மடப்பயலா நீ முருகா?
தலைவனின் பிரிவால் பசலை நோய் கொண்டு வருந்தி நிற்கும் தலைவியைக் கண்டு அவள் தாய் அதனை புரிந்து கொள்ளாது, முருகனை வணங்கும் வேலன் வெறியாடலை நிகழ்த்தினால் தலைவியின் நோய் நீங்கும் என்று நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள். அதனைக் கண்ட தோழி முருகனை நோக்கி உரைப்பதைப் போல் பேசி தலைவியின் உண்மை நிலையைக் குறிப்பால் தாய் அறியும் படி செய்கிறாள்.
மானிடர் யாராலும் அணிவதற்குப் பறிக்கப்படாமல் நிறைய பூத்து நிற்கும் குவளை மலரொடு, குருதியைப் போல் சிவந்த காந்தள் மலர் ஒன்று சேரக் கட்டி, தேவ மகளிர் இசையுடன் ஆடும் மலையை உடைய நாடனின் மார்பை தழுவியதால் தோன்றிய நோய் இந்நோய் என்பதை அறியாத மூடர்களாக வெறியாடலுக்கு ஏற்பாடு செய்த தாயும் வெறியாடலை நிகழ்த்த வந்த பூசாரியான வேலனும் இருக்கலாம். ஆனால் உண்மையை அறிந்த கடவுளான நீயும் அந்த வெறியாடலை ஏற்க வரலாமா முருகா? அப்படி நீ வந்தால் நீ மடப்பயலே!
சரி தானே?! அறியா மானிடர் வெறியாடலை நிகழ்த்தலாம்! எல்லாம் அறிந்த கடவுளும் அதனை ஏற்க வரலாமா? அப்படி வந்தால் அவன் மடவன் தானே?!
இதோ அந்த நற்றிணைப்பாடல்.
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டி
பெருவரை அடுக்கப் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த படர் மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்து அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே!
பாடலின் நிரல்வரிசையிலேயே பொருளைப் பார்ப்போமா?
கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விடப்பட்டிருக்கும் குவளை மலரைப் பறித்து, அவற்றோடு குருதி போன்ற காந்தளின் ஒளிவீசும் பூக்களை அழகுடன் கட்டி, அதனைச் சூடி, பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவு பெற தேவ மகள் அங்கே விழும் அருவியின் இசையையே இன்னிசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டை உடையவனின் மார்பைத் தழுவியதால் அந்த மார்பு தர வந்த நோய் இந்த படர்ந்து மலிந்த பசலை நோய். இது உன் அணங்கால் வந்தது இல்லை என்று நீ அறிந்திருந்தும் மிகப் பெருமையுடன் தலை நிமிர்ந்து கார்காலத்தில் மலர்கின்ற நறுமணம் வீசும் கடம்ப மாலையை சூடி, பூசாரியான வேலன் வேண்ட வெறியாடும் இடத்திற்கு வந்தாய்! உண்மையை அறிந்திருந்தும் இப்படி வந்தாயே! கடவுள் ஆனாலும் ஆகட்டும் நீ மடவனே! வாழ்ந்து போவாய் முருகனே!
கடவுள் சுனையில் மலர்ந்த மலர் ஆதலால் மானிடர் யாரும் குவளையைப் பறிப்பதில்லை. ஆனால் அந்த மலையில் வாழும் தேவ மகளில் அவற்றைப் பறித்துச் சூடிக் கொள்கிறார்கள். மானிடர்கள் தேவ மகளுக்காக அம்மலர்களைப் பறித்து தேவ மகளிரின் சிலைகளுக்குச் சூடி வழிபட்டார்கள் என்று சொன்னாலும் பொருந்தும்.
இந்தப் பாடலின் கருத்து அப்படியே சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவையிலும் வருகின்றது வியப்பு.
இறை வளை நல்லாய் இது நகையாகின்றே
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்
ஆய் வளை நல்லாய் இது நகையாகின்றே
மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனில்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்
செறி வளைக் கை நல்லாய் இது நகையாகின்றே
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்
நேரிழை நல்லாய் நகையா மலை நாடன்
மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்
தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன்
கார்க்கடப்பந்தார் எம் கடவுள் வருமாயின்...
கடவுளே ஆயினும் பொருத்தமில்லாத காரியத்தைச் செய்தால் அவனை மடவன் என்று விளித்தல் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது போலும்! வாழிய முருகே!
Wednesday, January 07, 2009
குறுந்தொகையின் சேவலங்கொடியோன்
தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே
தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும், கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.
தியான சுலோகம் என்று ஒன்றை வடமொழிப் பனுவல்களில் சொல்வார்கள். இறைவனின் திருமேனியை அடி முதல் முடி வரை வருணித்துத் தியானிக்கும் வகையில் அச்சுலோகங்கள் அமையும். இந்தப் பாடலும் ஒரு தியானசுலோகம் போல் அமைந்திருக்கிறது. திருவடிகளைச் சொல்லி, திருமேனியைச் சொல்லி, அத்திருமேனியின் பேரொளியைச் சொல்லி, அத்திருமேனியில் உடுத்தியிருக்கும் பேரொளிப் பட்டுத் துணியைச் சொல்லி, ஏந்தியிருக்கும் வேற்படையைச் சொல்லி, சேவற்கொடியைச் சொல்லி அவன் திருவுருவைக் கண் முன்னால் நிறுத்தி தியானிக்க வைக்கிறது இந்தப் பாடல்.
தாமரை என்ற மலரை மங்கலக் குறியாகக் கொள்வது வழக்கம். அதனைக் கொண்டு இந்நூலைத் தொடங்குவது போல் இப்பாட்டை அமைக்கிறார் பெருந்தேவனார். அழகிய சேவடி எல்லோரும் விரும்பும் சேவடியாகவும் இருப்பதால் காமர் சேவடி என்றார் போலும்.
இந்தப் பாட்டில் குன்றைத் தொளைத்த வேற்படையைப் பாடியிருப்பதைப் படிக்கும் போது பிற்காலத்தில் ஓசை முனி அருணகிரிநாதர் 'கிளை பட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே' என்று கந்தரனுபூதியில் பாடியது நினைவிற்கு வருகிறது. 'கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல்' என்று சிலப்பதிகாரமும் கூறும். இதன் மூலம் குன்றின் நெஞ்சைக் குமரனின் நெடுவேல் பிளந்த செய்தி சங்க காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருகிறது என்று தெரிகின்றது.
சேவலங்கொடியோன் என்று சொல்லியதன் மூலம் குன்றினைத் தொளைத்த நெடுவேல் சூரன் மாமரமாய் கடல் நடுவில் நின்ற பின்னர் அம்மரத்தையும் பிளந்து ஒரு பகுதியைச் சேவற்கொடியாய்க் கொண்டனன் குமரன் என்று சொன்னார் ஆசிரியர்.
Friday, September 26, 2008
உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்
ஞாயிறு போல் தோன்றினான் என்று முதலில் அவன் திருஒளியைக் கூறிவிட்டு பின்னர் அவனது திருவடிப் பெருமையைக் கூறினார் நக்கீரர். பின்னர் திருக்கரங்களின் பெருமையைக் கூறிவிட்டு அவனது அடையாளத்தைக் கூறுவதைப் போல் அவன் மனைவியைக் கூறி அவள் கணவன் என்றார். இந்த ஐந்து அடிகளில் அவனது அழகிய மாலையைப் பற்றி கூறுகிறார்.
கடம்ப மாலை திருமுருகனுக்கே சிறப்பாக உரியது என்பது மரபு. அவன் அன்னையும் அப்பனும் அம்மலரை அணிபவரானாலும் அவனைப் பற்றிக் கூறும் போது சிறப்பாக கடம்ப மலரைக் கூறுவது மரபாகவே அமைந்திருக்கிறது. அந்த மரபு திருமுருகாற்றுப்படையில் தொடங்கியது போலும். இந்த அடிகளில் 'உருள் பூ' என்று கடம்பமலரைச் சொல்கிறார்.
இந்த உருள் பூவினால் செய்யப்பட்ட தாரை அணிந்த மார்பன் என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த உருள்பூந்தார் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்று சொல்கிறார். அந்த குளிர்ச்சி எங்கிருந்து வந்ததென்றால் அந்தப் பூ பூத்த கடம்ப மரத்திலிருந்து வந்தது. அந்த மரம் ஏன் குளிர்ச்சியாய் இருந்தது? அடர்ந்து வளர்ந்த கடம்ப வனத்துள் அந்த மரம் இருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்தால் தான் என்ன? அடர்ந்து வளர்ந்திருந்ததனால் பகலவனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாமல் எந்த நேரமும் இதமான குளிர் அங்கே நிறைந்திருந்தது. பகலவன் கதிர்கள் மட்டும் நுழைய முடியாவிட்டால் குளிர்ச்சி அமைந்துவிடுமா? இல்லை தான். கடலில் இருந்து நீரை முகந்து கொண்டு வந்த சூல் கொண்ட மேகங்கள் முதன் முதலில் இந்த கடம்பங்காட்டில் தான் மழை பொழிந்தன. அதில் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது. ஓகோ. அப்படி என்றால் இந்த மலர் மார்பனின் திருமார்பில் வீற்றிருப்பது கடலின் குளிர்ச்சியா? சரி தான்.
இப்படித் தான் கடம்பந்தாரைப் பற்றி பாடியிருக்கிறார் நக்கீரர்.
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்
மேகங்கள் நீரை முகந்து கொள்வதால் கடலுக்கு கார் கோள் என்ற பெயர் வந்தது. அந்தக் கார்கோளிலிருந்து நீரினை முகந்து எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சூலை/கருவைக் கொண்ட பெரும் மேகமானது, பகலவனும் மதியவனும் ஒளி வீசும் வானத்தில் நின்று சிறு சிறு துளிகளாகச் சிதறி, முதல் மழையைப் பொழிந்ததால் தழைத்து வளர்ந்த குளிர்ந்த மணம் வீசும் காட்டில் இருள்படும் படி நெருங்கி வளர்ந்த காட்டு மரத்தின் உருள் பூவினால் ஆன குளிர்ச்சியான மாலை புரளும் மார்பினன் திருமுருகன்.

கற்பின் வாணுதல் என்று முன்பு தெய்வயானையம்மையைக் குறிப்பாகக் கூறினார். உருள்பூ என்று இங்கே கடம்பத்தைக் குறிப்பாகக் கூறினார். கடவுளருக்குரிய வேறெந்த பூவும் உருண்டு இருப்பதில்லை; கடம்பம் மட்டுமே அவ்வுருவம் கொண்டது என்பதை கடம்ப மலரினைப் பார்த்தவர் அறிவர். அதனால் உருள்பூ என்றே குறிப்பாகக் கூறுவது போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் கற்பின் வாணுதல் என்ற உடன் தெய்வயானையம்மை என்ற புரிதல் இருந்தது போல் உருள் பூ என்றவுடன் கடம்பம்பூ என்ற புரிதலும் இருந்தது போலும்.
வாணுதல் என்று முன்னர் சொன்னதை 'வாள் + நுதல்' என்று பிரித்து ஒளி பொருந்திய நெற்றியினைப் பெற்ற பெண் என்று பொருள் சொல்வார்கள். அப்படியே நானும் சொல்லியிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் வாள் நுதல் என்பதற்கு வாளினைப் போல் கூர்மையான நெற்றி என்று முன்பொரு முறை பொருள் சொல்லியிருந்தார். இங்கே மீண்டும் 'வாள் போழ் விசும்பு' என்று வருகிறது. இதற்கு எல்லா உரையாசிரியர்களும் ஒளி வீசும் வானம் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனையே நானும் கொண்டேன்.
கடும்கோடையில் முதல் மழை பெய்தால் எவ்விதமான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் இந்தக் கடம்பங்காட்டில் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த முதல் மழையையே இங்கே தலைப்பெயல் என்றார்.
உருள் பூவினால் செய்ததால் தான் போலும் இவன் திருமார்பில் அந்த பூந்தார் ஓரிடத்தில் நிற்காமல் புரண்டு கொண்டே இருக்கின்றது. :-)
Tuesday, September 09, 2008
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்...
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
சுருக்கமாக முதல் மூன்று அடிகளின் பொருளானது: உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும்படி உலகத்தை வலம் வரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல், எத்திசையில் நோக்கினும் விளக்கமாகத் தோன்றும் குறைவற்ற ஒளி கூடிய (திருமுருகன்).
இனி அடுத்த மூன்று அடிகளின் பொருளைப் பார்ப்போம்.
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும் படி தோன்றினாலும் அவனை அடைந்தவர்கள் அவனை வெறுத்தவர்கள் என்று இருவகையான உயிர்கள் எங்கும் இருக்கின்றனவே. அவனை அடைதல் என்பது அவனது உரிமைப்பொருட்களான உயிர்களையும் உலகத்தையும் நேயத்துடன் நோக்கி அவற்றிற்கு தொண்டு செய்தல். அவனை வெறுத்தலானது அவ்வுயிர்களையும் உலகத்தையும் வெறுத்து அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது.
அவனது உடைமைகளான உயிர்களையும் உலகத்தையும் விரும்புபவர்கள் அவனுக்கு உரியவர்கள். அவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி அவர்களுக்கு நன்மைகள் செய்து தாங்குகிறான் திருமுருகன். அதனால் 'உறுநர்த்தாங்கிய' என்றார் ஆசிரியர்.
அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்களை அழித்து இல்லாமல் செய்வது; அப்படி அழிக்கப்பட்டவர்களைக் கண்டு மனம் திருந்தி செறுநர்களாக இருந்தவர்கள் உறுநர்களாக மாறுவதால் செறுநர்கள் இல்லாமல் செய்வது. சூரனைப் போன்றவர்கள் செறுநர்களுக்கு எடுத்துக்காட்டுகள். அவர்களை அழித்து இல்லாமல் செய்கிறான் கந்தன். அவர்களே மனம் திருந்தி வணங்கும் போது மயிலும் சேவலுமாக அவர்களைத் தன் அணிகளாகக் கொள்கிறான் கடம்பன். இதனையே 'செறுநர்த் தேய்த்த' என்று குறிக்கிறார் ஆசிரியர்.
இவ்விரு செயல்களையும் திருமுருகனே செய்தாலும் அச்செயல்களைச் செய்வதில் முனைப்புடன் இருப்பவை அவனது இரு அங்கங்கள்.
உறுநரைத் தாங்குவது அவனது அழகும் வலிமையும் பொருந்திய திருத்தாள்கள். அழகுடன் இருப்பதால் உறுநர்களைக் கவர்ந்து அடி சேர்க்கிறது. அவர்களின் தீவினைப்பயன்களை நீக்கி அவர்களது அறியாமை இருளையும் நீக்குவதால் வலிமை கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வாறு உறுநரைத் தாங்குவது அவனுடைய அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகள் என்பதால் 'உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்' என்றார் ஆசிரியர்.
உறுநரைத் தாங்குவது அவனது திருவடிகள் என்றால் செறுநரைத் தேய்ப்பதோ தடக்கைகள். இடியைப் போன்றும் மேகத்தைப் போன்றும் விளங்கும் நீண்ட திருக்கைகள் செறுநரைத் தேய்க்கின்றன. முன்பு சொன்னது போல் அத்திருக்கைகள் மறக்கருணை செய்யும் போது இடியைப் போல் விளங்குகின்றன. அறக்கருணை செய்யும் போது அவை மேகங்களைப் போல் அன்பைப் பொழிகின்றன. இவ்வாறு இடியைப் போல் அழித்தும் மேகத்தைப் போல் கருணை செய்தும் செறுநரைத் தேய்ப்பதால் 'செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை' என்றார் ஆசிரியர்.
முதல் நான்கு அடிகளையும் ஒரு தொடராகக் கொண்டு 'உலகம் உவக்கும் படி தோன்றி ஒளி பெற்று விளங்குவது திருமுருகனின் திருவடிகள்' என்றும் பொருள் கொள்வார் உண்டு.
இவ்விதமாக அடியவரைக் காத்தும் வெறுப்பவர்களைக் குறைத்தும் திகழும் திருமுருகனின் இன்னொரு முதன்மையான அடையாளத்தை அடுத்த வரியில் சொல்கிறார் ஆசிரியர். வடமொழியிலும் புருஷசூக்தம் 'உனக்கு மண்மகளும் திருமகளும் மனைவிகள்' என்று மனைவியரை முன்னிட்டே மாதவனை அடையாளம் சொல்லும். இங்கே நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது.
முதல் அடையாளமாக உறுநரைத் தாங்குதலையும் இரண்டாவது அடையாளமாக செறுநரைத் தேய்த்தலையும் சொல்லிய பின் மூன்றாவதாக அவனது மனைவியைப் பற்றி சொல்லி அவனது அடையாளத்தை உறுதி செய்கிறார் ஆசிரியர்.
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
அழகிய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளின் கணவன் என்று மட்டுமே சொன்னால் எந்தப் பெண்ணைச் சொன்னார் என்ற குழப்பம் நேரிடும். திருமுருகனின் மனைவியரான வள்ளியம்மையாகவும் இருக்கலாம் தெய்வயானையம்மையாகவும் இருக்கலாம். அதனால் 'மறு இல் கற்பின்' என்ற அடைமொழியை இங்கே தருகிறார் ஆசிரியர். வள்ளியம்மையை மணந்ததோ களவு மணம் என்ற வகையில் அடங்கும். பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து அவருடன் போராடி வள்ளியம்மையை மணம் புரிந்தான் இக்கிழவன். அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'களவு மணம்' என்ற வகையில் அமையும். இரண்டு பக்கத்துப் பெற்றோரும் உற்றோரும் மகிழ்ந்து மணமுடித்துத் தர தெய்வயானையம்மையை மணந்தான் இத்தேவசேனாபதி. அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'கற்பு மணம்' என்ற வகையில் அமையும்.
அப்படி குற்றம் சொல்ல முடியாத வகையில் கற்பு மணத்தால் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட தெய்வயானையின் கணவன் திருமுருகன் என்பதை 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்றார் ஆசிரியர்.
இனி வரும் இடுகைகளில் தொடர்ந்து திருமுருகாற்றுப்படை நூலைப் பயிலலாம்.
Saturday, April 12, 2008
நல்லதே நினைப்போம்! நல்லதே சொல்வோம்!

ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணியை உள் நாடு.
ஆனைமுகனாம் விநாயகன், ஆறுமுகனாம் திருமுருகன், அம்பிகையாம் அன்னை, பொன்னம்பலவனாம் நடராஜன், ஞானத்தை அருளும் குருநாதர், அறிவை வழங்கும் வாணி இவர்களை உள்ளத்தில் நாடித் துதிப்பாய் (மனமே).

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
நொடிப்பொழுதும் அகன்றிருக்க மாட்டேன் என்று சொல்லி அலர்மேல்மங்கையாம் திருமகள் உறைகின்ற திருமார்பை உடையவனே! நிகரில்லாத புகழை உடையவனே! மேலுலகம், கீழுலகம், நடுவுலகம் என்ற மூன்று உலகங்களையும் உடையவனே! என்னை என்றும் ஆள்பவனே! நிகரில்லாத அமரர்களும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்பித் தொழுகின்ற திருவேங்கடத்தானே! வேறு கதி ஒன்றுமே இல்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழ் தஞ்சமாக வந்து அடைந்து அங்கேயே நிலையாக நிற்கின்றேன்.
Thursday, March 20, 2008
நமச்சிவாயம் என சொல்வோமே!! நாராயணா என சொல்வோமே!! (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)

பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் உத்திர நாட்காட்டுடன் கூடி வரும் இந்த நன்னாளாம் பங்குனி உத்திரத்தைப் பற்றி நிறைய ஏற்கனவே பேசிவிட்டேன். அவற்றை எல்லாம் முன்பு படிக்காதவர்கள் படித்துக் கொள்ளும் படி தொடுப்புகளாகக் கீழே கொடுத்துள்ளேன்.
இந்த நன்னாளில் இந்தப் பாடல்களை எல்லாம் உங்களுடன் சேர்ந்து பாடியும் கேட்டும் மகிழும் பெரும் வாய்ப்புக்கு நன்றிகள்.
நமச்சிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
வெள்ளிப்பனிமலையில் அமர்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
உள்ளத்திலும் இருப்பான் அருள்வடிவில்
(நமச்சிவாயம்) (நாராயணா)
மலைமகள் மகிழ்ந்திட மணம் கொண்டான் - அந்த
மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
அலைமகள் அன்பில் ஆடியவன் - அந்த
அன்னையை மார்பில் சூடியவன்
கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
நிலை தரும் சிவனை நாடுபவன் - நான்
நெடியவன் புகழைப் பாடுபவன்
(நமச்சிவாயம்) (நாராயணா)
ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமோ நாராயணாய நம:
படம்: அகத்தியர்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர். மகாலிங்கம்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன் (?)
இன்னொரு பாடலை முருகனருள் கூட்டுப் பதிவில் எதிர்பாருங்கள்.
***
பங்குனி உத்திரத்திற்காக முன்பு இட்ட இடுகைகள்:
பங்குனி உத்திரத் திருநாள்
பங்குனி உத்திரம் - 1
பங்குனி உத்திரம் - 2
பங்குனி உத்திரம் - 3
Friday, November 09, 2007
உதயசூரியனின் ஒளி எத்திசையும் பரவும்!!!

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி
பகலவன் தோன்றியவுடன் ஒளி வெள்ளம் எல்லாத் திசைகளிலும் தோன்றி விளங்குகிறது. எங்கும் ஒழிவற கண் காணும் தூரம் வரை எங்குமே ஒளி வீசி நிற்பதைப் போல விளங்குகிறது பகலொளி. அந்தப் பகலொளியைப் போலவே காண்போர் கண் செல்லும் அளவிற்கும் (சேண் - சேய்மை - தூரம்) விளங்கி எங்கும் ஒழிவற (ஓவற) விளங்கி நிற்கின்ற ஒளியை உடையவன் திருமுருகன்.
இருள் சூழ்ந்து இருந்த காலத்திலிருந்து சிறிதே நேரத்தில் எங்கும் ஒளி சூழ்ந்த காலம் வந்ததால் கண்களால் அந்த ஒளியை உடனே நோக்க இயலவில்லை. அதனால் பல முறை இமைத்து இமைத்து நோக்குகின்றன அந்தக் கண்கள். அப்படி ஓவற இமைக்கும் படி அமைந்திருக்கிறது எங்கும் வீசும் பெரும் ஒளி (அவரொளி). கட்புலனுக்கு மட்டுமே இந்த உவமையைக் கூறவில்லை ஆசிரியர். கதிரவன் தோன்றும் போது கட்புலன் மட்டுமே இமைக்கின்றது. ஆனால் முருகன் தோன்றும் போது ஒழிவற எல்லா புலன்களுமே தங்கள் தொழில்களை மறந்து இமைத்து இமைத்து திருமுருகனின் திருமேனி ஒளியையே எல்லாத் திசைகளிலும் நோக்குகின்றன.
சங்கப் புலவர்களின் அணி நயத்தைப் பற்றி ஒரு கருத்து உண்டு. முடிந்த வரை இயல்பாக நடப்பதை உவமையாகக் கூறுவதை அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்றும் உயர்வுநவிற்சி அணியை சுவை கூட்டல் பொருட்டு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. பிற்கால இலக்கியங்களில் இறைவனைப் போற்றும் போது பல நூறு, பல்லாயிரம், பல கோடி சூரியன்கள் எழுந்தாற்போன்ற ஒளியுடையவன் இறைவன் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இன்றி ஒரு சூரியன் உதித்தால் எப்படி இருக்குமோ அப்படி உதித்தான் முருகன் என்று இயல்பாக உள்ளதை உவமையாக இங்கே கூறுகிறார் நக்கீரனார். அப்படி உயர்வு நவிற்சி இன்றிக் கூறும் இடத்தும் பல அழகிய பொருட்களை ஒவ்வொரு சொல்லிலும் சொல்லி அழகு பெற திருமுருகன் தோற்றத்தை வருணித்திருக்கிறார். மூன்றே வரிகளில் எவ்வளவு ஆழ்ந்த பொருள்?
***
இந்த வரிக்கு நண்பர் இரத்னேஷ் இன்னொரு முறையில் பொருள் கூறினார். ஓவற என்றதும் சேண் விளங்கு என்றதும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் எப்போதும் தன்முனைப்பு நீங்கிய உயிர்களின் திருவுள்ளத்தில் விளங்குவதையும் அவர்களாலும் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு தூரத்தில் விளங்குவதையும் காட்டுகிறது என்றார். இந்த விளக்கம் அருமையாக இருந்தாலும் 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள் - பத்தியுடைய அடியவர்களுக்கு எளியவன்; மற்றவர்களுக்கு அரியவன்' என்று வேறோரிடத்தில் படித்திருப்பதால் இந்த விளக்கம் என் மனத்திற்குவந்த முதல் விளக்கமாக இல்லை. ஆயினும் இந்த அடியைப் படிக்கும் இடத்தே அந்த விளக்கத்தையும் தருவது பொருத்தமுடையது என்பதால் அவர் எழுதிய விளக்கத்தை அப்படியே எடுத்து இங்கே இடுகிறேன்.
***
முதல் இரண்டு அடியுடன் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? மூன்று அடிகள் சேர்ந்த கூட்டுப் பொருள் அல்லவா சூரிய - முருக ஒப்புமை?
"ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி"
என்கிற மூன்றாவது வரியையும் சேர்ந்துப் பாருங்கள் (ஓ என்றால் தங்குதல்; அற என்றால் ஆணவம் அறுத்த மனங்களில் என்கிற பொருள். அம்மாடியோ)
"உயிர்கள் மகிழும்படி மேருமலையை வலமாக எழுந்து திரிகின்ற, பலசமயத்தவரும் புகழ்கின்ற சூரியன் கிழக்குக் கடலில் தோன்றக் கண்டாற் போல், ஆணவம் அகன்ற அடியார்களின் உள்ளத்தில் விளங்குவதும் அவர்தம் கருத்துக்குத் தொலைவில் நின்று விளங்குவதும் ஆகிய இயற்கை ஒளியானவன்" என்று முருகனை நக்கீரர் விவரிக்கும் அழகை என்னென்பது!
மூன்று வரிகளுக்குள் எவ்வளவு விஷயங்கள்!
1. சூரியன் இருள் போக்குவது போல், முருகன் அறியாமை இருள் போக்குபவன்
2 எல்லாம் அவன் செயல் எனும்படி முனைப்படங்கிய உயிர்களில் சென்று தங்குபவன்
3. அவர்களின் உள்ளத்தில் தங்கினாலும் அவர்களின் கருத்துக்குப் பிடிபடாமல் வெகு தொலைவில் இருப்பவன்
கூடுதலான ஒரு பார்வை: ஒளிர்தல் என்கிற பொருளுக்கு இமைத்தல் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று. என்ன உவமானம்!
Thursday, October 25, 2007
உதயசூரியன் முருகனே!!!

கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக் கடற்கரையில் ஒரு முறை நான் கண்டிருக்கிறேன். கரு நிறக் கடலின் நடுவில் மெதுவாக சிவந்த பந்து தோன்றுவதும் அது மெல்ல மெல்ல மேல் எழுவதும் அதே நேரத்தில் மெதுவாக கடலின் நிறம் நீலமாக மாறுவதும் பகலவன் முழுவதும் தோன்றி ஆனால் இன்னும் கடலை நுனி தொட்டுக் கொண்டு இருக்கும் போது அலைகளில் தெரியும் நீண்ட சிவப்புக் கோடும் ஆகா நேரே கண்டால் தான் அதன் அழகு தெரியும்; புரியும்.
உலகத்தவர் யாராயினும் இந்தக் காட்சியைக் கண்டால் மனம் உவப்பர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்தக் காலத்தில் மட்டும் இன்றி எந்தக் காலத்திலும் அப்படித் தான். இல்லையா? திருமுருகாற்றுப்படை எழுதிய காலத்தும் அப்படித் தான் இருந்திருக்கும். அதனால் தான் முருகனைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் சிவந்த சூரியன் கடலில் எழுவதும் அதனைக் கண்டு உலகோர் மகிழ்வதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்குத் தோன்றியிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இந்த அருமையான காட்சியை கண் முன்னே நிறுத்துகிறார் நக்கீரனார்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு...
உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் தோன்றி (வலிவுடன் தோன்றி) உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல...
இது தான் நக்கீரனாருக்கு முதலில் தோன்றிய உவமை. எத்தனை அழகான உவமை பாருங்கள்.

பிற்கால வழக்கின் படி நீல நிற மயிலின் மேல் சேயோன் முருகன் அமர்ந்து வருவது நீலத்திரைக்கடலின் மேல் செங்கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
அகரத்திலும் உகரத்திலும் கவிதையை, காப்பியத்தைத் தொடங்குவது மரபு. 'அகர முதல' என்று தொடங்கினார் பொய்யாமொழிப் புலவர். 'உயர்வற உயர் நலம்' என்று திருவாய்மொழியைத் தொடங்கினார் நம்மாழ்வார் மாறன் சடகோபன். 'உலகெலாம்' என்று திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தை தொடங்கினார் சேக்கிழார் பெருமான். 'உலகம் யாவையும்' என்று இராமாவதாரமெனும் கம்பராமாயணத்தைத் தொடங்கினார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். இந்த மரபு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக திருமுருகாற்றுப்படையும் 'உலகம்' என்று தொடங்குகிறது.

வலன் என்பதற்கு வலம் என்றும் வலிமை என்றும் இரண்டு பொருள் சொல்லப்படுகிறது. வலம் என்று கொண்டால் கதிரவன் உலகத்தை வலம் வருகிறான் என்ற கருத்து தோன்றுகிறது. உலகம் கதிரவனை வலம் வருகிறது என்பதை நாம் இப்போது அறிவோம். அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். அதனைச் சொல்கிறார் போலும். கதிரவன் உலகை மட்டுமில்லை மேரு மலையை/இமய மலையை/கயிலை மலையை வலம் வருகிறான் என்றதொரு கருத்தும் பழங்காலத்தில் இருந்தது. அதனையும் சொல்கிறார் போலும்.
வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது என்னலாம். செயல் திறனிலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன். உருவத்திலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன்.
அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இருப்பான். அந்தக் குளிர்ச்சியும் இங்கே முருகனுக்கு உவமை ஆகின்றது போலும்.
பலர் புகழ் ஞாயிறு என்று சொல்லும் போது 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் தொடங்குவது நினைவிற்கு வருகிறது. சங்க காலத்தில் ஞாயிறு பலர் போற்றும் வகையில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இந்த இரு இலக்கியங்களின் மூலமும் அறியலாம்.
இன்னொரு அழகும் இந்த இரு அடிகளில் காணலாம். சிறிதே தமிழ்ப்பயிற்சி கொண்டவரும் எந்த வித உரை உதவியும் இன்றி விளங்கிக் கொள்ளும் படி இந்த இரண்டு அடிகளும் இருக்கின்றன. உலகம், உவப்ப, வலன், திரிதரு, பலர், புகழ், ஞாயிறு, கடல், கண்டு என்று ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அமைந்திருக்கின்றன பாருங்கள். உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று தான் பாடத் தோன்றுகிறது.
Saturday, October 20, 2007
திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊருக்குச் செல்லும் வழியை இன்னொரு புலவருக்குச் சொல்லுதல் ஆற்றுப்படை எனப்படும். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற நக்கீரர் என்னும் தெய்வப்புலவர் திருமுருகனின் பெருமைகளைக் கூறி அவனின் ஊர்களான ஆறு வீடுகளைப் பற்றிப் பாடி மற்றவருக்குச் சொல்வது திருமுருகாற்றுப்படை. இந்த சங்க கால நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் திருவேரகம் சுவாமிமலை என்றும் குன்றுதோறாடல் 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று சொல்வது போல் இவ்வைந்தும் போக இருக்கும் எல்லா முருகன் திருக்கோவில்களையும் குறிக்கும் என்றும் சொல்லுவார்கள்.
முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும் இந்தத் திருமுருகாற்றுப்படையில் முப்பெரும் தெய்வங்களாக மூவர் போற்றப்படுகின்றனர்.
...வால் எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள் கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவராக
...
ஒளிவீசும் நெற்றியுடன் தீயென மூச்சினை விடும் அஞ்சும் படி வரும் மிகுந்த வலிமை கொண்ட பாம்புகளும் அஞ்சும் படி அவற்றைத் தாக்கும் பல வரிகளுடன் கூடிய நீண்ட வலிய சிறகுகளைக் கொண்ட பறவையைக் (கருடனைக்) கொடியில் கொண்ட செல்வனும் (திருமாலும்), வெண்மையான எருதின் மேல் எல்லோரும் போற்றும் உமையம்மையோடு அமர்ந்து விளங்கும் இமைக்காத மூன்று கண்களையுடைய மூன்று கோட்டைகளை கொளுத்திய சினம் மிகுந்த செல்வனும் (சிவபெருமானும்), மலை போன்ற உடலையும் அழகான நடையும் நீண்ட தும்பிக்கையும் கொண்ட யானையின் மேல் அமர்ந்திருக்கும் பெருமையும் புகழும் உடைய செல்வனும் (திருமுருகனும்)...
நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகின்றனர் என்ற குறிப்பைக் கண்டு இணையத்தில் திருமுருகாற்றுப்படை நூலைப் பார்த்தேன். நான் தேடிய வரையில் பலராமனைப் பற்றிய பாடல் அடிகள் கிடைக்கவில்லை. சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள என்னால் இயலாததால் பலராமனைக் குறிக்கும் பாடல் அடிகள் என் கண்ணிற்குத் தென்படாமல் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
உசாத்துணை: மதுரைத் திட்டத்தினரின் திருமுருகாற்றுப்படை பக்கம்
Sunday, July 29, 2007
கடம்பம் 6: கடுஞ்சின விறல் வேள் - முருகனா சேரனா?

பதிற்றுப்பத்தில் கடம்பினைக் கூறும் பாடல்களை எடுத்து இதற்கு முந்தைய கடம்பம் இடுகையில் சொல்லியிருந்தேன். அப்போது பாடல்களின் பொருள் முழுவதும் தெரியாததால் பொருள் சொல்லாமல் விடுத்திருந்தேன். அந்த இடுகையை இட்ட பின் நல்வினைப்பயனால் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகத்தில் உரையுடன் கூடிய பதிற்றுப்பத்தினைக் கண்டேன். இங்கே கடம்பினைக்கூறும் பாடல்களில் முதல் பாடலைப் பொருளுடன் வழங்குகிறேன்.
இரண்டாம் பத்து:
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே
வரை மருள் புணர் - மலையைப் போல் தோன்றும் அலைகளையும்
வான் பிசிர் உடைய - வானத்தைத் தொடும் நீர்த்துளிகளையும் உடைய
வளி பாய்ந்து அட்ட - அவ்வப்போது காற்று பாய்ந்து நீரைக் குறைக்க
துளங்கு இருங் கமஞ் சூல் - விளங்குகின்ற மிகுந்த நீரைத் தன் வயிற்றினில் உடைய
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி - மிகுந்த பரப்பினையுடைய பெருங்கடலை அடைந்து
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் - துன்பம் செய்யும் அரக்கர்கள் இரவு பகல் பாதுகாப்பாகக் காக்கும்
சூருடை முழுமுதல் தடிந்த - சூரனுடைய வீரத்தின் உருவான மாமரத்தை அறுத்த
பேர் இசை - பெரும் புகழையுடைய
கடுஞ் சின விறல் வேள் - கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான்
களிறு ஊர்ந்தாங்கு - தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல
செவ்வாய் எஃகம் - சிவந்த முகத்தை உடைய உன் வேல்
விலங்குநர் அறுப்ப - எதிர்ப்பவரை அறுக்க
அருநிறம் திறந்த - அவர்களின் வலிமை வாய்ந்த மார்பினைப் பிளந்த
புண் உமிழ் குருதியின் - புண்ணிலிருந்து பெருகும் குருதியால்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து - நீல மணி போல் நிறத்தை உடைய பெரும்பள்ளமாகிய கடல் நீர் தன் நிறம் மாறி
மனாலக் கலவை போல - குங்குமக் கலவை போல் ஆக
அரண் கொன்று - எதிரிகளின் பாதுகாவலை அழித்து
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை - வீரம் மிகுகின்ற சிறப்பில் உயர்ந்த ஊக்கம் உடையவனே!
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் - எதிரி வீரர்கள் பலர் சுற்றி நின்று பாதுகாத்த பெரிய கடம்ப மரமெனும்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பாதுகாவல் உடைய காவல் மரத்தை அழியும் படி உன் வீரர்களை ஏவி
வென்று - மரத்தை அழித்து
எறி முழங்கு பணை செய்த - அந்த மரத்தினைக் கொண்டு முழங்குகின்ற முரசினைச் செய்த
வெல் போர் - போரினை வெல்லுகின்ற
நார் அரி நறவின் - பல ஆடைகளால் வடித்து எடுக்கப் பட்ட கள்ளினைப் பெரிதும் உடைய
ஆர மார்பின் - சந்தன மாலைகள் அணிந்த மார்பினை உடைய
போர் அடு தானைச் சேரலாத! - போரினில் வரும் எதிரிகளை வெல்லும் படையினை உடைய சேரலாதனே!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும் - மார்பில் அணிந்திருக்கும் மாலைகள் கூட்டம் ஓடும் தேனுடன் விளங்கும்.
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் - வலிமையில் உயர்ந்த, மலைகளைப் பழிக்கும் பெரிய யானைகளின்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த - பல அணிகலன்கள் அணிந்த முதுகின் மேல் கொண்டு பொலிந்த
நின் - உன்னுடைய
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே - பலரும் புகழும் செல்வங்களை இனிமையுடன் கண்டோமே!
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி - அழகிய மரத்தின் நிழலில் உறங்கும் கவரி மான்
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் - பரந்து விளங்கும் அருவியையும் தேனையும் கனவில் காணும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - ஆரியராகிய முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரிய புகழையுடைய இமயம் முதல்
தென் அம் குமரியொடு - தென்னாட்டின் அழகாகிய குமரி வரை
ஆயிடை - இடையில் உள்ள எல்லா இடங்களிலும்
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே - மன்னர்களில் உயர்வாகக் கூறப்படுபவர்கள் எல்லோரிலும் பெருமை வாய்ந்தவனே!
***
'சூருடை முழுமுதல் தடிந்த' என்று கூறுகிறார் புலவர். மாமரம் என்று நேரடியாகக் கூறவில்லை. முழுமுதல் என்பதற்கு செல்வம், வீரம், உயிர் என்று பல பொருள் கூறலாம். ஆனால் பின்னால் இன்னொரு முறை முழுமுதல் என்று இந்தப் பாடலில் சொல்லும் போது அது 'காவல் மரம்' என்ற பொருளைத் தருகின்றது. அதனால் உரையாசிரியர்கள் இந்த இடத்திலும் 'மரம்' என்று பொருள் கொண்டு மாமரம் என்றனர் போலும். சூரனுடைய செல்வத்தை, வீரத்தை, உயிரை என்று எந்தப் பொருளைக் கூறினாலும் இந்த இடத்தில் பொருந்தும்.
சூரனை வதைக்கும் முன் யானை வாகனம் கொண்ட விறல் வேள் முருகவேள் சூரனை வதைத்தப் பின் மயில் வாகனம் கொண்டான் என்பது புராணம். அதற்கேற்ப இங்கே 'களிறு ஊர்ந்தாங்கு' என்றாரோ புலவர்? (வதைத்தார் என்றது பேச்சு வழக்கிற்காக. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து அவனை மயிலும் சேவலுமாக ஏற்றுக் கொண்டார் என்பது புராணம்)
சங்ககாலத்தில் ஒவ்வொரு அரசனும் குறுநில மன்னனும் ஒரு மரத்தைப் புனிதமாகக் கொண்டு அதற்கு பலத்த காவல் இட்டுக் காத்து வந்தனர். அந்த மரத்திற்குக் காவல் மரம் என்று பெயர். ஒருவர் மேல் இன்னொருவர் படையெடுத்துப் போகும் போது அந்தக் காவல் மரத்தை அழித்து விட்டால் காவல் மரத்திற்கு உரியவர் தோற்றதாகக் கொண்டனர். அப்படி வெட்டப்பட்டக் காவல் மரத்தைக் கொண்டு முரசினை உருவாக்கி அதனை முழக்குதலும் வழக்கமாக இருந்திருக்கிறது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பகையரசரில் ஒருவன் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்திருக்கிறான். அந்த கடம்ப மரத்தை அழித்து அதனிலிருந்து முரசு உருவாக்கி முழங்கிய செயலை இங்கே புலவர் பாடுகிறார்.
சங்க கால அரசர்கள் புலவர்களுக்கு மதுவினை மிகுதியாகக் கொடுத்து தாமும் உண்டனர் என்ற செய்தியை 'நார் அரி நறவின்' என்ற தொடர் மூலமாகக் குறிக்கிறார் புலவர். நறவு என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. இங்கே நார் அரி - நாரினால் அரிந்த - நார் ஆடையினால் வடித்தெடுக்கப்பட்ட என்றதால் கள் போன்ற ஒரு வகை மதுவைக் குறிக்கிறது.
ஆரியர் என்பதற்கு முனிவர் என்று பொருள் தருகிறார்கள் உரையாசிரியர்கள். ஆரியர் என்பதற்கு ஆசிரியர் என்ற பொருளும் உரையாசிரியர்கள் காலத்தில் இருந்தது என்பதை அறிவேன். ஆனால் சங்க காலத்தில் இந்த 'ஆரியர்' என்ற சொல்லுக்கு நாம் இப்போது பொருள் கொள்ளும் 'ஆரிய இனத்தவர்' என்ற பொருளா இல்லை 'ஆசிரியர்' என்ற பொருளா எந்த பொருள் இருந்தது என்பதை அறியேன். இரண்டு பொருளும் இங்கே பொருந்தும். ஆரிய இனத்தவர் நெருக்கமாக நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்; இன்றைக்கும் முனிவர்கள் நிறைந்திருக்கும் இடமாதலின் முனிவர் நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இமயவரம்பன் என்ற பெயருக்கேற்ப 'இமயம் முதல் குமரி வரை' என்கிறார் புலவர்.
Friday, July 20, 2007
கடம்பம் 5 : பதிற்றுப்பத்தில் கடம்பம்
சங்க காலப் பாடல்களையும் சங்கம் மருவிய காலப் பாடல்களையும் உரையின் துணையின்றிப் புரிந்து கொள்வது கடினம். புரிந்து கொள்ள முயன்றேன். தவறான பொருள் சொல்லும் வாய்ப்பு நிறைய இருப்பதால் பாடல்களின் பொருளைச் சொல்லாமல் 'கடம்பு' தோன்றும் பாடல்களை அப்படியே இங்கே தருகிறேன். நம் நல்வினைப்பயனால் உரை கிட்டி நாம் இந்தப் பாடல்களின் பொருளினைப் புரிந்து கொள்ள வழி ஏற்படட்டும்.
இரண்டாம் பத்து:
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே
வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இனை நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேட்டொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி
வாடாப் பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஒப்பும்
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை
மை ஊன் பெய்த வெண்னெல் வெண்சோறு
நமை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே!
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல் என
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின்
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடுங் கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே!
நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ
விரிஉளை மாவும் களிறும் தேரும்
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி
கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிலை ஞாயில்
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்
வயிறு பசி கூர ஈயலன்
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே!
Saturday, July 07, 2007
கடம்பம் - 2
(கந்தர் அலங்காரம் - 38ம் பாடல்)
நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

குமரேசரின் இரு திருவடிகளும் அவற்றில் அணிந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், பன்னிரு தோள்களும் அவற்றில் அணிந்த கடம்பமாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிவிட்டால் - நல்ல நாள் கெட்ட நாள் தான் என்னை என்ன செய்யும்? நான் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் தான் என்னை என்ன செய்யும்? வினைப்பயன்களை அளிக்க எனை நாடி வந்த ஒன்பது கோள்களும் என்ன செய்யும்? என் உயிரை எடுக்க வரும் கொடிய கூற்றும் என்ன செய்யும்? அவன் அருளால் இவற்றை எல்லாம் வெல்லுவேன்.
முருகனின் திருவுருவத்தில் எவை எவை எடுப்பாகத் தெரியுமோ அவற்றை எல்லாம் பாடிக் கொண்டு வரும் போது கடம்பையும் பாடுகிறார்.
***

அடுத்தப் பாடலும் நன்கு அறியப்பட்டப் பாடல்.
(கந்தர் அலங்காரம் 40ம் பாடல்)
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.
திருச்செந்தூர் அருகில் இருக்கும் வயல்களில் நீர்வளம் மிகுந்து இருப்பதால் வயல்களில் நிறைய மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த மீன்கள் துள்ளித் துள்ளி விளையாடுவதால் செந்தூர் வயற்பொழில்கள் சேறாகிவிட்டன.
முருகனின் தோளில் இருக்கும் தேனைச் சொரியும் கடம்ப மாலையின் மயக்கத்தில் (அவன் தோளைத் தழுவி அந்த மாலைகளின் மணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்) பூங்கொடியார் மனம் துவண்டது.
மாமயில் ஊர்தியைக் கொண்டவன் வேலால் கடலும் கடல் நடுவே மாமரமாய் நின்ற சூரனும் கிரௌஞ்ச மலையும் அழிந்தார்கள்.
அவனுடைய திருவடிகள் பட்டதால் என் தலை மேல் பிரமன் எழுதிய தலையெழுத்து அழிந்தது.
***

அடுத்தப் பாடல் நம் இராகவனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்.
(கந்தர் அலங்காரம் - 62ம் பாடல்)
ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.
ஆலமுண்ட சிவபெருமானுக்கு அணிகலம் வெண் தலை மாலை. உலகங்களை எல்லாம் உண்ட திருமாலுக்கு அணிகலம் குளிர்ந்த துளசி. மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலம் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம் அந்த வேல் அழித்த கடலும் சூரனும் கிரௌஞ்ச மலையுமே.
***

இந்தப் பாடல் எனக்கும் மிகப் பிடித்தப் பாடல்
(கந்தர் அலங்காரம் - 72ம் பாடல்)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
சிவந்தவனை, கந்தனை, திருச்செங்கோட்டு மலையை உடையவனை, சிவந்த சுடர் வேல் உடைய மன்னனை, செந்தமிழ் நூல் பல செய்தானை, புகழ் விளங்கும் வள்ளியின் மணவாளனை, கந்தனை, கடம்பமாலை அணிந்தவனை, கரிய மயிலை வாகனமாக உடையவனை, சாகும் வரையில் மறவாதவர்களுக்கு ஒரு தாழ்வும் இல்லையே.
1. திருமுருகன்
Saturday, March 31, 2007
பங்குனி உத்திரத் திருநாள்
கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.
வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!
என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!
என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே
என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே
வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.
வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.
(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***
கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்
***
மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.
(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)
***
துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.
விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.
'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.
துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.
உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.
இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.

அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.
***
மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.
***
சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.
***

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.
***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.
***
இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:
1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்
வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.
Monday, April 10, 2006
168: பங்குனி உத்திரம் - 3
என்ன திடீரென்று இந்தப் பாடலைப் பாடுகிறேன் என்று கேட்கிறீர்களா? இன்று யாருக்குப் பிறந்த நாள் என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். மெதுவாக முழுமையாக இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். :-)
***

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் தான் இந்தப் பதிவைத் தொடராக எழுதினேன். எனக்கு உடனே நினைவுக்கு வந்த விஷயங்களை இந்த மூன்று பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன். இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.
***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.
***
இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:
1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்
வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.
Sunday, April 09, 2006
167: பங்குனி உத்திரம் - 2
***
துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.
விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.
'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.
துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.
உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.
இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.

அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.
***
மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.
***
சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.
***
Monday, January 23, 2006
124: *நட்சத்திரம்* - முருகனருள் முன்னிற்கும்
கோவிலில் நுழையும் போதே அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு சின்ன வயதில் நானும் என் தம்பியும் அடிக்கடி இங்கு வந்தது நினைவுக்கு வந்தது . வீட்டுப் பக்கத்தில் பஸ்ஸைப் பிடித்தால் ஒரு அரை மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்துவிடலாம் . ஆனால் இப்போதெல்லாம் வாடகை ஊர்தி கிடைப்பதால்
குடும்பத்தோடு திருப்பரங்குன்றம் வருவதற்கு அது தான் வசதியாக இருக்கிறது.
நானும் என் மனைவியும் அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கணவனும் மனைவியுமாக அமெரிக்காவை வலம் வந்துக் கொண்டிருக்கிறோம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்று பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் இரண்டாவது தடவை பார்த்து வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கிறது. வருடா வருடம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியாவுக்கு வந்து செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளும். அதனால் தவறாமல் ஒவ்வொரு வருடமும் தாய்த் திருநாட்டைப் பார்ப்பதற்கு வந்துவிடுவதுண்டு . விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம் திருப்பரங்குன்றம் தவறாமல் வந்துவிடுவதுண்டு . எங்கள் குல தெய்வம் திருப்பரங்குன்றம் முருகன். எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் முடியிறக்குவது இங்கு தான்.
கோவிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் திரும்பி கருப்பண்ணசாமியை வணங்கினோம் . அவருக்குத் தான் இங்கு முதல் மரியாதை. அவர் இருக்கும் தேர் போன்ற மண்டபம் எனக்கு மிகவும் பிடித்த இடம். தெய்வயானைத் திருமணக் காட்சியைக் காண வந்த மணமகனின் அப்பா அம்மா அண்ணன் மாமா மாமி எல்லாரும் அந்த மண்டபத் தூண்களில் அழகாக நின்றிருப்பார்கள். அதிலும் அண்ணன் தன் தம்பி கல்யாண கோலாகலத்தில் மகிழ்ந்து தன் தொந்தி குலுங்க நடனம் ஆடிக்கொண்டிருக்கும் காட்சி மனதைக் கொள்ளைக்கொள்ளும். எத்தனைத் தடவை பார்த்தாலும் சலிக்காத ஆராவமுதானத் தோற்றம்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லுவது போல் குமரக்கடவுள் குன்றின் மேலும் அடிவாரத்திலும் தான் பெரும்பாலும் கோவில் கொண்டுள்ளான். இந்தக் கோவில் மலை மேல் இல்லாவிட்டாலும் மலையைக் குடைந்து கட்டியிருப்பதால் ஐயனைக் காண சில படிகள் ஏறிச் செல்லவேண்டும் . கோவிலை அடுக்கடுக்காகக் கட்டியிருக்கிறார்கள் . ஒவ்வொரு அடுக்கிலும் பல அழகிய தெய்வ உருவங்கள். எல்லா தெய்வ உருவங்களையும் வணங்கிவிட்டு அவன் திருமுன் நிற்கிறோம் .
அந்தக் காலத்தில் இருந்ததை விட அதிக கூட்டம் இப்போது. எல்லாரும் சொல்வது போல மக்களுக்கு இறை நம்பிக்கை முன்பைவிட அதிகமாய் விட்டது தான் போலும். அம்மாவுடன் வரும்போதெல்லாம் இருக்கும் சிறிய கூட்டத்துடன் முண்டி மோதி வந்து தான் கந்தனைப் பார்ப்பது வழக்கம் . சுவாமியின் நேரெதிரே சுவற்றில் ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அந்த ஜன்னலில் ஏறி நின்று கொண்டால் முருகனை எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அம்மா என்னையும் தம்பியையும் அந்த ஜன்னலில் ஏற்றிவிட்டுவிடுவார்கள். இப்போது அந்த ஜன்னலில் ஒரு கம்பி தடுப்பு போட்டிருந்தார்கள்.
இல்லாவிட்டாலும் என்ன? அந்தக் காலம் போல் கூட்டத்தில் முண்டி மோதி இறைவனைப் பார்க்கும் பொறுமை இருக்கிறதா? சிறப்பு தரிசன அனுமதி சீட்டு வாங்கிக்கொண்டு நேராகக் குடும்பத்துடன் தெய்வயானை மணாளன் திருமுன்பு சென்று நின்றுவிட்டோம்.
சின்ன வயதில் முருகன் திருமுகத்தைப் பார்த்தது மட்டும் நினைவில் இருக்கிறது. அவன் பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள், சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் இந்த முறை அதெல்லாம் கண்ணில் தென்பட்டது. மற்ற இடங்களைப் போல் நிற்காமல் இங்கே கார்த்திகேயன் ஒருகாலைத் தொங்கவிட்டுக்கொண்டும் மறு காலை மடக்கி வைத்துக்கொண்டும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறான். திருமணக்கோலத்தில் இருப்பதால் கையில் ஒரு மலர்ச்செண்டு வைத்திருக்கிறான் . ஒரு பக்கத்தில் மணமகள் தெய்வயானையும் மலர்செண்டுடன் அமர்ந்திருக்கிறாள் . இன்னொரு பக்கம் அமர்ந்திருப்பது யார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. சிலர் அது தெய்வயானையின் தந்தையான் இந்திரன் என்கிறார்கள். சிலர் வீணையை வைத்திருப்பதால் அது நாரதர் என்கிறார்கள்.
திருமணக் கோலத்தில் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பதால் முருகன் திருமுடியின் மேல் ஒரு வெண்கொற்றக் குடை இருக்கிறது. இரு பக்கமும் வானத்தில் சூரிய சந்திரர்கள் இருக்கிறார்கள் . இடப்பாதத்தில் தொடங்கி வலத்தோள் வரை முருகனின் வெற்றிவேலை சாத்திவைத்திருக்கிறார்கள்.
இங்கு வரும் பக்தர்கள் பல பேர் பாலாபிஷேகத்திற்கு பால் கொண்டு வருவார்கள். அம்மாவும் ஒவ்வொரு தடவையும் அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வந்தார்கள். அந்தப் பாலை முருகனுக்கு அபிஷேகம் செய்ய மாட்டார்கள். முருகன் கையில் சாத்தி வைத்திருக்கும் இந்த வேலுக்குத் தான் பாலாபிஷேகம் நடக்கும் . அந்த அபிஷேகப் பாலை அருந்துவதில் எனக்குக் கொள்ளை இஷ்டம். அபிஷேகத்திற்குப் பின் அந்தப் பால் அதிக இனிப்புடன் இருப்பதாய்த் தோன்றும். அந்த அபிஷேகப் பால் குடித்தால் நல்ல பேச்சுத் திறமையும் கூர்மையான அறிவும் கிடைக்கும் என்று அம்மா நிறைய தடவை சொல்லியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் அலுவலகத்தில் ஏதாவது சொல்லவேண்டிய நேரத்தில் சொல்ல முடியாமல் முழிப்பதைப் பார்த்தால் தேவையான அளவு அபிஷேகப் பாலைக் குடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அம்மா இருந்திருந்தால் கேட்டிருக்கலாம்.
இந்த ஆராய்ச்சியை எல்லாம் மனம் செய்து கொண்டு இருக்கும் போதே அர்ச்சகர் எங்களிடம் இருந்த அர்ச்சனைத் தட்டை வாங்கி எங்கள் பெயர் நட்சத்திரம் எல்லாம் கேட்டு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார். கற்பூர ஆரத்தி காட்டும் போது திடீரென்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. 'முருகா. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உன் பெயர் வைக்கிறோம்'. எனக்கே அந்த எண்ணம் மிக்க ஆச்சரியமாய் இருந்தது . இதுவரை குழந்தையைப் பற்றி நானும் என் மனைவியும் பேச ஆரம்பிக்கவில்லை. இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் கொஞ்ச நாள் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம். உறவினர்கள் கூட யாரும் குழந்தைப் பற்றிக் கேட்டதாய் நினைவில்லை. எப்படி இந்த எண்ணம் திடீரென்று வந்தது. சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது.
யாரிடமும் அந்த எண்ணம் வந்தது என்பதை உடனே சொல்லவில்லை. முதலில் எப்படி அந்த எண்ணம் அந்த நேரத்தில் வந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
**********
2002 நடுவில்:
விடுமுறை முடிந்து அமெரிக்கா வந்த ஒரு ஐந்து மாதத்தில் நல்ல செய்தியைச் சொன்னார் துணைவியார். அப்போது என் முகத்தில் தவழ்ந்த சிரிப்பைக் கண்டு 'ஏன் சிரிக்கிறீங்க?' என்று கேட்டபிறகு திருப்பரங்குன்றத்தில் இறைவன் திருமுன்பு ஓடிய எண்ணத்தைப் பற்றிச் சொன்னேன். 'இந்த வருடம் நமக்குக் குழந்தை பிறக்கப் போவதால் தான் நம் குலதெய்வம் முன்னால் அந்த எண்ணம் வந்திருக்கிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைக்கு முருகன் பெயர் வைக்கவேண்டும்' என்று சொன்னேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்.
குழந்தைக்குப் பெயர் தேடும் படலம் கொஞ்ச நாளில் ஆரம்பித்தது. நம் நாட்டில் குழந்தை பிறந்த பின் அது ஆணா பெண்ணா என்று பார்த்தபின் பெயர் தேடிச் சூடினால் போதும். ஆனால் இங்கோ குழந்தை பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழுக்காகப் பெயரைச் சொல்ல வேண்டும். அதனால் பல பெயர்களைப் பற்றி விவாதித்து ஒரு ஆண் பெயரையும் ஒரு பெண் பெயரையும் முடிவு செய்தோம். ஆண் குழந்தை என்றால் 'ஷ்யாம் கார்த்திக்' என்றும் பெண் குழந்தை என்றால் 'தேஜஸ்வினி' என்றும் பெயர் வைக்க முடிவு செய்தோம். பெண்ணாயிருந்தாலும் நீங்கள் முருகன் முன் நினைத்தது போல் முருகன் பெயரைத் தான் வைக்கவேண்டும் என்று என் துணைவியார் சொல்லிக் கொண்டிருந்தார். நானோ, பெண்ணாயிருந்தால் எப்படி முருகன் பெயரை வைப்பது; சுஜாதா ஒரு முறை தேஜஸ்வினி என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தார்; அந்தக் கதையைப் படித்ததிலிருந்து எனக்குப் பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்று இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
**********
2003 ஆரம்பத்தில்:
பங்குனி உத்திரத் திருநாளில் எங்கள் மகள் பிறந்தாள். இனிமேல் நானும் அவளும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடலாம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நானும் பங்குனி உத்திரத்தில் தான் பிறந்தேன். குழந்தை பெற்ற அசதியில் என் மனைவி அரைத்தூக்கத்தில் இருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தைக்குப் பெயர் முடிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். நானும் ஆமாம் , முடிவு செய்துவிட்டோம், தேஜஸ்வினி என்று ஒவ்வொரு எழுத்தாக பெயரைச் சொன்னேன். குழந்தை பிறந்த பின் பெண் குழந்தையாய் இருந்தாலும் என்னுடன் பேசி முருகன் பெயர் வைத்துவிடலாம் என்று என் மனைவியார் எண்ணியிருந்திருக்கிறார் . ஆனால் அவர் அரைத்தூக்கத்தில் இருந்ததால் நான் தேஜஸ்வினி என்றப் பெயரைச் சொல்லும் போது அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று பின்னர் சொன்னார். நான் பரவாயில்லை; இப்போது பெயர் வைத்துவிட்டோம்; இனிமேல் மாற்றமுடியாது என்று அவரை சமாதானப் படுத்திவிட்டேன்.
**********
2003 முடிவில்:
இதோ குழந்தை பிறந்த எட்டு மாதத்தில் மதுரைக்கு வந்திருக்கிறோம் . குழந்தைக்கு முடியிறக்க குடும்பத்தோடும் உறவினர்களோடும் திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம் . முடியிறக்குவதற்கு முன் அர்ச்சனை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதால் அர்ச்சனை செய்வதற்கு நானும் என் மனைவியும் குழந்தையோடு இறைவன் திருமுன்பு நிற்கிறோம் . ஒரு விதமான குற்ற உணர்வு மனதை பிழிந்துக் கொண்டிருக்கிறது. முருகன் கட்டளையை மீறிவிட்டோமோ என்று மனம் அலைபாய்கிறது . எப்போதும் நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையுடன் அவன் அழகைப் பருகிய கண்கள் இப்போது வேறு எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறதே ஒழிய அவனை நேரடியாகப் பார்க்கக் கூசுகிறது.
அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொள்ள அர்ச்சகர் வந்து நின்றார். எங்கள் இருவரின் பெயர் நட்சத்திரம் கேட்டபின் குழந்தையின் பெயர் நட்சத்திரம் கேட்டார். 'உத்திரம் , தேஜஸ்வினி' என்று நான் சொன்னவுடன் அவர் சொன்னது ' தேஜஸ்வினியா. நல்ல பேராச்சே. சுப்ரமண்ய சஹஸ்ரநாமத்தில் ஓம் தேஜஸ்வினே நம:ன்னு வருது. இன்னைக்கு காலையில தான் அதை கவனிச்சு ரொம்ப நல்ல பேராச்சேன்னு நினைச்சேன். நீங்க குழந்தைக்கு முருகன் பேரே வச்சிருக்கேள்' என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். கற்பூர ஆரத்தி காட்டும் போது அங்கு அமர்ந்திருக்கும் தேஜஸ்வியும் என் கையில் இருந்த தேஜஸ்வினியும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.
Tuesday, November 15, 2005
55: நாளும் கோளும் குமரேசர் இரு தாளும்
நண்பர் இராகவன் தன் 'இனியது கேட்கின்' வலைப்பதிவில் இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். அந்த பாடலுக்கு மேலும் விளக்கம் கூறலாம் என்றவுடன் நீங்களே கூறுங்கள் என்று சொல்லிவிட்டார். கரும்பு தின்ன கூலியா? இதோ அவன் அருளை முன்னிட்டு அவன் புகழைப் பேசலாம் என்று கிளம்பிவிட்டேன்.
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!
இந்த உலகத்தில் எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும் நல்ல நேரம் பார்த்துச் செய்வது தான் வழக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற பழமொழிகள் இந்த வழக்கத்திலிருந்து வந்தவைதான். இந்த மாதிரி ஒவ்வொரு வார நாட்களுக்கும், சந்திரனின் சுற்றில் வரும் 15 திதிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் தங்கள் அனுபவத்தில் கண்ட பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியோர். நல்ல நாளில் நல்ல நேரத்தில் நல்ல காரியத்தைத் துவக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
ஆனால் நாளடைவில் இந்த நல்ல பழக்கம் ஒரு மூட நம்பிக்கை அளவு வளர்ந்து நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் பல நேரம் அமைந்துவிடுகிறது. நல்ல காரியம் எப்போதுமே நன்மையிலேயே முடியும். அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள். ஆனால் அது நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் வந்தால் அந்த வழக்கத்தையே தூர எறிய வேண்டியது தான்.
நாளுக்கு பிறகு, ஒருவனுடைய முயற்சி வெற்றியடைவது அவனவன் முன்னர் செய்துள்ள நல்வினைத் தீவினைப் பயனை ஒட்டியே உள்ளது. அவன் நல்வினை அதிகம் செய்திருப்பின் அவன் முயற்சி சீக்கிரம் பலன் தருகிறது. தீவினை அதிகம் என்றால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆனால் தெய்வப்புலவர் சொன்னது போல் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப நவகோள்கள் பலன் தருகிறார்கள் என்பது நம் நாட்டவரின் நம்பிக்கை. நல்வினைகளின் பலன் பெருகவும் தீவினைகளின் பலன் குறையவும் நவகோள்களை வழிபட்டால் நல்லது என்றும் நம் நாட்டவர் நம்புகின்றனர்.
போகும் நேரம் வந்தால் கூற்றுவன் வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான். என்னை விட்டுவிடு; அதோ அவன் என்னை விட வயதில் மூத்தவன்; நான் இன்னும் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவாறாகக் கெஞ்சினாலும் எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் அந்த கொடுங்கூற்றுவன் தன் கடமையை நிறைவேற்றிவிடுவான்.
ஆனால் முருகப் பெருமான் அருள் இருந்தால் இவை அனைத்தின் பாதிப்பிலிருந்தும் நாம் தப்பலாம் என்கிறார் அருணகிரிநாதர்.
குமரேசரின் இரண்டு திருவடிகளும், அந்த திருவடிகளில் விளங்கும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவனுடைய ஆறு திருமுகங்களும், திரண்ட பன்னிரு தோள்களும், அந்த தோள்களின் மேல் அணிந்த கடம்ப மாலையும், எனக்கு முன் வந்து தோன்றினால் நாள் என்னை என்ன செய்யும்? என்னுடைய நல்வினை தீவினைகள் தான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்து என் வினைகளுக்கு ஏற்ப பலன் கொடுக்கும் நவகோள்கள் தான் என்ன செய்யும்? கொடிய யமன் தான் என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது - என்கிறார் அருணகிரிநாதர்.
அதென்ன குமரனின் அழகை வர்ணிக்கும் போது காலுக்கும், முகத்துக்கும், தோளுக்கும் தாவுகிறாரே என்றால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாம் நாளையும், வினையையும், கோளையும், கொடும் கூற்றையும் எண்ணி நடுங்கும் போது 'யாமிருக்கப் பயமேன்' என்று அவன் வருவதை நமக்கு முதன்முதலில் சொல்வது அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும் தானே. அதனால் அவற்றை முதலில் பாடுகிறார்.
அப்படி அவன் நம் முன்னே வந்தவுடன் நமக்குத் தெரிவது அவனது ஆறு முகங்களும் தான். அதனால் அதனை அடுத்துப் பாடுகிறார். பின்னர் தான் அவனது அழகிய பன்னிரு தோள்களும் அவற்றின் மேல் அவன் அணிந்துள்ள மணம் மிகுந்த கடம்ப மாலையும் தெரிகிறது.
சரி எப்போது இது நடக்கும்? நாம் எப்போது நம் நினைவில் அவனை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது நடக்கும். அப்படி நாம் அவனை எப்போதும் நினைத்தால் நமக்கு அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்.
சரி எப்படி நாம் அவனை எப்போதும் நம் நினைவில் வைத்துக்கொள்வது? அவன் தாளை நாம் வணங்கினால் அது நடக்கும்.
சரி நான் நினைத்தால் அவன் தாளை வணங்கிவிட முடியுமா? எத்தனையோ மயக்கங்கள் இருக்கின்றனவே எனைத் தடுக்க? உண்மைதான். அவன் அருளாலேயே அவன் தாள் வணங்க முடியும். அதனால் தான் அருணகிரியும் 'தோன்றிடினே' என்கிறார். நான் அவனைத் தோன்றவைக்கவில்லை. அவன் தனது அருளாலே தானாய்த் தோன்றினால் நாள் என் செயும்.... என்கிறார்.
அப்படி என்றால் நாம் என்ன தான் செய்வது? அவன் தாள் வணங்க அவன் அருளை வேண்டுவதே நாம் இப்போது செய்யக்கூடியது. அதுவே நாம் அவனை அடைய முதற்படி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக