செவ்வாய், 9 செப்டம்பர், 2025

இலக்கியத்தில் இறை.

 


எழுதாக் கற்பு

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ?! மயலோ இதுவே!

- குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பார்ப்பன மகனே! இளைய பார்ப்பனனே!
செந்நிறமான பூக்களை உடைய முருக்க மரத்தின் வலிமையான நாரை (பட்டையை) களைந்து மென்மையாக்கிய தண்டு (கைக்கோல்) பிடித்த
தாழ்வாகக் கமண்டலத்தை பிடித்த
படிவர்கள் (முனிவர்கள்) உணவை உண்ணும்
பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பு எனப்படும் வேதத்தைக் (எழுதப்படாமல் ஆனால் கற்கப்படும்; கற்பு = கல்வி) கற்ற
உன் சொல்லில்
பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் திறமை உடைய மருந்து உள்ளதா? (இல்லையல்லவா?!)
(எனக்கு அறிவுரை கூறினால் அவள் மேல் நான் கொண்ட காதல் தீரும் என்று நீ நினைத்தது) ஒரு மயக்கமே! (மயலோ!)

பொருள் உரை: அன்பன் குமரன் மல்லி (ம. ந. குமரன்) 

Monday, August 22, 2011

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!


நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)


பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

Tuesday, November 09, 2010

முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது


சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தன் என்பது இவரது இயற்பெயர் என்பதும், பூதன் என்பது இவரது தந்தையார் பெயர் என்பதும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பதும், இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதும் இந்த பெயரில் இருந்து தெரிகிறது. இவர் தந்தையார் தமிழ் ஆசிரியர்களில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 'மதுரைத் தமிழாசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அடைந்திருக்கிறார். பிற்காலத்தில் மகாமகோபாத்யாய, மகாவித்வான் என்று ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்குச் சிறப்புப் பெயர் தந்து பெருமைப்படுத்தியதை இங்கே ஒப்பு நோக்கலாம். 'மதுரைத் தமிழாசிரியர்' என்பது பெருமைக்குரியதாக இருந்ததால் தன் பெயருடன் அதனையும் இணைத்தே இந்த நூலின் ஆசிரியர் சொன்னார் என்று எண்ணுகிறேன். பாரதி என்று முன்னோர்களில் ஒருவருக்குத் தரப்பட்ட பட்டத்தை அந்த குடிவழியில் வந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வதை இங்கே ஒப்பு நோக்கலாம்.

இந்த நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் சிவன், திருமால், பிரமன் என்ற முப்பெரும் தேவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். சிவனை முதலிலும், திருமாலை அடுத்தும், பிரமதேவனை பின்னரும் இந்தப் பாடலில் போற்றுகிறார்.

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய்மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


இந்தப் பாடலின் முதல் அடியில் இனிதான ஒரு பொருளையும், இரண்டாம் அடியில் இனிதான இன்னொரு பொருளையும், அடுத்த இரு அடிகளில் இனிதான இன்னொரு பொருளையும் கூறுகிறார். இந்த நூலில் நான்கு பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் இப்படியே மூன்று இனியவைகளைக் கூறும் முறை தொடர்கிறது.

கண் மூன்றுடையான் சிவபெருமான். மூன்று கண்கள் கொற்றவை, நரசிம்மன், விநாயகன், முருகன் என்பாருக்கும் உண்டு. இங்கே அன் விகுதியுடன் சொன்னதால் கொற்றவை இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. திருமால் அடுத்த அடியில் கூறப்படுவதால் நரசிம்மனும் இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. மும்மூர்த்திகளில் விநாயகனும் முருகனும் வருவதில்லை ஆதலால் மும்மூர்த்திகளைச் சொல்லும் இந்தப் பாடலில் அவர்களும் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. முக்கண் முதல்வன் என்று சிவபெருமானே போற்றப்படுவதால் அவனே இங்கே குறிக்கப்படுகிறான் என்பது தெளிவு.

தாள் சேர்தல் என்றால் தஞ்சமாக, சரணாக அடைதல் என்று பொருள். தாளினை இடையறாது சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்தலும் அவற்றைத் தஞ்சமாக அடைதலும் மிக இனிது என்று முதல் அடி கூறுகிறது. வைணவமே திருவடிகளின் பெருமைகளைப் பரக்கப் பேசும்; தஞ்சமடைதலை மீண்டும் மீண்டும் பேசும் என்பதே நாம் அறிந்தது. இங்கோ சைவத்திலும் திருவடிகளின் பெருமைகளைக் கூறுதல் உண்டு என்று காட்டுவது போல் இந்த வரி அமைந்திருக்கிறது.

மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பிற்காலத்தில் தேவாரப் பதிகத்தில் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இனிமையே விரித்துக் கூறப்பட்டது போலும்.

இனிமை என்று மட்டும் கூறாமல் மிகவும் இனிமை என்று அழுத்திக் கூறுவது போல் 'கடிது இனிதே' என்கிறார் ஆசிரியர்.

அடுத்த அடியில் துழாய் மாலை சூடும் திருமாலைப் போற்றுவதன் இனிமையைப் பேசுகிறார். தமிழ்க்கடவுள் முருகன் மட்டுமே என்றொரு வழக்கு இருக்க, முருகனும் திருமாலும் சிவனும் கொற்றவையும் தொன்மையான தமிழர் கடவுளரே என்று நானும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து கூறி வருகிறோம். தொன்மையான தொல்காப்பியம் திருமாலைப் போற்றும் தரவுகள் நிறைய இருக்கின்றன. திருமாலின் அந்தத் தொன்மையை வலியுறுத்துவதைப் போல் 'தொன்மையும் மாட்சிமையும் கொண்ட துழாய்மாலையான்' என்று அடைமொழிகளுடன் கூறுகிறார் ஆசிரியர்.

தற்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலேயே முதல் நூலான தொல்காப்பியத்திலேயே குறிக்கப்படுபவன் திருமாலாகிய மாயோன் என்பதால் அவனது தொன்மை விளங்குகிறது. பெருமை மிக்கதை முதலில் சொல்வது என்ற தமிழ் மரபின் படி மாயோனை முதலில் சொன்னது தொல்காப்பியம் - அதனால் திருமாலின் மாட்சிமையும் விளங்குகிறது. இவ்விரண்டையும் இங்கே அடைமொழிகளாகச் சொல்கிறார் ஆசிரியர்.

துழாய் மாலையானைத் தொழுவது இனிது என்கிறார் ஆசிரியர். தொழுவது என்றால் என்ன? வணங்குவது மட்டுமா? தொண்டு செய்வதும் தானே தொழலில் அடங்கும். திருமாலுக்குத் தொண்டு என்னும் கைங்கரியம் செய்வதே வாழ்வின் பயன் என்றும் திருமாலுக்குத் தொண்டு செய்து அடியவனாய் இருப்பதே உயிரின் இயல்பு என்றும் வைணவ தத்துவம் கூறும். தொழல் என்னும் சொல்லைச் சொல்லி அந்தத் தத்துவங்களை அனைத்தையும் நினைவூட்டி விட்டார் ஆசிரியர்.

பிரமன், திருமால், சிவன் என்று வரிசைப்படுத்தி முதல் மூவரைச் சொல்வது மரபு. அந்த மரபிற்கு மாறாக சிவன், திருமால், பிரமன் என்று சொல்கிறாரே இங்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த மரபினை நானும் அறிவேன் என்று சொல்வதைப் போல் அடுத்த அடியினை எழுதுகிறார் சேந்தனார்.

முந்துறப் பேணி என்று சொன்னதன் மூலம் சிவன், திருமால் இவர்களுக்கு முன்னரே மக்களால் போற்றப்படுபவன் பிரமன் என்று சொல்லாமல் சொல்கிறார். பிரமனை நான்முகன் என்று குறிப்பதும் மரபே. அதனை ஒட்டி இங்கேயும் முகனான்கு உடையான் என்று சொல்கிறார் ஆசிரியர்.

சிவபெருமானின் தாள் சேர்தல் இனிது; திருமாலைத் தொழல் இனிது; ஆனால் பிரமதேவனையோ சென்று அமர்ந்து மறைகளால் ஏத்துதல் இனிது. வேதன் என்றும் வேதமுதல்வன் என்றும் நான்முகனை அல்லவோ சொல்வார்கள். அந்த மரபின் படி வேதங்களை ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து விரிவாக ஓதி நான்முகனை வணங்குவது இனிது என்று இங்கே சொல்கிறார் ஆசிரியர்.

இந்தப் பாடலைப் படிக்கும் போதும் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, June 22, 2010

பெருமாளே ஆனாலும் சரி போயிட்டு வாங்க!


அண்மையில் 'The pursuit of Happyness' என்ற ஒரு படத்தை நூலகத்திலிருந்து இரவல் வாங்கி வீட்டில் எல்லோரும் சேர்ந்து பார்த்தோம். தேவைப்படும் பொழுது பணம் இல்லாததால் ஒரு மனிதன் எப்படி எல்லாம் துயரப்படுகிறான் என்பதை மிக நன்றாகக் காட்டியது இந்தத் திரைப்படம். படத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் வரும் போதெல்லாம் ஏழு வயது தேஜஸ்வினி 'இப்படியும் நடக்குமா?' என்பது போல் அதிர்ச்சியைக் காட்டினாள். பணத்தின் அருமையைப் பற்றி பேச எங்களுக்கு அது வாய்ப்பாக அமைய அவள் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். சேந்தனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. நாங்கள் பேசுவதை அவனுக்குப் புரிந்த அளவில் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்றிரவு படுப்பதற்கு முன் அவன் மிகவும் சோகமாக இருந்தான்.

"சேந்தன். என்ன ஆச்சு?"

"நான் கவலையாக இருக்கிறேன்"

"ஏன்?"

"தம்பிகிட்ட பணம் இல்லை!"

சிரிப்பதா இல்லையா என்று தெரியவில்லை. திரைப்படத்தின் விளைவா, எங்கள் பேச்சுக்களின் விளைவா தெரியவில்லை. மூன்று வயதில் ‘பணம் இல்லை’ என்ற கவலை! அவனுடைய உண்டியலில் பணம் இருக்கிறதே என்று சொன்னவுடன் அவன் கவலை பறந்தோடிவிட்டது. :-)

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? நாலடியாரில் ஒரு பாடலைப் படித்ததால் வந்த விளைவு!

'இல்லானை இல்லாளும் வேண்டாள்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. பணம் இல்லாதவன் என்றால் மனைவியும் விரும்ப மாட்டாள் என்று பொருள். மேலே சொன்ன திரைப்படத்தின் கதை உண்மைக்கதை. அதில் பணம் இல்லாத கணவனை மனைவி பிரிந்து சென்று விடுகிறாள். திரைப்படம் முடியும் வரை அவள் திரும்பி கணவனிடம் வந்தாளா இல்லையா என்றே காட்டவில்லை. தேஜஸ்வினிக்கு அது பெரிய கேள்வியாக இருந்தது. கடைசியில் கதாநாயகன் பெரும் கோடீஸ்வரன் ஆகிறான் என்பதால் மனைவி திரும்பி வந்திருப்பாள் என்று சொன்னேன்.




பணம் இல்லாதவனைப் பிரிந்து மனைவியே செல்லும் போது விலை மகளிர் அவனைப் புறந்தள்ளுதல் இயல்பு தானே. அதனைத் தான் நாலடியார் கூறுகிறது. அக்காலத்தில் பரத்தையரிடம் செல்வது குமுகாயத்தில் (சமுதாயத்தில்) இயல்பான ஒன்றாக இருந்ததால் அதனை அழுத்திக் கூற வேண்டிய தேவை நாலடியாரின் ஆசிரியருக்கு இருந்தது போலும்.

அங்கண் விசும்பில் அமரர் தொழப்படும்
செங்கண் மால் ஆயினும் ஆக மன்! - தம் கைக்
கொடுப்பது ஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர் தம் கையால் தொழுது!

(நாலடியார் – பொருட்பால் - பொதுமகளிர் – 373)

விரிந்து பரந்த விண்ணுலகத்தில் வாழும் தேவர்களால் தொழப்படும் பெருமை பெற்ற, சிவந்த தாமரை போன்ற திருக்கண்களைப் பெற்று சிறந்த ஆண்மகன் - புருஷோத்தமன் - என்று பெயர் பெற்ற திருமாலே ஆனாலும் ஆகட்டும், தனது கையில் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லாதவரை கொய்து முகரத் தகுந்த இளந்தளிர் போன்ற மேனியை உடைய மகளிர் தம் கைகளால் வணங்கி விடை கொடுத்து அனுப்புவார்கள்!

பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.




விரிந்து பரந்தது அங்கண் மா ஞாலமாகிய இந்த உலகம்! அதனிலும் பெருமை உடையது அங்கண் விசும்பாகிய விண்ணுலகம்! அந்த விண்ணுலகில் வாழும் தேவர்கள் மனிதர்களால் வணங்கப்படும் பெருமை உடையவர்கள்! அந்த தேவர்களாலேயே வணங்கப்படும் பெருமை உடையவன் செங்கண் மால்! செங்கண் என்று இங்கே சொன்னது அவனது அழகான தாமரை போன்ற கண்களைக் கூறி அதன் மூலம் அவனது வடிவழகைக் குறிப்பாக உணர்த்த. அப்படி பெருமைக்கெல்லாம் சிறந்த பெருமை பெற்றிருந்தாலும் சரி; அழகுக்கெல்லாம் சிறந்த அழகு பெற்றிருந்தாலும் சரி - அவை எல்லாம் இளந்தளிர் போன்ற மென்மையான அழகான மேனியை உடைய பெண்களுக்கு ஒரு பொருட்டில்லை. கையில் காசு இல்லை என்றால் போயிட்டு வாங்க என்று கை தொழுது அனுப்பிவிடுவார்கள்.

இன்னொரு குறிப்பும் இந்தப் பாடலில் இருக்கிறது. பணம் இல்லாதவரைக் கடிந்து துரத்தவில்லை இந்தப் பொது மகளிர். பெருமையுடையவன்; அழகுடையவன் என்பதால்இனி வருங்காலத்தில் அவனிடம் பணம் இருக்க வாய்ப்புண்டு. அப்படி பணம் கிடைக்கும் போது அவனை அவர்கள் 'வருக வருக' என்று அழைப்பார்கள். இப்போது கடிந்து அனுப்பினால் பின்னர் பணம் வரும் போது பகையாக முடியும் என்று எண்ணி பணமில்லாத நேரத்தில் பணிவாகக் கை தொழுது திருப்பி அனுப்புகிறார்களாம்!

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சும்மாவா சொன்னார் ஐயன்!

Sunday, June 20, 2010

மடப்பயலா நீ முருகா?


சங்கப்புலவர் பிரமசாரி பாடிய பாடல் ஒன்று முருகனை நோக்கி மடவனா நீ என்று கேட்கிறது. இப்பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 34வது பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தலைவனின் பிரிவால் பசலை நோய் கொண்டு வருந்தி நிற்கும் தலைவியைக் கண்டு அவள் தாய் அதனை புரிந்து கொள்ளாது, முருகனை வணங்கும் வேலன் வெறியாடலை நிகழ்த்தினால் தலைவியின் நோய் நீங்கும் என்று நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள். அதனைக் கண்ட தோழி முருகனை நோக்கி உரைப்பதைப் போல் பேசி தலைவியின் உண்மை நிலையைக் குறிப்பால் தாய் அறியும் படி செய்கிறாள்.

மானிடர் யாராலும் அணிவதற்குப் பறிக்கப்படாமல் நிறைய பூத்து நிற்கும் குவளை மலரொடு, குருதியைப் போல் சிவந்த காந்தள் மலர் ஒன்று சேரக் கட்டி, தேவ மகளிர் இசையுடன் ஆடும் மலையை உடைய நாடனின் மார்பை தழுவியதால் தோன்றிய நோய் இந்நோய் என்பதை அறியாத மூடர்களாக வெறியாடலுக்கு ஏற்பாடு செய்த தாயும் வெறியாடலை நிகழ்த்த வந்த பூசாரியான வேலனும் இருக்கலாம். ஆனால் உண்மையை அறிந்த கடவுளான நீயும் அந்த வெறியாடலை ஏற்க வரலாமா முருகா? அப்படி நீ வந்தால் நீ மடப்பயலே!

சரி தானே?! அறியா மானிடர் வெறியாடலை நிகழ்த்தலாம்! எல்லாம் அறிந்த கடவுளும் அதனை ஏற்க வரலாமா? அப்படி வந்தால் அவன் மடவன் தானே?!

இதோ அந்த நற்றிணைப்பாடல்.

கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டி
பெருவரை அடுக்கப் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த படர் மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்து அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே!

பாடலின் நிரல்வரிசையிலேயே பொருளைப் பார்ப்போமா?

கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விடப்பட்டிருக்கும் குவளை மலரைப் பறித்து, அவற்றோடு குருதி போன்ற காந்தளின் ஒளிவீசும் பூக்களை அழகுடன் கட்டி, அதனைச் சூடி, பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவு பெற தேவ மகள் அங்கே விழும் அருவியின் இசையையே இன்னிசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டை உடையவனின் மார்பைத் தழுவியதால் அந்த மார்பு தர வந்த நோய் இந்த படர்ந்து மலிந்த பசலை நோய். இது உன் அணங்கால் வந்தது இல்லை என்று நீ அறிந்திருந்தும் மிகப் பெருமையுடன் தலை நிமிர்ந்து கார்காலத்தில் மலர்கின்ற நறுமணம் வீசும் கடம்ப மாலையை சூடி, பூசாரியான வேலன் வேண்ட வெறியாடும் இடத்திற்கு வந்தாய்! உண்மையை அறிந்திருந்தும் இப்படி வந்தாயே! கடவுள் ஆனாலும் ஆகட்டும் நீ மடவனே! வாழ்ந்து போவாய் முருகனே!

கடவுள் சுனையில் மலர்ந்த மலர் ஆதலால் மானிடர் யாரும் குவளையைப் பறிப்பதில்லை. ஆனால் அந்த மலையில் வாழும் தேவ மகளில் அவற்றைப் பறித்துச் சூடிக் கொள்கிறார்கள். மானிடர்கள் தேவ மகளுக்காக அம்மலர்களைப் பறித்து தேவ மகளிரின் சிலைகளுக்குச் சூடி வழிபட்டார்கள் என்று சொன்னாலும் பொருந்தும்.

இந்தப் பாடலின் கருத்து அப்படியே சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவையிலும் வருகின்றது வியப்பு.

இறை வளை நல்லாய் இது நகையாகின்றே
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்

ஆய் வளை நல்லாய் இது நகையாகின்றே
மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனில்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்

செறி வளைக் கை நல்லாய் இது நகையாகின்றே
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்

நேரிழை நல்லாய் நகையா மலை நாடன்
மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்
தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன்
கார்க்கடப்பந்தார் எம் கடவுள் வருமாயின்...


கடவுளே ஆயினும் பொருத்தமில்லாத காரியத்தைச் செய்தால் அவனை மடவன் என்று விளித்தல் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது போலும்! வாழிய முருகே!

Tuesday, March 23, 2010

நாலடியார் போற்றும் கால் நிலம் தோயாக் கடவுள்!

நாலடியார் என்ற சங்க கால நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் சமண முனிவர் இயற்றியது என்ற குறிப்புடன் இருக்கிறது. அபியுத்தர், பதுமனார் என்று இரண்டு பேர்களில் ஒருவர் (அல்லது ஒரே புலவரின் இரு பெயர்களாகவும் இருக்கலாம்) இந்தப் பாடலை எழுதியவராக உரையாசிரியர்களால் குறிக்கப்படுகிறார்கள்.

வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கானிலம் தோயாக் கடவுளை - யானிலம்
சென்னியுற வணங்கிச் சேர்துமெம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று.

வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால்
கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று.


வான் என்ற சொல் இங்கே மேகத்தைக் குறித்தது. வான் இடு வில் - மேகத்தால் உண்டாகும் வானவில்/இந்திரவில். வானவில் எப்போது தோன்றும் என்பது சொல்ல இயலாது. இன்றைய அறிவியலும் இந்த இந்த சூழல்கள் இருந்தால் வானவில் 'தோன்றலாம்' என்று சொல்கிறதே ஒழிய வானவில் தோன்றுவதற்கான காரணிகள் அனைத்தையும் சொல்லி அக்காரணிகள் இருக்கும் பொழுதில் கட்டாயம் வானவில் தோன்றும் என்று அறுதியிடவில்லை; இனி வருங்காலத்தில் அறிவியல் அந்நிலையை அடையலாம். இவையெல்லாம் தெரியாத சங்க காலத்தில், கண்ட காட்சியையும் உய்த்துணர்ந்த அறிவையும் பெரியோர் பொய்யாமொழிகளையும் சான்றாகக் கொண்ட அக்காலத்தில், வான் இடு வில்லின் வரவு அறிய முடியாததாக இருந்தது!

வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத வாய்மையை எடுத்துக் காட்டாகக் கூறி அதே போல் தான் இவ்வுலகில் நிகழும் அனைத்துமே என்று புலவர் உணர்த்துவதைப் போல் இருக்கிறது. இது ஊழ் (ஊழ்வினை என்று இன்றைக்கு நாம் சொல்லும் நல்வினைத் தீவினைப் பயன்கள் இல்லை; ஊழ் - நியதி; உலகில் நிகழ்வன அனைத்தும் ஒரு நியதியின் படியே நடப்பதாகச் சொல்லும் தத்துவம். வடநூலார் அதனை ரிதம் என்றும் சொல்வார்கள்) என்னும் தத்துவக் கருத்தினை மறுப்பது போல் தோன்றுகிறது. ஆனால் ஊழின் படியே அனைத்தும், வானவில்லின் வருகையும் நிகழ்கிறது; ஆனால் அதனை அறியும் அறிவு நமக்கில்லை என்று சொல்வதாகக் கொண்டால் ஊழ்/நியதி என்ற தத்துவக் கருத்தை மறுப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை!

'வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத வாய்மையைப் போல் எம் உள்ளத்தே நாங்கள் நினைத்தவையும் நிகழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையும் எமக்கு இருக்கிறது. அதனால் கால் நிலத்தில் படியாத கடவுளை எம் தலை (சென்னி) நிலம் சேரும்படி தலை தாழ்ந்து வணங்கிப் போற்றுவோம்' என்கிறார் புலவர்.

அனைத்தும் கடந்து உள்ளே இருப்பதால் இறைக்குக் கடவுள் என்ற பெயர் சொன்னார்கள் புலவர்கள். தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது என்பது இந்திய சமயங்களின் கருத்து. அதனைத் தான் இங்கே குறிக்கிறார் போலும் புலவர். வான் இடு வில்லின் வரவு என்பது முன்னியவைகள் முடிவதற்கு ஆன எடுத்துக்காட்டாகக் கொள்ளாமல், கால் நிலம் தோயாக் கடவுளின் வரவாகக் கொண்டால் அவதாரம் என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறதோ என்று தோன்றுகிறது. கால் நிலம் தோயாக் கடவுள் நிலத்தில் கால் தோயும் படி பிறப்பெடுத்து வருவதன் காரணம் நம்மால் அறிய இயலாது - வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத உண்மையைப் போல். அதனால் எம் உள்ளத்தில் முன்னியவை முடிக என்று அவன் தாளை வணங்குவோம் என்று சொல்வதாகக் கொள்ளலாம்.

கடவுளின் கால்கள் நிலத்தில் தோயாமல் இருக்கலாம்; ஆனால் எங்கள் தலைகள் நிலத்தில் உறும் படி வணங்குவோம் என்று கூறியது இறையின் உயர்வினையும் வணங்குபவனின் தாழ்வினையும் மிக்க நயத்துடன் குறித்ததாகக் கொள்ளலாம்.

Monday, February 22, 2010

புறநானூறு போற்றும் பொலிந்த அருந்தவத்தோன்!


அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான அகநானூறு என்ற சங்க கால தொகை நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற புலவர் பெருமான் புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு என்ற தொகை நூலிற்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். அங்கு போலவே இங்கும் சிவபெருமானின் திருவுருவ சிந்தனை ஓங்கும் வண்ணம் இப்பாடலும் இயற்றப்பட்டிருக்கிறது.

கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே.

மஞ்சள், வெள்ளை, கருப்பு என்று பல நிறங்களை சிவபெருமானின் திருவுருவத்தில் கண்டு அக்காட்சியை ஒரு வண்ணக்காட்சியாகத் தருகிறது இந்த கடவுள் வாழ்த்து.

மழைக்காலத்தில் மலர்வது மஞ்சள் நிறம் உடைய மணம் வீசும் கொன்றைப்பூ. அப்பூவினால் ஆன கண்ணியைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான். அழகிய வண்ண மார்பின் மீது அணிந்த தாராகவும் அக்கொன்றைப்பூவே இருக்கின்றது. கண்ணி என்பதற்கு தார் என்பதற்கும் பொருளை, அகநானூற்றின் கடவுள் வாழ்த்தினைப் பார்க்கும் போது பார்த்தோம். மாதொருபாகனாக விளங்கும் திருவடிவைப் போற்றும் வகையில் அங்கே கார்விரிக் கொன்றை பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன் என்று மாலை அணிந்ததையும் பாடினார் புலவர். இங்கே பெண் உருவை மறைத்துத் தோன்றும் திருவடிவைப் போற்றுகிறார் போலும். அதனால் தான் மாலையைப் பாடாமல் கண்ணியையும் தாரையும் மட்டும் பாடினார். கண்ணி கார் நறுங்கொன்றை; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை!

சிவபெருமானது ஊர்தி (வாகனம்) ஒளிவீசும் வெண்ணிறம் கொண்ட விடை, இடபம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆனேறு. அவனுடைய சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் சீர் மிக்க கொடியும் அந்த ஏற்றை உடையதே. ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப!

இப்படி மஞ்சளும் வெண்மையும் அழகு செய்தது போதாதென்று நஞ்சையுண்டு உலகைக் காத்ததால் பெற்ற தொண்டையின் கருநிறம் சிவபெருமானின் திருவுருவத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது. கறை கொண்ட திருமிடறு (தொண்டை) அழகு செய்தலும் செய்தது; கறை மிடறு அணியலும் அணிந்தன்று!

அக்கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்டதால் மறைகளைச் சொல்லும் அந்தணர்களால் போற்றப்படும். அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே!

பெண் என்ற சொல்லுக்கே இலக்கணமான உமையன்னையை தன் உடலில் ஒரு பாகத்தில் வைத்திருப்பவன் சிவபெருமான். சில நேரங்களில் அந்தப் பெண் உருவைத் தன்னுள் அடக்கி மறைத்தாலும் மறைப்பான். பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்!

பிறையைப் போல் வளைந்த நெற்றி அழகுடையதாக இருக்கிறது; பிறை நிலவு நெற்றியின் மேல் நின்று அழகு பெற்றது; பிறை நுதல் வண்ணம் ஆகின்று!

இறைவன் சூடியதால் அப்பிறை நிலவு பதினெட்டு வகைக் கூட்டத்தாரால் போற்றப்படும். அப்பதினெட்டு வகையினர் தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம் (விண்மீன் கூட்டம்), ஆகாசவாசிகள், பூலோகவாசிகள். (இப்படி ஒரு பட்டியலைத் தந்துவிட்டு 'பிறவாறும் உரைப்பர்' என்றும் சொல்கிறது உரை. பிறவாறு எப்படி பொருள் உரைக்கப்பட்டது என்பதைத் தேடிக் காணவேண்டும்). அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!

எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்கும், நீர் வற்றியறியாத கங்கையைத் தலையில் சூடிய, நீர் வற்றியறியாத சிறு குடத்தை (குண்டிகையை) உடைய, தாழ்ந்த திருச்சடையை உடைய, சிறந்த செய்தற்கு அரிய தவத்தை உடைய சிவபெருமானுக்கு இத்திருவுருவம் அமைந்திருக்கிறது. எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்து தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோற்கே!

Saturday, December 26, 2009

அகநானூறு போற்றும் புரிசடை அந்தணன்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.

எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!


பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.

தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.

வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

Saturday, June 13, 2009

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 2


கலித்தொகையின் கடவுள் வாழ்த்தாக கலித்தொகையைத் தொகுத்த 'மதுரையாசிரியன் நல்லந்துவனார்' இயற்றிய 'ஆறறி அந்தணர்' என்று தொடங்கும் கடவுள் வாழ்த்தினைச் சென்ற பகுதியிலிருந்து பார்த்து வருகிறோம். அந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளுக்கான விளக்கங்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். இந்த இடுகையில் மற்ற அடிகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.


'வாழும் வழிமுறைகளை அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் பகர்ந்து, தெளிந்த நீரைச் சடையில் மறைத்து, திரிபுரங்களைத் தீ மடுத்து, மொழியாலும் நினைவாலும் எட்ட இயலாத கடுமையான கூளி எனும் தோல்வியில்லாத கடும்போரினை நடத்தும் கரியமணி போன்ற கழுத்தினை உடைய எட்டுகைகளைக் கொண்டவனே இனி நான் சொல்வதைக் கேட்பாய்' என்று இறைவனை முன்னிலை விளியில் விளித்துப் பாடலைப் பாடுகிறார் நல்லந்துவனார்.

பாடுகிறார் என்று சொன்னது வெறும் எழில் வார்த்தை இல்லை. இப்பாடல் இசையுடன் பாடப்பட்டதே என்று முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வரிகளைப் பார்த்தாலும் இது இசைப்பா என்பது புரியும்.

எண் தோள் ஈசன் ஊழிக்கூத்து ஆடும் போது ஒலி மிக்க பல பறைகள் ஒலி செய்கின்றன. அவன் திருக்கையினில் இருக்கும் உடுக்கையும் இங்கே சொல்லப்பட்ட பறைகளில் ஒன்று - அதுவும் ஓங்கி ஒலிக்கின்றது. படுபறைகள் பல இயம்ப இறைவன் ஆடும் போது மாறி மாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டுகின்றான். அவன் காட்டும் அவ்வடிவங்கள் எல்லாம் அண்டங்களின் வடிவங்கள். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்கின்றான். அப்படி ஒடுக்கத்திற்காக அவன் ஆடும் ஆட்டம் கொடியதாக 'கொட்டி' என்னும் ஆட்டம். இதனைப் புலவர் 'படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி ஆடும்' என்று குறிக்கிறார்.

எல்லா அண்டங்களும் இறைவனிடமிருந்தே தோன்றி அவனுள்ளே ஒடுங்குவதால் 'பல்லுருவம் பெயர்த்து' என்றார் புலவர். 'நீல மேனி வால் இழைப் பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே' என்று ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து அண்டங்களெல்லாம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றுவதைக் காட்டும். 'மணி மிடற்று அந்தணன் தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே' என்று அகநானூற்றின் கடவுள் வாழ்த்து உலகங்களெல்லாம் நிலைபெற்றிருப்பது சிவபெருமானின் திருவடி நிழலில் என்று சொல்லும்.

'போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்' என்றும், 'போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்' என்றும் திருவாசகத்தின் பகுதியான திருவெம்பாவை பாடும்.

அப்படி யாவையும் ஒழிக்கும் காலத்தில் இறைவன் கொட்டி என்னும் ஆட்டத்தை ஆடும் போது அவன் அருகில் உமையன்னை இருந்து தாளத்தின் நிறைவினைக் குறிக்கும் சீரைத் தருவாளோ என்று புலவர் கேட்பது அன்னை அருளுருவாக இருக்க உலகனைத்தையும் நீ அழிக்கும் போது அதற்கு துணை போவாளோ என்று கேட்பது போல் இருக்கிறது. ஆனால் உலகெல்லாம் அழிந்து போனபடியால் அவளைத் தவிர தாளத்தின் காலங்களை உணர்த்த வேறு யாரும் இல்லை என்றும் சொல்வது போலவும் இருக்கிறது.

பக்கங்களில் உயர்ந்து அகன்ற அல்குலையும் கொடி போன்ற நுண்மையான இடுப்பினையும் கொண்டவள் உமையம்மை என்று அன்னையின் எழிலுருவை இந்த இடத்தில் புகழ்கிறார் புலவர்.

முடிவில்லாத பல போர்களையும் வென்று அந்த வலிமையால் பகைவரின் வெந்த உடலின் நீற்றினை அணிந்து நீ பாண்டரங்கம் என்னும் கொடிய ஆட்டத்தை ஆடும் போது மூங்கிலைப் போன்ற வடிவினை உடைய தோள்களையும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய உமையம்மை தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்தும் தூக்கினைத் தருவாளோ? அங்கு தான் வேறு யாரும் இல்லையே. அவள் தான் தரவேண்டும்.

கொல்லும் தொழிலையுடைய புலியை நீ கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டு கொன்றைப்பூவால் செய்த மாலை தோளிலே அசைய, அயனுடைய (பிரம்மனுடைய) தலையைக் கையிலே ஏந்திக் கொண்டு நீ 'காபாலம்' என்னும் கூத்தினை ஆடும் போது முல்லையை ஒத்த புன்முறுவலை உடையவளோ தாளத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் பாணியைத் தருவாள்? அவள் தான் தரவேண்டும். அப்போது தான் வேறு யாரும் இல்லையே.

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

அயன் உலகைப் படைக்கும் தொழிலை உடையவன் என்பதால் அவன் தலையைக் கொய்த பின் ஆடும் ஆட்டமான காபாலத்திற்கு 'பாணி' என்னும் தாளத் தொடக்கத்தை உமையம்மை தருகிறாள் போலும்.

தீமையை அழித்து நன்மையைக் காத்த நிகழ்வாகத் திரிபுரம் எரித்தது அமைவதால் அப்போது ஆடும் பாண்டரங்கத்திற்கு 'தூக்கு' என்னும் தாளத்தின் இடைநிலையைத் தருகிறாள் போலும் உமையன்னை.

உலகெல்லாம் அழிந்து நீறாகப் போகும் நிலையில் ஆடும் ஆட்டம் 'கொட்டி' என்பதால் அந்த நேரத்தில் தாளத்தின் முடிவான 'சீரினை'த் தருகிறாள் போலும் அம்மை.

ஆணவம் மிகுந்த போது அதனை அழித்த கூத்து முதலாவதான காபாலம். பிறருக்குத் தீங்கு விளைத்தாரை அழித்த கூத்து இரண்டாவதான பாண்டரங்கம். அனைத்தையும் அழித்த கூத்து மூன்றாவதான கொட்டி.

இப்படியாக அழிக்கும் தொழிலை நிகழ்த்தும் ஆட்டங்களை நீ ஆடும் போது அவைகளுக்கு உரிய 'பாணி', 'தூக்கு', 'சீர்' என்னும் தாள காலங்களை சிறப்பான அணிகலன்களை அணிந்த அம்மை காத்து நிற்க, நீ ஆடுகின்றாயோ? அன்னை அப்போது அருகிருக்கும் அருட்செயலினால் தான் போலும் நீ வெம்மையை நீக்கி அன்பற்ற பொருளான எமக்கும் அருள் தர ஒரு உருவோடு வந்து எதிர் நின்றாய்.

சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியங்களோ உருத்திரனைப் போற்றவில்லை; சிவபெருமானையே போற்றுகின்றது என்று சில அன்பர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த சங்கப் பாடல் மிகவும் விரிவாக சிவபெருமானின் உருத்திரத் திருக்கோலத்தைப் பாடிப் போற்றுகிறது. நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.

Friday, June 12, 2009

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 1


எல்லா உலகங்களுக்கும் முதல் காரணமாகவும் அதே நேரத்தில் தனக்கு வேறெதுவும் காரணம் இன்றித் தான் அநாதியாகவும் விளங்குபவன் சிவபெருமான். அநாதி மட்டுமின்றி அனந்தனும் ஆனவன்; அவனுக்கு அழிவும் கிடையாது. அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் ஆற்றும் முதல்வன். ஊழிக் காலத்திலே அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பவன் அவனே. ஊழிப்பெருங்கூத்தினை அவன் ஆடி உலகனைத்தையும் அழித்து வரும் வேளையிலே அன்னை பராசக்தியின் அருள் நிறைந்த பார்வையினைக் கண்டுப் படிப்படியாக வேகம் குறைந்து அமைதி அடைந்து ஆதிசக்தியின் துணையோடு அனைத்துலகையும் மீண்டும் படைப்பான். ஊழிப் பெருங்கூத்தை சிவபெருமான் ஆடுவதையும் அப்போது உமையன்னை அருகிருந்து அவனை அமைதிப்படுத்துவதையும் மிக அழகான ஓவியமாக கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் காட்டுகிறார் 'மதுரை ஆசிரியன்'
என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.

அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.

அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.



கங்கை என்ற பெயருக்குத் தெளிவுடையவள் என்ற பொருள் உண்டு. கங்கை நீர் வெண்ணிறமாகவும் யமுனை நீர் கருநிறமாகவும் இருக்கும் என்றும் கங்கையும் யமுனையும் சரசுவதியும் கலக்கும் முக்கூடலுக்குச் சென்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி தெளிந்த நீர் கொண்ட கங்கை என்பதனைத் தேறு நீர் என்கிறார் புலவர். அப்படி தெளிந்த நீரான கங்கையைத் தன் சடையின் ஒரு பகுதியில் முடிந்து வைத்துக் கொண்டவன் சிவபெருமான். பகீரதனுக்காக உலகிற்கு வந்த கங்கையைத் தன் சடையில் முடிந்து அவள் விரைவினைச் சிவபெருமான் தடுத்த நிகழ்வினை இந்த அடி கூறுகின்றது.

கொடுஞ்செயல்கள் பல புரிந்து எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரங்களையும் அதில் வாழ்ந்தவர்களையும் தன் சிரிப்பினாலேயே கொளுத்தியவன் சிவபெருமான். அந்த நிகழ்வினை 'திரிபுரம் தீ மடுத்து' என்ற பகுதியால் சொல்கிறது இந்தப் பாடல் அடி.

கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அதனை மிகத் திறமையாக ஆற்றும் ஆற்றல் கொண்டவன் சிவபெருமான். அப்போரில் சிவபெருமான் தோற்றதே இல்லை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது. அப்படியே சொன்னாலும் அவை முழுவதும் அப்போரினைப் பற்றியும் அப்போரினில் சிவபெருமானின் திறமையைப் பற்றியும் சொல்லி முடியாது. அது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத நிலையை உடையது. அதனை 'கூறாமல் குறித்து, அதன் மேல் செல்லும், கடும் கூளி மாறாப் போர்' என்கிறது இந்தப் பாடல் அடிகள்.

சிவபெருமானது போர்த்திறமை மட்டுமின்றி அவனது எச்செயலும் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாதவை. இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.

பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் கருமணி போன்ற மிடற்றினைப் பெற்றான் சிவபெருமான். அவனுக்கு எட்டு குணங்களும் உண்டு; எட்டு கைகளும் உண்டு. எண்குணத்தான் ஆகிய சிவபெருமானுக்கு எட்டு கைகளும் உண்டு என்பதை 'எண் கையாய்' என்ற சொல் உணர்த்துகிறது.

சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன் இப்போது மணிமிடற்றையும் எண் கைகளையும் தாங்கி உருவத்துடன் எதிரே நிற்கிறான். அவனை முன்னிலையாக வைத்து இந்தப் பாடல் பாடப்படுகின்றது என்பது 'கேள் இனி' என்னும் முன்னிலைச் சொற்களால் புரிகிறது.

வடமொழி புராணங்கள் கூறும் பல செய்திகளை இப்பாடலின் முதல் அடிகள் கூறுகின்றன. சங்க இலக்கிய தொகை நூல்கள் முதலில் ஆக்கப்பட்டன; பின்னர் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் இணைக்கப்பட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பிற்காலத்தவை ஆதலால் அவை வடமொழி நூல்களின் கருத்தினைச் சொல்வது இயல்பு என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அந்த கருத்து மற்ற நூல்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த கலித்தொகை நூலினைத் தொகுத்த பரங்குன்றத்து வாழ்ந்த மதுரையாசிரியர் நல்லந்துவனாரே இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ஒரே காலத்தவை என்று அறியலாம்.

(தொடரும்)

Friday, January 30, 2009

நான்மணிக்கடிகையில் நாரணன்

சங்க இலக்கியத்தில் ஒரு வகையான பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் 'நான்மணிக்கடிகை' என்றொரு நூல் இருக்கிறது. விளம்பிநாகனார் என்ற புலவர் எழுதியது. கடிகை என்றால் கல்வி கற்பிக்கப்படும் இடம்; பல்கலைக்கழகம். ஒரு கடிகையில் எப்படி பலவிதமான கல்விகள் கற்பிக்கப்படுகின்றனவோ அதே போல் இந்நூலில் பலவிதமான அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணிகள். அப்படிப்பட்ட மணியாக கருத்துகள் நான்கினை ஒவ்வொருப் பாடலிலும் சொல்லுவதால் இந்த நூலுக்கு 'நான்மணிக்கடிகை' என்று பெயர்.

இந்த நூலின் ஆசிரியர் மணிவண்ணனை வணங்குபவர் போலும். அதனால் தான் நூலுக்கும் 'நான்மணிக்கடிகை' என்று பெயர் வைத்து விட்டு முதல் இரண்டு பாடல்களால் மணிவண்ணன் மாயவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். கடவுள் வாழ்த்தாக மணிவண்ணனைப் பற்றிய நன்னான்கு கருத்துகளைச் சொல்லும் முதல் இரண்டு பாடல்களை இன்று பார்ப்போம்.

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும் நிறம்.

மாயோனுக்கு அடையாளமாக நான்கு செய்திகளைச் சொல்கிறார் புலவர். மாயவன் திருவுருவை மனத்திருத்தித் தியானிக்க நினைப்பவர்களுக்கு உதவும் பாடல். மாயோன் என்று தொல்காப்பியத்தால் சொல்லப்பட்டவனும் மாயவன் என்று பிற்கால சமய நூற்களால் சொல்லப்பட்டவனும் ஒரே தெய்வம் இல்லை என்று சொல்லித் திரிபவர்களுக்குப் பதில் சொல்வதைப் போல இந்த சங்க இலக்கிய நூலிலேயே 'மாயவன்' என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்.

அவன் இல்லாத இடமே இல்லை; அவன் இல்லாத காலமே இல்லை என்னும் படி எங்கும் எப்போதும் நிலையாக இருக்கும் (மன்னும்) மாயவனின் ஒளி பொருந்திய திருமுகத்தை வானத்தில் தெரியும் நிலா ஒத்திருக்கும் என்கிறார் முதல் வரியில்.

அடுத்து அவனது சுடர் விடும் சக்கரப்படையை போல் இருக்கின்றது வானத்தில் சுடர் விட்டுத் திகழும் ஞாயிறு என்கிறார்.

வெகுகாலமாக இருக்கும் நீர்நிலையில் இருக்கும் தாமரைத் தண்டுகளில் முளைத்து வரும் தாமரை மலர் அவனது திருக்கண்களை ஒத்திருக்கும் என்கிறார்.

காயாம்பூ என்னும் பூவைப்பு அன்றே அலர்ந்திருந்தால் அந்தப் புதிய பூ அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும் என்கிறார்.

நிலவைப் போன்ற திருமுகம், ஞாயிற்றைப் போன்ற திருச்சக்கரம், புதுமலர்த்தாமரையைப் போன்ற திருக்கண்கள், பூவைப்புதுமலர் போன்ற திருநிறம் என்றே மற்ற புலவர்கள் உவமைகளைக் கூற இவரோ அதனை மாற்றி நிலவு திருமுகத்தை ஒக்கும், ஞாயிறு சக்கரத்தை ஒக்கும், புதிய தாமரை திருக்கண்களை ஒக்கும், பூவைப்புதுமலர் நிறத்தை ஒக்கும் என்று 'மாறிய உவமை'களைக் காட்டுகிறார்.

மதி மாயவன் திருமுகத்தை ஒக்கும் என்பதைப் படிக்கும் போது 'கதிர்மதியம் போல் முகத்தான்' என்று வரும் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

இங்கே ஞாயிறு சக்கரத்தை ஒத்திருக்கும் என்று படிக்கும் போது சிலப்பதிகாரத்தில் 'ஞாயிறு போற்றுதும்' என்று சொல்லி நூலை இளங்கோவடிகள் தொடங்கும் போது அங்கும் 'திகிரி போல்' என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது.

இந்தப் பாடல் சொல்வதைப் போலவே வடமொழி வேதங்களும் பல முறை இவனுடைய திருக்கண்கள் தாமரையைப் போன்று உள்ளன என்று சொல்வது நினைவிற்கு வருகின்றது. 'ஞாயிற்றின் கதிரால் விரியும் தாமரையைப் போன்ற திருக்கண்கள் உடையவன் இறைவன்' என்று சொல்லும் வரிகளுக்கு சொல்லப்பட்ட தவறான உரையைக் கேட்டுத் தானே இராமானுஜர் கண்ணீர் வடித்தார். அங்கே ஞாயிறும் தாமரையும் ஒரே வரியில் சொல்லப்பட்டதைப் போல் இங்கே ஒரே பாடலில் ஞாயிறும் தாமரையும் அடுத்து அடுத்து வருகின்றன.

அடுத்த பாடல் 'மாயோன் எனப்பட்டவன் கோகுலத்தில் வாழ்ந்த கண்ணன் இல்லை' என்று மறுப்பவர்களுக்கான பதிலாக அமைகிறது.

படியை மடியகத்து இட்டான்; அடியினால்
முக்கால் கடந்தான் முழுநிலம்; அக்காலத்து
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்; சோவின்
அருமை அழித்த மகன்.

இங்கே வாமன திருவிக்கிரம அவதாரத்தினை ஒரு அடியில் சொல்லிவிட்டு மற்ற மூன்று அடிகளிலும் கோகுலத்துக் கண்ணனின் திருவிளையாடல்கள் சொல்லப்படுகின்றன.


மண்ணைத் தின்றான் என்று கேள்விப்பட்டு வாயைத் திறந்து காட்டச் சொன்ன அசோதைக்கு தன் திருவயிற்றில் எல்லா உலகங்களையும் அவன் காட்டினான் என்பதால் 'படியை (உலகத்தை) மடி அகத்து இட்டான்' என்று பாடுகிறார் புலவர்.

முதல் அடியினால் நடுவுலகத்தையும் இரண்டாம் அடியினால் மேல் உலகங்களையும் மூன்றாவது அடியினால் மாவலியை பாதாள உலகத்திற்கு அதிபதியாக்கி கீழ் உலகங்களையும் அளந்தவன் வாமன திரிவிக்கிரமன் என்பதால் 'அடியினால் முக்கால் கடந்தான் முழுநிலம்' என்கிறார் புலவர்.

தனக்கென இடப்படும் படையலைத் தடுத்து கண்ணனே அதனை மலையுருவில் உண்டான் என்று இந்திரன் வெகுண்டு பெருமழை பொழிவிக்க அப்பொழுது பசுக்களின் கூட்டத்தைக் காக்க கோவர்த்தனமென்னும் குன்றை எடுத்தான் கோவிந்தன் என்பதால் 'அப்பொழுது ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்' என்றார் புலவர்.

'குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்'

என்று தமிழ்வேதமாம் திருவாய்மொழியும் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இருமணிகளைச் சொல்வது நினைவிற்கு வருகிறது.

பாணாசுரனின் செல்வ மகள் உஷை கண்ணனின் பேரன் அநிருத்தனை விரும்பி தன் தோழியின் மூலமாகக் கவர்ந்து சென்ற போது அவனை மீட்டுக் கொண்டு வர பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துணித்து அவனது நெருப்புக் கோட்டையை அழித்தான் அச்சுதன் என்பதை 'சோவின் அருமை அழித்த மகன்' என்பதால் சொல்கிறார் புலவர். சோவின் அருமை என்றால் நெருப்பு போல் சுடர்விடும் பொன் கோட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

சிலப்பதிகாரமும் 'மூவுலகும் ஈரடியால் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்' பாடுகிறது. அங்கே சொல்லப்படும் சோ அரண் தொல்லிலங்கையின் பொற்கோட்டை.

இப்படி மாயோன் சீர் தொன்மையான தொல்காப்பியத்திலிருந்து நிறைய சங்க இலக்கியங்களில் பாடப்பட்டிருக்கிறது.

Friday, January 16, 2009

சிவபெருமானைப் போற்றும் பதிற்றுப்பத்து

சேர மன்னர்களைப் பற்றிய பத்து * பத்து = நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்து. பல மன்னர்களைப் பல புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்ததால் இது தொகை நூலாகும். சங்க இலக்கியத்தின் ஒரு வகையான எட்டுத்தொகை நூற்களில் ஒன்று.

இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து உண்டா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை. 'மதுரைத் திட்டம்' கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லாமலேயே பதிற்றுப்பத்தினைக் காட்டுகிறது. இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலில் ஆசிரியர் பெயர் சொல்லாமல் ஒரு பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கிறது. ஆனால் அங்கேயே இருக்கும் உரை நூலில் அந்தப் பாடலைக் காணவில்லை. பாடலைப் படித்துப் பார்த்தால் சங்க காலப் பாடலைப் போன்று தான் இருக்கிறது. உரையின் துணையின்றி எனக்குப் புரிந்த வரையில் இந்தப் பாடலின் பொருளை எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய மேற்தகவல்கள் தெரிந்திருந்தாலோ பாடலின் பொருளைத் தவறாக எழுதியிருந்தாலோ சொல்லுங்கள்.

எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே




வடமொழியில் இருக்கும் புராணங்கள் எல்லாம் தமிழரிடமிருந்து சென்றவை என்ற கருத்திற்கு அணி செய்யும் இன்னொரு பாடல் இது. சிவபெருமானின் 'உருவ அழகை'யும் (இலிங்கத் திருமேனியை இல்லை) புராணங்கள் கூறும் சிவபெருமானின் பெருமைகளையும் அழகாகக் கூறும் பாடல் இது.

எரி எள்ளு அன்ன நிறத்தன் - எரிகின்ற எள்ளினைப் போன்ற நிறத்தை உடையவன்.

சிவபெருமான் சிவந்தவன் என்பது தமிழர் மரபு. அதனாலேயே சேயோன் (சிவந்தவன்) என்னும் பெயர் தந்தைக்கும் மகனுக்கும் ஆகும் என்று சொல்வதுண்டு. எள்ளு எரியும் போது அது மிக அடர்த்தியான சிவப்பு நிறத்தில் எரியும். அப்படி எரியும் எள்ளினைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டவன் சிவபெருமான்.

விரி இணர்க் கொன்றை அம் பைந்தார் அகலத்தன் - விரிந்த கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலை சூடிய மார்பன்.

நெஞ்சு அகன்று விரிந்து இருப்பது ஆண்மகனுக்கு அழகு. அப்படி அகன்று விரிந்த மார்பை அகலம் என்று சொல்வது மரபு. அப்போதே பறித்த விரிந்த பூங்கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலையை அணிந்தவன் சிவபெருமான்.

பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் - அடங்காத முப்புரத்தை உடையவர்களின் மதில்களை/கோட்டைகளை எரித்த வில்லை உடையவன்.

திரிபுராசுரர்கள் என்று சொல்லப்படும் முப்புரம் உடைய அசுரர்களின் முக்கோட்டைகளையும் சிவபெருமான் தன்னுடைய சினம் மேவிய சிரிப்பாலேயே எரித்து அழித்தார் என்று சொல்லும் புராணம். அப்படி முப்புரம் எரித்த போது மேரு மலையையே தன் கைவில்லாக ஏந்தி இருந்தானாம். அந்த செய்தியைச் சொல்கிறது 'வில்லன்' என்ற பெயர்.

பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - இருள் நிறைந்த (சுடு)காட்டில் நிலையாக இருந்து ஆடும் ஆடல்வல்லவன்.

சிவபெருமான் சுடலையில் ஆடுபவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சுடலையை இங்கே 'இருள் பயில் காடு' என்ற தொடரால் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள். அவன் ஆடல் வல்லான் என்பதால் 'ஆடலன்' என்றார்கள்.

நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்டு இரு புறங்களும் மறையும் படி தாழ்ந்து இருக்கும் சடைமுடியை உடையவன்.

சிவபெருமானுக்கு தாழ்சடை உண்டு என்பது தேவார திருவாசகங்களின் கூற்று. அந்த தாழ்சடை நீண்டு இரு புறங்களிலும் மறையும் படி நிற்கின்றதாம். சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?

குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன் - தொடையில் அறைந்து நுண்ணிய ஒலி கொண்ட மணியை ஒலிக்கும் விழாவை உடையவன்.

ஆட்டத்தின் போது தன் திருத்தொடைகளை அறைந்து கொண்டு தன் திருக்கையில் இருக்கும் கண்டா மணியை ஒலிக்கும் செயல்களை சிவபெருமான் செய்வதாக இப்பாடல் வரி சொல்கிறது. நுண்ணிய ஒலியை எழுப்பும் மணி என்பதால் வெண்மணி என்றார் பாடலாசிரியர்.

நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுட்பமான வேலைப்பாடுகள் உடைய உடுக்கையை அடிக்கும் விரலை உடையவன்.

சிவபெருமானின் திருக்கையில் துடி என்ற உடுக்கை இருக்கின்றது. உடுக்கைக்கு இன்னொரு பெயர் சிரந்தை. அது மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பதால் நுண்ணூல் சிரந்தை எனப்பட்டது. இரட்டுதல் என்றால் உடுக்கையின் இடுப்புப்பகுதியில் விரல்களை வைத்து இப்புறமும் அப்புறமும் அசைத்து ஒலி செய்தல். அப்படி உடுக்கையை ஒலிக்கும் விரல்களை உடையவன் சிவபெருமான்.

இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் - ஆணாகிப் பெண்ணாகி இருவுருவமும் ஆகி மாதொரு பாகனாய் நுண்ணிய அணிகலன்கள் அணிந்திருக்கும் பெரும் அழகுடையவன்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தில் சொன்னது போல் இங்கும் சிவபெருமானின் மாதொருபாகன் திருவுருவம் போற்றப்படுகின்றது. இரண்டு உருவாகி நுண்ணிய அணிகலன்களை அணிந்து அழகுடன் திகழ்கிறான் சிவபெருமான்.

ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - எழுகின்ற இளம்பிறை சேர்ந்த நெற்றியை உடையவன்.

சிவபெருமான் பிறைசூடி என்பதை அனைவரும் அறிவோம். அப்போதே எழுந்து வரும் இளம்பிறையை அணிந்த திருமுடியை உடையவன் என்று இங்கே சொல்லப்படுகிறான் மதிவாணன்.

களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் - களங்கனியின் கருமைக்குப் போட்டியாக அமைந்திருக்கும் மறு கொண்ட தொண்டையை உடையவன்.

சிவபெருமான் நீலகண்டன். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் அவனுடைய மிடறு/தொண்டை மணிமிடறு/மறுமிடறு ஆகியது என்று கூறும் புராணம். அப்படி சிவபெருமானின் தொண்டையில் காணப்படும் மறு களங்கனியைப் போல் விளங்குவதால் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் சிவபெருமான் என்கிறார் புலவர்.

தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - திரிசூலமென்னும் ஒளிவீசும் படைக்கலத்தை உடைய கால உருவான கடவுள்.

சிவபெருமானே அழித்தல் தொழிலுக்குரிய கடவுள் என்னும் புராணம். அதனால் அவனைக் காலக் கடவுள் என்கிறார் புலவர். அவன் தன் திருக்கையில் திரிசூலம் ஏந்தியிருப்பதையும் பாடுகிறார்.

உயர்க மா வலனே - அவனுடைய புகழும் பெருமையும் வலிமையும் மிகுதியாக உயரட்டும்!

இப்படிப் புராணங்கள் சொல்லும் சிவபெருமானின் உருவத்தையும் பெருமைகளையும் போற்றிப் பாடி இதுவும் ஒரு தியானச் சுலோகம் என்னலாம் படி இருக்கிறது இப்பாடல்.

Wednesday, January 07, 2009

ஐங்குறுநூறு காட்டும் மாதொருபாகன்

மூவகை உலகங்கள் இருக்கின்றனவாம். மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நடு உலகங்கள். மக்களும் மாக்களும் மரம் செடி கொடிகளும் வாழும் உலகங்கள் நடு உலகங்கள். மக்களில் சிறந்தோர் முனிவரும் தேவரும் எனப்பட்டோர் வாழும் உலகங்கள் மேல் உலகங்கள். மக்களில் கீழானோர் கீழ்மதி படைத்தோர் வாழும் உலகங்கள் கீழ் உலகங்கள். இவை யாவுமே மனத்தளவிலான ஆன்மிக உலகங்கள். இம்மூவகை உலகங்களும் இந்த பூமி என்ற ஒற்றைத் தளத்திலேயே இருக்கின்றன - இவை யாவும் ஆன்றோர் வாக்கு. இம்மூவகை உலகங்களைப் பற்றி வடமொழிப் பனுவல்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. அவ்வாறு கூறும் ஒரு பழந்தமிழ்ப் பாடலைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இம்மூவகை உலகங்களும் யாருடைய திருவடியின் கீழ் தோன்றின என்றும் இப்பாடல் சொல்கிறது. அவன் 'ஒருவன்' என்று நின்றவன். இதனையே வேதமும் 'ஏகம் அத்விதீயம்' என்று சொல்கிறது. இந்தப் பாடல் இப்படி 'ஒருவன்' என்று சொன்னதையே பிற்காலப் பாடல் ஒன்று 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்' என்கிறது.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே


நீல மேனி கொண்டவன் ஒருவன் - அவன் மாயோன். நீல மேனி கொண்டவள்? அவள் மாயோள். அவளை தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் 'ஒருவன்'. அவன் யார்? அவன் தான் சேயோனின் தந்தையான சிவபெருமான். அவனுடைய திருவடி நிழலில் தான் மூவகை உலகங்களும் ஒவ்வொன்றாக முகிழ்த்தனவாம்.

நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்கிறார் இந்தப் பாடலைக் கடவுள் வாழ்த்தாக 'ஐங்குறுநூறு' என்ற சங்க கால தொகை நூலில் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. ஆமாம் இவர் தான் திருமுருகனை 'சேவலங்கொடியோன்' என்று குறுந்தொகையில் பாடியவர். இங்கே அவனது தாய் தந்தையைப் பாடுகிறார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை. வடமொழி வேதத்தில் இலிங்க வழிபாடு இகழப்படுவதாகவும் அப்படி இகழப்படுவது திராவிடர் வழிபாடே என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை நிலை நாட்ட அவர்கள் காட்டும் ஒரே தரவு 'சிசுன தேவர்கள்' என்று யாரையோ இகழ்ந்து பேசும் வேத வரியை. இலிங்க வழிபாடு திராவிடர்/தமிழர் வழிபாடு என்றால் அந்த வழிபாட்டைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்குமே என்று தேடி வருகிறேன். இது வரை பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் காணவில்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட குறிப்புகள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

அருவுருவான இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும் போது சிவபெருமானின் உருவ உருவை மிகவும் வருணித்து வரும் பாடல் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது பழந்தமிழர்கள் அருவுருவத் திருமேனியான இலிங்கத்தை விட உருவத்துடன் கூடிய சிவபெருமானையே பெரிதும் போற்றியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

இப்பாடலில் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாக சிலர் எண்ணிக் கொள்ளும் அருத்தநாரி/மாதொருபாகன் உருவத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. சைவ சமயம் ஆணாதிக்கம் கொண்ட சமயமாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் கால மாற்றத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணுக்கு சம உரிமை தருவதைப் போல் மாதொருபாகன் என்ற உருவத்தை ஆக்கி வழிபட்டதாகவும் சில மூடர்கள் சொல்லித் திரிகின்றனர். அப்படி சொல்வதெல்லாம் அவர்களின் தடம் புரண்ட கற்பனையே என்பதை இந்தப் பாடல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பழந்தமிழ் இலக்கிய காலத்திலேயே மாதொருபாகன் என்ற திருவுருவம் தமிழர் நடுவே மிகவும் பெரிதாக வழிபடப்பட்டிருக்கிறது என்பது இப்பாடலில் சிவபெருமானின் திருப்பெயரைக் கூட குறிப்பிடாமல் 'வாலிழை பாகத்து ஒருவன்' என்று குறிப்பதிலேயே தெரிகிறது.

சிவபெருமானின் திருவடி நிழலைப் பற்றி இந்தப் பாடல் பாடுவதைப் படிக்கும் போது 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்று பக்தி இலக்கியக் காலத் திருமுறைப் பாடல் நினைவிற்கு வருகிறது.

குறுந்தொகையின் சேவலங்கொடியோன்

இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை எப்படி அடைந்தன? அப்படி அடையப்பட்ட இன்பமயமான நாட்கள் எப்படி தொடர்கின்றன? ஏதோ ஒரு பெரிய மலையின் உருவில் எல்லாரையும் மயக்கும் ஒரு தீமை ஒன்று இந்த உலகத்தின் இன்ப நாட்களைக் கெடுத்து நின்றதாம். அதனை ஒரு வெஞ்சுடர் வேல் பிளந்து அழித்ததாம். அவ்வாறு அந்த பெரிய மலையின் உருவில் நின்ற தீமையை அவ்வேல் அழித்ததால் இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை அடைந்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்களாம். ஏதோ புராண கதையைக் கேட்டது போல் இருக்கிறதா? கந்த புராணத்தில் வரும் கதை தான். ஆனால் அது கந்த புராணத்தில் தான் முதன்முதலில் சொல்லப்படவில்லை. அதற்கும் முன்பே குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழந்தமிழ் புலவரால் சொல்லப்பட்டது. ஆகையினால் கந்த புராணக் காலத்தில் இந்தக் கதை புகுத்தப்பட்டது என்று எண்ணவும் சொல்லவும் இனி செய்தல் வேண்டாம்.

தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே


தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும், கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.

தியான சுலோகம் என்று ஒன்றை வடமொழிப் பனுவல்களில் சொல்வார்கள். இறைவனின் திருமேனியை அடி முதல் முடி வரை வருணித்துத் தியானிக்கும் வகையில் அச்சுலோகங்கள் அமையும். இந்தப் பாடலும் ஒரு தியானசுலோகம் போல் அமைந்திருக்கிறது. திருவடிகளைச் சொல்லி, திருமேனியைச் சொல்லி, அத்திருமேனியின் பேரொளியைச் சொல்லி, அத்திருமேனியில் உடுத்தியிருக்கும் பேரொளிப் பட்டுத் துணியைச் சொல்லி, ஏந்தியிருக்கும் வேற்படையைச் சொல்லி, சேவற்கொடியைச் சொல்லி அவன் திருவுருவைக் கண் முன்னால் நிறுத்தி தியானிக்க வைக்கிறது இந்தப் பாடல்.

தாமரை என்ற மலரை மங்கலக் குறியாகக் கொள்வது வழக்கம். அதனைக் கொண்டு இந்நூலைத் தொடங்குவது போல் இப்பாட்டை அமைக்கிறார் பெருந்தேவனார். அழகிய சேவடி எல்லோரும் விரும்பும் சேவடியாகவும் இருப்பதால் காமர் சேவடி என்றார் போலும்.

இந்தப் பாட்டில் குன்றைத் தொளைத்த வேற்படையைப் பாடியிருப்பதைப் படிக்கும் போது பிற்காலத்தில் ஓசை முனி அருணகிரிநாதர் 'கிளை பட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே' என்று கந்தரனுபூதியில் பாடியது நினைவிற்கு வருகிறது. 'கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல்' என்று சிலப்பதிகாரமும் கூறும். இதன் மூலம் குன்றின் நெஞ்சைக் குமரனின் நெடுவேல் பிளந்த செய்தி சங்க காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருகிறது என்று தெரிகின்றது.

சேவலங்கொடியோன் என்று சொல்லியதன் மூலம் குன்றினைத் தொளைத்த நெடுவேல் சூரன் மாமரமாய் கடல் நடுவில் நின்ற பின்னர் அம்மரத்தையும் பிளந்து ஒரு பகுதியைச் சேவற்கொடியாய்க் கொண்டனன் குமரன் என்று சொன்னார் ஆசிரியர்.

Monday, December 01, 2008

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி!

எத்தனை எத்தனை நாடகங்கள்! இறைவனிடமே! அத்தனை நாடகங்களையும் தொடர்ந்து நாம் நடத்த அவனும் நடித்துக் கொண்டிருக்கிறான். அருளாளர்கள் இருவர் சொல்வதைப் பாருங்கள்.


கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே

- திருநாவுக்கரசர்.

நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தைக் வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்


உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

- தொண்டரடிப்பொடியாழ்வார்.

உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.

Sunday, November 16, 2008

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர் புலவர்கள்.


அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
ஆகிய சங்க நூல்களில் இராமாயணச் செய்திகள் காணப்படுகின்றன.

அகநானூற்றில் எழுபதாவது பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது; நெய்தல் திணையைச் சார்ந்தது. இப்பாடலில் இராமாயணச் செய்தி இடம் பெற்றுள்ளது. இராமன் இலங்கைக்குச் செல்லத் தமிழகத்தின் தென்திசைக்கு வந்து தனுஷ்கோடியில் ஆலமரம் ஒன்றின் கீழ் இருந்து, போர் தொடர்பாக வானர வீரர்களோடு ஆராயும்போது, அவ் ஆலமரத்தின்கண் இருந்த பறவைகள் சப்தமிட, அச்சப்தத்தைத் தன் கைகவித்து அடக்கினான் என்று புலவர் பாடியுள்ளார்.


"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,"

என்பன புலவரின் பாடல் வரிகள்.

தனுஷ்கோடி பாண்டிய மன்னர்களின் பழைய துறையாகும். புறநானூற்றில் 378வது பாடலைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவார். அவர், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனைப் பாடிப் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தம் குடும்பத்திடம் தந்தார். அணிகலன்களைக் குடும்பத்தார் அணிந்து மகிழ்ந்ததைப் பாடும் போது இராமாயணக் கதையைக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

விரலில் அணிவதைச் செவியிலும், செவியில் அணிவதை விரலிலும்;
அரையில் அணிவதைக் கழுத்திலும், கழுத்தில் அணிவதை இடையிலுமாக மாற்றி மாற்றி அணிந்தனர்
என்று நகைச்சுவையோடு பாட வந்தவர்.

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு."
என்று இராமாயண நிகழ்ச்சியை உவமையாக்கிப் பாடியுள்ளார்.


இராவணன் கவர்ந்து சென்றபோது சீதை, தன் அணிகலன்களை ஒரு முடிப்பாகக் கட்டிக் கீழே போட்டுச் சென்றாள் என்றும், அம்முடிப்பு சுக்ரீவனிடம் இருந்தது என்றும் இராமாயணம் கூறும். இதனை நினைவிற் கொண்ட புறநானூற்றுப் புலவர், சீதை விட்டுச் சென்ற அணிகலன்களைக் குரங்குகள் முறைமாறி அணிந்து பார்த்ததைப் போலத் தம் சுற்றத்தார் அணிந்து பார்த்தனர் என்று நகைச்சுவையோடு பாடியுள்ளார்.

கலித்தொகையில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் உவமைகளாகக் காணப்படுகின்றன. கலித்தொகை ஐவர் பாடிய பாடல்களில் தொகுப்பாகும்.

பாலைக்கலியைப் பாடியவர் பெருங்கடுங்கோ என்பவர். இவர் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" என்று அழைக்கப்படுபவர். பாலை நிலத்தின் கொடுமையை வருணிக்கும்போது பாரதக் கதை நிகழ்ச்சியை உவமையாகக் கூறியுள்ளார்.

மதங்கொண்ட களிறுகள் மலையில் எரியும் தீயில் அகப்பட்டு கொள்ள, மூங்கில்களைக் கொண்ட அத்தீயை, தன் கால்களால் மிதித்து, வழி ஏற்படுத்திக் கொண்டு, தீக்குள் மாட்டிக் கொண்ட யானைகளைக் காத்து, அவற்றோடு வேழம் ஒன்று வெளியேறியது. இது எப்படி உள்ளதாம்?

"வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர்பெற்
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்
களிதிகழ் காடஅத்த கடுங்களிறு, அகத்தவா,

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல,
எழு உறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்." (பாலைக்கலி - 24)

என்று பாடுகிறார் கவிஞர்.

துரியோதனன் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகையில் தீப்பிடிக்க, அவ்வரக்கு மாளிகையை அழித்து, பீமன், தன் உடன்பிறந்தாரோடு பிழைத்து வெளியேறியது போல உள்ளதாம்.
பாரதக் கதையின் முக்கியமான நிகழ்ச்சி திரெளபதியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சினைப் பீமன் பிளந்தததாகும்.

இதனை ஓர் உவமையாக்கியுள்ளார் முல்லைக்கலியைப் பாடிய சோழன் நல்லுருத்திரனார். காளைகளை அடக்கும் வீரர்களின் வீரத்தைப் பேசுவது முல்லைக்கலி.

தன்னை அடக்க வந்த ஆயர்குலத்து இளைஞனைக் குத்திக் கொம்பில் கோத்துக் கொண்டு ஆடும் காளை. பாஞ்சாலியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து, கொன்று, வஞ்சத்தை முடித்துக் கொண்ட பீமன் போலக் காட்சியளிக்கின்றதாம். இதனை


"நோக்கு அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றம்காண்
அம்சீர் அசைஇயல் கூந்தல் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்." (முல்லைக்கலி - 1)

என்று பாடியுள்ளார் புலவர்.

பீமன் துரியோதனன் துடையை முறித்ததைக் குறிஞ்சிக்கலியில் (பா.16) கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரத நாட்டின் புகழ்மிக்க இதிகாச நிகழ்ச்சிகள் 1800 ஆண்டுகட்கு முந்தைய, நம் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுவதை, அவ்விதிகாசங்களின் செல்வாக்காகவும், அவற்றின் மீது தமிழர்கட்கு இருந்த ஈடுபாடாகவும் நோக்க வேண்டும்.

முனைவர். ந.முருகேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. கண்ணன் நடராஜன் ஐயா.

Wednesday, October 01, 2008

சங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு


சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார். அவர் சொன்ன பின்னர் தேடிப் பார்த்ததில் கிடைத்த சில குறிப்புகளைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். மேலும் குறிப்புகள் கிடைக்கும் போது அவற்றையும் வருங்காலத்தில் எழுதுகிறேன். இந்தத் தேடுதலில் பல புதிய கருத்துகளை அறிந்து கொண்டேன். என்னை இச்செயலில் பணித்த நண்பருக்கு நன்றி.

சங்க இலக்கியத்தில் அன்னை என்றவுடனே நினைவிற்கு வரும் பெயர் 'கொற்றவை'. கொற்றம் என்றால் வெற்றி. அந்த வெற்றியை வேண்டியும் வெற்றி அடைந்த பின்னர் அதற்கு நன்றி கூறியும் வழிபடும் நிலைக்கு 'கொற்றவை நிலை' என்ற பெயரைத் தருகிறது சங்க நூற்களிலேயே பழமையானது என்று கருதப்படும் தொல்காப்பியம். பகைவர் மேல் போர் செய்யக் கிளம்பும் போது பகைவரின் செல்வமான மாடுகளை முதலில் கவர்ந்து வருவது பண்டைத் தமிழ் வழக்கம். போரின் அந்தப் பகுதியைக் கூறுவது வெட்சித் திணை. கொற்றவை நிலை என்ற துறை வெட்சித் திணையின் பகுதியாகச் சொல்லப்படுகிறது.

பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது நம் எல்லோருக்கும் தெரியும். அகத்திணைகளாக நிலத்தின் வகைகள் அமைந்திருக்கின்றன - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அந்த நிலங்களின் விளக்கங்களை நாம் அறிவோம்.

இவ்வைந்து நிலங்களில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு நிலங்களுக்குரிய தெய்வங்களை மட்டும் தொல்காப்பியம் குறித்துச் செல்கிறது. முல்லைக்கு மாயோன் ஆகிய திருமாலும் குறிஞ்சிக்கு சேயோனாகிய செவ்வேள் முருகனும் மருதத்திற்கு வேந்தனாகிய இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் தெய்வங்களாகக் கூறப்படுகின்றனர். பாலை நிலத்துக்குரிய தெய்வம் தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. ஆனால் அடுத்து வந்த சில சங்க நூற்களில் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவை சொல்லப்படுகிறாள்.

அகத் திணைகளில் முதலாவதாகக் குறிக்கப்படும் குறிஞ்சித்திணைக்கு ஒத்த புறத்திணையாக வெட்சித் திணை கூறப்படுகிறது. வெட்சியில் கொற்றவை நிலை கூறப்படுவதால் குறிஞ்சிக்கு செவ்வேள் முருகனுடன் கொற்றவையும் தெய்வம் என்ற ஒரு கருத்து பழைய உரையாசிரியராகிய இளம்பூரணரால் சொல்லப்பட்டிருக்கிறது.

மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை - இவ்விரண்டும் வெம்மையால் தம் நிலை மாறித் திரிந்து நிற்பது பாலை - இப்படி ஒரு விளக்கமும் பழந்தமிழ் நூற்களில் காணப்படுகிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் இந்நிலங்கள் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய இலக்கணத்துடன் இருந்து அடுத்த ஆறு மாதங்கள் வெயில் சுடும் போது பாலையாக மாறினாலும் அந்நிலங்களில் வாழ்ந்த மக்கள் ஆறு மாதங்கள் முருகனையும் மாலவனையும் வணங்கிவிட்டு மற்ற ஆறு மாதங்களில் கொற்றவையை வணங்கினார்கள் என்று கூறுவது சரியாகாது. அதனால் எப்போதுமே இந்நிலங்களில் கொற்றவையும் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்ப முருகன் 'பழையோள் குழவி' என்று போற்றப்படுகிறான். மாலவன் 'மாயோன்' எனப்பட்டதைப் போல் கொற்றவையும் 'மாயோள்' எனப்படுகிறாள்.

'பழையோள்' என்ற பெயரைப் பார்க்கும் போது இவளே தெய்வங்களுள் மூத்தவளாக இருந்தாள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. கொற்றவை என்ற பெயரிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது. கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றத்தைத் தரும் மூத்தவள் என்ற பொருள் கொற்றவைக்கு இருப்பதையும் காணலாம்.

மால் நிறம் என்பது கருநிறத்தைக் குறிக்கும். கரிய மலையை 'மால் வரை' என்று அழைக்கும் மரபை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணலாம். அந்த மால் நிறத்தைக் கொண்டவன் 'மாஅல்' என்றும் 'மாயோன்' என்றும் அழைக்கப்பட்டான். அதே போல் மால் நிறத்தைக் கொண்டவள் 'மாயோள்' என்று அழைக்கப்பட்டாள்.

இவள் முல்லை நிலத்து தெய்வமாக இருந்தாள் என்பதை இவள் 'காடு கிழாள்', 'காடமர் செல்வி' என்றும் அழைப்படுவதிலிருந்து அறியலாம்.

இவள் இந்நிலங்களில் வாழ்ந்த பல இனக்குழுவினருக்குத் தலைமைத் தெய்வமாக இருந்தாள் என்பது 'ஐயை' என்ற பெயரின் மூலம் தெரிகிறது.

மலையும் காடும் மிகுதியாக இருந்த சேர நாட்டினர் இத்தெய்வத்தை மிகுதியாக வணங்கினர் என்ற குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சேர நாட்டில் இருக்கும் அயிரை மலை என்றொரு மலை குறிக்கப்பட்டு அந்த அயிரை மலையில் வாழும் கொற்றவையைப் போற்றும் பாடல்கள் இருக்கின்றன. அந்த அயிரை மலைக் காவலனாக சேரர்கள் குறிக்கப்படுகின்றனர்.

இந்தக் கட்டுரையை ஒரு அறிமுகமாகவே எழுத எண்ணியதால் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் எந்தத் தரவுகளையும் எடுத்துத் தரவில்லை. தரவுகள் வேண்டுமென்றால் கேளுங்கள்; தருகிறேன். இவற்றை விரித்து மேலும் எழுதும் போது அந்தத் தரவுகளையும் எடுத்துக் காட்டி எழுதுகிறேன்.

Friday, September 26, 2008

உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்

திருமுருகாற்றுப்படையின் முதல் பகுதியாகிய திருப்பரங்குன்றத்துப் பகுதியைப் பார்த்து வருகிறோம். இது வரை வந்த இடுகைகளில் முதல் ஆறு அடிகளைப் பார்த்தோம். இன்று அடுத்த ஐந்து அடிகளைப் பார்ப்போம்.

ஞாயிறு போல் தோன்றினான் என்று முதலில் அவன் திருஒளியைக் கூறிவிட்டு பின்னர் அவனது திருவடிப் பெருமையைக் கூறினார் நக்கீரர். பின்னர் திருக்கரங்களின் பெருமையைக் கூறிவிட்டு அவனது அடையாளத்தைக் கூறுவதைப் போல் அவன் மனைவியைக் கூறி அவள் கணவன் என்றார். இந்த ஐந்து அடிகளில் அவனது அழகிய மாலையைப் பற்றி கூறுகிறார்.

கடம்ப மாலை திருமுருகனுக்கே சிறப்பாக உரியது என்பது மரபு. அவன் அன்னையும் அப்பனும் அம்மலரை அணிபவரானாலும் அவனைப் பற்றிக் கூறும் போது சிறப்பாக கடம்ப மலரைக் கூறுவது மரபாகவே அமைந்திருக்கிறது. அந்த மரபு திருமுருகாற்றுப்படையில் தொடங்கியது போலும். இந்த அடிகளில் 'உருள் பூ' என்று கடம்பமலரைச் சொல்கிறார்.

இந்த உருள் பூவினால் செய்யப்பட்ட தாரை அணிந்த மார்பன் என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த உருள்பூந்தார் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்று சொல்கிறார். அந்த குளிர்ச்சி எங்கிருந்து வந்ததென்றால் அந்தப் பூ பூத்த கடம்ப மரத்திலிருந்து வந்தது. அந்த மரம் ஏன் குளிர்ச்சியாய் இருந்தது? அடர்ந்து வளர்ந்த கடம்ப வனத்துள் அந்த மரம் இருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்தால் தான் என்ன? அடர்ந்து வளர்ந்திருந்ததனால் பகலவனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாமல் எந்த நேரமும் இதமான குளிர் அங்கே நிறைந்திருந்தது. பகலவன் கதிர்கள் மட்டும் நுழைய முடியாவிட்டால் குளிர்ச்சி அமைந்துவிடுமா? இல்லை தான். கடலில் இருந்து நீரை முகந்து கொண்டு வந்த சூல் கொண்ட மேகங்கள் முதன் முதலில் இந்த கடம்பங்காட்டில் தான் மழை பொழிந்தன. அதில் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது. ஓகோ. அப்படி என்றால் இந்த மலர் மார்பனின் திருமார்பில் வீற்றிருப்பது கடலின் குளிர்ச்சியா? சரி தான்.

இப்படித் தான் கடம்பந்தாரைப் பற்றி பாடியிருக்கிறார் நக்கீரர்.

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்


மேகங்கள் நீரை முகந்து கொள்வதால் கடலுக்கு கார் கோள் என்ற பெயர் வந்தது. அந்தக் கார்கோளிலிருந்து நீரினை முகந்து எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சூலை/கருவைக் கொண்ட பெரும் மேகமானது, பகலவனும் மதியவனும் ஒளி வீசும் வானத்தில் நின்று சிறு சிறு துளிகளாகச் சிதறி, முதல் மழையைப் பொழிந்ததால் தழைத்து வளர்ந்த குளிர்ந்த மணம் வீசும் காட்டில் இருள்படும் படி நெருங்கி வளர்ந்த காட்டு மரத்தின் உருள் பூவினால் ஆன குளிர்ச்சியான மாலை புரளும் மார்பினன் திருமுருகன்.

கற்பின் வாணுதல் என்று முன்பு தெய்வயானையம்மையைக் குறிப்பாகக் கூறினார். உருள்பூ என்று இங்கே கடம்பத்தைக் குறிப்பாகக் கூறினார். கடவுளருக்குரிய வேறெந்த பூவும் உருண்டு இருப்பதில்லை; கடம்பம் மட்டுமே அவ்வுருவம் கொண்டது என்பதை கடம்ப மலரினைப் பார்த்தவர் அறிவர். அதனால் உருள்பூ என்றே குறிப்பாகக் கூறுவது போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் கற்பின் வாணுதல் என்ற உடன் தெய்வயானையம்மை என்ற புரிதல் இருந்தது போல் உருள் பூ என்றவுடன் கடம்பம்பூ என்ற புரிதலும் இருந்தது போலும்.

வாணுதல் என்று முன்னர் சொன்னதை 'வாள் + நுதல்' என்று பிரித்து ஒளி பொருந்திய நெற்றியினைப் பெற்ற பெண் என்று பொருள் சொல்வார்கள். அப்படியே நானும் சொல்லியிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் வாள் நுதல் என்பதற்கு வாளினைப் போல் கூர்மையான நெற்றி என்று முன்பொரு முறை பொருள் சொல்லியிருந்தார். இங்கே மீண்டும் 'வாள் போழ் விசும்பு' என்று வருகிறது. இதற்கு எல்லா உரையாசிரியர்களும் ஒளி வீசும் வானம் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனையே நானும் கொண்டேன்.

கடும்கோடையில் முதல் மழை பெய்தால் எவ்விதமான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் இந்தக் கடம்பங்காட்டில் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த முதல் மழையையே இங்கே தலைப்பெயல் என்றார்.

உருள் பூவினால் செய்ததால் தான் போலும் இவன் திருமார்பில் அந்த பூந்தார் ஓரிடத்தில் நிற்காமல் புரண்டு கொண்டே இருக்கின்றது. :-)

Tuesday, September 09, 2008

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்...

திருமுருகாற்றுப்படையைப் படிக்கத் தொடங்கி படித்தவற்றை உடனுக்குடன் இடுகைகளாகவும் எழுத எண்ணி இரு இடுகைகளை இது வரை இட்டிருக்கின்றேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் 'திருமுருகாற்றுப்படை' என்ற வகையில் அவ்விரு இடுகைகளையும் படிக்கலாம். அப்படி தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய ஒரு வருடம் ஓடிவிட்டது. அவ்விரு இடுகைகளிலும் திருமுருகாற்றுப்படையின் முதல் மூன்று வரிகளை மட்டுமே பார்த்திருந்தோம். இந்த இடுகையில் அதற்கடுத்த மூன்று வரிகளைப் பார்க்கலாம். உரையாசிரியர்கள் இந்த ஆறு அடிகள் சேர்ந்தே ஒரு தொடர் என்று எண்ணுகிறார்கள். அதனால் அந்த ஆறு அடிகளையும் இங்கே தருகிறேன். முதல் மூன்று அடிகளுக்கான பொருளை முன்னர் இட்ட இடுகைகளில் பாருங்கள்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

சுருக்கமாக முதல் மூன்று அடிகளின் பொருளானது: உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும்படி உலகத்தை வலம் வரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல், எத்திசையில் நோக்கினும் விளக்கமாகத் தோன்றும் குறைவற்ற ஒளி கூடிய (திருமுருகன்).



இனி அடுத்த மூன்று அடிகளின் பொருளைப் பார்ப்போம்.

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை

உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும் படி தோன்றினாலும் அவனை அடைந்தவர்கள் அவனை வெறுத்தவர்கள் என்று இருவகையான உயிர்கள் எங்கும் இருக்கின்றனவே. அவனை அடைதல் என்பது அவனது உரிமைப்பொருட்களான உயிர்களையும் உலகத்தையும் நேயத்துடன் நோக்கி அவற்றிற்கு தொண்டு செய்தல். அவனை வெறுத்தலானது அவ்வுயிர்களையும் உலகத்தையும் வெறுத்து அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது.

அவனது உடைமைகளான உயிர்களையும் உலகத்தையும் விரும்புபவர்கள் அவனுக்கு உரியவர்கள். அவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி அவர்களுக்கு நன்மைகள் செய்து தாங்குகிறான் திருமுருகன். அதனால் 'உறுநர்த்தாங்கிய' என்றார் ஆசிரியர்.

அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்களை அழித்து இல்லாமல் செய்வது; அப்படி அழிக்கப்பட்டவர்களைக் கண்டு மனம் திருந்தி செறுநர்களாக இருந்தவர்கள் உறுநர்களாக மாறுவதால் செறுநர்கள் இல்லாமல் செய்வது. சூரனைப் போன்றவர்கள் செறுநர்களுக்கு எடுத்துக்காட்டுகள். அவர்களை அழித்து இல்லாமல் செய்கிறான் கந்தன். அவர்களே மனம் திருந்தி வணங்கும் போது மயிலும் சேவலுமாக அவர்களைத் தன் அணிகளாகக் கொள்கிறான் கடம்பன். இதனையே 'செறுநர்த் தேய்த்த' என்று குறிக்கிறார் ஆசிரியர்.

இவ்விரு செயல்களையும் திருமுருகனே செய்தாலும் அச்செயல்களைச் செய்வதில் முனைப்புடன் இருப்பவை அவனது இரு அங்கங்கள்.

உறுநரைத் தாங்குவது அவனது அழகும் வலிமையும் பொருந்திய திருத்தாள்கள். அழகுடன் இருப்பதால் உறுநர்களைக் கவர்ந்து அடி சேர்க்கிறது. அவர்களின் தீவினைப்பயன்களை நீக்கி அவர்களது அறியாமை இருளையும் நீக்குவதால் வலிமை கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வாறு உறுநரைத் தாங்குவது அவனுடைய அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகள் என்பதால் 'உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்' என்றார் ஆசிரியர்.

உறுநரைத் தாங்குவது அவனது திருவடிகள் என்றால் செறுநரைத் தேய்ப்பதோ தடக்கைகள். இடியைப் போன்றும் மேகத்தைப் போன்றும் விளங்கும் நீண்ட திருக்கைகள் செறுநரைத் தேய்க்கின்றன. முன்பு சொன்னது போல் அத்திருக்கைகள் மறக்கருணை செய்யும் போது இடியைப் போல் விளங்குகின்றன. அறக்கருணை செய்யும் போது அவை மேகங்களைப் போல் அன்பைப் பொழிகின்றன. இவ்வாறு இடியைப் போல் அழித்தும் மேகத்தைப் போல் கருணை செய்தும் செறுநரைத் தேய்ப்பதால் 'செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை' என்றார் ஆசிரியர்.

முதல் நான்கு அடிகளையும் ஒரு தொடராகக் கொண்டு 'உலகம் உவக்கும் படி தோன்றி ஒளி பெற்று விளங்குவது திருமுருகனின் திருவடிகள்' என்றும் பொருள் கொள்வார் உண்டு.

இவ்விதமாக அடியவரைக் காத்தும் வெறுப்பவர்களைக் குறைத்தும் திகழும் திருமுருகனின் இன்னொரு முதன்மையான அடையாளத்தை அடுத்த வரியில் சொல்கிறார் ஆசிரியர். வடமொழியிலும் புருஷசூக்தம் 'உனக்கு மண்மகளும் திருமகளும் மனைவிகள்' என்று மனைவியரை முன்னிட்டே மாதவனை அடையாளம் சொல்லும். இங்கே நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது.



முதல் அடையாளமாக உறுநரைத் தாங்குதலையும் இரண்டாவது அடையாளமாக செறுநரைத் தேய்த்தலையும் சொல்லிய பின் மூன்றாவதாக அவனது மனைவியைப் பற்றி சொல்லி அவனது அடையாளத்தை உறுதி செய்கிறார் ஆசிரியர்.

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

அழகிய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளின் கணவன் என்று மட்டுமே சொன்னால் எந்தப் பெண்ணைச் சொன்னார் என்ற குழப்பம் நேரிடும். திருமுருகனின் மனைவியரான வள்ளியம்மையாகவும் இருக்கலாம் தெய்வயானையம்மையாகவும் இருக்கலாம். அதனால் 'மறு இல் கற்பின்' என்ற அடைமொழியை இங்கே தருகிறார் ஆசிரியர். வள்ளியம்மையை மணந்ததோ களவு மணம் என்ற வகையில் அடங்கும். பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து அவருடன் போராடி வள்ளியம்மையை மணம் புரிந்தான் இக்கிழவன். அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'களவு மணம்' என்ற வகையில் அமையும். இரண்டு பக்கத்துப் பெற்றோரும் உற்றோரும் மகிழ்ந்து மணமுடித்துத் தர தெய்வயானையம்மையை மணந்தான் இத்தேவசேனாபதி. அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'கற்பு மணம்' என்ற வகையில் அமையும்.

அப்படி குற்றம் சொல்ல முடியாத வகையில் கற்பு மணத்தால் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட தெய்வயானையின் கணவன் திருமுருகன் என்பதை 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்றார் ஆசிரியர்.

இனி வரும் இடுகைகளில் தொடர்ந்து திருமுருகாற்றுப்படை நூலைப் பயிலலாம்.

Thursday, August 21, 2008

*நட்சத்திரம்* - கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று குதூகலம் கொள்ள வேண்டிய வாரம் இது. ஆமாம் இந்த வாரத்தில் தான் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது. சென்ற முறை தமிழ்மண விண்மீனாய் இருந்த போது குடியரசு தினம் வந்தது. இந்த முறை விண்மீனாய் இருக்கும் போது விடுதலை நாள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே; அந்த வாரத்தில் இந்த வாய்ப்பு கிடைக்காமல் அதற்கடுத்த வாரத்தில் கிடைக்கிறதே என்று நினைத்த போது அதை விடச் சிறப்பாக கண்ணனின் பிறந்த நாள் அமையும் வாரமாக அமைந்துவிட்டது.

கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கமாக இந்த இடுகை அமைகின்றது. கொண்டாட்டத்தின் தொடக்கம் என்று சொல்வதில் இருக்கும் குறிப்பு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். :-)

***

"அப்பா. முல்லை நிலக்கடவுள் மாயோன் என்பதை தொல்காப்பியம் சொல்கின்றது. முல்லை நிலத்தின் கருப்பொருளும் உரிப்பொருளும் எப்படியெல்லாம் கண்ணனுக்குப் பொருந்தி வருகின்றது என்பதையும் நீங்கள் முன்பு சொன்னீர்கள். சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல், பூவை நிலைத் துறை போன்ற இலக்கண இலக்கிய செய்திகளையும் கண்டோம்.

ஆரியத்தின் வருகைக்குப் பின்னர் ஆரியம் தமிழ்நெறியோடு செய்து கொண்ட உடன்பாடே மாயோனும் விஷ்ணுவும் இணைந்தது; சேயோனும் ஸ்கந்தனும் இணைந்தது; வாலியோனும் பலராமனும் இணைந்தது என்றெல்லாம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் ஆரியம் வருவதற்கு முன்னரே தமிழ்நெறியில் ஸ்கந்தனுக்கு உரியவை, விஷ்ணுவுக்கு உரியவை, பலராமனுக்கு உரியவை என்று அவர்கள் வகுக்கும் செய்திகள் இருக்கின்றனவே. ஒரே குழப்பமாக இருக்கிறது"

புன்னகையுடன் "குமரா. நல்ல கேள்வி கேட்டாய். துவரைப்பதியிலிருந்து வந்த மன்னர் குடியினர் வேளிர்கள் என்று சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கின்றன. துவரைப்பதி என்றால் கண்ணன் ஆண்ட துவாரகையைக் குறிப்பதாகச் சிலரும் கருநாடகத்தில் இருக்கும் துவாரசமுத்திரத்தைக் குறிப்பதாகச் சிலரும் சொல்கிறார்கள். மூவேந்தர்களில் பாண்டியர்கள் மூத்த குடியினர் என்பது உனக்குத் தெரியும். பாண்டியர்களுக்கு இணையான தொன்மையுடன் இருப்பவர்களாக வேளிரையும் இலக்கியத் தரவுகள் சுட்டுகின்றன. அவர்கள் வடக்கிலிருந்து தெற்கே வரும் போது சில தொன்மங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அல்லது துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தத் தொன்மங்கள் எல்லாம் தமிழர்களுடையதாகவே இருந்து ஆரியத்தில் பின்பு கலந்திருக்கலாம். என்றைக்கு ஆரியத் தொடர்பு ஏற்பட்டது, அது நிகழ்ந்த இடம் வடபுலமா தென்னகமா என்றெல்லாம் இன்னும் நுணுகிப் பார்க்கவேண்டும். உனக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இறங்கி ஆய்வு செய்து பார்"

"நீங்கள் சொல்வது சரி தான் அப்பா. வெளிநாட்டிலிருந்து தங்கள் மதத்தைப் பரப்ப வந்தவர்கள் மேலோட்டமாக ஆராய்ந்து சொல்லிச் சென்ற சில செய்திகள் உறுதியான கருத்தாக்கங்களாக கொண்டு பல குழப்பங்கள் இருந்து வருவதை அறிகிறேன். அந்தப் பாதிரியார்கள் செய்த தமிழாய்வால் பல நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன; சில குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன"

"இருக்கலாம் மகனே. ஆனால் அவர்கள் அந்தக் குழப்பங்களை வலிந்து செய்தார்கள் என்று எண்ண இடமில்லை. அவர்களுக்குக் கிடைத்த தரவுகளின் படி அவர்களின் புரிதலைச் சொல்லிச் சென்றார்கள். அதனை அடுத்து மேன்மேலும் உள்ளே சென்று பல விதமான தரவுகளைத் தேடி மற்ற செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல் அவர்களின் அரைகுறைப்புரிதல்களின் மேலாக ஒரு பெரும் கட்டடத்தையே கருத்தாக்கம் செய்துவிட்டார்கள். அது தமிழின் போகூழே. ஒரே மூச்சில் தமிழின் தமிழரின் தொன்மைப்பெருமையைப் பேசிக் கொண்டே அடுத்த நொடியே அந்நியர்கள் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என்று தன்னிரக்கம் பேசி மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள் தமிழர்கள். ஒரே நேரத்தில் பேரறிவினராகவும் அ‍ன்‍னியர்களால் ஏமாற்றப்பட்ட ஏமாளிகளாகவும் நம் முன்னோர்கள் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியது. இதெல்லாம் பேசித் தீராது. வேறேதும் இருந்தால் சொல். பேசலாம்"

"உண்மை தான் தந்தையே. இவை பேசித் தீரப் போவதில்லை. பேசினாலும் புரிந்து கொள்பவர் மிகக்குறைவு. அந்த நேரத்தை நல்லபடியாக இலக்கிய ஆய்வில் செலவழிக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் பற்பல இடங்களில் கரு‍‍ நிறக் கடவுளான மாயோனைப் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் சிலவற்றை சொல்லுங்கள் அப்பா."

"சேந்தன் தாதை. முன்பே சொன்னது போல் நீயே கற்று தெளிவதே நல்லது. மற்றவர் சொல்வதும் உரை நூல்களும் கடின சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் உதவியாக இருக்கலாம். ஆனால் உண்மையை உணர வேண்டும் என்ற ஆர்வம் இருப்பின் நீயே உள் நுழைந்து பார்ப்பதே நல்லது"

"தந்தையே. அப்படியே சொல்கிறேன். உள்ளே இறங்குவதற்கு முன் கரையோரம் நின்று நீரைச் சோதிப்பதைப் போல் சோதிக்க நினைக்கிறேன். அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். இருக்கும் நேரத்தில் எதையெல்லாம் கோடி காட்ட முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லுங்கள்"

"மகனே. நீ வேண்டிக் கேட்பதால் சொல்கிறேன். கண்ணனை இலக்கியம் எங்கெல்லாம் குறிப்பிடுகிறது என்று பட்டியல் இடத் தொடங்கினால் பட்டியல் நீளும். சட்டென்று நினைவிற்கு வருபவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்.

முதலில் நினைவிற்கு வருவது பரிபாடல். எட்டுத் தொகை நூற்களில் ஒன்றான பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன என்றும் தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன என்றும் படித்திருக்கிறேன். அந்த இருபத்தி இரண்டில் முருகன் மேல் எட்டு பாடல்களும் வையை நதி மீது எட்டு பாடல்களும் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. அந்த ஆறு பாடல்களையும் சொல்லத் தொடங்கினால் வெகு நேரம் செல்லும். அவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம். அதனால் வேறு நூற்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

எட்டுத்தொகை நூற்களில் இன்னொன்று நற்றிணை. அதன் கடவுள் வாழ்த்தாக 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற சங்கப்புலவர் பாடிய பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது. விட்டுணு என்ற வடசொல் விண் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்ததாக தமிழறிஞர் சிலர் சொல்வார்கள். விட்டுணு என்னும் வடசொல்லிற்கு எங்கும் நிறைந்தவன்; அண்ட உருவாக இருப்பவன் என்று பொருள். இந்தப் பாடல் மாயோனை அண்ட உருவாகக் காட்டுகிறது. அந்த வகையில் விட்டுணு என்ற பெயரின் அடிப்படைக் கருத்து இந்தப் பாடலில் சொல்லப் பட்டிருக்கிறது எனலாம்.

மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே.
 "

"ஆகா. பாடல் மிக எளிமையாக இருக்கிறது அப்பா. அப்படியே சுருக்கமான பொருளும் சொல்லிவிடுங்கள்"

"குமரா. எளிதாக இருக்கிறது என்று சொல்கிறாய். பின் ஏன் பொருள் உரைக்கச் சொல்கிறாய்?"

"முழுவதுமாகப் புரியவில்லை அப்பா. அதனால் தான்"

"சரி சுருக்கமாகச் சொல்கிறேன் கேள். உலகம் திருவடிகளாக, கடல் உடையாக, வானம் திருமேனியாக, திசைகள் கைகளாக, சூரியனும் சந்திரனும் திருக்கண்களாக, எல்லா உயிர்களும் உலகங்களும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் வேத முதல்வன் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் மாயோனே என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இது தான் சுருக்கமான பொருள்"

"மிக்க நன்றி அப்பா. அடுத்தப் பாடலைக் கூறுங்கள்"

"பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் ஒரு இடத்தில் மாயோனின் கொப்பூழிலிருந்து நான்முகன் தோன்றிய செய்தியைக் கூறுகிறது.

நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டு...


என்று செல்லும் அந்தப் பாடல் வரிகள். இதன் பொருள் புரிகிறதா?"

"நன்கு புரிகிறது அப்பா"

"நல்லது. அடுத்தப் பாடலைச் சொல்கிறேன் கேள். பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஏதாவது ஒன்றைச் சொல் பார்ப்போம்"

"என்ன அப்பா இப்படி கேட்டுவிட்டீர்கள்? திருக்குறளும் நாலடியாரும் பதினெண்கீழ்கணக்கு நூற்கள் தானே"

"ஆமாம் மகனே. அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்பது. அதன் கடவுள் வாழ்த்தும் மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி


இந்த வெண்பாவின் பொருள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"மேலோட்டமாகப் புரிகிறது அப்பா. சொல்கிறேன். சரியா என்று பாருங்கள். வாமனனாக வந்து திருவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்ததும், கண்ணனாக வந்த போது குருந்த மரத்தை உதைத்துச் சாய்த்ததும், அப்போது நெருங்கி வந்த மாய வண்டிச்சக்கரத்தை உதைத்ததும் பூவைப்பூ வண்ணம் கொண்ட மாயோனின் திருவடிகளே. சரியா அப்பா?"

"சரி தான் மகனே. இப்படியே இன்னும் இருக்கும் பாடல்களையும் படித்துப் பார்த்தால் பழந்தமிழர் மாயோனை எப்படி போற்றியிருக்கின்றார்கள் என்று புரியும்"

"இன்னும் இருக்கும் பாடல்களைச் சொல்லுங்கள் அப்பா"

"இன்னும் இரு பாடல்களைச் சொல்கிறேன். பின்னர் நான் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்"

"அப்படியே ஆகட்டும் அப்பா. இன்னும் இரு பாடல்களை மட்டும் சொல்லுங்கள். உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்"

"புறநானூறு ஐம்பத்தி ஆறாம் பாடல் பழந்தமிழகத்தின் நாற்பெரும் தெய்வங்களைப் பற்றி சொல்கிறது.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணி மிடற்றோனும்
க்டல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்...


எந்த நான்கு கடவுளர்களைப் பற்றி சொல்கிறது இந்தப் பாடல் தெரிகிறதா குமரா?"

"நன்றாகத் தெரிகிறது அப்பா. சிவபெருமான், பலராமன், திருமால், திருமுருகன் என்ற நால்வரைத் தானே இந்தப் பாடல் குறிக்கிறது?"

"ஆமாம் மகனே. பாடல்வரிகள் முழுவதும் புரிகின்றனவா?"

"இல்லை அப்பா. சுருக்கமாகப் பொருள் சொல்லுங்கள்"

"எருதினைக் கொடியாகக் கொண்ட தீ போன்ற சடைமுடி கொண்ட எதிர் நிற்க முடியாத மழுப்படையையுடைய நீல மணி போன்ற திருத்தொண்டையை உடைய சிவபெருமானும், கடலில் வளரும் வலம்புரி சங்கைப் போன்ற வெண்ணிறம் கொண்ட திருமேனியை உடையவனும் வெற்றி பெறும் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனும் பனைக்கொடியை உடையவனும் ஆன பலராமனும், கருமணியைப் போல் திருமேனியின் நிறம் கொண்டவனும் விண் வரை உயர்ந்த கருடக் கொடியைக் கொண்டவனும் பெரும் திறன் கொண்டவனும் ஆன மாயோனும், மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உடையவனும் பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவனும் ஆன செவ்வேளும் என்று நான்கு கடவுளர்களைச் சொல்கிறது இந்தப் பாடல்"

"திருமுருகாற்றுப்படையில் பலராமனைத் தவிர்த்து மற்ற மூவரைச் சொல்லுவதை ஏற்கனவே படித்திருக்கிறேன் அப்பா. இன்று இந்த நால்வரைப் பற்றிய பாடலை அறிந்தேன்."

"மகிழ்ச்சி. இதோ இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் கடைசி பாடல். புறநானூறு ஐம்பத்தி ஏழாம் பாடல் மாயோனைப் பற்றி பேசுகிறது.

வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன்..."


"புரியவில்லையே அப்பா"

"கல்வியே இல்லாதவர்களோ கல்வியில் வல்லவர்களோ புகழ விரும்புபவர்களுக்கு மாயோனின் புகழினைப் பாடுதல் மிக அரிது என்றும் அவ்விருவர்களில் யார் அவனைப் புகழ விரும்பினாலும் அந்த விருப்பம் ஒன்றே அவன் அருளைப் பெறுதற்குப் போதும் என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள்"

"மாயோனைப் பற்றிய பழந்தமிழ் குறிப்புகளைச் சொன்னதற்கு மிக்க நன்றி அப்பா. இதே போல் மற்ற கடவுளர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று வரும் நாட்களில் சொல்ல வேண்டும்"

"அப்படியே செய்கிறேன் குமரா. அதற்குள் நீயே கொஞ்சம் இலக்கியம் படிப்பதும் நன்று"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி