்திரமாவது நீறு - மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது திருநீறு.

வானவர் மேலது நீறு - வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு.

சுந்தரமாவது நீறு - அழகு தரும் பொருட்களில் எல்லாம் மிகவும் அழகானது திருநீறு.

துதிக்கப்படுவது நீறு - பெரும் பெருமையுடையது என்று எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு.

தந்திரமாவது நீறு - இறைவனை அடையும் வழிகளில் (தந்திரங்களில்) எலலாம் மிகச் சிறந்த வழியாக விளங்குவது திருநீறு

சமயத்திலுல்ளது நீறு - சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு.

செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே - சிவந்த திருவாயினையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் திருவாலவாயான மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக் கடவுளின் திருநீறே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி