onday, August 22, 2011
நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!
நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)
பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!
செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.
கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.
குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.
Saturday, March 05, 2011
ஆராவமுதே! - 3

"நெடுமால் ஆழ்வார் மேல் கொண்டுள்ள அன்பால் ஆழ்வாரின் உடலமும் அன்பாகி நீர்பண்டம் போல் உருகி நிற்கச் செய்தான். ஆனால் அவனது அந்த அன்பின் வெளிப்பாடாக குளிர நோக்குதல், வாவென்று அழைத்தல், நலம் வினவுதல், ஆரத் தழுவுதல் என்று ஒன்றுமே செய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசவும் அதில் மயங்கி உறங்குபவன் போல் தன் திருமேனியின் அழகெல்லாம் நன்கு திகழும்படி கிடந்தான். நீ கிடந்ததை மட்டும் தான் காண்கிறேன் என் தலைவனே; உன் அன்பின் வெளிப்பாடுகளைக் காணவில்லை என்கிறார் ஆழ்வார்"
"ஆழ்வார் இதனை எல்லாம் பாசுரத்தில் சொல்லியிருக்கிறாரா? ஆகா அருமை. எப்படி என்று விளக்குங்கள்".
"சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
என்பவை இந்த பாசுரத்தின் அடுத்த அடிகள்.
தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடல், மொழி, மனம் என்ற மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே உயிர்களின் இயல்பு என்று சான்றோர் சொல்வார்கள் அல்லவா? பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவுள்ள உயிர்கள் மட்டுமின்றி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களுக்கும் அது தானே இயல்பு. அந்த இயல்பையே செந்நெல்லின் சீர் என்று ஆழ்வார் இங்கே குறிக்கிறார்.
காற்றில் இயல்பாக ஆடி அசையும் செந்நெல்லைக் கண்டு அது இறைவனுக்குக் கவரி வீசுவதாகச் சொல்லலாமே என்று ஒரு மறுப்பு எழலாம். அப்படி சொல்லலாம் தான். ஆனால் இந்த ஆழ்வாரும் ஆழ்வாரை அடிமை கொண்டுள்ள இறைவனும், உயிர்களுக்கும் இறைவனுக்கும் இயல்பாக அமைந்துள்ள உடைமை உடையவன் என்ற தொடர்பை நன்கு உணர்ந்தவர்கள் என்பதால் அவ்விருவர் பார்வைக்கும் காற்றில் அசையும் செந்நெல் இறைவனுக்குத் தொண்டு செய்வது போன்றே தோன்றுகிறது.
ஆழ்வார் என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே தன் இயல்பு என்பதை உணர்ந்தவர் என்பதாலும் அதுவே எல்லா உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்று அறிந்ததாலும் செந்நெலும் இறைவன் உறங்க கவரி வீசித் தொண்டு செய்வதாக நினைக்கிறார்.
இயல்பாக உயிர்களிடத்தில் தனக்குத் தோன்றும் கருணையை வாரி வழங்க தற்செயலாக ஏதேனும் ஒன்றை உயிர் செய்யாதா என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனும் தற்செயலாக ஆடும் செந்நெல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எண்ணிக் கொண்டு அதற்கு தன் கருணை என்னும் செழுநீரை வாரி வழங்குகிறான்".
"ஆகா. ஆகா. அடுத்த முறை திவ்ய தேசங்களில் தற்செயலாக ஆடும் மரம் செடி கொடிகளைக் கண்டால் இந்த நினைவு வந்து தானே நம் கைகள் வணங்காதா?! அதனைக் கண்டு இறைவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளானா?! அவன் திருவுள்ளம் தான் உகக்காதா?! ஆழ்வாரின் அமுத மொழிகள் நம் நினைவில் என்றும் நின்று அவன் உள்ளம் உகக்கும்படி செய்யட்டும்!"
"உண்மை தான் பகவரே. ஆழ்வார் பாசுரங்களில் ஒரு சொல் போதுமே உலகைக் கடைத்தேற்ற.
இப்படி தொண்டு என்னும் சீர் நிறைந்த செந்நெல் இறைவனின் அருள் என்று சொல்லலாம்படியான செழுமையான நீர் நிலைகளில் நின்று ஆடி அசைந்து கவரி வீசும் ஊர் திருக்குடந்தை. அந்த திருப்பதியில் தனது அழகெல்லாம் திகழும் படியாக இறைவன் உறங்குகின்றான்.
சிலரை நிற்கும் போது பார்த்தால் அழகாக இருப்பார்கள். சிலர் அமரும் போது அவர்களது அழகு வெளிப்படும். ஆனால் இவனுக்கோ இவனது ஒப்பில்லாத அழகு எல்லாம் கிடக்கும் போது தான் திகழ்ந்து விளங்குகிறது. அப்படி அழகெல்லாம் திகழும் படியாக இவன் திருக்குடந்தையிலே கிடக்கிறான். அதனைக் கண்டேன் என்கிறார் ஆழ்வார்".
"கண்டேன் எம்மானே என்று தானே சொன்னார். வருத்தப்படுவதாக தேவரீர் சொன்னீர்களே"
"ஆமாம் பகவரே. திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே என்று சொல்லும் போது என் உயிரையும் உடலையும் உருக்கும் திருக்கோலத்தைக் கண்டது மட்டும் தான் உண்டு; ஆனால் நான் எதிர்பார்த்து வந்தவை நடக்கவில்லை என்று சொல்வதாகத் தானே பொருள். வந்தாயா என்று அன்புடன் வினவுதல், தாமரைக்கண் திறந்து குளிரக் காணுதல், ஆரத்தழுவுதல் போன்றவை தானே இவர் விரும்பி வந்தவை. அவற்றை எல்லாம் காணேன். கிடந்ததை மட்டுமே கண்டேன் என்கிறார்.
வாரும் பிள்ளாய். அருகில் அமருக".
வந்த இளைஞன் இருவரையும் பணிந்து அமர்கிறான்.
"இவன் பெயர் கண்ணபிரான். எம்பெருமானார் திருவுள்ளம் எதையெல்லாம் விரும்பியதோ அவற்றை பற்றியே என்றும் சிந்திக்கும் உள்ளத்தவன்.
பிள்ளாய். ஆழ்வாரின் ஆராவமுதே பாசுரத்தின் பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்".
"ஐயா. அடியேன் தேவரீர் திருமாளிகைப் புறத்திலே நின்று தேவரீர் அருளியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் புக வேண்டாம் என்று தயங்கி நின்றிருந்தேன்".
"பெரியோரை மதிக்கும் உன் பணிவைத் தான் இந்த ஊரே நன்கு அறியுமே. இடையில் புக வேண்டாம் என்று தயங்கிய நீ இப்போது வந்தது ஏனோ?"
"சீரார் செந்நெல் கவரி வீசும் என்ற ஆழ்வார் அருளிச்செயலின் இருக்கும் இன்னொரு அருத்த விசேஷமும் மனத்தில் தோன்றியதால் அதனை தங்களிடம் விண்ணப்பிக்க உள்ளே நுழைந்தேன். அடியேனை மன்னிக்கவேண்டும்"
"ஆகா. இன்னொரு அருத்த விஷேசமா? எம்பெருமானார் திருவுள்ளம் போன்ற உள்ளம் அல்லவா உன்னது. அந்தப் பொருளையும் சொல். கேட்போம்!"
"எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது தான் உயிர்களின் இயல்பு என்பதை லக்ஷ்மி சம்பன்னான இளைய பெருமாளும் பரதாழ்வானும் காட்டி நின்ற போது எம்பெருமான் தொண்டு என்பதோ நம் இயல்புக்கு சத்ரு எம்பெருமான் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே நம் இயல்பு என்று நின்றானே சத்ருக்கனாழ்வான். அவனைப் போன்றது இந்த சீரார் செந்நெல்".
"ஆகா. ஆகா. ஆழ்ந்த பொருள் சொன்னாய் கண்ணபிரான். இன்னும் எளிமையாக விளக்கமாகச் சொல்".
"இறைவனுக்குத் தொண்டு செய்வது உயிர்களின் இயல்பு. பெருமாள் காட்டில் வாழ்ந்த காலம் எல்லாம் இளைய பெருமாள் தொண்டே வடிவாக இருந்து உயிர்களின் இயல்பினை விளக்கும் ஓர் அரிய எடுத்துக் காட்டாக இருந்தான்".
"ஆமாம்".
"ஆனால் அவனும் காட்டுக்கு என்னுடன் வராதே என்ற காகுத்தனின் சொல்லை மறுத்து அடம் பிடித்து அவனுடன் காட்டுக்கு ஏகி நிலையான தொண்டினைச் செய்தான். தொண்டிலே அவனுக்கு ஊக்கம்".
"ஆமாம்".
"பரதனோ சுவர்க்கமோ நரகமோ நாடோ காடோ எங்கே நீ என்னை இருத்துகிறாயோ அங்கேயே இருக்கிறேன் என்று பரமன் சொல்படி பாதுகா ராஜ்யம் என்னும் மகா பாரத்தைச் சுமந்தான். அவன் இளையபெருமாளை விட ஒரு படி ஏற்றம்".
"ஆமாம்".
"இவ்விரு வகையில் இறைவனுக்குத் தொண்டு செய்வது இதனை விட உயர்ந்ததான அடியவருக்குத் தொண்டு செய்யும் பேற்றினை அடையாமல் செய்துவிடும். அதனால் பகவத் கைங்கர்யம் என்பதே மகாவிரோதி! சத்ரு! இப்படி எண்ணிக் கொண்டு இராகவனுக்கு மட்டுமே தொண்டு செய்யாமல் அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே சிறப்பு என்று பரதனுக்குத் தொண்டு செய்தான் சத்ருக்னன். பகவத் கைங்கர்யம் என்னும் மகாசத்ருவை வென்று பாகவத கைங்கர்யம் என்னும் அடியவர் தொண்டில் ஆட்பட்டதால் அன்றோ அவன் சத்ருக்களை வென்றவன் சத்ருக்னன் என்று புகழ் பெற்றான்"
"ஆகா. உண்மை. உண்மை. சீரார் செந்நெல் எந்த வகையில் சத்ருக்னனைப் போன்றது என்றும் விளக்கமாகச் சொல்".
"ஆடி அசையும் செந்நெல் இலக்குவனைப் போல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எம்பெருமான் நினைத்துக் கொள்கிறான். அருகில் இருந்து தொண்டு செய்ய இயலாமல் செழுநீர்க் குளத்தில் இருந்து கவரி வீசுவதால் பரதனைப் போல் என்று ஆழ்வார் எண்ணிக் கொள்கிறார். ஆனால் இவ்விரண்டையும் இந்த சீர் பெறும் செந்நெல் செய்யவில்லை. அடியவர்களின் தலைவரான ஆழ்வார் திருக்குடந்தையில் நுழைவதைக் கண்டு அவருக்குத் தானே கவரி வீசி வரவேற்கிறது இந்த செந்நெல்! அதனைத் தான் சொன்னேன்!"
"ஆகா. ஆகா. என்ன அற்புதமான விளக்கம். ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!"
Monday, January 24, 2011
ஆராவமுதே! - 2
"அடுத்த சொல் இன்னும் மிகவும் அழகானது உலகரே! எளிமையாக எல்லோரும் கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும்படி ஆராவமுதமாக இருக்கும் நிலையைக் கண்டு நான் அடிமையானேன் என்று சொல்வது போல் தன்னை அடியேன் என்று ஆழ்வார் சொல்கிறார்"
"ஆகா ஆகா. அடியேன் என்று தன்னை அழைத்துக் கொள்வதற்கும் ஒரு அருமையான இடம் பார்த்தாரே! ஆராவமுதே அடியேன் என்று இரண்டையும் சேர்த்துச் சொல்லும் போது ஆராவமுதமாக இருக்கும் அந்த அனுபவிக்க உகந்த தன்மைக்கு அடிமையானேன் என்று சொல்லாமல் சொன்னாரே!"
"அது மட்டும் இல்லை உலகசாரங்கரே. ஆத்ம வஸ்து சத் சித் ஆனந்த மயம் என்று வேதங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க அதனை எல்லாம் தனக்கு அடையாளமாக வைக்காது ஆத்ம வஸ்துவுக்கு அடையாளமாக அமைவது என்றென்றும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் நிலையே என்று சொல்வது போல் இங்கே அடியேன் என்ற் சொல்லைப் புழங்குகிறார் ஆழ்வார்"

"அடடா. மிக ஆழ்ந்த பொருளைச் சொல்கிறீர்கள் போலிருக்கிறதே. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்".
"சாதாரண மனிதர்கள் 'நான்' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் போது ஆத்மவஸ்துவைக் குறிக்காமல் பெயர் உருவம் குணம் கொண்ட தனது உடலையும் மனத்தையும் சேர்த்தே தானே சொல்கிறார்கள்"
"ஆமாம்"
"இறைவனாலேயே மயக்கம் இல்லாத தெளிவு நிலை என்னும் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆழ்வார். அவர் 'நான்' என்று சொல்ல நினைக்கும் போது தனது உடலையும் மனத்தையும் குறிக்காமல் ஆத்மவஸ்துவையே குறிக்கிறார்"
"அப்படி சொல்வது எதனை வைத்து?"
"அடுத்த சொல்லை வைத்து. அடியேன் உடலம் என்று சொல்கிறாரே. எனது சட்டை என்றால் நானும் சட்டையும் வெவ்வேறு என்று ஆகிறதே. அதே போல் அடியேன் உடலம் என்னும் போது தானும் உடலும் வெவ்வேறு என்று சொல்லாமல் சொல்கிறார். அதனால் இங்கே தன்னை உடல் என்று எண்ணும் மயக்கம் இல்லாதவர் ஆழ்வார் என்பது தெளிவு"
"ஆமாம்"
"அப்படி தன் ஆத்மவஸ்துவைக் குறிக்கும் போது அதன் குணங்களாக வேதங்கள் விரித்துரைக்கும் என்றும் அழியாமல் இருத்தல் (சத்), அறிவே வடிவாகவும் குணமாகவும் இருத்தல் (சித்), என்றும் மகிழ்ச்சியும் இருத்தல் (ஆனந்தம்) என்ற குணங்களை விட இறைவனுக்குத் தொண்டு செய்வதே ஆத்மனுக்கு இயற்கை குணம் என்பதால் அதனை முதன்மைப்படுத்தி அடியேன் என்று சொல்கிறார்"
"ஆகா ஆகா. நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள். அடியேன் என்ற சொல் தான் எத்தனை ஆழமான பொருளைத் தருகிறது. அடியேன் என்று வாயாரச் சொல்லும் எல்லோரும் இனி மேல் இந்த ஆழ்ந்த பொருளை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் சொன்னால் அது அவர்களுக்கு பெரும்பதத்தைத் தந்துவிடுமே!"

"உண்மை. நாராயண நாமம் தராததையும் இந்த அடியேன் என்ற சொல் தந்துவிடும்!"
"அடுத்து வரும் சொற்களையும் சொல்லியருள வேண்டும்"
"அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே"
"என்ன விந்தை இது? ஆராவமுதமாய் இருக்கும் அனுபவ நிலையைக் கண்டு அதில் மயங்கிவிழுந்து புற்கவ்வி மண்கவ்வி அடியேன் என்று அடிமை புகுதல் ஆத்மவஸ்துவிற்கு இயல்பு. அந்த நெகிழ்ச்சியில் ஆத்மாவிற்கு அருகாமையில் இருக்கும் மனமும் புத்தியும் நெகிழ்வதுவும் உண்டு. அறிவே இல்லாத ஊனுடல் உருகுவதும் உண்டோ?!"
"நன்கு கேட்டீர்! உணவால் பிறந்து உணவால் வளர்ந்து உணவாகி மடியும் உடல் என்பதால் அதனை அன்னமயம் என்றார்கள் பெரியோர்கள். அந்த அன்னமயமான உடலும் இந்த ஆராவமுதனின் மேல் அன்பே உருவாகியது. அன்னமயம் என்பது போய் அன்புமயம் ஆனது. அதனால் அறிவில்லாத ஊன் உடலும் உருகுகின்றது"
"எப்படி அதனைச் சொல்கிறீர்கள்?"
"ஆழ்வார் சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். அடியேன் உடலம் நின் பால் அன்பாயே என்கிறார். நின் பால் என் உயிரும் மனமும் புத்தியும் மட்டும் இல்லை என் உடலமும் அன்பே ஆக ஆகி நின்றது என்கிறார். அப்படி உடலும் அன்பே உருவாக ஆனதால் தான் நீராய் அலைந்து கரைந்துவிட்டது"
"அடடா. ஆழ்வாரின் நிலை தான் என்னே! அவரது உடலும் ஆராவமுதன் மேல் அன்பாகி உருகுகின்றதே!"
"நாம் அப்படி நினைக்கிறோம். ஆனால் அடியேன் என்று ஆத்மாவின் முதன்மைக் குணத்தைச் சொன்ன ஆழ்வார் அப்படி சொல்லவில்லை. அவரது உடல் தானே உருகவில்லை. அதனைச் செய்தததும் அவனே என்று சொல்கிறார். நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற என்று சொல்வதை பாருங்கள். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை என்று பெரியோர் விரித்துச் சொன்னதை இங்கே சுருங்கச் சொன்னார் ஆழ்வார்!"
"அடடா அடடா. மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கு தேவன் ஆராவமுதன் என்பதால் அடுத்து நெடுமாலே என்றார் போலும். அந்த பெருமையும் இவர் உடல் நீராய் கரைய உருக்கும் தன்மை கொண்டதன்றோ?"
"உண்மை தான். இறைவன் மிகப்பெரியவன். மனிதர்களுக்கு தேவர்கள் எப்படியோ அப்படி தேவர்களுக்கு எல்லாம் தேவனான தேவதேவன். சர்வேஸ்வரன். ஆனால் இங்கே அதனைச் சொல்லவில்லை ஆழ்வார்."
"அப்படியா? என்னில் எந்த பொருளில் சொல்கிறார்?"
"உமக்கு எப்போது ஒருவர் மேல் அன்பு பிறக்கும்? அந்த ஒருவருக்கு உம்மேல் அன்பு இருக்கும் போது தானே? நின் பால் அன்பாயே என்று இவர் சொல்லும் போதே அதனை விட பலமடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருக்கின்றதையும் அறிந்து சொல்கிறார். மால் என்றால் மயக்கம். இவர் மேல் அவனுக்கு ஆழ்ந்த மயக்கமும் அன்பும் உண்டு. அந்த பன்மடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருப்பதால் அது இவரது உடலையும் அன்பு மயமாக்கி உருக்கும் தன்மை கொண்டது. அப்படி ஆழ்ந்த மயக்கம் இவர் மேல் அவன் கொண்டதால் அவனை 'நெடுமாலே' என்கிறார்"
"நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள்"
"அப்படி இவரையும் இவர் உடலையும் உருக்கும் அளவிற்கு ஆழமான அன்பை இவர் மேல் உடையவன் இவரைப் பார்த்தவுடன் என்ன செய்வான்?"
"இவர் வரும் திசை நோக்கி வருவான். நலமா என்று விசாரிப்பான். கட்டி அணைப்பான்"
"அதனை எல்லாம் அவன் செய்தானா? இல்லையே! அதனைத் தான் அடுத்த இரு வரிகளில் கூறுகிறார் ஆழ்வார்!"
(தொடரும்)
Friday, January 14, 2011
ஆராவமுதே! - 1

எனது உயிருக்கும் மேலான அன்பை உடைய அண்ணனைப் பிரிந்தேன். அதனாலே துன்பம் வந்தது!
அப்படிப் பிரிந்ததால் அவனுடைய திருவடிகளில் பணிந்துத் தொண்டு செய்யும் வாய்ப்பும் கிட்டாமல் போனது. அதனாலே மேலும் துன்பம் வந்தது!
இப்படி அண்ணன் காட்டிற்குச் செல்ல நேர்ந்ததற்கு நானே காரணம் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளானேன். அதனால் மேன்மேலும் துன்பம் வந்தது!
இப்படி ஒன்றிற்கு மேல் ஒன்றாக வந்த துன்பங்களெல்லாம் வனம் சென்ற பெருமாள் திருவடிகளைக் கண்டு சரணடைந்தால் தீரும்! நிச்சயம் தீரும்!
இப்படி பரதாழ்வான் எண்ணிக் கொண்டு வனம் சென்ற சக்ரவர்த்தித் திருமகன் திருவடிகளிலே சரண் புகுந்தான்.
அது போல தாமும் திருக்குடந்தைக்குச் சென்று ஆராவமுதன் திருவடிகளைச் சேர்ந்தால் தமது மனத்தில் இருக்கும ஆசைகள் எல்லாம் அமையும் என்று எண்ணினார் நம்மாழ்வார். எல்லாவிதங்களிலும் குறைவில்லாத பெரும்பதமான பரமபதம் இருக்க அதனை விட்டு திருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்தருளுவது குறைகளை உடையவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே அன்றோ?! அதனால் நம் ஆசைகளையும் குறைகளையும் ஆராவமுதன் கட்டாயம் தீர்ப்பான் என்று எண்ணி இங்கே வருகிறார்.
அப்படியே திருக்குடந்தைப் பெருமாளைக் காண வந்தால், பரதனிடம் பெருமாள் 'ஆட்சியை குறையில்லாமல் நடத்துகிறாயா? மந்திரிகளிடம் கலந்து கொண்டு அனைத்தையும் செய்கிறாயா?' என்று வார்த்தை சொன்னதைப் போல் இல்லாமல், இவருடைய துன்பம் தீர தனது திருவாயைத் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. பரதனைக் கண்குளிரப் பார்த்தத் தன் திருக்கண்களாலே இவர் நிற்கும் திசையையும் நோக்கவில்லை. எதிரியான கம்சனிடம் பணிசெய்து அவன் சோறு உண்டு வாழ்ந்த அக்ரூரை அவர் தனது பக்தன் என்றதை மட்டுமே கொண்டு எதிர் கொண்டு சென்று தழுவியதைப் போல இவரையும் தழுவுவார் என்று இவர் இருக்க அதுவும் செய்யவில்லை. உலக இன்பங்களையே பெரிதென்று இருப்பவர்களை எப்படி நடத்துவானோ அப்படியே இவரையும் நடத்தியதால் மிகவும் மனத்துன்பம் கொண்டு புலம்புகிறார்!

சொந்தப் பிள்ளை தாய்ப்பாலை வேண்டிக் காலடியே வந்து தழுவும் போது பெற்ற தாய் அக்குழந்தையைக் கண்டு கொள்ளாமல் தள்ளினால் அக்குழந்தை கதறி அழுமே அது போல் அவனுடன் கலந்து பரிமாறும் தமது ஆசை நிறைவேறாமையாலே கதறி அழைக்கிறார்!
***
(நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓர் ஆயிரத்தில் ஐந்தாம் பத்தில் வரும் எட்டாம் திருவாய்மொழியான திருக்குடந்தைத் திருவாய்மொழிக்குப் பொருள் எழுதலாம் என்று சடாரிதேவரின் திருவடி நிலைகளைச் சரண் புகுந்து தொடங்குகிறேன். எத்தனை இடுகைகள் செல்லுமோ அத்தனை இடுகைகளும் அவரே அடியேன் மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்! )
***

சுவாமி! அடியேன்! தேவரீர் திருவடிகளுக்கு தண்டன்!
பிள்ளாய்! உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?
அடியேன் சுந்தரராம இராமானுச தாசன். தென்னாட்டில் இருந்து வருகிறேன். தேவரீர் திருப்பெயரை இங்கே வடநாட்டில் அனைவரும் பேசக் கேட்டு தண்டனிட வந்தேன்.
தென்னாட்டில் என்ன விஷேசம்?
திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் பிறந்திருக்கிறது. அதனை அடியவர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!
அப்படியா? அந்தப் பிரபந்தத்தில் ஒரு பாசுரம் சொல். கேட்போம்.
அடியவர்கள் அப்பிரபந்தத்தை ஓத தொலைவிலிருந்து கேட்டிருக்கிறேன். அதில் எனக்கு நினைவிருப்பது ஒரே ஒரு சொல் தான்.
எங்கே அச்சொல்லையாவது சொல்.
ஆராவமுதே.
அடடா. என்ன சுவையான திருப்பெயர். நாராயண வாசுதேவ விஷ்ணு போன்ற திருநாமங்கள் எல்லாம் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பரக்கப் பேசப்பட்டிருக்க அந்த நாமங்களில் இல்லாத சுவையைக் காட்டும் இந்த திருநாமம் நடையாடுகின்ற நாட்டில் அல்லவா வாழவேண்டும்! சிறுபேர் நடையாடும் நாட்டில் இவ்வளவு நாள் வாழ்ந்தோமே! இப்போதே தென் திசைக்குச் சென்று இத்திருவாய்மொழியை நன்கு கற்போம்!
***

வாரும் லோகசாரங்கமுனிகளே! வடநாட்டில் வெகுநாட்கள் வாழ்ந்த நீங்கள் தென்னாட்டிற்கு எழுந்தருளியது எதற்காக?
திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் இங்கே பிறந்திருக்கிறதாமே! அதில் ஒரு சொல் கேட்டேன்! ஓடோடி வந்தேன்!
அப்படியா? நல்லது தான். அப்பிரபந்தத்தில் என்ன சொல் கேட்டீர்?
ஆராவமுதே என்ற சொல். அருமையாக இருக்கிறது. தேவரீரிடத்தில் அத்திருவாய்மொழியைப் பொருளுடன் கற்றுக் கொள்ள வந்தேன்.
அடியேன் செய்த நல்வினை. உடனே தொடங்குவோம்.
***
ஆகால தத்வம் அச்ராந்தம் ஆத்மனாம் அநுபச்யதாம் அத்ருப்த் அம்ருத ரூபாய என்று பின் வந்தவர்கள் பாடியது இந்த ஒரு சொல்லைக் கொண்டு தானே! காலம் என்னும் ஒன்று இருக்கும் வரையில் பதட்டமே இல்லாமல் ஆற அமர அனுபவித்தாலும் திகட்டாத அமுதம் போன்ற உருவம் உடையவன் அல்லவோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!
ஒரு குடத்தில் இருக்கும் அமுதத்தை பத்து பேர் உண்ணலாம். பெரிய குடம் என்றால் இன்னும் சிலர் கூட உண்ணலாம். இப்பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து காலம் காலமாய் அனுபவித்தாலும் தீராத அமுதம் போல் இருப்பவனன்றோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!
ஒன்றை அனுபவிப்பதிலும் முறை என்று உண்டு. முதலில் பார்த்தல், பின்னர் நெருங்குதல், பின்னர் தொடுதல், இப்படித் தானே அனுபவிப்பதிலும் முறை என்று இருக்கிறது. ஆனால் அந்த முறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக காலக்கிரமத்தில் செய்யும் பொறுமை மற்ற விஷயத்தில் வேண்டுமானால் இருக்க முடியும். எம்பெருமான் விஷயத்தில் அது முடிவதில்லை. எந்த முறையையும் பார்க்க முடியாதபடி, முறைப்படி செய்வோம் என்று ஆறியிருக்க முடியாதபடி இருக்கும் அமுதமானவன் என்பதால் எம்பெருமானுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.
அமுதம் அமுதம் என்கிறோமே அந்த அமுதம் இவனுடன் ஒப்பிட்டால் கடலில் பிறந்த உப்புச்சாறு தானே! அந்த உப்புச்சாற்றான அமுதத்தை உண்ண வேண்டும் என்றால் தேவர்களாகப் பிறக்க வேண்டும்! அதற்கு கடுமையான தவங்கள் செய்ய வேண்டும்! அவ்வளவும் செய்தால் சில நேரம் பலிக்கலாம்; சில நேரம் பலிக்காது! எம்பெருமானோ அப்படியின்றி எல்லோரும் அனுபவிக்கக் கூடியவனாக, எல்லா காலத்திலும் அனுபவிக்கக் கூடியவனாக, சொர்க்கம், கைவல்யம், மோட்சம் போன்றவற்றையும் கொடுக்கக் கூடியவனாக இருப்பதால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.

ஆழம் எவ்வளவு என்று தெரியாத குளத்தில் இறங்குபவர்கள் ஒரு கொம்பையோ கொடியையோ பிடித்துக் கொண்டு இறங்குவார்கள். அது போல தன்னைத் தானே அனுபவிக்க எம்பெருமான் நினைத்தால் தனக்குத் துணையாக வரும் கொம்பாகக் கொடியாகப் பிராட்டியை அழைத்துக் கொள்கிறான். அயோத்தியில் இராகவப் பெருமாள் பெரிய பெருமாளை அனுபவிக்கப் போகும் போது தனியாகவா சென்றான்?! ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத். பெரிய பெருமாள் என்னும் ஆராவமுதைக் காண கொழுகொம்பாக சீதாபிராட்டியை அழைத்துச் சென்றான் இராமன். பெருமாளுக்குப் பெரியபெருமாள் மேல் உண்டான அன்பின் ஆழத்தைக் கண்டு, தன்னை அணைக்கும் போதை விட இங்கே அன்பு அதிகமாக இருக்கிறதே என்று வியந்து விசாலமான கண்ணை உடையவள் ஆனாள் சீதை. அப்படிப்பட்ட எம்பெருமானுக்குத் தானே ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!
ஆராவமுதே! ஆராவமுதே! ஆராவமுதே! அடடா! அடடா! அடடா! எப்படி பொருளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள்! அருமை அருமை. ஆத்மனாம் அனுபச்யதாம் என்று ஆத்ம தத்துவத்தில் கொண்டு அவனை அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! கூடியிருந்து குளிர்வதைப் போல் எல்லோரும் ஒரே நேரத்தில் அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! முறையெல்லாம் பார்க்க முடியாதபடி ஆறியிருக்கமுடியாதபடி அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! எளிமையிலும் எளிமையாக எங்கும் கிடைப்பதாக இருக்கும் அவன் ஆராவமுதனே! அவனே அனுபவிக்க இறங்கினாலும் காலம் காலமாக ஆழங்காண முடியாதபடி இருப்பதால் துணை கொண்டு இறங்கும் வகையில் இருக்கும் அவன் ஆராவமுதனே!
இதில் ஒரு ஐயம் ஐயா. இறைவன் ஐந்து நிலைகளில் இருப்பதாகச் சொல்கிறார்களே. அவற்றில் எந்த நிலையில் அவன் ஆராவமுதன்?
அடடா! மிக அருமையான கேள்வியைக் கேட்டீர்.
ஸதா பச்யந்தி ஸூரய: என்றல்லவோ வேதம் முழங்குகிறது! வேண்டிய உருவெல்லாம் எடுத்து வேண்டிய வகையிலெல்லாம் அவனுக்குத் தொண்டு செய்யும் போது நித்யர்களும் முக்தர்களும் கண் கொட்டாமல் பார்க்கும் பரமபத நாதனும் ஆராவமுதனே! அதனால் அன்றோ சுரர்களான நித்யர்களும் முக்தர்களும் சதா அவனைக் கண்டு கொண்டே இருக்கிறார்கள் என்று வேதம் முழங்குகின்றது!
தேவர்களும் முனிவர்களும் அபயம் அபயம் என்று கூக்குரலிட்டு ஓடி வரும் திருப்பாற்கடலில் அறிதுயில் கொள்பவனும் அனந்தன், கருடன், தும்புரு, நாரதன், பிரம்மன் முதலானவர்கள் என்றும் அனுபவிக்கத்தக்கவனாக இருக்கும் ஆராவமுதனே!
ஆணாய் பிறந்ததால் இவன் வடிவழகென்னும் அமுதத்தை முழுமையாகப் பருக முடியவில்லையே என்று முனிவர்கள் வரம் வேண்டி கோபியர்களாகப் பிறந்து இவனை அனுபவிக்கும் வகையில் அமைந்த இராமன், கிருஷ்ணன் முதலான அவதார திருவுருவமும் ஆராவமுதனே!
கண் மூடி மனத்தை நிலை நிறுத்தி நீண்ட காலம் அசையாமல் அமர்ந்து யோகிகள் தங்கள் இதயத்தில் இருக்கும் தகராகாச சோதியாகக் கண்டு அனுபவிக்கும் அந்த அந்தர்யாமியான இறைவனும் ஆராவமுதனே!
நீரும் நானும் என எல்லோரும் கூடியிருந்து அனுபவிக்கலாம்படி நம் இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் ஆராவமுதனே!
(தொடரும்)
***
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
Saturday, November 20, 2010
கார்த்திகையில் கார்த்திகை நாள்
திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் இன்னும் பல திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா தற்காலத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் திருமுருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மிக உகந்த நட்சத்திரமாக அமைவதால் திருக்கார்த்திகைத் திருநாள் முருகப்பெருமானுக்கும் மிக உகந்த திருநாளாக அமைகிறது.
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்னும் நாலாயிரம் பாசுரங்களின் தொகுப்பான வைணவ பக்தி இலக்கியத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும் இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த நாட்களில் பிறந்திருக்கிறார்கள். முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். முருகனுக்கு உகந்த கார்த்திகையில் கார்த்திகை நாளான இன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார்.
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.
பேதை நெஞ்சமே! இன்றைக்கு என்ன பெருமை என்று அறியமாட்டாயோ?
ஏது பெருமை? இன்றைக்கு என்ன?
சொல்கின்றேன் கேள். பெரும்புகழ் கொண்ட திருமங்கைமன்னன் இந்த மாபெரும் பூமியில் வந்து உதித்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் இந்த நாள்.
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.
ஆகா! இன்று திருமங்கைமன்னன் திருவவதாரத் திருநாளா?! அருமை! அவருடைய பெருமைகளை இன்னும் சொல்லுங்கள்.
நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு தமிழ்ப் பனுவல்களை செய்தார் நம்மாழ்வார். வேதங்களுக்கு ஆறு பகுதிகள் என்னும் ஆறங்கம் உண்டு. அதே போல் நம்மாழ்வார் செய்த தமிழ் மறைக்கு ஆறங்கம் செய்தார் திருமங்கையாழ்வார். அப்படி ஆறங்கம் பாட அவர் அவதரித்த மிக்க பெருமையுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று மனம் மகிழ்ந்து அதனைக் காதலிப்பவர்களின் திருவடி மலர்களை நமக்கு பாக்கியம் என்று சொல்லி வாழ்த்துவாய் நெஞ்சமே!
அப்படியே செய்கிறேன்! இதோ வாழ்த்துகிறேன்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல்.
எதிரிகளுக்கு காலன் ஆகிய பரகாலன் வாழ்க! கலியின் கொடுமையைக் குறைக்கும் கலிகன்றி வாழ்க! திருக்குறையலூரில் வாழும் தலைவன் வாழ்க! மாயோனை தனது வாளால் மிரட்டி அவனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தை உபதேசம் பெற்ற திருமங்கை மன்னனின் தூய்மையான சுடர் விடும் வேல் வாழ்க வாழ்க!
நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமய
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே
அது மட்டுமா?! பரகாலன் பாடிய செந்தமிழ்ப் பனுவல்கள் நெஞ்சில் இருக்கும் அறியாமை என்னும் இருளைக் கடிந்து நீக்கும் தீபம்! எது செய்தாலும் எளிதில் அடங்காத, என்றைக்குத் தொடங்கியது என்று அறியாத பிறப்பு இறப்புச் சுழல் என்னும் கொடிய நஞ்சினை நீக்கும் நல்லதொரு அமுதம்! பழந்தமிழ் இலக்கணம் பேசும் ஐந்து துறைகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்த இலக்கியம்! வேதங்களில் சாரம்! வேற்று சமயங்கள் என்னும் பஞ்சுக்குவியல்களை அழிக்கும் அனலின் பொறி!

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்கு தா!
இவ்வளவு பெருமை வாய்ந்த திருமங்கையாழ்வாரின் பனுவல்கள் என் நெஞ்சத்தில் எப்படி தங்கும்? எங்கள் கதியான இராமானுசமுனியே! எங்களது ஐயங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆண்ட தவத்தோர் தலைவனே! புகழ் பொங்கும் திருமங்கைமன்னன் தந்த ஆயிரம் மறைகளும் தங்கும் மனத்தை நீயே எனக்குத் தரவேண்டும்!
**
திருமங்கை ஆழ்வாருக்கு இன்னும் சில சிறப்புகள் உண்டு. எந்த ஆழ்வாருக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த ஆழ்வாருக்கு உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்). முருகனுக்கும் இவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்).
Tuesday, November 09, 2010
முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது

சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தன் என்பது இவரது இயற்பெயர் என்பதும், பூதன் என்பது இவரது தந்தையார் பெயர் என்பதும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பதும், இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதும் இந்த பெயரில் இருந்து தெரிகிறது. இவர் தந்தையார் தமிழ் ஆசிரியர்களில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 'மதுரைத் தமிழாசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அடைந்திருக்கிறார். பிற்காலத்தில் மகாமகோபாத்யாய, மகாவித்வான் என்று ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்குச் சிறப்புப் பெயர் தந்து பெருமைப்படுத்தியதை இங்கே ஒப்பு நோக்கலாம். 'மதுரைத் தமிழாசிரியர்' என்பது பெருமைக்குரியதாக இருந்ததால் தன் பெயருடன் அதனையும் இணைத்தே இந்த நூலின் ஆசிரியர் சொன்னார் என்று எண்ணுகிறேன். பாரதி என்று முன்னோர்களில் ஒருவருக்குத் தரப்பட்ட பட்டத்தை அந்த குடிவழியில் வந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வதை இங்கே ஒப்பு நோக்கலாம்.
இந்த நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் சிவன், திருமால், பிரமன் என்ற முப்பெரும் தேவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். சிவனை முதலிலும், திருமாலை அடுத்தும், பிரமதேவனை பின்னரும் இந்தப் பாடலில் போற்றுகிறார்.
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய்மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
இந்தப் பாடலின் முதல் அடியில் இனிதான ஒரு பொருளையும், இரண்டாம் அடியில் இனிதான இன்னொரு பொருளையும், அடுத்த இரு அடிகளில் இனிதான இன்னொரு பொருளையும் கூறுகிறார். இந்த நூலில் நான்கு பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் இப்படியே மூன்று இனியவைகளைக் கூறும் முறை தொடர்கிறது.
கண் மூன்றுடையான் சிவபெருமான். மூன்று கண்கள் கொற்றவை, நரசிம்மன், விநாயகன், முருகன் என்பாருக்கும் உண்டு. இங்கே அன் விகுதியுடன் சொன்னதால் கொற்றவை இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. திருமால் அடுத்த அடியில் கூறப்படுவதால் நரசிம்மனும் இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. மும்மூர்த்திகளில் விநாயகனும் முருகனும் வருவதில்லை ஆதலால் மும்மூர்த்திகளைச் சொல்லும் இந்தப் பாடலில் அவர்களும் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. முக்கண் முதல்வன் என்று சிவபெருமானே போற்றப்படுவதால் அவனே இங்கே குறிக்கப்படுகிறான் என்பது தெளிவு.
தாள் சேர்தல் என்றால் தஞ்சமாக, சரணாக அடைதல் என்று பொருள். தாளினை இடையறாது சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்தலும் அவற்றைத் தஞ்சமாக அடைதலும் மிக இனிது என்று முதல் அடி கூறுகிறது. வைணவமே திருவடிகளின் பெருமைகளைப் பரக்கப் பேசும்; தஞ்சமடைதலை மீண்டும் மீண்டும் பேசும் என்பதே நாம் அறிந்தது. இங்கோ சைவத்திலும் திருவடிகளின் பெருமைகளைக் கூறுதல் உண்டு என்று காட்டுவது போல் இந்த வரி அமைந்திருக்கிறது.
மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பிற்காலத்தில் தேவாரப் பதிகத்தில் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இனிமையே விரித்துக் கூறப்பட்டது போலும்.
இனிமை என்று மட்டும் கூறாமல் மிகவும் இனிமை என்று அழுத்திக் கூறுவது போல் 'கடிது இனிதே' என்கிறார் ஆசிரியர்.
அடுத்த அடியில் துழாய் மாலை சூடும் திருமாலைப் போற்றுவதன் இனிமையைப் பேசுகிறார். தமிழ்க்கடவுள் முருகன் மட்டுமே என்றொரு வழக்கு இருக்க, முருகனும் திருமாலும் சிவனும் கொற்றவையும் தொன்மையான தமிழர் கடவுளரே என்று நானும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து கூறி வருகிறோம். தொன்மையான தொல்காப்பியம் திருமாலைப் போற்றும் தரவுகள் நிறைய இருக்கின்றன. திருமாலின் அந்தத் தொன்மையை வலியுறுத்துவதைப் போல் 'தொன்மையும் மாட்சிமையும் கொண்ட துழாய்மாலையான்' என்று அடைமொழிகளுடன் கூறுகிறார் ஆசிரியர்.
தற்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலேயே முதல் நூலான தொல்காப்பியத்திலேயே குறிக்கப்படுபவன் திருமாலாகிய மாயோன் என்பதால் அவனது தொன்மை விளங்குகிறது. பெருமை மிக்கதை முதலில் சொல்வது என்ற தமிழ் மரபின் படி மாயோனை முதலில் சொன்னது தொல்காப்பியம் - அதனால் திருமாலின் மாட்சிமையும் விளங்குகிறது. இவ்விரண்டையும் இங்கே அடைமொழிகளாகச் சொல்கிறார் ஆசிரியர்.
துழாய் மாலையானைத் தொழுவது இனிது என்கிறார் ஆசிரியர். தொழுவது என்றால் என்ன? வணங்குவது மட்டுமா? தொண்டு செய்வதும் தானே தொழலில் அடங்கும். திருமாலுக்குத் தொண்டு என்னும் கைங்கரியம் செய்வதே வாழ்வின் பயன் என்றும் திருமாலுக்குத் தொண்டு செய்து அடியவனாய் இருப்பதே உயிரின் இயல்பு என்றும் வைணவ தத்துவம் கூறும். தொழல் என்னும் சொல்லைச் சொல்லி அந்தத் தத்துவங்களை அனைத்தையும் நினைவூட்டி விட்டார் ஆசிரியர்.
பிரமன், திருமால், சிவன் என்று வரிசைப்படுத்தி முதல் மூவரைச் சொல்வது மரபு. அந்த மரபிற்கு மாறாக சிவன், திருமால், பிரமன் என்று சொல்கிறாரே இங்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த மரபினை நானும் அறிவேன் என்று சொல்வதைப் போல் அடுத்த அடியினை எழுதுகிறார் சேந்தனார்.
முந்துறப் பேணி என்று சொன்னதன் மூலம் சிவன், திருமால் இவர்களுக்கு முன்னரே மக்களால் போற்றப்படுபவன் பிரமன் என்று சொல்லாமல் சொல்கிறார். பிரமனை நான்முகன் என்று குறிப்பதும் மரபே. அதனை ஒட்டி இங்கேயும் முகனான்கு உடையான் என்று சொல்கிறார் ஆசிரியர்.
சிவபெருமானின் தாள் சேர்தல் இனிது; திருமாலைத் தொழல் இனிது; ஆனால் பிரமதேவனையோ சென்று அமர்ந்து மறைகளால் ஏத்துதல் இனிது. வேதன் என்றும் வேதமுதல்வன் என்றும் நான்முகனை அல்லவோ சொல்வார்கள். அந்த மரபின் படி வேதங்களை ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து விரிவாக ஓதி நான்முகனை வணங்குவது இனிது என்று இங்கே சொல்கிறார் ஆசிரியர்.
இந்தப் பாடலைப் படிக்கும் போதும் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tuesday, August 31, 2010
இரவு! இரவில் இரவு! அந்த இரவில் இரவு! அதில் இருள் சூழ்ந்த சிறை!
நமது ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள். அந்த நாளின் பகல் பொழுது பகலவனின் வடசெலவு எனப்படும் உத்தராயணம் - தை முதல் ஆனி வரை. அந்த நாளின் இரவுப் பொழுது பகலவனின் தென்செலவு எனப்படும் தட்சிணாயணம் - ஆடி முதல் மார்கழி வரை. இப்போது நடக்கும் திங்கள் ஆவணித் திங்கள் - தேவர்களின் இரவில் ஒரு பகுதி!
மதி ஒரு முறை தேய்ந்து வளரும் முப்பது நாட்கள் முன்னோர்கள் எனப்படும் பிதுர்களின் ஒரு நாள். மதியின் வளர்பிறை அவர்களின் பகல். மதியின் தேய்பிறை அவர்களின் இரவு. ஆவணி எனும் தேவர்களின் இரவில் வந்த தேய்பிறை காலம் இப்போது. இரவில் இரவு! தேய்பிறை காலத்தின் நடுவில் வருவது எட்டாம் நாளாகிய அஷ்டமி திதி. ஆக இது முன்னோர்களின் நடு இரவான நாள்!
இந்த தேய்பிறை எட்டாம் நாளின் இரவு - மனிதர்களின் இரவில் ஒரு கொடியவனின் சிறையில் - இருள் சூழ்ந்த சிறையில் தோன்றியது இந்த இருளையெல்லாம் நீக்கும் - புறம் போல் உள்ளும் கரியான் ஆன மாயோன் எனும் அணிவிளக்கு!








பெரியாழ்வார் திருமொழி 1.1:
பாசுரம் 1
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே
அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.
இந்தப் பாசுரத்தில் கண்ணனை அறிமுகம் செய்யும் போது கண்ணன், கேசவன், நம்பி என்ற மூன்று பெயர்களைச் சொல்கிறார். அழகிய கண்களை உடையவன், கண்ணைப் போன்றவன், கண்களுக்கு விருந்தானவன், அழகிய திருமுடிக்கற்றைகளை உடையவன், கேசியை அழித்தவன், நற்குணங்களால் நிறைந்தவன், அழகன் போன்ற எல்லா பொருளையும் ஒரே நேரத்தில் அழகுபடச் சொல்லிச் செல்கிறார். கண்ணன் அவதரித்ததால் நந்தகோபருடைய இல்லம் இனிய இல்லமானது. கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர் தன் இல்லத்தின் தலைவனாக கண்ணனைக் கொண்டான் என்பதால் நந்தகோபர் திருமாளிகையின் திருமுற்றத்தை கண்ணன் முற்றம் என்றார். செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர். அதே போல் இங்கே எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறாகிக் கிடக்கிறது. ஆழ்வாருடைய காலத்திலும் கண்ணனுடைய காலத்திலும் மகிழ்ச்சியைத் தெரிவிக்க எண்ணையை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டும் வண்ணச் சுண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப்பொடிகளைத் தூவியும் நீரில் கரைத்துத் தெளித்தும் மகிழ்கிறார்களே.
பாசுரம் 2.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி.
இந்தப் பாசுரத்தில் கண்ணனின் திருவவதாரத்தை ஆய்ப்பாடியில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஆயர்கள் எப்படி குதூகலமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள் என்பதைச் சொல்கிறார் பட்டர்பிரான். கிருஷ்ண ஜனனத்தால் மகிழ்ச்சியுறாதவர்கள் எவருமில்லை திருவாய்ப்பாடியிலே. ஆலிப்பார் என்பதற்கு உரக்கக் கூவுதல், ஆலிங்கனம் (கட்டித் தழுவுதல்) என்று இரு பொருளைச் சொல்கின்றனர் பெரியோர்.
பாசுரம் 3.
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே
எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள்.
இந்தப் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளை திருவாய்ப்பாடி வாழ் மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டதைச் சொல்கிறார். பேணிச் சீருடை என்ற சொற்றொடருக்கு 'பேணுவதற்கு உரிய சீர்களை உடைய' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. திருவோணத்தான் உலகாளும் என்ற சொற்றொடருக்கு 'திருவோணத்தானாகிய திருமாலின் உலகங்களை ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரி தான்; 'இவன் திருவோணத்தானாகிய திருமாலே. இவன் உலகங்களை எல்லாம் ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரியே.
பாசுரம் 4.
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே
பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.
நெய், பால், தயிர் போன்றவற்றை மகிழ்ச்சியின் மிகுதியால் முற்றமெங்கும் தூவினார்கள் என்பதொரு பொருள். கண்ணனுக்கு நன்மை உண்டாகும் பொருட்டு (நன்று ஆக) எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானமாகக் கொடுத்தார்கள் என்று இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள் பெரியவர்கள்.
பாசுரம் 5.
கொண்ட தாள் உறி கோலக் கொடு மழு
தண்டினர் பறி ஓலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்
இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள்.
மாடு மேய்க்கப் போன இடத்தில் பால் கறக்க நேர்ந்ததால் அந்த பாலை இட்டு வைத்த உறியையும் தாங்கி வந்திருக்கின்றனர். அந்த உறிகளைக் காவடி போல் ஏந்தி வந்தார்கள் போலும். அப்படி ஏந்தி வந்த உறிக்காவடி அவர்களது தாள்களை/கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. இலை தழைகளைப் பறித்து மாடுகளுக்கு இடுவதற்காக சிறிய மழுவாயுதத்தைத் தாங்கி வருகிறார்கள். மாடுகளை மேய்க்கும் கோல்களையும் தாங்கி வருகின்றார்கள். எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாததால் அவர்களது பற்கள் வெண்மையான முல்லை அரும்புகளைப் போல் இருக்கின்றன. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் எண்ணெய் தேய்த்து நீராடியதை நெய்யாடினார் என்று சொல்வதாகக் கூறினாலும் பொருத்தமே.
இராக்காவல் முடிந்து வந்தார்கள் என்பது பெரியோர்கள் சொன்ன பொருள். அதிகாலையில் மாடு மேய்க்கச் செல்பவர்கள் கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டு வந்து மகிழ்ந்து நெய்யாடினார்கள் என்றாலும் பொருத்தமே.
இங்கே அண்டர் என்று சொன்னது அண்டத்தில் வாழும் தேவர்களை என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால் இங்கே விளக்கியிருக்கும் செயல்களைச் செய்பவர்கள் இடையர்களாக இருக்கவே வாய்ப்புள்ளதாலும் முன்பின் வரும் பாசுரங்கள் இடைச்சேரியைப் பற்றியே பேசுவதாலும் அண்டர் என்றது ஆயர்களையே எனலாம்.
பாசுரம் 6.
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பையவாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!
இன்றைக்கும் சிறு குழந்தையைக் குளிப்பாட்டும் போது தாய்மார்கள் கால்களை நீட்டி அமர்ந்து குழந்தையை முழந்தாள் மூட்டின் மேல் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். அப்போது குழந்தைக்கு சிறிதும் அதிர்ச்சி ஏற்படாத வண்ணம் சிறிதே வெம்மையான நீரை பையப் பைய ஊற்றி நீராட்டுகிறார்கள். அன்றைக்கும் அசோதைப் பிராட்டியார் தன் சிறு குழந்தையாம் இளஞ்சிங்கத்தை அப்படித் தான் நீராட்டியிருக்கிறாள். குழந்தையின் கையும் காலும் நன்கு செயல்படுவதற்காக அவற்றை நீட்டி நிமிர்த்துவதும் இன்றைக்கும் தாய்மார்கள் செய்வதே (சில இல்லங்களில் பாட்டிமார்கள் செய்கிறார்கள்). அப்படி கையும் காலும் நீட்டி நிமிர்த்திய பின் கடார நீரால் கண்ணக் குழந்தையை நீராட்டி அவனது நாக்கை வழிப்பதற்காக வாயை திறந்த போது அங்கே ஏழுலகையும் கண்டு வியந்து போனாள். ஐய என்ற சொல்லால் அந்த வியப்பைக் குறிக்கிறார் ஆழ்வார்.
மண்ணெடுத்து உண்டதால் அண்ணனால் தடுக்கப் பட்டு அன்னையால் ஆராயப்படும் போது வாயுள் ஏழுலகம் காட்டினான் என்றே இதுவரை படித்தும் கேட்டும் இருக்கிறோம். ஆழ்வார் அந்த நிகழ்வை இன்னும் விரைவாக்கி பிறந்த சில நாட்களிலேயே நடப்பதாகக் கூறுகிறார்.
பாசுரம் 7.
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே
கண்ணனின் திருவாயுனுள் எல்லா உலகங்களையும் கண்ட யசோதைப் பிராட்டியும் மற்ற ஆய்ச்சியர்களும் மிகவும் வியந்து 'ஆயர்களின் பிள்ளை இல்லை இவன். பெறுதற்கரிய தெய்வமே இவன். பரந்த புகழையும் சிறந்த பண்புகளையும் உடைய இந்த பாலகன் எல்லா உலகங்களையும் மயக்கும் அந்த மாயனே' என்று ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.
கண்ணனுடைய திருவருளால் தெய்வீகக் கண் பெற்ற யசோதைப் பிராட்டியார் கண்ணனின் திருவாயுனுள் ஏழுகலங்களையும் கண்டு வியந்து மற்ற ஆய்ச்சியர்களையும் அழைத்துக் காண்பித்தாள். கண்ணன் அவர்களுக்கும் திருவருள் செய்து தெய்வீகக் கண்களைக் கொடுக்க அவர்களும் அவன் திருவாயுனுள் உலகங்களைக் கண்டு வியந்தனர். வியந்து 'இவன் இடைப்பிள்ளை இல்லை; ஏழுலகங்களையும் மயக்கும் மாயனே' என்று சொல்லி மகிழ்ந்தனர்.
பாசுரம் 8.
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்தமாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள்.
குழந்தை பிறந்து பத்தாம் நாளிலோ பன்னிரண்டாம் நாளிலோ ஏதோ ஒரு நல்ல நாளில் பெயர் சூட வேண்டும் என்று சொல்கின்றன சாத்திரங்கள். அதனை ஒட்டி பன்னிரண்டாம் நாள் அன்று எல்லாத் திசைகளிலும் தோரணங்களையும் கொடிகளையும் நாட்டிக் கொண்டாடுகின்றனர் ஆயர்கள்.
இங்கே ஆயர்கள் என்றது ஆண் பெண் இருபாலரையும்.
தங்கள் கைகளில் வைத்துக் கொண்டாடினர் என்று சொன்னாலும் தகும். உத்தானம் என்று சொன்னதால் தலை மேல் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினர் என்றாலும் சரியே.
கோவர்த்தன மலையைத் தூக்கிய நிகழ்ச்சி பிற்காலத்தில் நடந்திருந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு பின்னர் வாழ்ந்தவர் ஆழ்வார் என்பதால் அதனை இங்கே நினைத்துக் கொண்டார் என்பதில் குறையில்லை. திருவாய்ப்பாடியில் நடந்ததை திருக்கோட்டியூருக்குக் கொண்டு வந்ததைப் போல் பின்னர் நடந்ததை முன்னரே நினைத்துக் கொண்டார் போலும்.
பாசுரம் 9.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.
இங்கே மிடுக்கிலாமையால் என்றது யசோதையாகிய தன்னை என்றும் கிருஷ்ணக் குழந்தையை என்றும் இருவிதமாகப் பெரியோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பிறந்து பன்னிரண்டே நாட்கள் பிஞ்சினைப் பற்றி கூறுவதால் குழந்தையின் மென்மையை மிடுக்கிலாமை என்றார். சிறிதே வளர்ந்த குழந்தையைப் பற்றி யசோதையார் கூறினார் என்றால் அது தன்னைக் கூறினார் என்னிலும் தகும். இன்றைக்கும் தமது குழவியரைப் பற்றி தாயர் இந்தக் குறையைக் கூறி மெச்சிக் கொள்வதைக் கேட்கிறோமே.
பாசுரம் 10.
செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்தயிப்
பன்னுபாடவல்லார்க்கு இல்லை பாவமே
செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும்.
செந்நெல் ஆர்க்கும் என்றதனால் இம்மைப்பயன்கள் குறைவின்றி விளங்குவதைக் காட்டினார். மன்னு என்று என்றும் நிலைத்து வாழ்வதைக் கூறியதால் அர்ச்சாவதாரத்தின் குறைவில்லாப் பெருங்குணத்தைக் காட்டினார். நாரணன் என்று சொன்னதால் எவ்விடத்தும் எவ்வுயிரிலும் வாழ்பவன் என்பதையும் எவ்விடமும் எவ்வுயிரும் தன்னுள் கொண்டவன் என்பதையும் கூறினார். நம்பி என்றதால் அர்ச்சாவதாரத்தில் மிக வெளிப்படையாக நிற்கும் பெருங்குணமான சௌலப்யத்தை / நீர்மையைக் காட்டினார். இல்லை பாவமே என்றதனால் கைங்கர்ய விரோதிகளான பாவங்கள் நீங்கினபடியைக் கூறினார்.
Sunday, August 08, 2010
முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
***
முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!
பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!
உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள், திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப் பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்!
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையில் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே!
எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர் பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களை எல்லாம் அடியேனாலும் பேச முடியாது!
மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலைமாஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மாஞாலம் வருத்தாதே?
மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா?
வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?
அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?
ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்!
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று முதல் படைத்தாய்!
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதோ?
பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!
மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான்கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உனபாத மலர்ச்சோதி மழுங்காதே?
குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?
தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?

மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது வியப்பே!
மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே!
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே
மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.
Tuesday, June 22, 2010
பெருமாளே ஆனாலும் சரி போயிட்டு வாங்க!

அன்றிரவு படுப்பதற்கு முன் அவன் மிகவும் சோகமாக இருந்தான்.
"சேந்தன். என்ன ஆச்சு?"
"நான் கவலையாக இருக்கிறேன்"
"ஏன்?"
"தம்பிகிட்ட பணம் இல்லை!"
சிரிப்பதா இல்லையா என்று தெரியவில்லை. திரைப்படத்தின் விளைவா, எங்கள் பேச்சுக்களின் விளைவா தெரியவில்லை. மூன்று வயதில் ‘பணம் இல்லை’ என்ற கவலை! அவனுடைய உண்டியலில் பணம் இருக்கிறதே என்று சொன்னவுடன் அவன் கவலை பறந்தோடிவிட்டது. :-)
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? நாலடியாரில் ஒரு பாடலைப் படித்ததால் வந்த விளைவு!
'இல்லானை இல்லாளும் வேண்டாள்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. பணம் இல்லாதவன் என்றால் மனைவியும் விரும்ப மாட்டாள் என்று பொருள். மேலே சொன்ன திரைப்படத்தின் கதை உண்மைக்கதை. அதில் பணம் இல்லாத கணவனை மனைவி பிரிந்து சென்று விடுகிறாள். திரைப்படம் முடியும் வரை அவள் திரும்பி கணவனிடம் வந்தாளா இல்லையா என்றே காட்டவில்லை. தேஜஸ்வினிக்கு அது பெரிய கேள்வியாக இருந்தது. கடைசியில் கதாநாயகன் பெரும் கோடீஸ்வரன் ஆகிறான் என்பதால் மனைவி திரும்பி வந்திருப்பாள் என்று சொன்னேன்.
பணம் இல்லாதவனைப் பிரிந்து மனைவியே செல்லும் போது விலை மகளிர் அவனைப் புறந்தள்ளுதல் இயல்பு தானே. அதனைத் தான் நாலடியார் கூறுகிறது. அக்காலத்தில் பரத்தையரிடம் செல்வது குமுகாயத்தில் (சமுதாயத்தில்) இயல்பான ஒன்றாக இருந்ததால் அதனை அழுத்திக் கூற வேண்டிய தேவை நாலடியாரின் ஆசிரியருக்கு இருந்தது போலும்.
அங்கண் விசும்பில் அமரர் தொழப்படும்
செங்கண் மால் ஆயினும் ஆக மன்! - தம் கைக்
கொடுப்பது ஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர் தம் கையால் தொழுது!
(நாலடியார் – பொருட்பால் - பொதுமகளிர் – 373)
விரிந்து பரந்த விண்ணுலகத்தில் வாழும் தேவர்களால் தொழப்படும் பெருமை பெற்ற, சிவந்த தாமரை போன்ற திருக்கண்களைப் பெற்று சிறந்த ஆண்மகன் - புருஷோத்தமன் - என்று பெயர் பெற்ற திருமாலே ஆனாலும் ஆகட்டும், தனது கையில் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லாதவரை கொய்து முகரத் தகுந்த இளந்தளிர் போன்ற மேனியை உடைய மகளிர் தம் கைகளால் வணங்கி விடை கொடுத்து அனுப்புவார்கள்!
பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.
விரிந்து பரந்தது அங்கண் மா ஞாலமாகிய இந்த உலகம்! அதனிலும் பெருமை உடையது அங்கண் விசும்பாகிய விண்ணுலகம்! அந்த விண்ணுலகில் வாழும் தேவர்கள் மனிதர்களால் வணங்கப்படும் பெருமை உடையவர்கள்! அந்த தேவர்களாலேயே வணங்கப்படும் பெருமை உடையவன் செங்கண் மால்! செங்கண் என்று இங்கே சொன்னது அவனது அழகான தாமரை போன்ற கண்களைக் கூறி அதன் மூலம் அவனது வடிவழகைக் குறிப்பாக உணர்த்த. அப்படி பெருமைக்கெல்லாம் சிறந்த பெருமை பெற்றிருந்தாலும் சரி; அழகுக்கெல்லாம் சிறந்த அழகு பெற்றிருந்தாலும் சரி - அவை எல்லாம் இளந்தளிர் போன்ற மென்மையான அழகான மேனியை உடைய பெண்களுக்கு ஒரு பொருட்டில்லை. கையில் காசு இல்லை என்றால் போயிட்டு வாங்க என்று கை தொழுது அனுப்பிவிடுவார்கள்.
இன்னொரு குறிப்பும் இந்தப் பாடலில் இருக்கிறது. பணம் இல்லாதவரைக் கடிந்து துரத்தவில்லை இந்தப் பொது மகளிர். பெருமையுடையவன்; அழகுடையவன் என்பதால்இனி வருங்காலத்தில் அவனிடம் பணம் இருக்க வாய்ப்புண்டு. அப்படி பணம் கிடைக்கும் போது அவனை அவர்கள் 'வருக வருக' என்று அழைப்பார்கள். இப்போது கடிந்து அனுப்பினால் பின்னர் பணம் வரும் போது பகையாக முடியும் என்று எண்ணி பணமில்லாத நேரத்தில் பணிவாகக் கை தொழுது திருப்பி அனுப்புகிறார்களாம்!
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சும்மாவா சொன்னார் ஐயன்!
Wednesday, April 21, 2010
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!

"எம்பெருமானாரே. தண்டமும் பவித்ரமும் அல்லவோ ஒரு முக்கோல் பகவரான துறவியின் அடையாளங்கள். அவற்றை எங்கும் எப்போதும் தரித்துக் கொள்வது தானே துறவியரின் கடமை. தங்களின் தண்டமும் பவித்திரமும் என்று தேவரீரால் சொல்லப்பட்டவர்கள் தங்களின் முதன்மைச் சீடர்களான முதலியாண்டானும் கூரத்தாழ்வானும். அடியோங்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தைக் கொஞ்சமேனும் பேசியிருக்கிறோம். முதலியாண்டானின் வைபவங்களையும் பேசும் பாக்கியத்தை அடியோங்களுக்கு தேவரீர் அருள வேண்டும்!"
"சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்த முதலியாண்டானின் வைபவத்தை நீர் பேசுவதற்கு எம்பெருமானின் திருவருள் கூடி வந்திருக்கிறது. இன்றே சித்திரை புனர்பூசம்! முதலியாண்டானின் பெருமைகளைப் பரக்க பேசும்!"
"ஆகா. தேவரீர் கருணையே கருணை.
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!
காரேய் கருணை இராமானுச இக்கடலிடத்தில் யாரே அறிபவர் நின் அருளாம் தன்மை?!"
***
இறைவனுடன் கூடவே இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பது ஒரு வகை. அதனை இராமவதாரத்தில் இலக்குவனிடம் கண்டோம். அதுவே இராமானுச முனியின் வாழ்க்கையில் கூரத்தாழ்வானிடம் கண்டோம்.
இறைவனின் திருவுள்ள உகப்பை முன்னிட்டு இறைவனின் அருகாமையைக் கூடத் துறந்து இறை பணி செய்வது இன்னொரு வகை. அதனை இராமாவதாரத்தில் பரதனிடம் கண்டோம். இராமானுச முனியின் வாழ்க்கையில் அதனை முதலியாண்டானிடம் கண்டோம். ஆசாரியனின் திருவுள்ள உகப்பிற்காக தன்னுடைய கல்விப்பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு இராமானுசரின் ஆசாரியர் பெரிய நம்பிகளின் திருமகளார் அத்துழாயின் புகுந்த வீட்டிற்கு முதலியாண்டான் வேலைக்காரனாக சென்று வேலை செய்ததை நமது கண்ணபிரான் இரவிசங்கர் முன்பே இங்கு பேசியிருக்கிறார். அதனை முதலியாண்டானின் பிறந்த நாளான இன்று மீண்டும் ஒரு முறை படிப்போம்!
***

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தோன் வாழியே!
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே!
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே!
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே!
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே!
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே!
திருவத்திகிரி எனப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் பேரருளாளன் வரதராசப் பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க! திருவருள் கூடிய பச்சைவாரணம் என்ற ஊரில் அவதரித்தவன் வாழ்க! சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சிறப்பு பெறும் படி அதில் பிறந்தவன் வாழ்க! ஸ்ரீபாஷ்யம் நூலை உடையவரிடமிருந்து முதல் ஆளாக சிறப்புடன் பெற்றவன் வாழ்க! உத்தமமான வாதூல குலம் உயர வந்தவன் வாழ்க! திருவரங்கத் திருநகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கைங்கர்யம் என்னும் நல்வழியில் திரும்பும்படி அழகிய மணவாளனை ஊரெல்லாம் தாங்கிச் செல்லும் சீர்பாதம் என்னும் கொத்தினை எம்பெருமானாரின் கட்டளைப்படி நிலைநாட்டியவன் வாழ்க! முதலியாண்டான் பொற்பதங்கள் எக்காலத்திலும் வாழ்க!
***
எம்பெருமானார் இராமானுசர் அவதரித்து பத்து வருடங்களுக்குப் பின்னர் பிரபவ வருடத்தில் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கும் இடையில் இருக்கும் 'பச்சைபெருமாள் கோயில்' என்னும் ஊரில் பிறந்தவர் தாசரதி என்ற இயற்பெயர் கொண்ட முதலியாண்டான். இவர் பிறந்த ஊருக்கு 'புருஷமங்கலம்', 'வரதராஜபுரம்', 'பச்சைமங்கலம்' என்ற பெயர்களும் உண்டு. இவருடைய திருத்தகப்பனார் பெயர் அனந்த நாராயண தீட்சிதர். இவருடைய திருத்தாயார் பெயர் நாச்சியார் அம்மன் என்னும் கோதாம்பிகை. இவருடைய தாய்மாமன் எம்பெருமானார். இவருடைய கோத்திரம் வாதூல கோத்ரம். எம்பெருமானாருடைய சீடர்கள் அனைவருக்கும் தலைவராக இருந்ததால் இவருக்கு முதலியாண்டான் என்ற திருப்பெயர் அமைந்தது.
நம்மாழ்வாரான சடகோபன்/சடாரி எம்பெருமானின் திருவடிநிலைகளாக இருந்து அருள்பாலிக்கிறார். அதே போல் எம்பெருமானாரின் திருவடிநிலைகளாக அவரது அந்தரங்க அடியாராக இருந்த முதலியாண்டான் கருதப்படுகிறார். இனி மேல் இதனை நினைவில் நிறுத்தி இராமானுசரின் சன்னிதிக்குச் செல்லும் போது 'சடாரி சாதிக்க வேண்டும்' என்று கேட்காமல் 'முதலியாண்டான் சாதிக்க வேண்டும்' என்று வேண்டுவோம்!
***
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்
யாருடைய திருப்பெயரால் எதிராசரான இராமானுசரின் திருவடிநிலைகள் அழைக்கப்படுகின்றனவோ அந்த தாசரதியின் திருவடிகளை நான் என் தலையில் அணிகிறேன்.
ஸ்ரீமத் தாசரதிம் வந்தே ராமானுஜ பதாஹ்வயம்
வாதூலாநாம் அலங்காரம் த்ரிதண்டாஹ்வய தேசிகம்
ஸ்ரீ ராமானுசரின் திருவடிகள் என்ற திருப்பெயரை உடையவரும், வாதூல கோத்திரத்தவர்களுக்கு அணிகலனைப் போன்றவரும், ஸ்ரீ ராமானுசரின் முக்கோலாகச் சொல்லப்படுபவரும் ஆன ஸ்ரீமத் தாசரதி என்னும் குருவை வணங்குகிறேன்.
அநந்த நாராயண கோதாம்பிகா கர்ப்ப ஸம்பவம்
பாகிநேயம் யதீந்த்ரஸ்ய பஜே தாசரதிம் குரும்
அநந்த நாராயண தீட்சிதருக்கும் கோதாம்பிகைக்கும் திருமகனாகப் பிறந்தவரும், எதிராசருக்கு மருமகனும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!
மேஷே புநர்வஸு திநே தாசரத்யம்ஸ ஸம்பவம்
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்
மேஷ மாதமான சித்திரையில் புனர்பூச நாளில் தசரத குமாரனின் அம்சமாகப் பிறந்தவரும், எதிராசருடைய திருப்பாதுகைகள் எனப்படுபவரும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!
ய: பூர்வம் பரதார்த்தித: ப்ரதிநிதிம் ஸ்ரீபாதுகாம் ஆத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாசரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ச்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹதி நோ தைவம் குலஸ்யோத்தமம்
யார் முற்காலத்தில் பரதனால் வேண்டிக்கொள்ளப்பட்டு அரசாளுவதற்கு தன் பிரதிநிதியாகத் தன் திருப்பாதுகைகளைத் தந்து அருளினானோ, அந்த ராமனே தாசரதி என்னும் பெயருள்ள ஆசாரியனாய் மீண்டும் வந்து நம்முடைய குலத்திற்கு மிகவும் உயர்ந்த தெய்வமான ச்ரி ராமானுச பாதுகைகளாக ஆகி எல்லா உயிர்களும் உய்யும்படி திருவருட் பேரரசை இங்கே தானே ஆண்டு கொண்டிருக்கிறான்!
தனது பாதுகைகள் கோசல சாம்ராஜ்யத்தை ஆண்டது போல் தானே இராமானுச பாதுகைகளாகி பக்தி சாம்ராஜ்யத்தை ஆளுகிறான் தாசரதி!
ஸ்ரீவைஷ்ணவ சிரோபூஷா ஸ்ரீராமானுஜ பாதுகா
ஸ்ரீவாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீதாசரதிரேததாம்
ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமுடிகளுக்கு அணிகலனாக இருக்கும் ஸ்ரீ ராமானுச திருவடிநிலைகளாக ஆகி, ஸ்ரீவாதூல குலத்திற்கு அணிகலனாக விளங்கும் ஸ்ரீதாசரதி என்னும் முதலியாண்டான் எங்கும் வெற்றி பெறுவாராக!
முதலியாண்டான் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடி நிலைகளே சரணம்!
Wednesday, February 24, 2010
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!
குமரி: உங்கள் கோவிந்தன் தாய் தந்தைக்கு அடங்காதவன். உடன்பிறந்தவனோ கோள் சொல்லி. எங்கள் இராமன் அப்படியா? பெற்றோர் சொல்படி கானகம் ஏகினான் எங்கள் காகுத்தன். தன்னுடைய உடமைகள், உணவு, உறக்கம் அனைத்தையும் தொலைத்து கூடவே காவலாக நின்றான் உடன்பிறந்தானான இளையாழ்வான். இவனையும் மிஞ்சும் வகையில் 'என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்பே பெரிது' என்று முடி சூடாமல் அடி சூடி நின்றான் தம்பி பரதாழ்வான். 'உன்னைப் பேணுதற்கு உன் அடியார்கள் உண்டு; உன் அடியார்களைப் பேணுதலே உன் திருவுள்ளக் குறிப்பு' என்று சொல்லி அடியார்க்கு அடியானாய் நின்றான் சத்ருக்னன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயனாய் உங்கள் கண்ணன் இருக்கலாம். நற்குணங்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் இந்தச் சக்ரவர்த்தித் திருமகன்கள்!
***
"என் மனம் பெரிதும் மயங்குகின்றதே. பெருமாள் காடேறப் போனான். சக்ரவர்த்தியோ அப்பிரிவைத் தாங்காமல் வானேறப் போனார். இவ்விரு துன்பமே தாங்க முடியாத போது பழுத்த புண்ணிலே புளி பெய்ததைப் போல அரசனின்றி நாடு இருக்கக் கூடாது; முடி சூட்டிக் கொள் என்று சொல்கிறீர்களே! இது தகுமா? முறையா? நீதியா?
எம்பெருமானுக்கு உடைமையான நான் அவன் உடைமையான இந்த நாட்டை ஆளுவது எப்படி? நீங்கள் எல்லோரும் இப்படி ஒன்றாகக் கூடி வந்து என் இயல்பைத் துறக்க வேண்டுவது ஏன்? அவனுக்கே அடிமையாக இருப்பது தானே என் இயல்பு?!
குருதேவரே. நீங்கள் எங்கள் குலத்திற்கு புரோஹிதர். முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு ஹிதமானதை செய்வது தானே தங்கள் கடமை. தமையன் காடேறவும், தந்தை துஞ்சவும் நான் முடி சூட்டிக் கொள்வது தானா தாங்கள் முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு இதம் செய்வது?
ஒருவருக்கு உரிமையான இரு பொருட்கள் ஒன்றையொன்று ஆளுவது இயலுமோ? நானும் பெருமாளின் உடைமை; இந்நாடும் அவன் உடைமை. இந்நாட்டை நான் ஆளுவதும் நிகழுமோ?
தந்தை சொல்லே மிக்கது என்று எண்ணி இந்த நாட்டை அப்படியே விட்டுச் சென்றான் அண்ணன். அவனைப் பிரிந்த துயரம் தாங்காமல் உடனே உயிரைத் துறந்தார் தந்தை. இப்படி ஒருவருக்கொருவர் இளைக்காதவராய் இருக்க, நான் இந்த நாட்டை ஆளத் தொடங்கினால் இந்த அண்ணனுக்குத் தம்பியாக நான் ஆவது எப்படி? இந்தத் தந்தைக்கு நான் மகனாக ஆவதும் எப்படி?"
"பரதா. அப்படியென்றால் என்ன தான் செய்வது?"
"சுவாமி. நாம் எல்லோரும் சேர்ந்து போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து அவரை மீட்டுக் கொண்டு வந்து திருவபிஷேகம் செய்வோம். வாருங்கள்"
அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்சித்திரக்கூடத்திலே போய் பெருமாள் திருவடிகளிலே தனது விருப்பத்தைச் சொல்கிறான் பரதாழ்வான்.

"அண்ணா. திருமுடியைத் துறந்து சடாமுடியைப் புனைந்தீர்கள். நாட்டை விட்டு காட்டிலே எழுந்தருளினீர்கள். இந்தக் காட்டையும் தவ வேடத்தையும் துறந்து திருவயோத்திக்கு வந்து திருமுடி சூடி (முடியொன்றி) மூன்று உலகங்களையும் என்றைக்கும் ஆண்டு (மூவுலகங்களும் ஆண்டு), உன்னுடைய இளையவனாய் பிறந்ததால் தம்பியாகவும், உன்னிடமே உலக வழக்குகள் அனைத்தையும் அறிந்து கொண்டதால் சீடனாகவும், உன்னால் விற்கவும் கொள்ளவும் படியான பொருளாக இருப்பதால் அடிமையாகவும் இருக்கிற எனக்கு அருள் செய்ய வேண்டும் (உன் அடியேற்கு அருள் என்று)"
***
இராகவி: இப்படி நாட்டை விட்டு காட்டுக்குப் போன அண்ணனின் பின் தொடர்ந்து சென்று (அவன் பின் தொடர்ந்த), மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடும் வழக்கம் இல்லை என்றும், தன்னுடைய இயல்பு பெருமாளுக்கு உடைமையாக இருக்கும்படி இருக்க அவன் உடைமையான இராச்சியத்தைத் தான் ஆள இயலாது என்றும் சொன்ன ஒப்பில்லாத நற்குணங்கள் நிரம்பிய பரத நம்பிக்கு (படி இல் குணத்துப் பரத நம்பிக்கு) தன் திருவடி நிலைகளைத் தந்தான் காகுத்தன்.
சங்கரி: இவ்வளவு தூரம் கெஞ்சியவனுடன் திரும்பி வராமல் தன் திருவடி நிலைகளைத் (பாதுகைகளைத்) தந்தானே கோமகன்! அது ஏன்?
குமரி: திருவடி நிலைகளைத் தந்ததால் தந்தையின் சொல்லையும் நிறைவேற்றினான்; தம்பியின் துயரத்தையும் தீர்த்தான்.
இராதை: அது எப்படி?
இராகவி: "பரதா. நீ அழைக்க நான் மீண்டும் வந்தால் நம் தந்தையார் சொன்னதைச் செய்யாமல் அரசாட்சியின் ஆசையினாலே மீண்டு வந்ததாக ஆகும். நீ என்னை மீட்டுக் கொண்டு போனால் உனக்கும் அபவாதம் உண்டாகும். தாயுடன் சேர்ந்து சதி செய்து நாட்டைப் பெற்றுக் கொண்டு தமையனைக் காடேற விட்டான்; இப்போது கெட்ட பெயர் உண்டான போது பின்னே தொடர்ந்து சென்று கண்ணைக் கசக்கி காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான்; இரண்டையும் செய்ய வல்லவனாக இருக்கிறான் பரதன் என்று உனக்கு மேலும் கெட்ட பெயர் உண்டாகும். அதனால் நான் மீண்டும் திருவயோத்திக்கு வருவது இயலாது" என்று சொன்னான் இராமன். மேலும் சுதந்திரனாக அவனே ஆள்வதைத் தானே பரதன் மறுத்தான். அவன் சுதந்திரன் இல்லை; தனக்கு பிரதிநிதியாக ஆள்கிறான் என்று சொல்வதைப் போலும், காட்டிற்குச் சென்றவன் தந்தை சொற்படி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டிற்கு எழுந்தருளுவான் என்று உறுதி சொல்வதைப் போலும் தன் திருவடி நிலைகளைத் தந்து முடி சூட மறுத்தவனை அடிசூடும் அரசாக்கி விட்டான் இராமன் (அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற). இதனால் தந்தை சொல்லும் நிறைவேறியது; தம்பி துயரமும் நீங்கியது. அப்படிப்பட்ட அயோத்தியர் கோமானை நாம் பாடுவோம் (அயோத்தியர் கோமானைப் பாடிப் பற)!
இராதை: இது என்ன முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாய்?! மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்ததன் பின்னர் இராமனை அயோத்தியர்கோன் என்று சொல்லுதல் ஆகுமா?
குமரி: பரதாழ்வான் மரவடிகளைத் தான் கொண்டு போனான். அவன் ஆள்கிறான் இல்லை. அவன் முடி சூடவில்லை. பெருமாள் அடியையே சூடினான். அதனால் திருவயோத்திக்கு அரசன் இராமனே. அதனால் அயோத்தியர் கோமானைப் பாடுவோம் என்றதில் தவறில்லை.
சங்கரி: சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல நீங்கள் கேளுங்கள்.
அருகில் இருக்கும் மரம் செடி கொடிகளும் அணுகி வரும் மாடு மனிதர் பறவைகளும் பொசுங்கிப் போகும்படி நஞ்சை உமிழும் காளியனின் பொய்கை கலங்கும்படி (காளியன் பொய்கை கலங்க) ஓடிச் சென்று குதித்து (பாய்ந்திட்டு), பொய்கையின் கலக்கத்தால் சினம் கொண்டு வானளவிற்கு விரித்து நின்ற காளியனின் ஐந்து தலைகளிலும் மாறி மாறி நின்று (அவன் நீள் முடி ஐந்திலும் நின்று) நடனம் செய்து (நடம் செய்து) அதனால் தலையும் கழுத்தும் உடலும் நெரிந்து குருதி உமிழ நலிந்து நின்று உயிர் பிழைக்க வேண்டி நின்ற காளியனின் அடைக்கலத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தான் எங்கள் வித்தகன் (மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்)! அவனுடைய தோள் வலிமையைப் பாடுவோம் (தோள் வலி வீரமே பாடிப் பற)! குற்றமற்ற நீல மணியைப் போன்ற வடிவழகை உடைய கண்ணனைப் பாடுவோம் (தூமணி வண்ணனைப் பாடிப் பற)!
குமரி: சரி தான்! கண்ணன் ஆடினான் என்றால் அவன் கால் வலிமையை அல்லவோ பாட வேண்டும்?! தோள் வலிமையைப் பாடச் சொல்கிறாயே?!
இராதை: காலால் ஆடினான் என்பது சரி தான். ஆனால் அந்த காளியன் தன் உடலாலும் வாலாலும் கண்ணனைப் பிணைத்தும் அடித்தும் கீழே விழும்படி செய்ய முயன்றானே. அப்போது அவன் உடலையும் வாலையும் விலக்கி நின்ற வீரம் கண்ணனின் தோள் வலிமை தானே?! அதனால் அவன் தோள் வலிமையைப் பாடுவோம்!
இராகவி: நன்கு சொன்னாய்! தூமணி வண்ணனைப் பாடச் சொன்னதற்கும் ஏதேனும் காரணம் உண்டா?
சங்கரி: உண்டு இராகவி! காளியனால் கருநிறம் கொண்டு கிடந்த பொய்கை கண்ணனால் காளியன் விரட்டப்பட்ட பின்னர் மீண்டும் தூய்மை கொண்டு தன் இயல்பான நிறமான நீல நிறத்தைக் கொண்டதே! அதனைச் செய்தவன் இந்த தூமணிவண்ணன் தானே! அதனால் தூமணிவண்ணனைப் பாடுவோம்!
இராதை: காளியன் தலையில் மட்டுமா ஆடினான் கோகுலன்?! அவன் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்திருக்கிறான்! மாயத்தால் வண்டிச் சக்கரமாக வந்த கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சினான் கோவிந்தன் (மாயச் சகடம் உதைத்து)! தாயார் கட்டி வைத்த உரலை இழுத்துக் கொண்டு சென்று, வழியிலே நின்ற இரு மருத மரங்களின் இடையே புகுந்து, தடை செய்த அம்மருத மரங்கள் முறியும் படி இழுத்துச் சென்றான் தாமோதரன் (மருது இறுத்து)! பசு மேய்க்கப் போன இடையர்களுடனே அவர்களுக்குத் தலைவனாகச் சென்று, பசுக்கூட்டத்தை மேய விட்டு ஆநிரையைக் காத்தான் கோபாலன் (ஆயர்களோடு போய் ஆநிரை காத்து)! மற்ற இடங்களில் இருக்கும் பசுக்கூட்டங்கள் புல்லும் தண்ணீருமே தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டிருக்க கோகுலத்தின் பசுக்களோ இவனது அழகிய வேய்ங்குழல் இசையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும்படியான வித்தகம் கொண்டவன் வேணுகோபாலன் (அணி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற)! இமையா நெடுங்கண் இமையவர்கள் போற்ற நிற்கும் விசும்பினை விட அறிவொன்றும் இல்லா ஆய்க்குலத்துப் பிறந்து ஆயர்களுக்குத் தலைவனாய் இருப்பதில் செருக்கு கொள்பவனைப் பாடுவோம் (ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற)! பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டு பசு நிரை மேய்த்தவனைப் பாடுவோம் (ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற)!

இராகவி: சரி தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைச் சரணடை என்று நிபந்தனை இட்ட கோவிந்தனைப் போல் இல்லாமல் யாராயிருந்தாலும் சரணடைந்தவர்களுக்கு என் உயிரையும் தருவேன் என்றானே காகுத்தன், அவன் புகழைக் கேள்! மிகவும் ஆழமாக இருப்பதாலே தன் நீல நிறம் மாறி கரு நிறம் கொண்டிருந்தது தென் கடல் (கார் ஆர் கடலை). நீரில் இட்டாலோ கருங்கற்கள் ஆழ்வதையே இயல்பாகக் கொண்டவை. குரங்குகளோ ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கும் ஒரு கல்லிலிருந்து இன்னொரு கல்லிற்கும் தாவுவதையே இயல்பாகக் கொண்டவை. இவற்றின் இயல்பிற்கு மாறாக இந்த ஆழம் நிறைந்த கருங்கடலை குரங்குகள் கல்லினை இட்டு அடைத்து அணை கட்டும் படி இயல்புகளையே மாற்றும் திறன் கொண்டவன் இராமன் (அடைத்திட்டு)! அது மட்டுமா?! நுழைவதற்கு மிகவும் அரிதானது இலங்கை! பல அரண்களையும் காவல்களையும் கொண்டது! புகவரிய அந்த இலங்கையில் பல்லாயிரக்கணக்கான குரங்குகளின் படையுடன் புகுந்தவன் எங்கள் ஆஜானுபாகு (இலங்கை புக்கு)!
குமரி: இப்படி செய்வதற்கரிவற்றை எல்லாம் செய்து வந்திருக்கிறானே சீராமன் என்று அவன் பெருமையையும் வலிமையையும் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டு பிராட்டியைத் திருப்பித் தராமல், தன்னுடைய வரத்தின் வலிமையையும் தோள் வலிமையையும் பெரிதாக எண்ணிக் கொண்டு போர் செய்ய வந்த இராவணனின் அழகிய பொன்முடி சூடிய தலைகள் பத்தினையும் துணித்தான் தசரதகுமாரன். ஒவ்வொரு தலையாக அறுத்தானா என்ன? இல்லை. ஒரே அம்பினால் ஒன்பதோடு ஒன்று என்னும்படி பத்துத் தலைகளையும் ஒரே நேரத்தில் துணித்தான் (ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா)! 'இராவணன் தம்பி நான்' என்று தன்னைப் பற்றிய உண்மையைக் கூறிக் கொண்டே வந்து நேர்மையுடன் சரண் புகுந்த வீடணனுக்கு பல நூறு காலம் அரசாளும் படி இலங்கை அரசை தந்தான் சரணாகத வத்ஸலன் (அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த)! இப்படி எதிரியானாலும் சரணென்று வந்தால் இகபர சுகங்களைத் தந்து ஆட்கொள்ளும் குணத்தால் ஒரு காலும் திருப்தி பிறவாமல் மேன்மேலும் அனுபவிக்க வேண்டும் என்னும் ஆவலை உண்டாக்கும் அமுதத்தைப் போன்றவனைப் பாடுவோம் (ஆரா அமுதனைப் பாடிப் பற)! இராவணனை அழித்து பின்னர் பிராட்டியோடே திருவயோத்திக்கு எழுந்தருளி திருவபிஷேகம் செய்து கொண்டு திருவயோத்யையில் உள்ளவர்களுக்கு அரசனாக ஆண்டவனைப் பாடுவோம் (அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற)!
நால்வரும்: அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற! அயோத்தியர் கோமானைப் பாடிப் பற! தோள்வலி வீரமே பாடிப் பற! தூமணிவண்ணனைப் பாடிப் பற! ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற! ஆரா அமுதனைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!
வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த உரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் பொருளுரை. இப்பாடலை கண்ணன் பாட்டில் கேட்கலாம்!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்!
Tuesday, February 02, 2010
மொழியைக் கடந்த பெரும்புகழான் கூரத்தாழ்வான்!
"நல்லா இருக்கேன் குமரன். எம்பெருமானார் வாழித் திருநாமத்தை எழுதி இரண்டு வாரத்திற்கு மேலாகிறதே. கூரத்தாழ்வானுடைய ஆயிரமாவது ஆண்டு நிறைவும் வந்துவிட்டது. இன்னும் அடுத்த பகுதி எழுதவில்லையே. ஏன்?"
"எம்பெருமானார் திவ்ய சரிதத்தைப் போல் கூரத்தாழ்வான் திவ்ய சரிதமும் எழுதிக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது இராகவ். எதை எழுதுவது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் தாமதம்".
"இதற்கு ஒரு வழி இருக்கிறது குமரன். வாழித் திருநாமத்தில் எந்த நிகழ்ச்சிகளைக் குறித்திருக்கிறார்களோ அதனை மட்டும் சொல்லுங்கள்".
"என் குழப்பத்தை நீக்க அது ஒரு நல்ல வழி தான் இராகவ். அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் என்ன என்று தொடர்ச்சியாக நீங்களே சொல்லுங்கள்".
"கூரத்தாழ்வான் பெருமையைப் பேசக் கசக்குமா? கட்டாயம் சொல்கிறேன் குமரன்."
***
இன்றையிலிருந்து (3-Feb-2010)சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன். சௌம்ய வருடம் (1010 CE), தை மாதம், ஹஸ்த நட்சத்திரம். காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில் வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் இராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.

காஞ்சியில் இராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார். வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு இராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர். எப்போதும் இராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். இராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக்கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், இராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.
***
ஒரு முறை இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் இராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.
"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்".
"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்".
"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்யவேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்".
"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்".
"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்".
குலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது. குலப்பெருமையும் செல்வப்பெருமையும் கடத்தலே மிக அரிது. ஆனால் அவற்றைக் கடந்தவரும் உள்ளார்கள். அவற்றிலும் மிக அரிது கல்விப்பெருமையைக் கடப்பது. ஊரார் அறியாமல் அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்று வந்த கல்விப்பெருமை கூடிய ஒருவருக்கு ஒரு நூலைப் பயிற்றுவிக்கும் போது யாரோ அந்தப் பக்கம் வர, கற்க வந்தவரிடம் இருந்து நூலை வாங்கி வைத்துக் கொண்டு தான் அவரிடம் இருந்து கற்பதைப் போல் காட்டிக் கொண்ட கொஞ்சமும் கல்விப்பெருமை இல்லாத பணிவுக் குணம் மிக்கவர் கூரத்தாழ்வான்.
***
"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே? தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது?"
"சுவாமி. தேவரீர் வருந்த வேண்டாம். நேற்றிரவு அந்நூல் முழுவதையும் படித்துவிட்டேன்".
"ஆகா. அருமை அருமை. கூரத்தாழ்வாரே. நீர் ஏகசந்தகிராகியாயிற்றே. ஒரு முறை படித்தாலே முழுவதும் மனத்தில் நிறுத்திக் கொள்வீர். இனி கவலையில்லை. நாம் திருவரங்கம் சென்று அடைந்த பின்னர் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதத் தொடங்குகிறேன். ஏதேனும் ஐயம் வந்தால் உம்மிடம் கேட்கிறேன். போதாயன விருத்தி என்ன சொல்கிறது என்பதை அப்போது சொல்லும்".
"சுவாமி. தேவரீர் என் ஆசாரியன். உங்களுக்குத் தோன்றும் ஐயங்களைத் தீர்க்கும் அளவிற்கு அடியேன் அறிவுடையேன் இல்லை. அப்படி நினைத்தாலும் செய்ய முயன்றாலும் அது பெரும் தவறு".
"சரி. இப்படி செய்யலாம். நான் உரையைச் சொல்லச் சொல்ல நீர் எழுதும். எங்காவது நான் சொல்லும் பொருள் போதாயன விருத்திக்கு மாறுபாடாக இருந்தால் எழுதுவதை நிறுத்திவிடும். அதனை நான் புரிந்து கொள்கிறேன். போதாயன விருத்திக்கு ஏற்ற பொருளை நான் சொல்லும் வரை நீர் மீண்டும் எழுத வேண்டாம்"
"தங்கள் கட்டளை சுவாமி".
எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் பிரம்மசூத்திரத்தின் உரையான ஸ்ரீபாஷ்யத்தை இந்த வகையில் எழுதி மீண்டும் காஷ்மீரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சரஸ்வதி பீடத்தில் அதனை அரங்கேற்றினர். சரஸ்வதி தேவியே அந்த உரையைப் பாராட்டி எம்பெருமானார்க்கு 'ஸ்ரீபாஷ்யக்காரர்' என்ற திருப்பெயரை அருளினாள்.
பிற்காலத்தில் தனது மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் உட்பட தன்னிடம் சீடர்களாக இருந்தவர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருளை மிக நன்றாகப் போதித்தார் கூரத்தாழ்வான்.
ஆளவந்தாரின் இறுதி ஆசைகளான - 1. வேதங்களைத் தொகுத்த வேதவியாசரின் பெயர் விளங்கச் செய்வது, 2. பராசர ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் இயற்றிய பராசரரின் பெயர் விளங்கச் செய்வது, 3. பிரம்மசூத்திரத்திற்கு உரை நூல் செய்வது என்ற மூன்று விருப்பங்களையும் இராமானுசர் நிறைவேற்ற கூரத்தாழ்வான் உறுதுணையாக இருந்ததை அவரது திருக்குமாரர்களின் திருப்பெயர்களிலிருந்தும் ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதிலும் பரப்புவதிலும் அவர் செய்த அருந்துணையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
***
கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய எண்பத்தி எட்டு வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய எண்பது வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் இராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார். வயதில் மிகவும் முதிர்ந்த, இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ் நிலை ஏற்பட்ட காலம் இது.
ஒரு நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் திருக்கோவிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.
"இது அரசகட்டளை. இராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை"
"ஆகா. இது என்ன கொடுமை? வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது"
"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு இராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்"
"ஐயோ இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே! ஐயா வாயில் காப்போரே! நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும்! எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்!"
மிகுந்த வருத்தத்தோடு திருக்கோவிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.
***
எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு நூற்றி எட்டு வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மேல் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம் என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் இராமானுசர்.
"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்"
"அப்படியே செய்கிறேன் சுவாமி"
"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்"
***
திருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.
"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?"
"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?!"
"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்".
"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு இராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்"
"அப்படியே தந்தோம்"
இராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.
***
"என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா? நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா? உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது"
இராமானுசரின் வாக்கின் படி திருக்கோவிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.
"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?"
"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்".
"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்"
"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு"
மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். இராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக்கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை இராமானுசர் கொண்டாடினார்.
***
"மிக நன்று இராகவ். கூரத்தாழ்வான் திருக்கதையில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாக வாழித் திருநாமம் சொல்லும் பகுதிகளை மிக நன்றாகக் கூறினீர்கள். நம் இணைய எழுத்தாள நண்பர்கள் இரவிசங்கர், சுந்தர் அண்ணா, மௌலி, கைலாஷி ஐயா, ஷைலஜா அக்கா போன்றவர்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தை நிறைய இடுகைகளில் எழுதியிருக்கிறார்கள். நாமும் வருங்காலத்தில் எம்பெருமானாரின் ஆசாரியர்களைப் பற்றியும் சீடர்களைப் பற்றியும் நிறைய பேசலாம். இப்போது இருவரும் சேர்ந்து, கூரேசரது ஆயிரமாவது ஆண்டு நிறைவான இன்று (3-Feb-2010), அவரது வாழித் திருநாமத்தைப் பொருளுடன் சொல்லுவோம்"
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே - சிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வேண்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க!"
***
கூரத்தாழ்வானது ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பதைப் பற்றி சொல்லி கடந்த ஒரு வருடமாக கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையைப் போற்றும் இடுகைகளை இடும் வாய்ப்பை நல்கிய எம்பெருமானுக்கும் எம்பெருமானாருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இவர்கள் அனைவரின் இன்னருளையும் என்னிடம் கொண்டு வரும் இரவிசங்கருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக