Original article: "Murugan Worship in Fiji"
by Dr. R. Ponnu S. Goundar
பிஜி தீவிற்கு இந்தியர்கள் வருகை
![]() |
முன் ஒரு காலத்தில் பிஜி தீவுகளில் இருந்த கரும்புப் பண்ணைகளில் வேலை செய்ய பல இந்தியர்களை முதன் முதலில் பிஜி தீவிற்கு மேல்நாட்டினர் அழைத்து வந்தார்கள். 1879 ஆம் ஆண்டில் வடக்கு இந்தியப் பகுதியை சேர்ந்தவர்களின் ஒரு தொழிலாளர்களின் குழு, ஒரு கப்பல் மூலம் பிஜி தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 1903 ஆம் ஆண்டு மூன்று தென் இந்தியர்களை 'எல்பா' என்ற கப்பலில் அழைத்து வந்தார்கள். அவர்களுடன்தான் முதன் முதலில் முருகப் பெருமான் பிஜி தீவிற்கு வந்தார். (அவர்கள் முருக பக்தர்கள் என்பதைக் குறிக்கவே இப்படி எழுதப்பட்டு உள்ளது- சாந்திப்பிரியா).
இந்தியா மற்றும் பிஜி தீவிற்கான தூரம் சுமார் 15,000 கிலோமீட்டர்கள். ஆனால் நம்முடைய மூதையர்கள் தமக்கு வேலை தேவை என்பதாற்காக பிஜி தீவு எங்கு உள்ளது என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் அங்கு புறப்பட்டு வந்தார்கள். இந்தோனேசியா, பபுவா, புது குயானா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளை சுற்றிக் கொண்டு பிஜி தீவிற்கு அவர்கள் வருவதற்கு ஆறு மாத காலம் பிடித்தது. அந்த காலத்தில் காற்றின் துணையை நம்பியே கப்பல்களில் சென்ற கடல் பயணமும் அமைந்து இருந்தது. கப்பலை இயக்கும் எந்திரங்களும் கிடையாது. அப்படி பயணம் செய்து வந்தவர்களின் ஒரு கப்பல் ஒருமுறை கடலின் நடுவில் இருந்த பாறை மீது மோதி உடைந்தது. அதில் பயணம் செய்த யாருமே உயிர் பிழைக்கவில்லை.
ஆலயத் தோற்றம்
அப்படிப்பட்ட ஒரு தொழிலாளியாக வந்த தமிழர் சேலம் ராஜ்பூர் தாலுக்காவில் இருந்த சிங்கராண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர். அவர் பெயர் திரு ராமசாமிப் பிள்ளை என்பது . அவர் அங்கு ஐந்து வருட கால ஒப்பந்தத்தில் வந்தார். 1861 ஆம் ஆண்டு அந்த நாட்டில் இருந்த நந்தி எனும் நதிக் கரையில் தனது இஷ்ட தெய்வத்திற்கு ஆலயம் அமைக்க அவருடைய உள்ளுணர்வு தூண்ட அவரால் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. முதலில் அந்த ஆலயம் ஒரு கூறை வீட்டில் கட்டப்பட்டது.
அதன் பின் திரு ராமசாமி பிள்ளை அங்கிருந்த தென் இந்தியர்களிடம் நன்கொடைகள் பெற்று கருங்கல்லினால் கட்டப்பட்ட பெரிய ஆலயமாக அதை மாற்றினார். ஆகவே பெரிய ஆலயமாகப்பட்ட அதன் பெயரே பெரிய ஆலயம் என ஆயிற்று. இன்றளவும் அது தென் கோளப் பகுதியின் பெரிய ஆலயமாகவே உள்ளது.
திரு ராமசாமி பிள்ளை இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றதும், தனி நபர் ஆலயமாக
![]() |
![]() |
![]() |
இருந்து வந்த அந்த ஆலயத்தை நந்தி பகுதியில் வசித்து வந்த தென் இந்தியர்கள் 'தென் இந்திய சமரச சன்மார்க்க இயக்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி அதன் பெயரில் ஆலயத்தை விலைக்கு வாங்கினார்கள். தற்போது ஆலய நிர்வாகம் அந்த சங்கத்தின் கையில்தான் உள்ளது.
தென்காசியில் இருந்து பெரிய கருங்கல்லில் செய்யப்பட்ட முருகன் சிலை ஒன்று 1926 ஆம் ஆண்டு திரு நாயுடு என்பவரால் வரவழைக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் முருகன், வள்ளி மற்றும் தெய்வானை என்ற மூவரும் இருந்த பஞ்சலோகச் சிலை ஒன்று திரு யோகம்பரம் ரெட்டி மற்றும் நந்தி விமான தளத்தின் அருகில் குடி இருந்த சில தென் இந்திய பக்தர்களால் வரவழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் டாக்டர் மகாலிங்கம் என்பவரால் முப்பது கருங்கல்லில் செய்யப்பட்ட தெய்வ சிலைகளும், அர்த்த மண்டப நுழை வாயிலை அலங்கரிக்கும் விதத்தில் இருக்கும்படியான துவாரகாபாலகர் சிலைகளும் அந்த முருகன் ஆலயத்துக்கு அனுப்பப்பட்டன.
திருவிழாக்கள்
அங்கு நடைபெறும் சில திருவிழாக்கள் இவை:
- தை பூசம்
- பங்குனி உத்திரம்
- மாத கார்த்திகை பூஜை
- ஆடிக் கிருத்திகை
- கார்த்திகை தீபம்
- கந்த ஷஷ்டி
இவற்றைத் தவிர சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்றவையும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
தைபூசம் மற்றும் பங்குனி உத்திரப் பண்டிகைகள் முதலில் இருந்தே கொண்டாடப்பட்டு வந்திருந்தன. பிரும்ம உற்சவமான தை பூச உற்சவம் பத்து நாட்கள் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பிஜியின் பல இடங்களில் இருந்தும் அந்த உற்சவங்களில் பங்கு கொள்ள பெருவாரியான மக்கள் வருகின்றனர். அந்த காலங்களில் வாகன வசதிகள் சரியாக இல்லை என்றாலும், நந்தியில் உள்ள அந்த ஆலயாத்திற்கு பலர் நடந்தே வந்துள்ளனர்.
பிஜித் தீவு சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கி உள்ளது என்றாலும் அங்குள்ள இரண்டு தீவுகளில்தான் பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கின்றார்கள். வனுலிவூ என்ற தீவில் உள்ள இந்தியர்கள் படகில்தான் வரவேண்டி இருந்தது என்பதினால் அப்படி வரும் பக்தர்கள் பத்து நாளும் அங்கேயே தங்கி இருந்து விழாவின் நிகழ்ச்சிகள் முடிந்தப் பின்னர்தான் தத்தம் வீடுகளுக்குத் திரும்புவார்கள். அங்கு நடைபெறும் மற்றும் ஒரு முக்கியப் பண்டிகை பங்குனி உத்திரப் பண்டிகை ஆகும். அது மூன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும். அவரவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள அங்குள்ள தென் இந்திய மக்கள் தைபூசம் மற்றும் பங்குனி உத்திரப் பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
பிஜியில் இருந்து அமேரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து போன தொழிலாளிகள் மற்றும் பிற வேலை செய்பவர்கள் கூட காவடி மற்றும் பால் குடங்களை எடுக்க அந்த திருவிழாக் காலத்தில் அங்கு வருகிறார்கள். 1920 ஆம் ஆண்டு திரு அம்பு நாயர் என்பவர்தான் முதன் முதலில் காவடி எடுத்தார். அவர் ஒரு காவடியை சுமந்து கொண்டு சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவை நடந்தே கடந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் முருக பக்தி அங்கு எந்த அளவில் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
திருவிழாக் காலங்களில் அங்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் கட்டணம் இல்லாமல் உணவு வழங்கப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ள பக்தர்கள் முருகனுக்கு தங்களால் முடிந்த காணிக்கைகளை தம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அனுப்புகிறார்கள்.
காவடி எடுக்கையில் தங்களது உடம்புகளில் வேல்களை குத்திக் கொண்டும், சின்ன அளவிலான ரதம் மற்றும் தேர்களை தமது உடம்புகளில் குத்திக் கொண்ட கொக்கிகள் மூலம் இழுத்துக் கொண்டு செல்வார்கள். தைபூசம் மற்றும் பங்குனி உத்திரப் பண்டிகைகள் கொண்டாடப்படுகையில் உற்சவ மூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை போன்றவர்களை நகர் முழுவதும் தேரில் ஏற்றி ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பக்தர்கள் பவனி வரும் உற்சவ மூர்த்திகள் தமது வீடுகளின் முன்னால் வந்து காணிக்கையாய் பெற்றுச் செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்தினால் ஊர்வலம் நடைபெற முடியாமல் போனால் பக்தர்கள் பெருமளவு ஏமாற்றம் அடைகிறார்கள்.
அநேகமாக 1940 ஆம் ஆண்டு முதல்தான் திருவண்ணாமலையை சேர்ந்த திரு ஆறுமுக உடையார் என்பவரால் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படத் துவங்கி இருக்க வேண்டும். அவர் துவக்கி வைத்த அந்த விழா அவருடைய வம்சாவளியினரால் இன்றும் அவர்களுடைய குலதெய்வ வழிபாட்டு விழாவாக நடைபெற்று வருகின்றது.
1956 ஆம் ஆண்டில் மதுரையில் இருந்து வந்த திரு நாயுடு என்பவரால் கந்தர் ஷஷ்டி விழா துவக்கப்பட்டது. அதுவரை அந்த ஆலயத்தில் இருந்த முருகனுக்கு எந்த விதமான வாகனமோ, வேல் போன்ற ஆயுதமோ இருந்ததில்லை. வாகன வசதிகள் பெருகிவிட்டதினால் தற்போது விழாக் காலங்களில் பெருமளவில் பக்தர்கள் அங்கு வருகிறார்கள்.
பிஜி தீவில் மற்ற இடங்களில் உள்ள முருகன் ஆலயங்கள்
நந்தியில்தான் முருகனுடைய மிகப் பழைய மற்றும் மிகப் பெரிய ஆலயம் உள்ளது என்றாலும் அதைத் தவிர பிஜி தீவின் தாகி தாகி, கோரோனுபூ மற்றும் நவுவா போன்ற இடங்களிலும் முருகனுக்கு தனி நபர்களினால் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் செல்லும்போது நம்மை அறியாமலேயே தெய்வீக அதிர்வலைகள் நம்மை சூழ்வதை உணர முடிகின்றது.
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
![]() |
முன் காலத்தில் பிஜியில் பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக ஆண் குழந்தைகளுக்கு முருகன், சுப்பிரமணியன், ஷண்முகன், சின்னசாமி, வேலாயுதம், துரைசாமி, குமாரசாமி, குப்புசாமி மற்றும் பொன்னுசாமி போன்றப் பெயர்களை வைப்பது உண்டு. பெண் குழந்தைகளுக்கு வள்ளி மற்றும் தெய்வானை போன்றப் பெயர்களை வைப்பது உண்டு. இப்படி எல்லாம் பெயர்களை வைப்பது அவர்கள் முருகன் மீது கொண்டிருந்த பக்தியினால்தான். ஆனால் தற்போது இப்படிப்பட்ட பெயர்களை வைப்பது அபூர்வமாகி விட்டது.
ஏன் எனில் அங்குள்ள தமிழர்களுக்கு இந்தி மொழி மீதும், இந்தி திரைப் படங்கள் மீதும் மோகம் அதிகமாகி விட தமிழ் மொழியைக் கூட மறக்கும் அளவிற்குச் அவர்கள் சென்று விட்டார்கள். தற்போது பிஜி தீவுகளில் உள்ள தமிழர்கள் கூட இந்தியில் பேசுவதையே விரும்புகிறார்கள். பிஜியில் முருகனைப் பற்றி ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தமிழ் நாட்டில் இருந்தும் தமிழ் புத்தகங்கள் வருகின்றன.
பின் குறிப்பு
தமிழ் நாட்டில் இருந்து பிஜிக்குச் சென்று இரண்டாம் வம்சாவழித் தமிழனாக வாழ்ந்து வரும் எனக்கு என்னுடைய பெற்றோர்கள்தான் முருகன் மீதான பக்தியை ஊட்டினார்கள் என்றாலும் மேன்மை மிகு சாது குமாரஸ்வாமி என்பவர்தான் எனக்கு அந்த பக்தி அதிகம் அதிகரிக்க அருள் புரிந்தார்.
அவர்தான் தென் இந்திய சங்கம் ஒன்றை பிஜி தீவில் ஏற்படுத்தி அதன் மூலம் நந்தியில் உள்ள ஆலயத்தையும் சேர்த்து அங்குள்ள பிற ஆலயங்களின் மேற் பார்வையையும் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார். அது மட்டும் அல்ல சாது குமாரஸ்வாமி அவர்கள் ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த சாது ருத்ரானந்தஜி ஸ்வாமிகளின் துணைப் பெற்று கரும்புப் பண்ணைகளில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளிகளின் மேம்பாட்டிற்கும் வழி வகுத்தார். அவர்தான் விவேகானந்தா கல்வி நிலையத்தையும் அங்கு துவக்கினார்.
அந்தப் பள்ளியில்தான் நானும் படித்தேன் என்று எண்ணும்போது பெருமைப் படுகிறேன். அதற்கெல்லாம் காரணம் முருகப் பெருமானின் அருள்தான். பிஜியின் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்த என்னுடைய மூதையார்களுக்கும் இந்த தருமனத்தில் மனதார என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Translated into Tamil by: சாந்திப்பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக