உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்
ஞாயிறு போல் தோன்றினான் என்று முதலில் அவன் திருஒளியைக் கூறிவிட்டு பின்னர் அவனது திருவடிப் பெருமையைக் கூறினார் நக்கீரர். பின்னர் திருக்கரங்களின் பெருமையைக் கூறிவிட்டு அவனது அடையாளத்தைக் கூறுவதைப் போல் அவன் மனைவியைக் கூறி அவள் கணவன் என்றார். இந்த ஐந்து அடிகளில் அவனது அழகிய மாலையைப் பற்றி கூறுகிறார்.
கடம்ப மாலை திருமுருகனுக்கே சிறப்பாக உரியது என்பது மரபு. அவன் அன்னையும் அப்பனும் அம்மலரை அணிபவரானாலும் அவனைப் பற்றிக் கூறும் போது சிறப்பாக கடம்ப மலரைக் கூறுவது மரபாகவே அமைந்திருக்கிறது. அந்த மரபு திருமுருகாற்றுப்படையில் தொடங்கியது போலும். இந்த அடிகளில் 'உருள் பூ' என்று கடம்பமலரைச் சொல்கிறார்.
இந்த உருள் பூவினால் செய்யப்பட்ட தாரை அணிந்த மார்பன் என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த உருள்பூந்தார் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்று சொல்கிறார். அந்த குளிர்ச்சி எங்கிருந்து வந்ததென்றால் அந்தப் பூ பூத்த கடம்ப மரத்திலிருந்து வந்தது. அந்த மரம் ஏன் குளிர்ச்சியாய் இருந்தது? அடர்ந்து வளர்ந்த கடம்ப வனத்துள் அந்த மரம் இருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்தால் தான் என்ன? அடர்ந்து வளர்ந்திருந்ததனால் பகலவனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாமல் எந்த நேரமும் இதமான குளிர் அங்கே நிறைந்திருந்தது. பகலவன் கதிர்கள் மட்டும் நுழைய முடியாவிட்டால் குளிர்ச்சி அமைந்துவிடுமா? இல்லை தான். கடலில் இருந்து நீரை முகந்து கொண்டு வந்த சூல் கொண்ட மேகங்கள் முதன் முதலில் இந்த கடம்பங்காட்டில் தான் மழை பொழிந்தன. அதில் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது. ஓகோ. அப்படி என்றால் இந்த மலர் மார்பனின் திருமார்பில் வீற்றிருப்பது கடலின் குளிர்ச்சியா? சரி தான்.
இப்படித் தான் கடம்பந்தாரைப் பற்றி பாடியிருக்கிறார் நக்கீரர்.
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்
மேகங்கள் நீரை முகந்து கொள்வதால் கடலுக்கு கார் கோள் என்ற பெயர் வந்தது. அந்தக் கார்கோளிலிருந்து நீரினை முகந்து எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சூலை/கருவைக் கொண்ட பெரும் மேகமானது, பகலவனும் மதியவனும் ஒளி வீசும் வானத்தில் நின்று சிறு சிறு துளிகளாகச் சிதறி, முதல் மழையைப் பொழிந்ததால் தழைத்து வளர்ந்த குளிர்ந்த மணம் வீசும் காட்டில் இருள்படும் படி நெருங்கி வளர்ந்த காட்டு மரத்தின் உருள் பூவினால் ஆன குளிர்ச்சியான மாலை புரளும் மார்பினன் திருமுருகன்.

கற்பின் வாணுதல் என்று முன்பு தெய்வயானையம்மையைக் குறிப்பாகக் கூறினார். உருள்பூ என்று இங்கே கடம்பத்தைக் குறிப்பாகக் கூறினார். கடவுளருக்குரிய வேறெந்த பூவும் உருண்டு இருப்பதில்லை; கடம்பம் மட்டுமே அவ்வுருவம் கொண்டது என்பதை கடம்ப மலரினைப் பார்த்தவர் அறிவர். அதனால் உருள்பூ என்றே குறிப்பாகக் கூறுவது போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் கற்பின் வாணுதல் என்ற உடன் தெய்வயானையம்மை என்ற புரிதல் இருந்தது போல் உருள் பூ என்றவுடன் கடம்பம்பூ என்ற புரிதலும் இருந்தது போலும்.
வாணுதல் என்று முன்னர் சொன்னதை 'வாள் + நுதல்' என்று பிரித்து ஒளி பொருந்திய நெற்றியினைப் பெற்ற பெண் என்று பொருள் சொல்வார்கள். அப்படியே நானும் சொல்லியிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் வாள் நுதல் என்பதற்கு வாளினைப் போல் கூர்மையான நெற்றி என்று முன்பொரு முறை பொருள் சொல்லியிருந்தார். இங்கே மீண்டும் 'வாள் போழ் விசும்பு' என்று வருகிறது. இதற்கு எல்லா உரையாசிரியர்களும் ஒளி வீசும் வானம் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனையே நானும் கொண்டேன்.
கடும்கோடையில் முதல் மழை பெய்தால் எவ்விதமான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் இந்தக் கடம்பங்காட்டில் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த முதல் மழையையே இங்கே தலைப்பெயல் என்றார்.
உருள் பூவினால் செய்ததால் தான் போலும் இவன் திருமார்பில் அந்த பூந்தார் ஓரிடத்தில் நிற்காமல் புரண்டு கொண்டே இருக்கின்றது. :-)
Tuesday, September 09, 2008
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்...
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
சுருக்கமாக முதல் மூன்று அடிகளின் பொருளானது: உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும்படி உலகத்தை வலம் வரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல், எத்திசையில் நோக்கினும் விளக்கமாகத் தோன்றும் குறைவற்ற ஒளி கூடிய (திருமுருகன்).
இனி அடுத்த மூன்று அடிகளின் பொருளைப் பார்ப்போம்.
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும் படி தோன்றினாலும் அவனை அடைந்தவர்கள் அவனை வெறுத்தவர்கள் என்று இருவகையான உயிர்கள் எங்கும் இருக்கின்றனவே. அவனை அடைதல் என்பது அவனது உரிமைப்பொருட்களான உயிர்களையும் உலகத்தையும் நேயத்துடன் நோக்கி அவற்றிற்கு தொண்டு செய்தல். அவனை வெறுத்தலானது அவ்வுயிர்களையும் உலகத்தையும் வெறுத்து அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது.
அவனது உடைமைகளான உயிர்களையும் உலகத்தையும் விரும்புபவர்கள் அவனுக்கு உரியவர்கள். அவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி அவர்களுக்கு நன்மைகள் செய்து தாங்குகிறான் திருமுருகன். அதனால் 'உறுநர்த்தாங்கிய' என்றார் ஆசிரியர்.
அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்களை அழித்து இல்லாமல் செய்வது; அப்படி அழிக்கப்பட்டவர்களைக் கண்டு மனம் திருந்தி செறுநர்களாக இருந்தவர்கள் உறுநர்களாக மாறுவதால் செறுநர்கள் இல்லாமல் செய்வது. சூரனைப் போன்றவர்கள் செறுநர்களுக்கு எடுத்துக்காட்டுகள். அவர்களை அழித்து இல்லாமல் செய்கிறான் கந்தன். அவர்களே மனம் திருந்தி வணங்கும் போது மயிலும் சேவலுமாக அவர்களைத் தன் அணிகளாகக் கொள்கிறான் கடம்பன். இதனையே 'செறுநர்த் தேய்த்த' என்று குறிக்கிறார் ஆசிரியர்.
இவ்விரு செயல்களையும் திருமுருகனே செய்தாலும் அச்செயல்களைச் செய்வதில் முனைப்புடன் இருப்பவை அவனது இரு அங்கங்கள்.
உறுநரைத் தாங்குவது அவனது அழகும் வலிமையும் பொருந்திய திருத்தாள்கள். அழகுடன் இருப்பதால் உறுநர்களைக் கவர்ந்து அடி சேர்க்கிறது. அவர்களின் தீவினைப்பயன்களை நீக்கி அவர்களது அறியாமை இருளையும் நீக்குவதால் வலிமை கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வாறு உறுநரைத் தாங்குவது அவனுடைய அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகள் என்பதால் 'உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்' என்றார் ஆசிரியர்.
உறுநரைத் தாங்குவது அவனது திருவடிகள் என்றால் செறுநரைத் தேய்ப்பதோ தடக்கைகள். இடியைப் போன்றும் மேகத்தைப் போன்றும் விளங்கும் நீண்ட திருக்கைகள் செறுநரைத் தேய்க்கின்றன. முன்பு சொன்னது போல் அத்திருக்கைகள் மறக்கருணை செய்யும் போது இடியைப் போல் விளங்குகின்றன. அறக்கருணை செய்யும் போது அவை மேகங்களைப் போல் அன்பைப் பொழிகின்றன. இவ்வாறு இடியைப் போல் அழித்தும் மேகத்தைப் போல் கருணை செய்தும் செறுநரைத் தேய்ப்பதால் 'செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை' என்றார் ஆசிரியர்.
முதல் நான்கு அடிகளையும் ஒரு தொடராகக் கொண்டு 'உலகம் உவக்கும் படி தோன்றி ஒளி பெற்று விளங்குவது திருமுருகனின் திருவடிகள்' என்றும் பொருள் கொள்வார் உண்டு.
இவ்விதமாக அடியவரைக் காத்தும் வெறுப்பவர்களைக் குறைத்தும் திகழும் திருமுருகனின் இன்னொரு முதன்மையான அடையாளத்தை அடுத்த வரியில் சொல்கிறார் ஆசிரியர். வடமொழியிலும் புருஷசூக்தம் 'உனக்கு மண்மகளும் திருமகளும் மனைவிகள்' என்று மனைவியரை முன்னிட்டே மாதவனை அடையாளம் சொல்லும். இங்கே நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது.
முதல் அடையாளமாக உறுநரைத் தாங்குதலையும் இரண்டாவது அடையாளமாக செறுநரைத் தேய்த்தலையும் சொல்லிய பின் மூன்றாவதாக அவனது மனைவியைப் பற்றி சொல்லி அவனது அடையாளத்தை உறுதி செய்கிறார் ஆசிரியர்.
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
அழகிய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளின் கணவன் என்று மட்டுமே சொன்னால் எந்தப் பெண்ணைச் சொன்னார் என்ற குழப்பம் நேரிடும். திருமுருகனின் மனைவியரான வள்ளியம்மையாகவும் இருக்கலாம் தெய்வயானையம்மையாகவும் இருக்கலாம். அதனால் 'மறு இல் கற்பின்' என்ற அடைமொழியை இங்கே தருகிறார் ஆசிரியர். வள்ளியம்மையை மணந்ததோ களவு மணம் என்ற வகையில் அடங்கும். பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து அவருடன் போராடி வள்ளியம்மையை மணம் புரிந்தான் இக்கிழவன். அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'களவு மணம்' என்ற வகையில் அமையும். இரண்டு பக்கத்துப் பெற்றோரும் உற்றோரும் மகிழ்ந்து மணமுடித்துத் தர தெய்வயானையம்மையை மணந்தான் இத்தேவசேனாபதி. அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'கற்பு மணம்' என்ற வகையில் அமையும்.
அப்படி குற்றம் சொல்ல முடியாத வகையில் கற்பு மணத்தால் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட தெய்வயானையின் கணவன் திருமுருகன் என்பதை 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்றார் ஆசிரியர்.
இனி வரும் இடுகைகளில் தொடர்ந்து திருமுருகாற்றுப்படை நூலைப் பயிலலாம்.
Friday, November 09, 2007
உதயசூரியனின் ஒளி எத்திசையும் பரவும்!!!

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி
பகலவன் தோன்றியவுடன் ஒளி வெள்ளம் எல்லாத் திசைகளிலும் தோன்றி விளங்குகிறது. எங்கும் ஒழிவற கண் காணும் தூரம் வரை எங்குமே ஒளி வீசி நிற்பதைப் போல விளங்குகிறது பகலொளி. அந்தப் பகலொளியைப் போலவே காண்போர் கண் செல்லும் அளவிற்கும் (சேண் - சேய்மை - தூரம்) விளங்கி எங்கும் ஒழிவற (ஓவற) விளங்கி நிற்கின்ற ஒளியை உடையவன் திருமுருகன்.
இருள் சூழ்ந்து இருந்த காலத்திலிருந்து சிறிதே நேரத்தில் எங்கும் ஒளி சூழ்ந்த காலம் வந்ததால் கண்களால் அந்த ஒளியை உடனே நோக்க இயலவில்லை. அதனால் பல முறை இமைத்து இமைத்து நோக்குகின்றன அந்தக் கண்கள். அப்படி ஓவற இமைக்கும் படி அமைந்திருக்கிறது எங்கும் வீசும் பெரும் ஒளி (அவரொளி). கட்புலனுக்கு மட்டுமே இந்த உவமையைக் கூறவில்லை ஆசிரியர். கதிரவன் தோன்றும் போது கட்புலன் மட்டுமே இமைக்கின்றது. ஆனால் முருகன் தோன்றும் போது ஒழிவற எல்லா புலன்களுமே தங்கள் தொழில்களை மறந்து இமைத்து இமைத்து திருமுருகனின் திருமேனி ஒளியையே எல்லாத் திசைகளிலும் நோக்குகின்றன.
சங்கப் புலவர்களின் அணி நயத்தைப் பற்றி ஒரு கருத்து உண்டு. முடிந்த வரை இயல்பாக நடப்பதை உவமையாகக் கூறுவதை அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்றும் உயர்வுநவிற்சி அணியை சுவை கூட்டல் பொருட்டு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. பிற்கால இலக்கியங்களில் இறைவனைப் போற்றும் போது பல நூறு, பல்லாயிரம், பல கோடி சூரியன்கள் எழுந்தாற்போன்ற ஒளியுடையவன் இறைவன் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இன்றி ஒரு சூரியன் உதித்தால் எப்படி இருக்குமோ அப்படி உதித்தான் முருகன் என்று இயல்பாக உள்ளதை உவமையாக இங்கே கூறுகிறார் நக்கீரனார். அப்படி உயர்வு நவிற்சி இன்றிக் கூறும் இடத்தும் பல அழகிய பொருட்களை ஒவ்வொரு சொல்லிலும் சொல்லி அழகு பெற திருமுருகன் தோற்றத்தை வருணித்திருக்கிறார். மூன்றே வரிகளில் எவ்வளவு ஆழ்ந்த பொருள்?
***
இந்த வரிக்கு நண்பர் இரத்னேஷ் இன்னொரு முறையில் பொருள் கூறினார். ஓவற என்றதும் சேண் விளங்கு என்றதும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் எப்போதும் தன்முனைப்பு நீங்கிய உயிர்களின் திருவுள்ளத்தில் விளங்குவதையும் அவர்களாலும் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு தூரத்தில் விளங்குவதையும் காட்டுகிறது என்றார். இந்த விளக்கம் அருமையாக இருந்தாலும் 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள் - பத்தியுடைய அடியவர்களுக்கு எளியவன்; மற்றவர்களுக்கு அரியவன்' என்று வேறோரிடத்தில் படித்திருப்பதால் இந்த விளக்கம் என் மனத்திற்குவந்த முதல் விளக்கமாக இல்லை. ஆயினும் இந்த அடியைப் படிக்கும் இடத்தே அந்த விளக்கத்தையும் தருவது பொருத்தமுடையது என்பதால் அவர் எழுதிய விளக்கத்தை அப்படியே எடுத்து இங்கே இடுகிறேன்.
***
முதல் இரண்டு அடியுடன் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? மூன்று அடிகள் சேர்ந்த கூட்டுப் பொருள் அல்லவா சூரிய - முருக ஒப்புமை?
"ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி"
என்கிற மூன்றாவது வரியையும் சேர்ந்துப் பாருங்கள் (ஓ என்றால் தங்குதல்; அற என்றால் ஆணவம் அறுத்த மனங்களில் என்கிற பொருள். அம்மாடியோ)
"உயிர்கள் மகிழும்படி மேருமலையை வலமாக எழுந்து திரிகின்ற, பலசமயத்தவரும் புகழ்கின்ற சூரியன் கிழக்குக் கடலில் தோன்றக் கண்டாற் போல், ஆணவம் அகன்ற அடியார்களின் உள்ளத்தில் விளங்குவதும் அவர்தம் கருத்துக்குத் தொலைவில் நின்று விளங்குவதும் ஆகிய இயற்கை ஒளியானவன்" என்று முருகனை நக்கீரர் விவரிக்கும் அழகை என்னென்பது!
மூன்று வரிகளுக்குள் எவ்வளவு விஷயங்கள்!
1. சூரியன் இருள் போக்குவது போல், முருகன் அறியாமை இருள் போக்குபவன்
2 எல்லாம் அவன் செயல் எனும்படி முனைப்படங்கிய உயிர்களில் சென்று தங்குபவன்
3. அவர்களின் உள்ளத்தில் தங்கினாலும் அவர்களின் கருத்துக்குப் பிடிபடாமல் வெகு தொலைவில் இருப்பவன்
கூடுதலான ஒரு பார்வை: ஒளிர்தல் என்கிற பொருளுக்கு இமைத்தல் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று. என்ன உவமானம்!
Thursday, October 25, 2007
உதயசூரியன் முருகனே!!!

கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக் கடற்கரையில் ஒரு முறை நான் கண்டிருக்கிறேன். கரு நிறக் கடலின் நடுவில் மெதுவாக சிவந்த பந்து தோன்றுவதும் அது மெல்ல மெல்ல மேல் எழுவதும் அதே நேரத்தில் மெதுவாக கடலின் நிறம் நீலமாக மாறுவதும் பகலவன் முழுவதும் தோன்றி ஆனால் இன்னும் கடலை நுனி தொட்டுக் கொண்டு இருக்கும் போது அலைகளில் தெரியும் நீண்ட சிவப்புக் கோடும் ஆகா நேரே கண்டால் தான் அதன் அழகு தெரியும்; புரியும்.
உலகத்தவர் யாராயினும் இந்தக் காட்சியைக் கண்டால் மனம் உவப்பர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்தக் காலத்தில் மட்டும் இன்றி எந்தக் காலத்திலும் அப்படித் தான். இல்லையா? திருமுருகாற்றுப்படை எழுதிய காலத்தும் அப்படித் தான் இருந்திருக்கும். அதனால் தான் முருகனைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் சிவந்த சூரியன் கடலில் எழுவதும் அதனைக் கண்டு உலகோர் மகிழ்வதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்குத் தோன்றியிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இந்த அருமையான காட்சியை கண் முன்னே நிறுத்துகிறார் நக்கீரனார்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு...
உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் தோன்றி (வலிவுடன் தோன்றி) உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல...
இது தான் நக்கீரனாருக்கு முதலில் தோன்றிய உவமை. எத்தனை அழகான உவமை பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக