சனி, 6 செப்டம்பர், 2025

10 2

 4. சோழர் காலத்தில் சைவ சமயம்


(கி.பி. 900 - 1300)


 


வட இந்தியாவில் சைவ சமயம்


 


சோழர்கள் பேரரசை ஏற்படுத்தி ஆண்ட நானூறு ஆண்டு காலம் (கி. பி. 900-1300) இந்தியா முழுவதும் சைவசமயம் நன்கு வளர்ந்த காலமாகும். காஷ்மீர் நாட்டில் பல சிவன் கோவில்கள் சிற்புற்றிருந்தன. கோவில்களை அடுத்து மடங்களும் தோன்றி வளர்ந்தன.


 


நேபாள நாடு அசோகருக்கு முன்பிருந்தே பெரிய சைவமடத்தைப்பெற்ற நாடாக இருந்தது. அங்குள்ள பசுபதி கோவிலும் அதனைச் சார்ந்த சைவமடமும் சிவாசாரியார் பலரைத் தோற்றுவித்தன.


 


கூர்ச்சரம், கத்தியவார் நாடுகளிலும் சிவன் கோவில்கள் சிற்புற்றிருந்தன. அப்பகுதியையாண்ட சாளுக்கிய மன்னர்கள் லகுலீச பரசுபத ஆசார்யர்களைத் தாங்கள் கட்டிய மடங்களின் தலைவர்களாக வைத்தனர்; அவர்களிடம் தீட்சை பெற்றுத் தங்களைப் 'பரம மாகேசுவரர்' என்று கூறிக்கொண்டனர்; தங்கள் கல்வெட்டுத் தொடக்கத்தில் 'ஓம் நமசிவாய' என்று எழுதினர். இவர்தம் ஆட்சியில் லகுலீசர் தோன்றிய காரோணநகர் சிறப்புற்றது.* லகுலீச பாசுபதரும் சிறப்புற்றனர். 

[* லிகுலீசபாசுபதர்களின் தொடர்புடைய கோவில்களை நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், கச்சிக்காரோணம் என்பன.]


 


மாளவம், இராசபுதனம் இவற்றை ஆண்ட மன்னர் பெரும்பாலும் சைவரே. உச்சையினிலிருக்கும் மகாகாளர் கோவில் மிக்க சிறப்புற்றது. கௌட தேசத்துச் சிவாசாரியர் அரசர் குருமாராக இருந்தனர்.


 


பண்டில்கண்டு பகுதியை ஆண்ட சந்திராத்ரையர் என்ற மரபினர் சிறந்த சிவபக்தர்கள். இவர்களும் தீட்சை பெற்றுத் தங்களைப் 'பரம மாகேசுவரர்' என்று கூறிக்கொண்டனர். இவர்கள் கல்வெட்டுக்களும் 'ஓம் நமசிவாய' என்பதையே தொடக்கமாகக் கொண்டவை. 


 


இராசபுதனம், பஞ்சாப் இவற்றை ஆண்ட சாகமான மன்னர்களும் சிவபக்தர்களே. இவர்தம் நாட்டில் புராணமகாதேவர் கோவில், சித்தீச்சரம், கபாலீசுவரர் கோவில் என்பன சிறப்புற்றவை. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் லகுலீச பாசுபதத் துறவிகள் இருந்தனர்.


 


ஐக்கிய மாகாணங்களிலும் நடு மாகாணத்திலும் ஆண்ட ஹெய்ஹயர் வட இந்தியாவில் பல இடங்களை ஆண்டனர். இவருள் ஒரு பிரிவினர் கங்கைக்கும் நருமதைக்கும் இடைப்பட்ட ஒன்பது லட்சம் சிற்றூர்களைக் கொண்ட தாகள நாட்டை ஆண்டனர். அவர்தம் தலைநகர் திரிபுரி என்பது. அவர்கள் சிவநெறியில் சிறந்து விளங்கினர்; சிவாசாரியர்கட்கு மடம் கட்டித்தந்து, அவர்களையே தங்கள் குருமாராகக் கொண்டனர். கி. பி. 10-ஆம் நூற்றாண்டில் ஹெய்ஹய அரசனாக இருந்த முதலாம் யுவமகாராசன் சோணையாற்றங்கரையில் ஒரு கோவிலையும் மடத்தையும் கட்டி, சத்பாவசம்பு என்பவரிடம் ஒப்படைத்தான்; அவருக்கு மூன்று லட்சம் சிற்றூர்களையும் சமய வளர்ச்சிக்காக வழங்கினான். அச்சிவாசாரியரே கோளகீ மடத்தை ஏற்படுத்தியவர். அவர் மரபில் வந்த சிவாசாரியர் விசுவேசுவர சம்பு என்பவர் ஹெய்ஹய அரசர்களுக்கும் தீட்சாகுருவாக விளங்கினார்.


 


விந்த மலைக்குத் தென்பாலிருந்த இராஷ்டிரகூடர்கள் எல்லோராக் குகைகளில் கயிலாசநாதர் கோவில் போன்ற கோவில்களை அமைத்துச் சைவ வளர்ச்சிக்கு உதவி புரிந்தனர். இராஷ்டிரகூடர்க்குப் பின் வந்த சாளுக்கியர் காலத்திலும் பம்பாய் மாகாணத்தில் சைவம் ஓரளவு வளர்ச்சியுற்றது.


 


இவ்விவரங்களால், சோழப் பேரரசு ஏற்பட்ட காலத்திலும் அதன் பின்னரும் சிறப்பாக வட இந்தியாவில் சைவ சமயம் நல்ல வளர்ச்சி பெற்றது என்பதை உணரலாம். இச்சூழ்நிலையே சோழநாட்டில் சைவம் நன்கு வளரக் காரணமாயிருந்தது.


 


சோழர் சமய நிலை


 


சேர-சோழ-பாண்டியருள் சைவத்துள் மிகவும் அழுத்தமான பற்றுடையவரும் நூற்றுக்கணக்கான சிவன் கோவில்களைக் கட்டியவரும் சோழரேயாவர். அழுத்தமான சைவப் பற்றுடைய சோழர்கள் பல்லவரை முறியடித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்திய பிறகும் சைவத்தை வளர்பதிலையே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர் என்பதில் வியப்பில்லை அல்லவா?


 


சோழவேந்தர் துங்கபத்திரை ஆறு முதல் கன்னிமுனை வரையிலும் உள்ள தென்இந்தியாவை ஆண்டவர். சோழப்பேரரசு ஏற்படுத்திய ஆதித்தன் காலத்தில் தமிழகத்தில் பாடல்பெற்ற கோவில்கள் ஏறத்தாழ ஐந்நூறு இருந்தன. பாடல்பெறாத கோவில்களும் இருந்தன. இவ்விருவகைக் கோவில்களும் சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பெற்றன. ஆதித்தன் முதலிய சோழ மன்னர் தத்தம் ஆட்சிக் காலத்தில் புதியனவாக எடுப்பித்த கோவில்கள் பலவாகும். சோழர் ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர்கள் புதியனவாகக் கட்டிய கோவில்கள் பல. அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகள் பல. சோழமாதேவியாரும், சிற்றரசர் மனைவியரும், அரசாங்க அலுவலர் மனைவியரும் செய்த திருப்பணிகள் பலவாகும். துறவிகள் முதல் சாதாரண குடிமகன் ஈறாக இருந்த மக்கள் செய்த திருப்பணிகள் எண்ணில.


 


ஆதித்த சோழன் முதலியோர் 


 


ஆதித்த சோழன் (கி. பி. 871-907) செய்த திருப்பணிகளுள் சிறந்தது, காவிரியின் இருகரைகளிலும் இருந்த பாடல்பெற்ற கோவில்களைப் புதுப்பித்தமையாகும். பாடல்பெற்ற கோவில்கள் அழியத்தக்க மண், மரம் முதலியவற்றால் ஆனவை, சோழன், அவை அழியாமலிருக்க வேண்டி, அவற்றைக் கற்றளிகளாக்கினான். இங்ஙனம் ஆதித்தனால் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சோழ அரசர்களாலும் அவர்தம் மாதேவியராலும் பிறராலும் அவர்களது ஆட்சி முடிய நடைபெற்று வந்தது என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. சமயவளர்ச்சிக்குத் தாயகம் கோவில்கள். அவை என்றும் அழியாமல் இருந்தாற்றான் சமயம் வளர முடியும். ஆதலாற்றான் ஆதித்த சோழன் கோவில்களைக் கற்றளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான். கோவில் கருவறையும் விமானமும் கற்றளியாக மாற்றப்படடன. இவ்வாறு ஆதித்தன் கற்றளியாக்கியதே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோவில். அஃது அவன் கால முதல் ஆதித்தேச்சரம் எனப் பெயர் பெற்றது. [1]


 


ஆதித்தன் மகனான முதற்பராந்தகன் (கி. பி. 907-953) சிறந்த சிவபக்தன்; புலவர் புரவலன். இவன் செய்த திருப்பணிகளுள் மிக்க சிறப்புடைய்யது தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தது.[2] பராந்தகன் மூத்த மகனான இராசாதித்தன் திருநாவலூர்க்கோவிலுள் ஒரு பதிய கோவிலைக்கட்டினான். இராசாதித்தன் தம்பியான கண்டராதித்தர் (கி. பி. 947-957) திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவர். அவர் திருப்பழனத்துக்குப் பக்கத்தில் கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்ற ஊரைக் உண்டாக்கினார்; அங்கு சிவன் கோவிலைக் கட்டினார்.

---------- 

[1]. 80 of 1892.          [2]. A. R. E. 1906, p.69.


 


செம்பியன் மாதேவியார்


 


இவர் கண்டராதித்தர் மனைவியார். இவர் செய்துள்ள திருப்பணிகள் இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசியும் செய்யாத அளவினவாகும். இவர் பாடல்பெற்ற கோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவக்கரை, திருமுதுகுன்றம், தென்குரங்காடுதுறை முதலிய கோவில்களைக் கற்றளியாக்கினார். ஐயாறு, தலைச்சங்காடு, ஆரூர், திருப்புறம்பியம், திருவெண்காடு முதலிய பல கோவில்களுக்கு நிலதானமும் பொன் வெள்ளிப் பாத்திரங்களும் நகைகளும் பிறவும் உதவியுள்ளார்.


 


முதலாம் இராசராசன் (கி.பி.985-1014)


 


தன் காலம் வரையிலும் தமிழகத்தில் ஏற்பட்டி ராத பெரிய அளவில் மிக அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கோவிலை அமைத்தவன் முதலாம் இராச ராசனே ஆவன். அவன் ஆறுஆண்டுகள் அரும் பாடுபட்டுத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். அதில் கடவுளர் திருமேனிகளையும், நாயன்மார் படிமங்களையும் எழுந்தருளச் செய்தான்; ஒவ் வொன்றுக்கும் விலையுயர்ந்த நகைகளை அளித் தான்; பூசைக்காகவும், விழாவுக்காகவும் பல சிற்றூர்களை மானியமாக விட்டான். அவனைப் பின்பற்றி அரச குடும்பத்தினரும் அரசாங்க அலுவலரும் மிகப் பல அறப்பணிகள் செய்தனர். தமிழ் நாட்டுப் பல கோவில்களிலிருந்து தஞ்சைப் பெரிய கோவிலில் இசை நடனக் கலைகளை வளர்க் கப் பதியிலார் நானூற்றுவர் குடியேற்றப்பட்டனர். ஒவ்வொருத்திக்கும் ஒரு வீடும், ஒரு வேலி நிலமும் தரப்பட்டன. திருப்பதிகம் ஓத நாற்பத்தெண்மர் அமர்த்தப்பட்டனர். இவ்வாறே கோவில் பணிகளை நன்கு கவனித்துச் செய்யப் பல கோவில்களில் இருந்து பலர் நியமனம் பெற்றனர். இந்த விவரங் கள் அனைத்தும் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் நன்கு அறியலாம். [3]

-----------------------

[3]. S.I.I Vol II, parts 1-3.


 


இராசராசன் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு தில்லையில் அடக்கம் செய்யப் பட்டிருந்த முதல் ஏழு திருமுறைகளைத் தொகுப் பித்தான். இவன் ‘சிவபாத சேகரன்’ என்று பாராட்டப்பட்டவன். இவன் காலமுதல் திருமுறைகள் நாடெங்கும் பரவலாயின. இவனைப் பின் பற்றிய அரசரும் பிறரும் கோவில் திருப்பணிகளில் ஈடுபடலாயினர்.


 


முதலாம் இராசேந்திரன் (கி. பி. 1012-1044)


 


இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் உடையார்பாளையம் தாலுகாவில் பெரிய நகரம் ஒன்றை நிறுவினான். அதன் பெயர் கங்கைகொண்ட சோழபுரம் என்பது. அந்நகரத்தில் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலப் பெரிய சிவன் கோவில் கட்டப்பட்டது. அதுவே கங்கைகொண்ட சோழேச்சரம் என்பது. அஃது அமைப்பிலும் வேலைப்பாட்டிலும் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருந்தது. அப்பெருங்கோவில் இராசேந்திரன் கால முதல் சோழராட்சி வீழ்ச்சியுறும் வரையில் மிகச் சிறந்த நிலையில் இருந்தது. 


 


முதற் குலோத்துங்கன் (கி. பி. 1070-1120)


 


இவன் திருநீற்றுச் சோழன் எனவும் பரமமாகேசுவரன் எனவும் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படலால், தீட்சை பெற்ற சைவன் என்று அறியப்படுகிறான். இவன் காலம் முதல் வேங்கி நாட்டுத் திராட்சாராமம் - பீமேசுவரர் கோவில் சிறப்படையத் தொடங்கியது. இவன் தில்லையில் கூத்தப் பெருமான் ஊர்வலம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தான் என்பது தில்லையுலா என்னும் நூலிலிருந்து தெரிகின்றது. சமயக்குரவர் நால்வர் தேர்கள் முன் சென்றன; சேரமான் பெருமாள் வரகுணபாண்டியன் இவர்கள் சேவிப்பச் சிவபெருமான் உலாச் சென்றான். அனைவர்க்கும் முன்பாகக் குலோத்துங்கன் குதிரைமீது சென்றான். தில்லைச் சிற்றம்பலத்தில் 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்ட பொன்னோடுகள் வேயப்பட்டிருந்தன.

-------------

[4]. S. I. I. Vol. Ns. 522-530.


 


விக்கிரம சோழன் (கி. பி. 1120-1135)


 


இவன் குலோத்துங்கனுக்கு மகன். இவ்வரசன் தன் சிற்றரசர் கொடுத்த திரைப் பொருளின் பெரும்பகுதியைத் தில்லைக்கோவிலைப் புதுப்பிக்கவும் விரிவாக்கவும் செலவிட்டான்; பொன்னம்பலம் சூழ்ந்த திருமாளிகை, கோபுரவாசல், கூடசாலைகள், பலுபீடம், தேர் இவற்றைப் பொன்வேய்ந்தான்; தன் பெயரால் திருவிக்கிரமன் திருவீதியும் மாளிகையும் அமைத்தான்; கூத்தப்பெருமான் உலாப்போகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்தான்; பல பொன் தட்டுகள் செய்து உதவினான். இவன் ஒட்டக்கூத்தன் மாணவன்; அவரால் உலாக்கொண்டவன்.


 


இரண்டாம் குலோத்துங்கன் (கி. பி. 1133-1150)


 


இவன் விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்ற தில்லைத் திருப்பணிகளை முடித்தவன். இவ்வேந்தன் தில்லையில் எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான்; அம்மனுக்குத் திருமாளிகை அமைத்தான்; பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான். இவன் நடராசர் பாத தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இப்பெரியோன் திருவாரூர்க் கோவிலில் இருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் படிமங்கட்குப் பூசை நடக்கத் தானம் அளித்தவன். இம்மன்னன் அநபாயன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன்; ஒட்டக்கூத்தரது மாணவன்; அவரால் உலாவும் பிள்ளைத் தமிழும் பாடப்பெற்றவன். சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணம் பாடச்செய்த பெருந்தகை இவனே.


 


இரண்டாம் இராசராசன் (கி. பி. 1146-1173)


 


இவன் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் (இராசராசபுரத்தில்) பெரிய சிவன் கோவிலைக் கட்டினான். அதன் பெயர் இராசராசேச்சுரம் என்பது. அக்கோவில் கட்டடக் கலைக்கும் சிற்ப வேலைப்பாட்டுக்கும் மிக்க புகழ்பெற்றது. இவ்வரசன் ஒட்டக்கூத்தரது மாணவன்; அவரால் உலாவிலும் தக்கயாகப் பரணியிலும் பாராட்டப்பட்டவன்.


 


மூன்றாம் குலோத்துங்கன் (கி. பி. 1178-1218)


 


இப்பேரரசன் திருவிடைமருதூர்க்கருகில் திருபுவன வீரேசுவரம் என்னும் பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன்; தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று முதலியவற்றைப் பழுது பார்த்தவன். பல சிவன் கோவில்களைப் பழுது பார்த்தவன். 'நம் தோழன் திருபுவன வீரதேவன்' என்று இவனைச் சிவபெருமான் குற்ப்பிட்டதாகத் திருவாரூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது.[5] இவன் காலத்திலும் பிற்பட்ட சோழர் காலத்திலும் திருமுறைகளைப் பாதுகாக்கக் குகைகளும் சமய வளர்ச்சிக்காக மடங்களும் நாட்டிற் பெருகின.

-------

[5]. 554 of 1904


 


அரச மாதேவியார்


 


ஆதித்த சோழன் தொடங்கிய சைவத் திருப்பணிகள் அவனுக்குப் பின் வந்த சோழவேந்தர் தொடர்ந்து வளர்த்தது போலவே, ஆதித்தன் மனைவி தொடங்கிய திருப்பணிகள் அவளுக்குப் பின் வந்த சோழமாதேவியர் தொடர்ந்து செய்யலாயினர், திருப்பூந்துரித்திக் கோவில் ஆதித்த சோழன் மனைவியாலும், திருவூரல் கோவில் முதற் பராந்தகன் மகளாலும், செம்பியன் மாதேவியில் உள்ள கோவில் உத்தம சோழன் மனைவியர் ஐவராலும். திருவெண்காடு, திருவிசலூர், திருவையாறு இவற்றிலுள்ள கோவில்கள் முதலாம் இராசராசன் மனைவியராலும், திருவலஞ்சுழியில் உள்ள சிவன் கோவில் முதலாம் இராசராசன் மகளாலும், திரு விசலூர், உடையார்குடி இவற்றிலுள்ள கோவில்கள் முதலாம் இராசேந்திர சோழன் மனைவியராலும், சிதம்பரம் கோவில் முதற் குலோத்துங்கன் சகோதரிகளாலும், திருவிடைமருதூர்க் கோவில் விக்கிரம சோழன் மனைவியராலும், திருமழப்பாடிக் கோவில் இரண்டாம் குலோத்துங்கன் மனைவியராலும், திட்டிடைக்குடிக் கோவில் இரண்டாம் இராச ராசன் மனைவியராலும், திருவெண்ணெய் நல்லூர்க் கோவில் மூன்றாம் இராசேந்திரன் மனைவியாலும் திருப்பணிகளிலும் தான வகைகளிலும் சிறப்புற்றன.


 


சிற்றரசரும் திருப்பணிகளும்


 


சோழப் பேரரசர்க் கடங்கிய நுளம்பாதிராசர் முதலியோர் பேரரசரைப் பின்பற்றித் தமிழகத்தில் பல கோவில்களில் பலவகைத் திருப்பணிகள் செய்துள்ளனர். நுளம்பாதிராசர், யாதவராயர், சாம்புவராயர், வாணகோவரையர், பொத்தப்பிச்சோழர், மிழலை நாட்டுத் தலைவர், வைதும்ப மகாராசர், சேதிராயர், மழவராயர், காடவராயர்,முத்தரையர், முனையதரையர் என்ற சிற்றரசர்கள் தில்லை, திருநாவலூர், திருக்காளத்தி முதலிய ஊர்க்கோவில்களில் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.


 


பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் நடு நாட்டில் உள்ள சேந்தமங்கலத்தை ஆண்டு வந்தவன். இவன் வீரத்திலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான்; தில்லைக் கோவிலில் தெற்குக் கோபுரத்தைக் கட்டினான்; ஆக்கூர்க் கோவிலைப் புதுப்பித்தான்; திருமுதுகுன்றம் முதலிய பல கோவில்களுக்குத் தானங்கள் அளித்தான். இவனும் இவன் மனைவியும் திருவண்ணாமலைக் கோவிலுக்குத் தானங்கள் அளித்தனர். இவன் மகனான மகாராச சிம்மன் தில்லையில் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினான். திரிபுராந்தகம், திராட்சாராமம், காளத்தி, கஞ்சி, திருவதிகை, மதுரை என்னும் இடங்களிலுள்ள சிவன் கோவில்களுக்கு நிபந்தங்கள் விடுத்தான். 6 கோப்பெருஞ்சிங்கனும் அவன் குடும்பத் தாரும் செய்த திருப்பணிகளைக் கொண்டே, பிற சிற்றரசரும் அவர் குடும்பத்தாரும் செய்த திருப் பணிகளை ஒருவாறு உய்த்துணரலாம்.

---------

[6]. A.R.E. 1906, P.64.


 


காலிங்கராயன் திருப்பணிகள்


 


முதற் குலோத்துங்கன் தானைத்தலைவனான நரலோக வீரன் என்ற காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகள் அளவிறந்தன. இவன் சித்தலிங்க மடத்தில் சிவனுக்குக் கற்றளி எடுத்தான்; திரு புவனை, திருப்புகலூர்க் கோவில்களில் மண்டபங்கள் அமைத்தான்; வேறு பல தானங்களையும் செய்தான். இப்பெருமகன் தில்லையில் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை-(1) தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் அகன்ற சாலையை அமைத்தமை, (2) கடற் கரையில் மாசிமகத்தின்போது கடவுள் தங்க மண்டபம் சமைத்தமை, (3)கோவிலில் நூற்றுக்கால் மண்டபம் அமைத்தமை, (4) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்தமை, (5) தேவாரம் ஓத மண்டபம் அமைத்தமை என்பன.[7]


 


இவன் திருவதிகையிலும் பல திருப்பணிகள் செய்துள்ளான். அவற்றுள் - (1) நூற்றுக்கால் மண்டபம் கட்டினமை, (2) அப்பர்க்குத் தனிக் கோவிலை அமைத்தமை, (3) அப்பரது மடத்திற்கு 48 ஆயிரம் குழி தானம் செய்தமை, (4) அதிகைக் கோவிலைச் சுற்றி அகன்ற திருச்சுவற்றை அமைத்தமை, (5) நாடக சாலை அமைத்தவை குறிக்கத்தக்கவை.[8]

--------------------

[7]. S.I.I. 4.225. 

[8]. 369 of 1921; செந்தமிழ் Vol. 28, PP. 93-100.


 


முடிவுரை


 


இவ்வாறு பேரரசர், சிற்றரசர் அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகளால் தூண்டப்பட்ட வணிகர் முதலிய குடிமக்கள் தத்தம் நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கோவிலிலும் தானங்கள் செய்துள்ளனர். என்பதைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுருங்கக்கூறின், சோழர் காலத்தில் அரசன் முதல் ஆண்டி ஈறாக இருந்த அனைவரும் சமயத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறுதல் பொருத்தமாகும்.


 


பாடல் பெற்ற கோவில்கள் எல்லாம் சோழர் காலத்தில் கற்றளிகளாக மாறின; சிறிய கோவில்கள் பெரிய கோவில்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு கோவிலிலும் நாட்பூசனையும் விழாக்களும் சிறப்புற நடைபெற நிலமும் பொருளும் வழங்கப் பட்டன. கோவில் சொத்துக்களைக் கண்காணிக்க ஆட்சிக்குழு அமைந்திருந்தது. கோவிலுக்கு அவரவர் செய்த தானபாத்திரங்கள் சிவபண்டாரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. அதே சமயத்தில் அவை கோவில் சுவர்களிலும் வெட்டுவிக்கப்பட்டன. எல்லாக் கோவில்களின் வரவு செலவும் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்பட்டன. கோவில்களில் பெருமக்கள், ஊரவையார் என்பவர் முன்னிலையில் கோவில் நகைகளை மதிப்பிட்டுக் கணக்கிட்டனர். வருவாயற்ற கோவில்கள் வருவாயிருந்த கோவில்களின் பொருளுதவியால் கவனிக்கப்பட்டன. இத்தகைய திட்டமான கோவிலாட்சியால் பொதுமக்கள் கோவில் செல்வத்தைப் பெருக்க முனைந்தனர். அதனால் கோவில்கள் செல்வ வளத்தில் பெருகின; பக்தர்களின் அறங்கள் குறைவின்றி நடந்தன். கோவில் பண்யாட்கள் தத்தம் கடமைகளைத் தவறாது செய்தனர். கோவில்களில் சமயத் தொடர்பான ஆடல், பாடல், நாடகம், திருமுறை ஓதுதல், சமய போதனை செய்தல் என்பன் காலம் தவறாது நடைபெற்றன. இத்தகைய சிறப்புகளால் சோழராட்சியில் சைவசமயம் பெருஞ்சிறப்புற்று விளங்கியது என்று கூறுதல் பொருத்தமாகும்.

----------------------------------



5. திருக்கோவில் வளர்ச்சி


 


முன்னுரை 


 


நாயன்மார் காலத்தில் (கி.பி. 300 - 900) மிகச் சிறியனவாக இருந்த கோவில்கள் அழிந்துவிடத்தக்க மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் இவற்றால் கட்டப்பட்டவை. எனவே, அவை அழிந்துவிடும் இயல்பின. பல்லவர்க்குப் பின்வந்த சோழர்கள் (கி.பி. 900 - 1300) இவ்வுண்மையை உணர்ந்து, இவற்றைக் கருங்கற் கோவில்களாக மாற்றினர். பாடல்பெற்ற கோவில்களுட் பல மலையில்லாத சமவெளிப்பகுதியில் இருந்தனவாயினும், மலைப் பகுதிகளிலிருந்து சோழர்கள் கற்களைக் கொண்டு சென்று, பண்டைக்கோவில்களைக் கற்றளிகளாக மாற்றினர்; இங்ஙனம் மாற்றியதோடு அமையாது, பழங்கோவில்களைப் பெரியனவாகவும் அமைத்தனர்.


 


கோவில் வளர்ச்சி 


 


சாதாரணமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, நடுமண்டபம் இவற்றைப் பெற்றிருந்தது; பின்னர் முகமண்டபம் அமைந்தது. கோவிலைச் சுற்றிலும் முதல் திருச்சுற்றும் மதிலும் அமைந்தன. முதல் திருச்சுற்றில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் அமைந்தது. அத்திருச்சுற்றில் வலம் வரும் முறையில் தென் கிழக்கில் சூரியனும், தென் மேற்கில் கணேசரும் சப்த கன்னியரும், மேற்கில் சுப்பிரமணியர், வடமேற்கில் ஜேஷ்டர், வடக்கே சண்டேசுவரர், வடகிழக்கில் சந்திரன் இடம் பெற்றிருந்தனர். இத் திருச்சுற்றுக் கோவில்கள் சில கோவில்களில் தனித்திருந்தன; சில கோவில்களில் மதிலையொட்டி அமைந்த கட்டிடத்திற்குள் இருந்தன. மதில், ஒன்று முதல் நான்கு வாயில்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு பெற்றிருந்தது. வாயில் மீது சிறிய கோபுரங்கள் எழுந்தன, முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலம் வரை கருவறைக்கு மேலுள்ள விமானமே வானளாவக் கட்டப்பட்டது. பிற் காலங்களில் விமானம் தாழ்த்தப்பட்டுக் கோபுரங்கள் உயர்த்தப்பட்டன. கோவிலைச் சுற்றிலும் பல இடங்களில் நந்தவனங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கோவிலுக்குள்ளும் நந்தவனங்கள் உண்டாக்கப்பட்டன. பெரிய கோவில்களில் திருக்குளங்களும் இவ்வாறே தோண்டப்பட்டன. பெரிய கோவில்களில் இரண்டு முதலிய திருச்சுற்றுக்கள் கட்டப்பட்டன. அவற்றில் நாடாண்ட அரசர்களும் சிற்றரசர்களும் பிறரும் எடுப்பித்த சிறிய கோவில்கள் நாளடைவில் இடம் பெற்றன.


 


மண்டபங்கள் 


 


கோவில்களில் செல்வாக்குப் பெருகப் பெருக நாளடைவில் அவற்றுள் பல மண்டபங்கள் ஏற்பபட்டன. செங்காட்டங் குடியில் 'சிறுத்தொண்ட நம்பி மண்டபம்' திருவெற்றியூர்க் கோவிலில் 'வக்காணிக்கும் மண்டபம்' (சமய வாதம் புரியும் மண்டபம்), ' மண்ணைக்கொண்ட சோழன்', 'இராசராசன்', 'இராசேந்திரன்' என்ற பெயர்களைக் கொண்ட மண்டபங்கள், ' இலக்கண விளக்க மண்டபம்', என்பன இருந்தன. நடன மண்டபம், நாடக மண்டபம்', திருப்பதிகம் பாடவும் எழுதவும் பயன்பட்ட திருக்கைக் கோட்டி மண்டபம், நூற்றுக் கால் மண்டபம் என்பன பல கோவில்களில் இடம் பெற்றன. திருவக்கரையில் ஆயிரக்கால் மண்டபம் இருந்தது.


 


மாளிகை மடம் முதலியன 


 


சில கோவில்களில் மாளிகைகள் இருந்தன. நீடூர்க் கோவிலில் இருந்த மாளிகை 'புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை' எனப் பெயர் பெற்றது.


 


'திரு மாளிகைத் தேவர்' 'மாளிகை மடத்து முதலியார்' என்னும் பெயர்களைக் காண, இம்மாளிகைகள், சைவ சமயப் பெரியோர்கள் தங்கியிருக்கவும் மக்கட்குச் சமய போதனை வழங்கவும் பயன்பட்டவை என்பது தெரிகிறது. பல பெரிய கோவில்களில் மடங்கள் இருந்தன. அவற்றில் சைவ சாத்திரங்களில் வல்ல துறவிகளும், சாத்திர மாணவர்களும் இருந்தனர். அத்தகைய மடங்கள் இருந்த கோவில்களில் 'சரசுவதி பண்டாரம்' என்ற நூல் நிலையம் இருந்தது. திருமுக்கூடல், எண்ணாயிரம், திரிபுவனை, திருவொற்றியூர், வேம் பற்றூர், திருவாவடுதுறை என்ற இடங்களில் கல்லூரிகள் இருந்தமையால், அங்கு நூல் நிலையங்கள் அமைந்திருந்தன என்று கூறுதல் மிகையன்றோ?


 


அம்மனுக்குத் தனிக்கோவில் 


 


பல்லவர் காலத்தும் பிற்காலச் சோழர்காலத்து முதற்பகுதியிலும் சிவன் கோவிலில் அம்மனுக்கென்று தனிக்கோவில் ஏற்படவில்லை. இறைவன் கருவறையிலேயே 'போக சக்தி அம்மன்' எனத் தனித்திருமேனி வைத்து வழிபடப்பட்டது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதல் ராஜேந்திரனது எண்ணாயிரங் கல்வெட்டே முதல் முதலாக அம்மன் தனிக் கோவிலைப் பற்றிக் குறிக்கின்றது. அதன் பிறகே அம்பிகைக்குத் தனிக் கோவில்கள் எடுக்கப்பட்டன. பின்னரே அம்மன் கோவில்கள் சிவன் கோவில்களில் புதியனவாக ஏற்பட்டன என்பதைப் பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


 


விநாயகர் கோவில் 


 


பாடல்பெற்ற கோவில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வமல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுதொண்ட நாயனார் சாளுக்கியர் தலைநகரமான வாதாபியை கைப்பற்றிய போது, இப் புதிய கடவுளை அங்குக் கண்டார்; தாம் முன்னர்க் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று, அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராள தேவன் கோவிலில் வைத்து வழிபடலானார்.1 அதுமுதல் சீராள தேவன் கோவில் ‘கணபதீச்சரம்’ எனப் பெயர்பெற்றது என்பது தெரிகிறது. இக் கணபதீச்சரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப் புதிய கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் உறவு முறை கற்பிக்கப்பட்டது; அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார்

-------------

[1]. A.R.E 1913,P,83


 


'மூத்தபிள்ளையார்' என்று 11-ஆம் திருமுறையில் இவர் இடம்பெறலானார். இவரைக் கணங்களுக்குப் பதியாகவும், துன்பந் துடைப்பவராகவும் தமிழர் கருதித் தங்கள் வழிபாட்டில் முதல் வணக்கத்தை இவர்க்கு உரிமையாக்கினர். இதனாற்றான் பெரிய புராணம் முதலிய பிற்பட்ட நூல்களில் விநாயகர் வணக்கம் தோற்றமெடுத்தது. இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை, "வாதாபி கணபதி, பஜேம் பஜேம்" என்னும் தோத்திரத்தாலும் நன்குணரலாம். இவர் சிவனுக்கு மகனானமைபற்றி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் இவருக்குத் தனிக்கோவில் ஏற்பட்டது.


 


முருகன் கோவில் 


 


முருகன் தமிழ் நாட்டுத் தெய்வம்; குன்று தோறாடுங்குமரன்; இப்பெருமான் குறவர் கோமான் மகளாகிய வள்ளியம்மையை மணந்தது இயல்பே. ஆனால் வடமொழியாளர் தமிழகத்திற்கு வந்து கலந்தபிறகு, முருகன் சுப்பிரமணியன் ஆக்கப்பட்டான்; அதன் பயனாக, இந்திரன் மகளாகிய தெய்வானையம்மை அவனுக்கு மற்றொரு மனைவியாகக் கிடைத்தாள். வட நாட்டில் வேத காலத்தில் இல்லாத சுப்பிரமணியன், இதிகாச காலத்தில் தெய்வமாக வழிபடப்பட்டான். சைவ வழிபாடு பெருகப் பெருக, வடவர் கலப்பு மிக மிக, இருவரது சமயச் சேர்க்கையின் பயனாக முருகன் சுப்பிரமணியானாகிச் சிவனுக்கு இரண்டாம் திருக்குமரனாகும் பேறு பெற்றான். [2] இதிகாசங்களிலும் முருகப் பெருமான் "சிவபெருமான்" என்றே கூறப்படுகின்றான். [3] எனவே, அப்பர் "சேந்தனை மகனாகக் கொண்டார்" "குமரன் தாதை" "தம் மகனார்முகம் ஆறு" என முருகனைத் தம் பாக்களில் குறிப்பிட்டுள்ளார். எனவே, புராணப் பெருக்கம் ஏற்பட்ட பிற்காலச் சோழர் காலத்தில் ( விநாயகருக்கு அமைந்தது போலவே) முருகப்பெருமானுக்கும் சிவன் கோவிலில் தனிக்கோவில் ஏற்பட்டது. இதனைத் திருவொற்றியூர்ச் சிவன் கோவிற் கல்வெட்டால் அறியலாம்.


 


முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் ( கி. பி. 1012-1042) அப்பெருங்கோவில்களில் பிள்ளைசுப்பிரமணியர், திருவட்டப்பிறைப் பிடாரியார், காராணை விடங்கதேவர், படம்பக்க தேவர், க்ஷேத்திர பால தேவர், சூரிய தேவர், அரிஞ்சீசுவரமுடையார், கம்பீசிவரமுடையார், விடேல்விடுகீசுவரர், துர்க்கையார், அணுக்கப் பிள்ளையார் என்ற பல தெய்வங்களுக்குச் சிறு கோவில்கள் ஏற்பட்டன என்று கல்வெட்டுக் கூறுகின்றது.4 இவற்றுள் திருவட்டப்பிறைப் பிடாரியார் என்பது காளியின் பெயர். அரிஞ்சயன் என்ற சோழன் எழுப்பிய லிங்கம் 'அரிஞ்சீசுவரமுடையார்' எனப் பெயர் பெற்றது. 'விடேல் விடுகு' என்பது 'விடை வெல் விடுகு' என்ற பல்லவரது நந்தி முத்திரையைக் குறிப்பது. இதனை முதல் தொடராகக் கொண்ட பல்லவ அதிகாரி ஒருவனால் கட்டப்பட்ட சிறிய சிவன் கோவிலே 'விடேல் விடுகு' எனப்பட்டது. சூரியனுக்கு மட்டும் தனித்த சிறுகோவில் கட்டப்பட்டதை இங்குக் காண்க.

-----------

[2]. T. R. சேஷ ஐயங்கார், திராவிட இந்தியா.

[3]. சி. வி. நாராயணையர், சைவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

[4]. A. R. E. 1919, P. 86.


 


ஒரே கோவிலில் பல மூர்த்தங்கள் 


 


திருவாரூர்ப் பூங்கோவில் இட அமைப்பில் மிகப் பெரியது. அதன் பெரிய திருச்சுற்றின் நான்கு பக்கங்களிலும் பல சிறு கோவில்கள் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறு கோவிலிலும் ஒரு லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே பல பெரிய கோவில்களில் திருச்சுற்று மேடைமேல் பல சிவலிங்கங்கள் இருத்தலைக் காணலாம். இவை ஏன் ஒரே கோவிலில் பலவாக இருக்கின்றன? சோழர் கால அரசாங்க அலுவலரும் பிறரும் தம் ஊரில் வழிபட்டு வந்த லிங்கத்தை நினைவிற்கொண்டு, தாம் புதிதாகப் பதவியேற்ற ஊர்க் கோவில்களிலும் அத்தகைய லிங்கங்களை அமைத்து வழிபடுதல் அக்கால மரபாக இருந்தது என்பதைப் பல கல் வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, இவ்வுண்மையை உணர்ந்தவர் ஒரே கோவிலில் பல லிங்கங்களும், பல விநாயகர் உருவச் சிலைகளும் முருகன் உருவச் சிலைகளும் இருத்தலைக் கண்டு குழப்பமடையார்; காலப்போக்கில் அவற்றுட் பல உருவச் சிலைகள் பூசையும் பொலிவும் இழந்து நிற்கும் பரிதாபக் காட்சியைக் காணும்போது, இவ் வரலாற்றை உணர்ந்தால் ஆறுதல் அடைவார்.


 


கல் தச்சருக்கு நன்றி


 


பல்லவர் காலத்தில் செங்கற்கோவில்களாகவும் சிறிய உருவினவாயும் இருந்த பல கோவில்கள் சோழர் காலத்தில் இங்ஙனம் கற்றளிகளாகவும் பெரிய உருவினவாகவும் மாறியதற்குச் சோழர் காலச் சைவசமய வளர்ச்சியே காரணமாகும். அவற்றைக் கற்றளிகளாக மாற்றிய கல் தச்சர்களின் பக்தியும் தொழில் திறமையும் பாராட்டத் தக்கன அல்லவா? சோழர் அத்தச்சர்களைப் பாராட்டினர்; நிலங்களை மானியமாக வழங்கினர். திருவா வடுதுறைக் கோவிலைக் கட்டிய கற்றளிப் பிச்சன் உருவம் அக்கோவிலில் இன்றும் இருக்கக் காணலாம்.


 


சூரியனார் கோவில் 


 


சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம்பட்டனத்திலிருந்த பல கோவில்களுள் 'உச்சிக்கிழான் கோட்டம்' (கனாத்திரம் உரைத்த கதை) என்பது ஒன்று.


 


'உச்சிக்கிழான்' என்பது சூரியனுக்குப் பெயர். அவனுக்கொரு தனிக்கோவில் அப்பழங்காலத்தில் இருந்தது. ஆனால் சிலப்பதிகாரத்திற்குப் பின்னர் நாயன்மார் காலத்திலோ, கி.பி.10-ஆம் நூற்றாண்டு வரையிலோ, தமிழகத்தில் சூரியனுக்குத் தனிக்கோவில் இருந்தமை தெரியவில்லை. முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் ஆடுதுறைக்குப் பக்கத்தில் சூரியனார் கோவில் என்ற பெயரில் சூரியனுக்குத் தனிக்கோவில் கட்டப்பட்டது என்று ஒரு *கல்வெட்டு கூறுகின்றது.5 கருவறை மேற்குப் பக்கத்தை நோக்கியுள்ளது. கருவறையில் மூலக் கடவுள் சூரியனே. அதன் பக்கத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி உருவச் சிலைகள் உள்ளன. சூரியனுக்கு எதிரில் கருவறைக்கு முன்பாகப் பிரஹஸ்பதி சிலை காணப்படுகிறது. கருவறையின் முக மண்டபம் மட்டும் கருங்கற்களால் கட்டப் பட்டுள்ளது. நவக்கிரகங்களில் சூரியனும் பிர ஹஸ்பதியும் நீங்கலாகவுள்ள இராகு, சுக்கிரன், கேது, சந்திரன், அங்காரகன், புதன், சனி என்ற எழுவர்க்கும் கருவறையைச் சுற்றிச் செங்கற்களாலான தனிக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 

-----------------


[5]. A.R.E.51 of D.1908


 


இக் கோவில் முழுவதும் 'குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம்' எனப் பெயர் பெற்றது என்று *கல்வெட்டு கூறுகின்றது. 'இச்சூரியனார் கோவிலில் காசிவிசுவேசுவரர் சிலையும், விசாலாட்சி சிலையும் இருத்தலை நோக்க, காசியிலிருந்து *குலோத்துங்கன் காலத்தில் சூரிய வணக்கம் தமிழகத்தில் நுழைக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கருதுதல் பொருந்தும். சோழர் காலத்தில் கன்னோசி நாட்டை ஆண்ட 'காஹடவால' அரசர்கள் சூரிய *வணக்கத்தைச் சிறப்பாகக் கொண்டவர்கள். குலோத்துங்கன் ஆட்சியில் சூரியனுக்கு என்று ஒரு தனிக் கோவில் கட்டப்பட்டதை நோக்க, குலோத்துங்க சோழனுக்கும், 'காஹடவால' அரசருக்கும் அரசியல் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும்," என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். [6]

-----------------


[6.] A.R.E.1908, P.66.


 


தனித்தனியே இருந்த விநாயகர், முருகன், அம்மன் இவர்கள் காலப் போக்கில் சிவன் கோவிலுக்குள் இடம் பெற்றாற்போலவே, (சூரியனுக்கும் பிற கிரகங்களுக்கும் மேற்குறிப்பிட்டவாறு தனிக் கோவில் ஏற்பட்ட பிறகு) சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்கள் சிவன் கோவிலில் நாளடைவில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருந்தும்.


 


கோவிலுக்காக உயிர் துறத்தல்


 


(1) கோவில் வளர்ச்சியில் தமிழ் மக்கள் தம் செல்வத்தைச் செலவிட்டாற் போலவே தம்முயிரையும் தியாகம் செய்துள்ளனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. திருவக்கரை சிவன்கோவிலில் சோழர் காலத்தில் ஆயிரக்கால் மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அது கட்டி முடிவதற்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றைக் கண்டு பொறாத சைவ நன்மகன் ஒருவன் அவ்விடையூறுகளுக்குப் பலியாகவும் மண்டபம் கட்டி முடிக்கப்படவும் தன் உயிரைத் தியாகம் செய்தான் என்று திருவக்கரைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. [7]

------------------------

[7]. 119 of 1906, 190 of 1904.


 


(2) மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் இலக்கியப் பழமை வாய்ந்தது. அங்குள்ள முருகப்பெருமான் பத்துப்பாட்டு, *பரிபாடல் என்னும் சங்கநூல்களில் பாராட்டப்பட்ட தெய்வம். பிற்காலத்தில் திருப்பரங்குன்றம் மலையில் குடைவரைக்கோவில் ஏற்பட்டது. அதற்குப் பின்பு குடைவரைக் கோவிலை அடுத்து மண்டபங்களும் பிறவும் கட்டப்பட்டன. சோழரும் பாண்டியரும் பின் வந்த நாயக்க மன்னரும் அக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தனர். எனவே, அங்கு பல கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன.


 


கி.பி.1792-ஆம் ஆண்டு ஆங்கிலப் படைவீரர் திருப்பரங்குன்றத்தைக் கைப்பற்றிக் கோவிலை நோக்கி விரைந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட *அர்ச்சகர், அவர்கள் நுழைவால் கோயிலின் தூய்மை கெடுமென்று அஞ்சினர்; குட்டி என்ற ஒரு தமிழனை, அப்படை வீரரைத் தடுக்க உயிர்த் தியாகம் செய்யும்படி வேண்டினர். உடனே அத் தமிழன் கோவில் கோபுரத்தின்மேல் ஏறினான்; அங்கிருந்து கீழே விழுந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்ட ஆங்கிலப் படைவீரர் அவனது தியாகத்தைப் பாராட்டிக் கோவிலுள் நுழையாது சென்றுவிட்டனர். [8] இச் செய்தியை அக் கோவிற் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இத்தியாக வீரர்களுக்கு நமது வணக்கம் உரியதாகுக.

---------


[8]. Madura Gazetteer, P.281; "தமிழ்நாடு" பொங்கல் மலர் 1955.

--------------------------------



6. கல்வெட்டுக்களும் சைவ சமயமும் *


 


சைவத்தின் பழைமை 


 


சைவ சமயம் உலகப் பழைய சமயங்களுள் ஒன்று. அஃது இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்துக்கும் (ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு) முற்பட்ட பழைமை உடையது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. [1] இச்சமயத்தின் சிறப்பு வழிபாடு லிங்க வழிபாடாகும். இந்த லிங்க வழிபாடு ஆரியர் வருகைக்கு முற்பட்டதாகும். இதனை முதலில் வெறுத்த ஆரியர், பின்பு கைக்கொண்டனர். மாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் சிவன் மகாதேவனாக்கப்பட்டான். இதற்குக் காரணம் ஆரியர்க்கு முற்பட்ட இந்திய மக்களுள் மிகப் பலர் லிங்க வழிபாட்டை மேற் கொண்டிருந்ததேயாகும்? [2]

---------


* இது, 1954 டிசம்பரில் விருதுநகரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாக சமாச ஆண்டுவிழாவிற் பேசப்பட்டது.

[1]. சர் ஜான் மார்ஷல் முகவுரை, சிந்துவெளி நாகரிகம் நூல் 1, பக். 7.

[2]. K.R.Subramaniyam, the Madras University journal, Vol.1, Part II.P.25


 


மிகப்பழைய லிங்கங்கள் 


 


கஜினி முகம்மதுவால் அழிக்கப்பட்ட சோமநாதபுரத்து லிங்கம், அல்டாமஷ் என்பவரால் அழிக்கப்பட்ட உச்சயினியில் இருந்த மகா காள லிக்கம். உச்சயினியில் உள்ள அமரேசுவர லிங்கம், ஸ்ரீசைல லிங்கம், நருமதைக் கரையிலுள்ள ஓங்கார நாதலிங்கம், வங்கத்திலுள்ள வைத்யநாதலிங்கம். நாசிக்கிலுள்ள திரயம்பகேசுவரலிங்கம், கௌத மேசலிங்கம், காசி விசுவேசுவரலிங்கம், திருக் கேதாரலிங்கம், தச்சினியிலுள்ள பீமசங்கரலிங்கம், இராமேசுவர லிங்கம் என்னும் பன்னிரண்டும் மிக்க பழைமை வாய்ந்தவை என்று நூல்கள் கூறும். திருப்பதியை அடுத்துள்ள குடிமல்லம், களத்தூர், குடிமீயான்மலை இவற்றில் உள்ள லிங்கங்கள் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையை உடையவை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.


 


குப்தர் காலத்தில் சைவம் வட இந்தியாவில் நன்கு வளர்ச்சி பெற்றது. கி.பி.6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகமிகிரர் என்ற வானநூல் வல்லார் லிங்கங்களை அமைக்கும் முறை பற்றி மிக நுட்பமாக எழுதியுள்ளார். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருமூலர் லிங்கங்கள் அமைப்பது பற்றித் தமது திருமந்திரத்தில் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.


 


கோவில்கள்


 


கி.பி.7-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அப்பர் சம்பந்தர் பாடல்களை நோக்க, தமிழகத்தில் வைப் புத்தலங்கள் உட்பட ஏறத்தாழ 500 சிவன் கோவில்கள் இருந்தன என்று கூறலாம். அவையனைத்தும் அழியத்தக்க செங்கல், மண், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை. ஆதலால் 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட மகேந்திரவர்மன் முதலிய பல்லவர்கள் கற்கோவில்களை அமைத்தனர்; மலைச் சரிவில் நடுப்பகுதியைக் குடைந்து மண்டபம் போன்ற கோவிலை அமைத்தனர். இக்கோவில்கள் குடைவரைக் கோவில்கள் எனப்படும். சிறிய பாறைகளைக் கோவில்களாகவே குடைந்து அமைத்தனர்; இவை ஒற்றைக் கற்கோவில்கள் எனப்படும். இவையே இன்று மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று தவறாகக் கூறப்படுகின்றன பின் வந்த பல்லவர்கள் பாறைகளைக் கற்களாக உடைத்து, இக்காலத்திலுள்ள கற்கோவில்களைப் போல அமைக்கத் தொடங்கினர். கயிலாச விமானம், தூங்கு ஆனை விமானம் என்ற இருவகை விமானங்களும் இக்கோவில்களில் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் முதன்முதல் கட்டப்பட்ட கற் கோவில் காஞ்சி கயிலாசநாதர் கோவிலாகும். அது பல்லவர் காலத்துக் கட்டடக் கலைக்கும் சிற்ப வளர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


 


பல்லவப் பேரரசு அழிந்து சோழப் பேரரசு ஏற்பட்டதும் சிறந்த சிவபக்தரான சோழ மன்னர்கள் பாடல்பெற்ற கோவில்களை எல்லாம் அழியாத கற்கோவில்களாக மாற்றினர்; தாமும் வானளாவிய விமானங்களைக்கொண்ட பெரிய கோவில்களை எடுப்பித்தனர்; பல்லவர் காலத்தில் இருந்த கோவில் ஆட்சியை விரிவுபடுத்தினர். சோழர்கட்குப் பின் வந்த விஜயநகர வேந்தர்கள், விமானங்களை உயர்த்தாது, வானளாவிய கோபுரங்களைக் கட்டி மகிழ்ந்தனர்; மிகப் பெரிய திருச்சுற்றுக்களையும் ஆயிரக்கால் மண்டபங்களையும் அழகுற அமைத்தனர்.


 


திருப்பதிகங்கள்


 


சுந்தரர் காலத்திலேயே திருவல்லம் திருக்கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யப்பட்டது என்று *கல்வெட்டு கூறுகின்றது. சோழர்கள் காலத்தில் திருமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டன; செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. பாடல் பெற்ற கோவில்களில் எல்லாம் திருப்பதிகங்கள் பாடும் ஓதுவார் நியமிக்கப்பட்டனர். இசையோடு பொருளுணர்ந்து பாடத்தக்க ஓதுவார்கள் நியமனம் பெற்றனர். திருவெற்றியூர்க் கோவிலில் தேவரடியார் பதினாறு பேர் திருப்பதிகம் ஓதினர். திருஆமாத்தூரில் குருடர் 16 பேர் *ஓதுவாராக இருந்தனர். திருத்தவத்துறையில் பிராமணர் இருவர் தேவாரம் ஓதினர். தஞ்சைப் பெரிய கோவிலில் 48 பேர் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தனர். இவ்வாறு பெரும்பாலான கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பட்டு வந்தன. ஓதுவார்களை மேற்பார்வையிடத் தேவார நாயகம் என்ற அரசாங்க உயர் அலுவலாளர் ஒருவர் இருந்தார் என்பது தெரிகின்றது. பெரிய கோவில்களில் ‘திருக்கைக் கோட்டி’ என்னும் பெயர் கொண்ட மண்டபங்கள் இருந்தன. அவற்றுள் திருமுறை நூல்கள் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. அழிந்தவற்றைப் புதுப்பிக்கவும், ஏடுகளைப் பூசிக்கவும் அவற்றை மேற்பார்வையிடவும் ஒருவரிருந்தார். அவர் ‘தமிழ் விரகர்’ எனப்பட்டார். அவருக்கு மானியம் விடப்பட்டிருந்தது. சீகாழி, திருக்காராயில், திருவீழிமிழலை, திருவுசாத்தானம் போன்ற கோவில்களில் இத்தகைய மண்டபங்கள் இருந்தன என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.


 


நாயன்மார் திருமேனிகள்


 


ஒவ்வொரு நாயனாரும் வாழ்ந்துமறைந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில் அவருக்குச் செம்பிலும் கல்லிலும் உருவங்கள் அமைக்கப்பட்டன; அவ்வுருவங்கள் பூசிக்கப்பட்டன. அவருக்கு விழா நடைபெற்றது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற சிறப்பு அடியார் உருவங்கள் பல கோவில்களில் எழுந்தருளப்பெற்றன. சுந்தரர் உருவச் சிலையோடு அவர் மனைவியர் உருவச் சிலைகளும், அவ்வாறே சிறுத்தொண்டர், அவர் மனைவியார், மகனார் உருவச் சிலைகளும் சில கோவில்களில் எழுந்தருளப்பெற்றன. சில செப்புத் திருமேனிகளுக்கு அடியில், ”உலகாண்ட மூர்த்தி.” தத்தா, நமரே காண் என்ற மிலாடுடையார்.” என்பன போன்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டன.


 


நாயன்மார் ஓவியங்கள் 


 


தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச் சுவரொன்றில் சுந்தரரைச் சிவபெருமான் தடுத்தாட்கொள்ளும் வரலாறும், சுந்தரர் யானைமீதும், சேரமான் குதிரை மீதும் கயிலைசெல்லும் காட்சியும் அழகொழுகும் ஓவியங்களாகத் திகழ்கின்றன. சுந்தரரும் சேரமானும் தலைமுடியும் தாடியும் வைத்திருத்தல் பண்டைக்கால மயிரொப்பனையும், அவர்கள் பலவகை அணிகளை அணிந்திருந்தமை அக்கால அணிவகைகளையும் நமக்கு நன்கு விளக்குவனவாகும்.


 


நாயன்மார் சிற்பங்கள் 


 


ஒவ்வொரு நாயனார் வரலாற்றிலும் உயிர் நாடியாகவுள்ள நிகழ்ச்சியைச் சிற்பமாகக் குறிக்கும் வழக்கம் சோழர் காலத்தில் உண்டாயிற்று. மேலைக் கடம்பூர்ச் சிவன் கோவிற் கருவறையின் புறச்சுவர்களில் இத்தகைய சிற்பங்களைக் காணலாம். இரண்டாம் இராசராசன் கட்டிய இராசராசேச்சரத்தில் எல்லா அடியார் நிகழ்ச்சிகளையும் ஒருங்கே கானலாம். கண்ணப்பர் வரலாறு பற்றிய சிற்பங்கள் தஞ்சைப் பெரிய கோவில் நடு மண்டபச் சுவரில் பல காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன. சண்டீச நாயனார் சிவபெருமானால் கொன்றை மாலை அணிவிக்கப்பட்டுச் சண்டீசப் பதம் கொடுக்கப்பெற்ற காட்சியே அந்நாயனார் வரலாற்றில் சிறப்புப் பகுதியாகும். இக்காட்சியை இராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழேச்சரத்தில் இன்றும் கண்டு களிக்கலாம். நாயன்மார் திருமேனிகளும், அவர்தம் வரலாற்றுச் சிற்பங்களும் பொதுமக்கள் பார்வையிற் பட்டு அவர்களைச் சிவநெறிச் செல்வர்களாக்க வேண்டும் என்பதே சோழ மன்னர்களின் விருப்பமாகும்:


 


நாயன்மார் விழாக்கள் 


 


செங்காட்டங்குடியில் சிறுதொண்ட நம்பி விழாவும், சீகாழியில் ஞானசம்பந்தர் விழாவும் திருவாரூரில் சுந்தரர் விழாவும், திருவதிகையில் திருநாவுக்கரசர் விழாவும், சிறப்பாக நடைபெற்றன. இவ்வாறே பல கோவில்களில் அவ்வத்தலத்து நாயனார் விழாக்கள் நன்கு நடைபெற்றன. அவை நன்கு நடைபெறக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன என்று பல கல்வெட்டுகள் கூறுகின்றன. பெருங்கோவில் விழாக் காலங்களில் திருத்தொண்டத் தொகை முதலிய பதிகங்களும், மார்கழித் திங்களில் திருவெம்பாவையும் ஓதப்பட்டு வந்தன.


 


நாயன்மார் பெயர்கள் 


 


சோழர் காலச் சைவ மக்கள் நாயன்மார்மீது அளவுகடந்த பற்றுக்கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்க, அவர்தம் பெயர்களைத் தம் பிள்ளைகட்கு வழங்கியதிலிருந்து அறியலாம். சிறுத்தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, பரவை நங்கையார், திருவெண்காட்டு நங்கை, கண்ணப்ப தேவர், ஐயாற்றடிகள், புகழ்த்துணையடிகள், காரிவேளார், கோட்புலி, சிங்கன் கலியன், காமன் தாயன், ஆரூரன் கம்பன், நம்பிவிடங்கன், அணுக்க வன்றொண்டன், உடைய நம்பி, கலையன் குமரன், ஆலால சுந்தரப் பல்லவரையன், தண்டியடிகள், கம்பன் மதுராந்தகன், திருநீலகண்டன், இளையான்குடி கிழவன், கலியன் மன்றாடி, பரசமயகோளரி, மானி, கலையன் மாணிக்கம் போன்ற எண்ணிறந்த பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.


 


அக்கால சைவ மக்கள் நாயன்மார் பெயர்களைத் தம் பிள்ளைகட்கு வழங்கியதோடு மட்டும் நில்லாது, இடங்களுக்கும் அப்பெருமான்களின் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது கல்வெட்டுக்கள் உணர்த்தும் செய்தியாகும். கண்ணப்ப தேவர் கமுகந்தோப்பு, திருஞான சம்பந்த நல்லூர், திருஞானசம்பந்த மங்கலம் என்னும் இடப்பெயர்கள் இங்குக் குறிக்கத்தக்கவை. பல மடங்களின் பெயர்கள் நாயன்மார் பெயர்களைத்தாங்கியிருந்தன. பரஞ்சோதி மடம், திருவரகீசன் மடம், தில்லைவாழ் அந்தணர் மடம், நம்பி திருமுருகன் திருமடம், நமிநந்தியடிகள் மடம், பரசமயகோளரி மடம், திருத்தொண்டத் தொகையான் திருமடம், திருமூலதேவர் மடம், சிறுத்தொண்டர் திருமடம் என்பன குறிக்கத்தக்கவை.


 


திருமுறைகளும் மக்களும் 


 


அக்கால மக்கள் திருமுறைகளிடம் கொண்டிருந்த அளப்பரிய பற்றைப் பின்வரும் மக்கட்பெயர்களும், ஊர்ப் பெயர்களும் நன்குணர்த்தும். தேவாரம் அழகியான், ஆண்டார் திருத்தொண்டத் தொகையான், திருமுறைத் தேவாரச் செல்வன், திருத்தொண்டைத் தொகை நல்லூர், திருத்தொண்டத்தொகை மங்கலம் என்பன போன்ற பெயர்களைக் காண்க.


 


திருமுறைகளை நன்கு படித்த பழக்கத்தால் அக்காலச் சைவ நன்மக்கள் நாயன்மார் பயன்படுத்திய சொற்றொடர்களை மக்களுக்கும் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் பெயர்களாக வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவற்றுள் சில கீழே காண்க:


 


(1) சிவாய "நமவென்று நீறணிந்தேன்" என்பது அப்பர் தேவாரம். "நீறணிந்தான் சேதிராயன்" என்பது ஒரு சிற்றரசன் பெயர். (2) "நச்சுவார்க்கினியர் போலும் நாகையீச் சுவரனாரே" என்பது அப்பர் வாக்கு. "நச்சினார்க் கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான்" என்பது ஓர் அரசியல் அலுவலன் பெயர். (3) "மழபாடி வயிரத்தூணே என்றென்றே நான் அரற்றி" என்பது அப்பர்வாசகம். "ஆனைமங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்தூண்" என்பது ஒருவன் பெயர். (4) அரசாள்வர் "ஆணைநமதை" என்பது சம்பந்தர் வாக்கு. "ஆணைநமதெ"ன்ற பெருமான் என்பது ஒருவன் பெயர். (5) "பொன்னார் மேனியனை" என்பது சுத்தரர் சொற்றொடர். "பொன்னார் மேனி விளாகம்" என்பது ஓரிடத்தின் பெயர். (6) கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்) திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில், "பிச்சன் என்று பாடச் சொன்னான்" என்ற பெயர் கொண்ட ஊதுகொம்புகள் இரண்டு இருந்தன.


 


சமய நூல் விளக்கம்


 


பல கோவில்களில் சைவசமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டன. பாரதம் இராமாயணம், சிவதர்மம், திருஞானம், சோம சித்தாந்தம் என்பன பல கோவில்களில் பேசப்பட்டு வந்தன. ஆளுடைய நம்பி ஶ்ரீபுராணம் (பெரிய புராணம்) திருவொற்றியூரில் படிக்கப் பட்டது. அதனைச் சோழன் இரண்டாம் இராசாதிராசன் இருந்து கேட்டு மகிழ்ந்தான் என்று திருவொற்றியூர்க் கல்வெட்டுக் குறிக்கின்றது. திருநீடூரில் 'புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை' ஒன்று முதற் குலோத்துங்கன் காலத்தில் இருந்ததாகத் தெரிகின்றது.


 


ஆடலும் பாடலும்


 


கோவில்களில் சமயத் தொடர்பான ஆடல்களையும் பாடல்களையும் நிகழ்த்த ஆடல் பாடல்களில் வல்ல மகளிர் அமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை எண்ணிறந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இராசராசசோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோவிலில் மட்டும் 400 கலைவாணிகளை அமர்த்தியிருந்தான். அவர்கள் தமிழகத்துப் பல்வேறு கோவில்களிலிருந்து வருவிக்கப் பட்டவர்கள். ஓவ்வொருத்திக்கும் ஒரு வேலி நிலமும் ஒரு வீடும் வழங்கப் பட்டன. இவ்வாறு பல கோவில்களில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்து சமயப் பணியாற்றினர். இவருள் 'பதியிலார்' ஒருவகையினர் : 'ரிஷபத் தளியிலார்' (சிவன் கோவிற் பெண்டுகள்) மற்றொரு வகையினர் ; திருவொற்றியூர்க்கோவிலில் சொக்கம், சந்திக்குணிப்பம் என்னும் நடன வகைகளைப் பதியிலார் ஆடும்போது, ரிஷபத்தளியிலார் மிழற்றுப் பாடலை வழங்கினர். ரிஷபத்தளியிலார் அகமார்க்கம், வரிக்கோலம் என்னும் நடன வகைகளை நடித்துக் காட்டினர். பதியிலார் திருப்பதிகக் கருத்துகட்கும், திருவெம்பாவைக் கருத்துகட்கும் ஏற்றவாறு நடித்தனர் என்பது திருவொற்றியூர்க் கல்வெட்டால் தெரிகின்றது. இத்தகைய திருப் பதிகத்திற்கு ஏற்ற நடன வகைகள் இன்று இல்லா திருத்தல் வருந்தற்குரியது.


 


தேவரடியார்


 


கோவில்களிலிருந்து தொண்டாற்றிய மாதர்களுள் தேவரடியார் ஒரு வகையினர். இவர்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுக்கிடல், திருவமுதுக்குரிய அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர்; திருநீற்றுக் காப்புத்தட்டும் மலர்த்தட்டும் விழாக்களில் ஏந்தி வந்தனர்; விழாக் காலங்களில் அம்மனுக்குக் கவரிவீசினர்; அச்செயலால், 'கவரிப்பிணா' என்றும் அழைக்கப்பட்டனர். இங்ஙனம் தேவரடியார் நிலையை அடைந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட சாதியரல்லர்; எல்லா இனத்து மகளிரும் இச் சைவப்பிணியை மேற்கொண்டு சூல முத்திரை பொறிக்கப் பெற்றுத் 'தேவரடியார்' என்னும் தகுதியைப் பெற்றுவந்தனர். அழகிய பாண்டிய பல்லவரையன் என்ற படைத்தலைவனொருவன் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியார் ஆக்கினான் என்று திருவல்லம் கோவிற் கல்வெட்டுத் தெரிவித்தலை நோக்க, இவ்வுண்மை இனிது புலனாகின்றது.


மடங்கள்


 


பௌத்த மதத்திற்கும், சமண மதத்திற்கும் அச்சமயக் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்ததுபோலவே, சைவ சமய வளர்ச்சிக்குக் கோவில் களை அடுத்தும், தனித்தும் தமிழகத்தில் பல மடங் கள் இருந்தன. அப்பர், சம்பந்தர் கால முதலே மடங்கள் சிவப்பணியைச் செய்துவந்தனவாயினும் சோழர் காலத்தில் மிகப் பல மடங்கள் தோன்றிச் சமயத் தொண்டினை நன்கு ஆற்றலாயின. திருவா வடுதுறையில் மட்டும் திருநீல விடங்கன் மடம், சிவலோக நாயகன் மடம், சர்வதேவன் மடம், பஞ்சநதிவாணன் மடம், சங்கரதேவன் அறச்சாலை, பிரமாண வாசகன் மடம், நாற்பத்தெண்ணாயிரவன் மடம், முந்நூற்றிருபத்து நால்வன் மடம், பெருந் திருவாட்டி அறச்சாலை என்பன இருந்தன. இவ்வாறு பல பெருங் கோவில்களை அடுத்திருந்த மடங்களுக்குப் பக்கத்தில் மருத்துவ மனைகளும் அமைப்புண்டிருந்தன.


 


இவற்றுள் காலாமுகச் சைவர்களின் மடங்கள் சில; காபாலிகச் சைவர் மடங்கள் சில; வீர சைவ மடங்கள் மிகச்சில; வடநாட்டுக் கோளகி மடத்தைச் சேர்ந்த கிளை மடங்கள் சில; வாரணாசிக் கொல்லா மடத்துக் கிளைகள் சில தமிழகத்து இருந்தன; வாரணாசி பிக்ஷா மடத்துக் கிளை மடங்கள் சிலவும் இருந்தன. இவை அனைத்திலும் மேற்சொன்ன பல வகைச் சமய நூல்கள் பொதுமக்களுக்குப் படித்து விளக்கப்பட்டன.


 


தமிழ்ச் சைவ மடங்கள்


 


மாளிகை மடத்து முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த மடங்கள் சில; சண்பைக்குடி முதலியார் சந்தான மடங்கள் சில; மருதப் பெருமாள் சந்தான மடங்கள் சில; இச் சைவ மடத்துத் தலைவர்கள் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும், சைவத் திரு முறைகளிலும் சிறந்து விளங்கினர்; மக்களை நல் வழிப்படுத்தினர். இச் சைவ மடாதிபதிகளின் செல்வாக்குத் தமிழகத்தில் மிகுந்து பரவியது. தமிழகத்துச் சைவம் சாதிபேதமற்றது; 'அன்பே சிவம்' என்ற கொள்கையால் அனைவரையும் ஒரு தாய் ஈன்ற மக்களாகக் கருதும் விரிந்த மனப் பான்மையுடையது. ஆதலால், பெரும்பாலரான தமிழ் மக்கள் இச் சைவ மடத்துத் தலைவர்களின் அருளுரைகளில் பெரிதும் ஈடுபட்டனர். இச்சைவ மடங்களைப்பற்றி ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுதல் காண்க.*

-----------------


*......Saivism thus appears to have gradually grown stronger and stronger under the patronage of the *chola kings so that in the beginning of the 13th century we notice a number of mathas presided over by Saiva sanyasins, spreading their infludence over a pretty large portion of the Tamil country. All this must have been in spite of the teachings of the great Advita philosopher Sankaracharya whosedoctrines are well known. The philosophical expositions of Advaita teacher do not exclude the methods of pious devotion to be practised in the first stages of spiritual development, but insist on strict adherence and the paths of Karma as laid down in the sastras. The Saiva creed, on the other hand, does not appear to have paid much attention to sastric Karma but, taking unsullied devotion to Siva as its basis, it received into its fold all classes of people without any distinction of caste. ThisCatholicity of the Saiva faith rendered it not very popular with the orthodox Brahmanas but the non-brahman classes eagerly took to it and at the begining of the 13th century, as stated already, it was apparently very influential with its centres in many places...... The mathas of the Saiva sanyasins called Sivayogins (177 of 1908) of Maheswaras (164 of 1908) were mostly named after the famous Brahman Saiva saint Tirugnanasambandan and the non-Brahman saint Tirunavukarasar - A. R. E. 1909, 103.


 


இங்ஙனம் சோழப் பேரரசர் ஆதரவில் சைவ சமயம் படிப்படியாக வளர்ச்சியுற்றுக் கி.பி.13 ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் பல மடங்களைத் தமிழ்நாடெங்கும் பெற்றிருந்தது. அந்த மடங்களின் தலைவர்களாக இருந்த சைவத் துறவிகள், பெரும்பாலான தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தனர். புகழ் பெற்ற அத்வைத ஆசிரியரான சங்கராச்சாரியார் இதே தமிழகத் திலிருந்து பக்தி நெறியைப் பரப்பியவர். ஆனால், அவர் சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்யவேண்டுமென்று வற்புறுத்தினார். இவ்வறிவுரைக்கு மாறாகச் சைவ சமயம் காணப்பட்டது; சாதி வேறுபாட்டைக் கருதாது, எல்லா மக்களையும் பக்தி ஒன்றையே அடிப்படையாகக்கொண்டு, தன்பால் அணைத்துக் கொண்டது. இதனால் வைதிகப் பிராமணர் சைவத்திற் கலக்கமுடியவில்லை; ஆயின், பிராமணரல்லாத வகுப்பாரனைவரும் சைவத்தைத் தழுவினர். இதன் பயனாக, முன் சொன்னவாறு சைவ மடங்கள் நாடெங்கும் விளங்கின. அவை, பிராமணரான திரு ஞானசம்பந்தர் பெயரைத் தாங்கியும் அப் பிராமணரான திருநாவுக்கரசர் பெயரைத் தாங்கியும் மிகப்பலவாக விளங்கின.


 


சோழர்க்குப் பிற்பட்ட நாயக்கர் காலத்தில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் மெய்கண்ட சந்ததிமடம் ஒன்றிருந்தது. இம்மெய்கண்ட சந்ததியில் வந்த நமசிவாய தேசிகரால் ஏற்படுத்தப்பட்டதே திருவாவடுதுரை ஆதீனம். அதே சந்ததியைச் சேர்ந்த ஞானசம்பந்த தேசிகரால் உண்டானது தருமபுர ஆதீனம்.


 


சைவ மடங்கள் ஏறத்தாழக் கி. பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கோவில் ஆட்சியையும், சமய வளர்ச்சியையும் கவனித்து வந்தன. இவை சமய யாத்திரிகர்களுக்குப் புகலிடமாய் விளங்கின; சமயக் கல்வியையும் சமயவொழுக்கத்தையும் பொதுமக்களிடையே வளர்த்தன. பிணியாளர்களும் இம்மடங்களில் மருந்து முதலியன பெற்றனர்.


 


குகைகள்


 


இப்பெயர் கொண்ட ஒருவகை மடங்கள் பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றன. சீகாழி, சிதம்பரம், திருப்புகலூர் முதலிய பலவூர்க் கோவில்களில் இவையிருந்தன. இவை பாதுகாப்பு மிக்கவை; திருமுறைகளில் வல்ல சைவத் துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றவை. இத்தலைவர்தம் சீடர்கள் பல கோவில்களிலிருந்து திருமுறைகளை ஓதினார்கள். சில குகைகளில் தவசிகள், ஆண்டார்கள், யாத்திரீகர் முதலியோர் உண்பிக்கப்பட்டனர். இத்தகைய குகைகளாலும் முன்சொல்லப்பட்ட மடங்களாலும் சைவசமயம் நன்கு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். 


 


மக்கள் தொண்டே சமயத்தொண்டு


 


பெருங்கோவில்களில் பொதுமக்கள் நலனுக்காக நூல் நிலையம் இருந்து வந்தது. அதனைச் 'சரசுவதி பண்டாரம்' என வழங்கினர். சில பெரிய கோவில்களை அடுத்து மருத்துவமனைகள் இருந்தன. அவற்றுள் மருத்துவரும் (Physician), சல்லியக்கிரியை பண்ணுவாரும் (Surgeon), தாதிமாரும் (Nurses), மருந்துப் பொருள்களைக் கொண்டு வருபவரும், மருந்துகளைச் செய்வோரும் இருந்தனர். நோயாளிகளுக்குப் படுக்கைகள் இருந்தன.. ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுக் குடிமக்கள் தவிக்கும்போது, அவ்வூர்க் கோவிலில் உள்ள வெள்ளி, பொன் நகைகளையும் பாத்திரங்களையும் உருக்கி ஊரார்க்குக் கடனாக உதவுவதும், பஞ்சம் நீங்கிய பிறகு உதவிய கடனை மீட்டுப் பெறுவதும் வழக்கமாக இருந்தது என்பது ஆலங்குடிக் கல்வெட்டால் தெரிகின்றது.


 


இங்ஙனம் கோவில்கள் பொருளாதாரத் துறையிலும், உடல்நலத் துறையிலும், அறிவுத் துறையிலும், சமயத் துறையிலும் பொது மக்களுக்குத் தொண்டு செய்துவந்தமையாற்றான், தமிழகத்தில் சைவ சமயம் மக்களுக்குப் பயன்படத்தக்க சமயமாக விளங்கியது. இப்பண்டை நிலை மீண்டும் புதுப்பிக்கப்படுமாயின், சைவ சமயம் மக்கள் சமயமாக மலர்ச்சிபெறும். திருக்கோவில் வழிபாடும் தாய் மொழியில் நடைபெறுதல் வேண்டும். திருவொற்றியூர்க் கல்வெட்டில் கண்டபடி, திருப்பதிகங்கள், திருவாசகம் இவற்றின் கருத்துக்களைப் புலப்படுத்தும் நடன வகைகளும் வளர்ச்சி பெறுதல் வேண்டும். தமிழ் நடன ஆசிரியர்களும், தமிழ் நடனப் பெண்மணிகளும் இத்துறையில் விரைந்து கவனஞ் செலுத்த வேண்டும்.


 


இந்நிலை ஒவ்வொரு கோவிலிலும் ஏற்படுமாயின், நம் திருமுறைகளின் உண்மைச் சிறப்பினை மக்கள் உணர்ந்து பயன்பெறுதல் கூடும். இம் முறையைப் பின்பற்றாமல், தமிழ் மக்களுக்கே புரியாத மொழியில் தமிழகத்துக் கோவில்களில் வழிபாடு நடைபெறுவதால், மன வொருமைப்பாட்டுக்குரிய திருக்கோவில்கள் அப்பணியைச் செய்யத் தவறியவை ஆகின்றன. ஆதலால் நாட்டிலுள்ள சைவ நன்மக்களும், மக்கள் நலனுக்காக விளங்கும் அரசாங்கமும் இத்துறையில் கவனஞ் செலுத்தி, தமிழகத்துத் திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை நடைமுறையில் கொணர்தல் வேண்டும். இங்ஙனம் தமிழில் வழிபாடு நடைபெறும் நன்னாளே நம் சைவம் தழைத்தோங்கும் பொன்னாளாகும்.

--------------------------



7. சைவத் திருமுறைகள் - I



திருமந்திரம்

பன்னிரு திருமுறைகள் 


 


திருஞான சம்பந்தர் பாடிய திருமுறைகள் மூன்று; திருநாவுக்கரசர் பாடிய திருமுறைகள் மூன்று; சுந்தரர் பாடிய திருமுறை ஒன்று; மணிவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை; திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் என்ற ஒன்பது அடிகளார்கள் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. திருமந்திரம் பத்தாம் திருமுறை; காரைக்காலம்மையார் முதலிய பன்னிருவர் பாடிய பாக்களின் தொகுதி பதினோராம் திருமுறையாகும். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றியும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியைப் பின்பற்றியும் சேக்கிழால் பாடிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும்.


 


சம்பந்தரும் அப்பரும் கி. பி. 7-ஆம் நூற்றாண்டினர் ஆதலால் முதல் ஆறு திருமுறைகள் கி. பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சுந்தரரும் மாணிக்கவாசகரும் கி. பி. 9-ஆம் நூற்றாண்டினர் ஆதலால் ஏழாம் திருமுறையும் எட்டாம் திருமுறையும் ஒன்பதாம் திருமுறையும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் கி. பி. 4, 5, 6 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தது. பதினோராம் திருமுறையிற் கண்ட காரைக்காலம்மையாரும் ஐயடிகளும் சம்பந்தர்க்கு முற்பட்டவர். கல்லாடர், கபிலதேவர், பரணதேவர், நக்கீரதேவர், சேரமான் பெருமாள் நாயனார் என்பவர் கி. பி. 9-ஆம் நூற்றாண்டுக்குட்பட்டவர். நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் காலத்தவர். பட்டினத்தடிகள் கி. பி. 10-ஆம் நூற்றாண்டினர். ஒன்பதாம் திருமுறை பாடிய கருவூர்த்தேவர் முதலியோர் சோழர் (கி. பி. 900-1200) காலத்தவர்.


 


திருமந்திரம் 


 


திருமந்திரம் சைவத் திருமுறைகளில் காலத்தால் முற்பட்டது. இதனைச் செய்த திருமூலர் கேதாரம், நேபாளம், காசி, விந்தம், ஸ்ரீசைலம் இவற்றைத் தரிசித்துக்கொண்டு தென்னாடுவந்தவர், வடமொழி ஆகமங்களின் சத்துப்பொருளைத் தமிழில் பாடவேண்டும் என்ற கருத்தினால் மூவாயிரம் செய்யுட்களைக் கொண்ட திருமந்திரம் என்னும் நூலைச் செய்தனரென்று சேக்கிழார் கூறுகின்றார். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப்படும். திருமந்திரம் திருமூலர் காலத்திலிருந்த சைவசமய நிலையை உணரத் துணைபுரிவதாகும்.


 


(1) முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, காம அடக்கம், அந்தணர் ஒழுக்கம், அரசன் கடமை, அறஞ் செய்தலின் சிறப்பு, அன்பை வளர்த்தல், பிறர்க்கு உதவி செய்தல், கற்றவரிடமிருந்தும் நூல்களிலிருந்தும் அறிவை வளர்த்தல், மனத்தை விருப்பு வெறுப்புக்களிற் செல்லவிடாமை முதலிய அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.


 


(2) இரண்டாம் தந்திரத்தில் அகத்தியர் தென்னாடு போந்தது, சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தின் தோற்றம், தக்கனது யாகம், பிரளயம் பற்றிய புராணக் கதைகள் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. படைத்தால், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் சிவனுடைய ஐந்தொழில்களும், சிவன் - சக்தி விளையாட்டால் உண்டான உயிர்களைப் பற்றிய விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. சிவ நிந்தை, அடியார் நிந்தை கூடாதென்பதும், கோவில்களை அழிப்பது தீதென்பதும், பொறையுடைமை, பெரியாரைத் துணைக்கோடல் முதலியனவும் பேசப்பட்டுள்ளன.


 


(3) மூன்றாம் தந்திரம் முழுவதும் யோகத்தைப் பற்றியது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எண்வகை யோகமுறைகளும் அவற்றால் அடையும் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப்பின் உடலை வெல்லுதல் முதலிய யோகநிலைச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.


 


(4) நான்காம் தந்திரம் மந்திர சாதனம் பற்றியது. இப்பகுதியில் அஜபா மந்திரம், பைரவி மந்திரம் முதலியன கூறப்பட்டுள்ளன. திருஅம்பல சக்கரம், திரிபுர சக்கரம், ஏரொளிச் சக்கரம், பைரவச் சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், புவனாதிபதி சக்கரம், நவாக்ஷரி சக்கரம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.


 


(5) ஐந்தாம் தந்திரத்தில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் என்பவை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. பின்பு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன குறிக்கப்பட்டுள்ளன; பின்னர்ச் சன்மார்க்கமும் அதன் பிரிவுகளான சகமார்க்கம் (கடவுளை நண்பனாகக் கருதி நடத்தல்), சத்புத்ர மார்க்கம் (கடவுளுக்கு மகனாக நடத்தல்), தாசமார்க்கம் (கடவுளை ஆண்டானாகக் கருதி நடத்தல்) என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. அடுத்து, சாலோகம் (இறை உலகில் வசித்தல்), சாமீப்யம் (கடவுளுக்கு அண்மையில் வசித்தல்), சாரூப்யம் (இறையோடு சமநிலை அடைதல்), சாயுச்யம் (இறையோடு கலத்தல்) என்பன குறிக்கப்பட்டுள. கடவுள் சக்தி-மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்னும் நான்கு முறைகளில் இறங்குதல் கூறப்பட்டுள்ளது. சைவத்திற்குப் புறம்பான சமயங்கள் கண்டிக்கப்பட்டுள்ளன. உட்சமயங்கள் ஏற்கப்பட்டுள்ளன.


 


(6) ஆறாம் தந்திரத்தில் உயிர் நாடியாக உள்ளவை சிவகுரு தரிசனம், அவனது திருவடிப்பேறு, ஞானத்தின் பொருள், தெரிபவன்-தெரியப்பட்ட பொருள், துறவு, தவம், அருளிளலிருந்து தோன்றும் அறிவு, பக்திக்குப் பக்குவமுடையவர் இலக்கணம், பக்குவம் அடையாதார் இலக்கணம்,திருநீற்றின் பொருள் என்பவையாகும்.


 


(7) ஏழாம் தந்திரத்தில் ஆறு ஆதாரங்கள், அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவ லிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம் என்னும் ஆறு லிங்கங்கள், சமயச் சிறப்புப் போதனை, ஆத்மாவில் உள்ள சிவனுக்கேற்ற வழிபாடு, குருவாகிய சிவனுக்கேற்ற வழிபாடு, மகேசுவர பூசை (அடியார்க்கு உணவளித்தல்), அடியார் பெருமை, உணவு விடுதி, பலவகை முத்திரைகள், பலவகை யோகிகள் இறப்புக்குப் பின் அடையத்தகும் உலகங்கள், அவர்கள் தங்கள் உடலங்களை விடும் முறை, இடகலை-பிங்கலை நாடிகள், பிராணன்-புருஷன்-அணு, சீவன், பசு, போதம் என்னும் ஆறு, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் போதனை, கூடா ஒழுக்கம் முதலியன் பேசப்பட்டுள்ளன.


 


(8) எட்டாம் தந்திரத்தில் உடலின் அமைப்பு, சிவத்தில் கலக்க உடம்பை விடும் முறை, பதினொரு அவத்தைகள், அறிவுத் தோற்றம், சித்தாந்தத்தின் விளக்கம், பிற சமயங்களும் அதற்கும் உள்ள தொடர்பு, பதி-பசு-பாச விளக்கம், பிரமனும் மாலும் காணாத சிவன் என்பதற்குரிய தத்துவ விளக்கம், காமம்-வெகுளி-மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள், தத்-த்வம்-அசி என்னும் மூன்று பதங்கள், மூன்று துரியங்கள், மூன்று முக்திகள், மூன்று சொரூபங்கள், மூன்று கரணங்கள், மூன்று சூன்யங்கள், காரிய-காரண உபாதிகள், உபசாந்தம், புறங்கூறாமை, சிவநிந்தை ஒழிப்பு, அகத்தாமரை பற்றிய வருணனை, 'தத்துவமசி, அகம் பிரம்மாசி' என்பவை பற்றிய ஆராய்ச்சி, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல், பக்தி வளர்த்தல், தூய்மை அடைவதிலும், விடுதலை பெறுவதிலும் நாட்டம் கொள்ளுதல் முதலியன கூறப்பட்டுள்ளன. 


 


(9) ஒன்பதாம் தந்திரத்தில் குரு, குருமடம், குரு தரிசனம் முதலியனபேசப்பட்டுள்ளன; சிவானந்த நடனம், சுந்தர நடனம், பொன்னம்பல நடனம், பொன்தில்லை நடனம், ஆச்சரிய நடனம் என்பன விளக்கப்பட்டுள்ளன; அறிவு மலர்தல், உண்மை அறிவின் இன்பம், தன் உருக்காட்சி, ஊழ், சிவனைக் கண்டு அவனது உண்மை உருவை உணர்தல். சமாதி நிலை அடைதல் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. இறைவனைப் பற்றிய வழிபாட்டுப் பாடல்களுடன் இந்நூல் முடிவுபெறுகின்றது. திருமூலர் நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என வேதங்களிலிருந்து கிளைத்த ஆறு உட்பிரிவுகளைக் கூறுகின்றார்.


 


அறுவகைச் சித்தாந்தம்


 


பாசுபதம், மாவிரதம், காபாலம், வா*மம், பைரவம், சைவம் என்பன சைவத்தின் உட்பிரிவுகளாகும்.


 


(1) பாசுபதம்: ஆன்மாக்களுக்கு ஆணவ மலம் இல்லை; மாயை, கன்மம் என்ற இரண்டால் பந்த முற்று இன்ப துன்பங்களை நுகரும். இவற்றில் வெறுப்புற்றுச் சாத்திர முறையால் தீட்சை பெற்ற வனிடம் இறை அறிவு பற்றும். அப்பொழுது இறைவன் தன் குணங்களை அவன்பால் பற்றுவித் துத் தன் அதிகாரத்திலிருந்து ஓய்வுபெறுவான். இது பாசுபதர் கொள்கை. பாசுபதன் தன் உடம் பில் சாம்பலையும் களிமண்ணையும் பூசுவன்; கறுப்பு உடைகளை அணிவன்; தலையை முடியிட்டுக் கொள் வன்; முடியிடாமலும் விடுவன். பாசுபதர் இதிகாச காலமுதலே நாட்டில் இருப்பவர்; பசுபதி வழிபாட் டினர்; லிங்க வழிபாட்டினர்; சிவனுடன் கணங்களை யும் பேய்களையும் இணைத்து வழிபடுவர்; சாதி வேறு பாடற்றவர்; செபம், தவம் இவற்றில் ஈடுபட்டவர்; முகம், கைகள், மார்பு, கொப்பூழ் இவற்றில் லிங்க முத்திரை பதிப்பவர். சிவன் யோக ஆசாரியனாக வந்து குரு, ததீசி, அகத்தியன், உபமன்யு என்ற நால்வர்க்கும் பாசுபத ஞானத்தை உபதேசித்தான். அவர்கள் பாசுபத ஞானத்தைப் பலர்க்கும் உபதே சித்தனர் என்பது பாசுபதர் நம்பிக்கை. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன இச்சைவத்தில் வற்புறுத்தப்படுகின்றன.


 


2. மாவிரதம்: பாசுபதக்கொள்கையில் கூறப்பட்ட ஆன்மாக்கள் பந்தமுற்று இன்பதுன்பங்களை நுகரும். சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள முறையில் தீட்சை பெற்று எலும்பு மாலை அணிதல் முதலிய சரியைகளில் வழுவாது ஒழுகுபவர் முத்தராவர். முத்தருக்குச் சிவனோடு சமமாக எல்லாக் குணங்களும் உற்பத்தியாகும். இது மாவிரதியர் கொள்கை. இவர்கள் நெற்றியில் மூன்று கீற்றுக்களாகா விபூதி அணிவர்; உடல் முழுவது நீறு பூசுவர்; தலைமயிரின் உச்சியில் எலும்பு மணிகள் கட்டியிருப்பர்; காதில் எலும்பு மணிகளைக் குண்டலங்களாக அணிவர்; கழுத்தில் எலும்பு மணித் தாழ்வடம் அணிவர்; முன்கையில் எலும்பு மணி கோத்த கயிறு கட்டுவர்; தோளில் யோகப் பட்டிகையும், கறுப்பு மயிர்க் கற்றையாலான பூணூலும் அணிவர்; கோவணம் தரிப்பர்; அதன்மேல் அசைந்தாடும் சிறிய உடையைத் தரிப்பர்; மண்டை ஓட்டில் உணவு கொள்வர். சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுவதும் பூசுவர். இவருள் ஒரு பிரிவினர் "காளாமுகர்" என்றும் கூறப்படுவர்.


 


3. காபாலம்: ஆன்மாக்களின் இயல்பு, பந்த இயல்பு மாவிரதியர் கொண்டவாறே காபாலிகளும் கொண்டுள்ளனர். சாத்திர முறைப்படி தீட்சை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்றைக் கையில் ஏந்தி நாள்தோறும் மனிதர் தலையோட்டில் ஐயம் ஏற்று உண்பவர், முத்தராய்ச் சிவன் ஆவேசித்தலால் எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமயமாவர் என்பது காபாலிகர் கொள்கை. காபாலிகம், பாசுபதம்போலப் பழைமையானது. காபாலிகர் சிவனைக் கொடிய பைரவ வடிவில் வணங்குவர்; உடம்பில் பிணச்சாம்பல் பூசுவர்; தலையில் சடை உடையவர்; தலை மாலை அணிபவர்; புலித் தோலாலான கோவணத்தை உடுப்பர்; இடக்கையில் கபாலம் ஏந்தியிருப்பர். வலக்கையில் மணி ஒன்று பிடித்திருப்பர். இக்காபாலிகர் நரபலியில் ஈடுபட்டவர். சிறுத் தொண்டர் இப்பிரிவைச் சேர்ந்தவர் ஆதலால் பைரவ வேடத்தில் வந்த அடியவருக்குத் தம் மைந்தனை அறுத்துக் கறி சமைத்துப் படைத்தார் என்பது இங்கு அறியத்தக்கது.


 


4. வாமம் - உலகம் சக்தி மயமானது. வாம நூலில் விதித்த முறைப்படி ஒழுகிச் சக்தியில் லயித்தலே முக்தி என்பது சக்தி வழிபாட்டினர் கொள்கை. இவ்வழிபாட்டினர் 'சாக்தர்' எனப் படுவர். மிகப்பழைய காலத்தில் தோன்றிய தாய் வழிபாட்டின் வளர்ச்சியே 'வாமம்' அல்லது 'சாக்தேயம்' என்பது.


 


5. பைரவம் - பெரும்பாலும் வாம மதத்தோடு ஒத்துச் சிறுபான்மை ஆசாரங்களில் வேறுபட்டுப் பைரவனே பரம்பொருள் என்று நம்பி, பைரவ மதத்தில் சேருவதே முக்தி அளிக்கும் என்பது இச் சமயத்தினர் கோட்பாடு.


 


6. சைவம் - சிவனையே முழுமுதற் கடவுளா கக்கொண்டு சரியை முதலிய நான்கினாலும் அவனை அடையப் பாடுபடும் சமயமே சைவம். பதி - பசு - பாசம் என்னும் மூன்றையும் ஒப்புக்கொண்டு ஆகம வழிப்படி நடப்பவர் 'மாகேசுவரர்' எனப்படுவர். வீரசைவம் - வீரசைவர் அல்லது வீரமாகேசு வரர் அல்லது லிங்காயத்துகள் என்பவர் சிவனை மட்டுமே லிங்க வடிவில் வழிபடுவர். பக்தி நெறி யைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ்க்கை நடத்தி லிங்கத்தை வழிபடுவோர் துறக்கம் அடைவர் என் பது வீரசைவர் நம்பிக்கை. இவர்கள் வடமொழி வேதங்களை ஒப்புக்கொள்ளாதவர்; சாதி வேறுபாடு இல்லாதவர்; குழந்தை மணம் செய்யாதவர்; கைம் பெண் மறுமணம் செய்பவர்; புலாலையும் குடியையும் ஒழித்தவர்; இறந்தாரைப் புதைப்பவர்; லிங்கத்தைப் போலக் குல்லாய் தைத்துத் தலையில் அணிப வரும் இவருட் சிலராவர். வீர ஆகமம், வாதுள ஆகமம் என்னும் இரண்டே இவர்தம் மதிப்புக்குரி யவை. திருமூலர் இவ்விரு ஆகமங்களையும் பாராட்டியுள்ளார். எனவே, திருமூலர் காலத்தில் வீரசைவம் நாட்டில் இருந்தது என்பது நன்கு தெரிகிறது அன்றோ?


 


சைவத்தின் நான்கு பிரிவுகள்


 


திருமூலர் காலத்துச் சைவம் (1) சுத்த சைவம், (2) அசுத்த சைவம், (3) மார்க்க சைவம், (4) கடுஞ் சுத்த சைவம் என நால்வகைப்பட்டது. இப்பிரிவு பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திரங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.


 


1. சுத்த சைவர் பதி - பசு - பாசம் என்பவற் றின் வேறுபாடுகளை உணர்ந்தவர்; 'சித்' என்னும் அறிவை, 'அசித்' என்னும் அவித்தையால் கெடாமற் பார்ப்பவர்; தூய மாயையுடன் அசுத்த மாயையைக் கலக்க விடாதவர். வேதத்திலிருந்து தோன்றிய சித்தாந்தமே சுத்தசைவ சித்தாந்தம் என்பது திருமூலர் கருத்து. 


 


2. அசுத்த சைவர் காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர்; ருத்திராட்ச மாலையை அணிவர்; சரியை, கிரியை வழி நிற்பர்; உபதேசம் பெற்று மந்திரங்களைச் செபித்துக் கொண்டிருப்பர்.


 


3. மார்க்க சைவர் காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர்; புறவேடத்திற்கு மிகுந்த மதிப்புத்தாரார்; ஞானத்தையே, சிறப்பாகக் கருதுவர்; வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தப் பாதையிற் சென்று ஜீவன் முக்தராவர்.


 


4. கடுஞ்சுத்த சைவர் என்பவர் சைவர்க்குரிய வெளி வேடங்களில் கவனம் செலுத்தார்; நேரே சிவனிடம் சென்று தங்கள் பாசத்தையும் பசுத்வத்தையும் ஒழித்துச் சிவஞானத்தை அடைவர். அவர்கள் சுத்த சைவர்க்குரிய சமயப்படிகளிற் செல்லார்; அவர்கள் 'நான்', 'அவன்' என்ற வேறுபாடு அற்றவர்கள்; சொல்லரிய தத்துவத்தை அடைந்து இந்திரியங்களை அடக்கியவர்கள். அவர்கள் பரசாயுத்யத்தை அடைந்தவர்கள். கண்ணப்பர், சாக்கியர் போன்ற நாயன்மார்கள் பலர் இவ் வகுப்பைச் சேர்ந்தவராவர். அவர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் படிகளைக் கடந்தவர்கள்; புறவேடம் அற்றவர்கள். கடுஞ் சுத்த சைவம் சிவஞான போதம் முதலிய பின்னூல்களில் கூறப்படாமை காணத்தக்கது. கடுஞ்சுத்த சைவருடைய இலக்கணங்களைத் திருமூலர் கூறியிராவிடில், நாயன்மார் பலருடைய செயல்கள் பித்தர் செயல்களாகக் காணப்பட்டிருக்கும்; விளக்கமும் மதிப்பும் பெற்றிரா; நாம் வேறு எந்த நூலைக் கொண்டும் உண்மை அறிந்திருக்க முடியாது.


 


இந்நால்வருள் அசுத்த சைவர் வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறியாதவர். வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தம் சாதாரண சைவர் உபாயம் என்று திருமூலர் கூறுகிறார். கடுஞ் சுத்த சைவர் எல்லாம் கடந்தவர். எனவே, சுத்தசைவரும் மார்க்க சைவருமே வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறிந்தவர் என்பதும், வேதாந்தத்துடன் கூடிய சைவ சித்தாந்தமே 'சுத்த சைவம்' என்பது திருமூலர் கருத்தாதல் காண்க.


 


சன்மார்க்கம் முதலிய நான்கு


 


சன்மார்க்கம் - சிவன் திருவடிகளைக் காணுதல், தொழுதல், நினைதல், தொடுதல், புகழ்தல், தலையிலே சூடுதல், இவற்றைச் செய்பவர் முக்தியடைவர்.


 


சகமார்க்கம் - என்பது இறைவனையே நண்பனாகக் கொண்டு வழிபட்டு முக்தியடையும் வழி. சுந்தரர் பின்பற்றிய நெறி இதுவே.


 


சத்புத்ரமார்க்கம் - என்பது சிவனைத் தந்தையாகவும் அடியவன் தன்னைப் பிள்ளையாகவும் கொண்டு வழிபடுவது. சிவனைப் பூசித்தல், தோத்திரப் பாராயணம் செய்தல், போற்றுதல், செபித்தல், உருவ வழிபாடு செய்தல் முதலியன இத்துறைக்கு உரியவை. சம்பந்தர் பின்பற்றிய நெறி இதுவேயாகும்.


 


தாசமார்க்கம் - என்பது சிவனைத் தலைவனாகவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வழிபட்டு முக்தியடைதல், விளக்கேற்றல், மலர் கொய்தல், அலகிடல், மெழுகுதல், மணியடித்தல், அபிடேக நீரைக் கொணர்தல் முதலிய கோவில் தொழில்கள் இத்துறைக்கு உரியன.


 


சிவ பக்தி


 


ஆறாம் தந்திரத்துல் சிவபக்தி நன்கு விளக்கப்பட்டுள்ளது. பாசத்திலிருந்து விடுபட்டு முத்தியடைய விரும்பும் ஒருவன் பல படிகளைக் கடக்கவேண்டும். முதலில் குருபரன் அவனுக்கு முக்தி வழிகாட்டுவான்; அவ்வழியே சென்றால் சுத்தகுரு தோன்றிக் கடவுள் அருளை நல்குவான். அந்நிலையில் பக்தன் மேற்சொல்லப்பட்ட சித்திகள் யோக சக்திகள் முதலியவற்றை அடைகிறான். அடுத்த நிலையில் சத்-குரு தோன்றிப் பக்தனுடைய ஆணவம்-மாயை-கன்மம் என்னும் மும்மலங்களை அகற்றுவான்; முக்திக்குச் செலுத்துவான். பின்னர்ச் சிவ குரு காட்சியளித்துத் சத், அசத், சத்அசத் என்பவற்றைக் காட்டுவான். இந்த அறிவில் ஆன்மா நிலைத்தபொழுது சிவமாகிறது.


 


சிவ அத்வைதம்


 


ஆன்மா 'தான்' வேறு, 'அவன்' வேறு என்னும் எண்ணத்தில் இருக்கும் வரையில் 'த்வைதம்' அல்லது 'இருமை' இருக்கும். தனிப்பட்ட ஆன்மா அவனில் கலந்துவிடுமாயின், இருமை ஒழிந்து 'ஒருமை' ஏற்படும். இது 'சிவாத்வைதம்' எனப்படும்.


 


சன்மார்க்க மடங்கள் ஏழு


 


திருமூலர் காலத்தில் ஏழு மடங்கள் சன்மார்க்க சைவத்தைப் பின்பற்றி ஏற்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒரு குரு இருந்தார். மூலர் (திருமூலர்), காலாங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந்தர், மரமானந்தர், போகதேவர் என்னும் எழுவர் மடத்துக் குழுவினர் ஆவர். திருமூலர் மடத்து வழி வந்த சீடர்கள் "மூலன் மரபினர்" எனப்பட்டனர்; அவர்கள் பல நூற்றாண்டுகள் தமிழ் நாட்டில் இருந்து வந்தனர். அவருள் ஒருவரே கி.பி. 17-ஆம் நூற்றாண்டினரான தாயுமானவர்க்குக் குருவாக இருந்தவர். இதனை,


 


"மந்த்ரகுரு வேயோக தந்த்குரு வேமுலன்

மரபில் வரு மௌன குருவே!"


 


என்னும் அவர் பாடலைக் கொண்டு அறியலாம். திருச்சிராப்பள்ளி மலைமீது உள்ள மௌன குரு மடம் இந்த மௌன குடுவுடன் தொடர்புடையது ஆகும்.


 


சைவப் பிரசாரம்


 


திருமூலர் தமது நூலில் சைவ சமயத்தின் சிறப்பை விளக்கியதுடன் நில்லாது, சமயப் பிரசாரம் செய்திருப்பதும் காணலாம். "சிவனுக்கு நிகராகும் தெய்வம் வேறில்லை, அவன் பிறப்பு அற்றவன்; பேரருளாளன், யாவர்க்கும் இன்பம் அருள்வான்; அவனைத் தொழுங்கள்; ஞானம் பெறலாம்; அவனை எந்த வகையிலும் ஏத்தலாம். அவன் அருள் புரிவான்; காரைக்கால் அம்மையாரும் பரண தேவரும் கையாண்ட முறைப்படியே திரு மூலரும் தம் பெயரையும், நூல் படிப்பதால் அடையும் பயனையும் குறித்துள்ளார். இக்குறிப்புப் பலரையும் பயன் கருதிப் படிக்கத் தூண்டவல்லது.


 


திருமந்திரச் சிறப்பு


 


ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன என்னலாம். குப்தர்கள் காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் மந்த்ர காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேவசுவர் கோவிலைச்சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த 4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை, அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர், சம்பந்தர் ,சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள என்பதற்குரிய சான்றுகள் பல காட்டலாம். இடம் போதாமையால், சில சான்றுகள் இங்குத் தருவோம்.

----------


 


1. (1) "குருவே சிவமெனக் கூறினன் நந்தி" -திருமந்திரம்


(2) "ஒருவ ராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழகன்" -அப்பர் தேவாரம்


 


2. (1) "சாத்திர மோதும் சதுர்களை விட்டுநீர்

மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்

பார்த்தஇப் பார்வை பசுமரத் தாணிபோல்

ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே" -திருமந்திரம்


இதே அறிவுரையை அப்பர் கூறுதல் காண்க: 

(2) "சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்.

பாதிதி ரஞ்சிவ மென் பணிதிரேல்

மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே"

-அப்பர் தேவாரம்.


 


(3) "வேயன தோளிக்கு வேந்தொன்றுந்தானே" 

என்பது திருமந்திரம்.


"வேயுறுதோளிபங்கன் விடமுண்டகண்டன்"

என்பது சம்பந்தர் தேவாரம். 


 


(4) "அத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாம்"

"அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்"

என்பது திருவாசகம் .


 


(5) "எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரி சீசன் அருள்பெற லாமே"

என்பது திருமந்திரம். இக்கருத்து,


"எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்

அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளியும்"

எனவரும் திருவாசக அடிகளில் காண்க.

------------- 



8. சைவத்திரு முறைகள் - II


 


முதல் மூன்று திருமுறைகள்


 


சைவ சமயத் திருமுறைகள் பன்னிரண்டு. முதல் மூன்று பாடியவர் சம்பந்தர். ஞானசம்பந்தர் ஏறத்தாழ 300 பதிகங்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகமும் பத்து அல்லது பதினொரு பாக்களைக் கொண்டது. பதிகங்கள் அக்கால வழக்கிலிருந்த இந்தளம், குறிஞ்சி முதலிய பண்களில் பாடப்பட்டன. ஒவ்வொரு பதிகத்திலும், அப்பதிகம் பாடப்பெற்ற ஊரின் இயற்கையமைப்பு, அவ்வூர்க் கோவிலில் உள்ள சிவபெருமானின் சிறப்பு, அவனை அடைவதால் பெறத்தகும் பயன், இராவணன் கயிலையைப் பெயர்த்துப் துன்பப்பட்டமை, சமணர்-பௌத்தர் வசவு என்பன பெரும்பாலும் இடம் பெற்றிருத்தல் காணலாம். 


 


"போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு 

வாதவகை யுண்டுபலபொய்

ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை

நன்றதுணர் வீருரைமினோ

ஆதியெமை யாளுடைய அரிவையொடு

பிரிவிலிஅ மர்ந்தபதிதான்

சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல்

புகஎறிகொள் சண்பைநகரே"


 


சம்பந்தர் பாடல்களில் தலங்களின் இயற்கை யழகு, பல வரலாற்றுச் செய்திகள், இசை, நடனம், சமணர் பௌத்தர் பற்றிய செய்திகள், தமக்கு முன்னிருந்தவரும் தம் காலத்தவருமான நாயன்மார் பற்றிய குறிப்புக்கள், பலவகைச் சிவனடியாரைப்பற்றிய குறிப்புக்கள், தம்முடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள், கோவில்களில் நடைபெற்ற விழாக்கள், வழிபாட்டு முறைகள், புராணக்கதைக் குறிப்புக்கள், சைவசமயக் குறிப்புக்கள் முதலியவற்றைக் காணலாம். தலத்தின் இயற்கையழகை விளக்கும் பாடல்களில் செடிகள், கொடிகள், மரங்கள், மலர்கள் யாவும் குறிக்கப்பட்டுள்ளமை, சம்பந்தரது கவனிக்கும் ஆற்றலையும் இயற்கை அழகை அநு பவிக்கும் மனப்பண்பையும் நன்கு விளக்கும். சம்பந்தர் காலத்தில் சீகாழி கடலருகில் இருந்தது; நாகை சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது, என்பன போன்ற வரலாற்றுக் குறிப்புக்கள் பல அவர் திருப்பதிகங்களில் காணப்படுகின்றன. அவர் காலத்தில் மறையவர்கள் மிகுதியாக வாழ்ந்த தலங்கள் எவை என்பதையும் வேறுபல பொதுக் கருத்துக்களையும் அவர் பாக்கள் தெரிவிக்கின்றன. அவர் காலத்தில் பல ஊர்களில் இருந்த கோவில்கள் தனிப்பெயர் தாங்கி இருந்தன என்பதையும் நாம் பல பாக்களால் அறியலாம். செங்காட்டங் குடியில் கணபதீச்சரம் என்ற கோவிலும், ஆவூரில் பசுபதீச்சரம் என்னும் கோவிலும், நரையூரில் சித்தீச்சரம் என்ற கோவிலும், மயிலாப்பூரில் கபாலீச்சரம் என்ற கோவிலும், இவ்வாறே பல ஊர்களுல் வேறுவேறு பெயர்கொண்ட கோவில்களும் இருந்தன.


 


அப்பர் திருமுறைகள்


 


அப்பர் பாடல்களும் ஏறத்தாழ மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. சம்பந்தரைப் போலவே அப்பரும் தம் காலத்தவரும் தமக்கு முற்பட்டவருமான நாயன்மார் செய்த திருப்பணிகளைத் தம் பாடல்களில் குறித்துள்ளார். இவர் பாக்களிலும் சம்பந்தர் பாக்களிலிருந்து அறியப்படும் இசை, நடனம் முதலிய பலவகைச் செய்திகளையும் நிரம்ப அறியலாம். மைலாப்பூர் இவர் காலத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. பல்லவ மகேந்திரவர்மன் இசை, நடனம், நாடகம் இம் மூன்றையும் வளர்த்தவனாதலால் அவன் காலத்தில் வாழ்ந்த அப்பருடைய பாடல்களில் இசை, நடனம் பற்றிய குறிப்புக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சமணரைப் பற்றிய குறிப்புக்களும் இவர் பாடல்களில் பலவாகக் காணப்படுகின்றன. சம்பந்தரைப் போலவே இவர் ஊர்ப்பெயரும் அவ்வூர்க் கோவிற் பெயரும் புதியனவாகப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். சீகாழிக் கோவிலைப் புள்ளினங்கள் ஏந்தின கதை போன்ற மிகப்பல புராணக் கதைகள் (Mythologies) இவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இரும்புதல், பேரூர், தஞ்சைத் தளிக்குளம், இடவை, காம்பீலி, எழுமூர் முதலிய பல வைப்புத்தலங்கள் இவரால் குறிக்கப்பட்டுள்ளன. பள்ளி என்று முடியும் சிவத்தலங்களும், வீரட்டம், குடி, ஊர், காடு, வாயில், மலை, ஆறு, குளம், களம் என முடியும் தலங்களும் இவரால் தொகைப்படுத்திக் குறிக்கப்படுகின்றன. இப் பெரியார் சூலை நோயால் வருந்தியது முதலிய தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பலவற்றைத் தம் பதிகங்களிற் பாடியுள்ளார்; தாம்கண்ட விழாக்களைப் பற்றிய விவரங்களைப் பல பதிகங்களில் கூறியுள்ளார். அடியார் மலரும் நீரும் கொண்டு கோவில் செல்லுதல், "வாழி-போற்றி" என்று இறைவனை ஏத்துதல், அகநெகிழ்ச்சியோடு கோவிலுக்குச் செல்லுதல், சிலர் பாடிக்கொண்டே கோவிலுக்கு வருதல், ஆடவரும் பெண்டிரும் கோவிலை வலம் வருதல், பாடுதல், பணிதல், மூன்று சந்தி வணக்கம் முதலிய வழிபாட்டு முறைகள் இவரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.


 


"நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலுமெம் பிரானுடைய கோவில் புக்குப்

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்

ஆரூரா என்றென்றே அலறா நில்லே"


 


என்பன போன்ற அப்பர்கூறும் அறிவுரைப் பாடல்கள் பலவாகும். அவை படித்து இன்புறற் பாலன.


 


ஏழாம் திருமுறை.


 


இத்திருமுறை ஏறத்தாழ ஆயிரம் பாடல்கலளைக் கொண்டது. அப்பரது பிரசார வன்மையால் தொண்டைநாடு சைவ நாடாக மாறியது; சம்பந்தரது தொண்டினால் பாண்டியநாடு சிவமணம் கமழும் நாடாக மாறியது. ஆதலால் சமணமும் பௌத்த மும் வலி குன்றிவிட்டன. அதனால் அப்பர் சம்பந்தர்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து வந்த சுந்தரர்க்குப் புறச்சமய எதிர்ப்புத் தோன்றவில்லை. ஆதலின், அவர் பாக்களில் புறச்சமயக் கண்டனம் மிகுதியாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்பர் சம்பந்தர் சென்ற நெறியைப் பின்பற்றியே சென்றவராதலால் சுந்தரர் பாக்களிலும் பல இடங்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் முதலியன காணப்படுகின்றன. ஆயின், தம் கால வரலாற்றுக் குறிப்புக்களை மிகுதியாகத் தரும் சிறப்பு இவர்பால்

காணப்படுகிறது.


 


" கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி"


 


"மண்ணுலகம் காவல் கொண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா

மன்னவரை மறுக்கஞ் செய்யும் புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமான்"


 


"கடல்சூழ்ந்த உலகமெல்லாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன், கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"


 


என்பன போன்றவை வரலாற்றுச் சிறப்புடையன.


 


மருகல் நாட்டு மருகல், கொண்டல் நாட்டுக் கொண்டல், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலை என்றாற் போன்ற தொடர்கள் இவர் காலத்திருந்த நாட்டுப் பிரிவினையை நன்குணர்த்துதலோடு, இவரது நாட்டு அறிவையும் நன்கு விளக்குவனவாகும். இவர் தம் காலத்துச் சேர, சோழ, பாண்டிய, பல்லவ வேந்தர் நால்வர்க்கும் நண்பராக இருந்தார்; தமிழகம் முழுமையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். பல தலங்கள் இருந்த நிலையையும், கோவில்கள் சிறப்புற்றிருந்த நிலையையும் இவர் பாடல்கள் நன்கு தெரிவிக்கின்றன. இவரால் குறிக்கப்பட்டுள்ள வைப்புத் தலங்கள் பல அப்பர், சம்பந்தரால் குறிக்கப் படாதவை. எனவே, அவற்றுள் பல- தாழையூர், தக்களூர். தண்டன் தோட்டம், தென்னூர், தஞ்சாக்கை, தெள்ளாறு முதலியன அப்பர் சம்பந்தர்க்குப்பின்னும் இவர்க்கு முன்னும் ஏற்பட்டனவாதல் வேண்டும். இவர் மனைவியர் இருவரைப் பெற்றவர். இவர் வரலாறு முழுதும் இவர் பதிகங்களில் அறியப்படுகின்றது. இவர் இறைவனைச் சகமார்க்கத்தில் (நண்பர் முறையில்) வழிபட்ட அடியாராவர். இவர் சிவனை நோக்கி அஞ்சாது கூறும் சொற்கள் இவரது பக்தியின் அழுத்தத்தை நன்கு விளக்குகின்றன.


 


"பரவைக்கும் எனக்கும் பற்றாய பெருமானே"

"பரவைக்கும் சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே"


 


என்று இவர் பாடியுள்ள தொடர்கள் இவரது உண்மைக்காதல் வாழ்வினையும் சிவநெறிப் பற்றையும் செவ்விதின் விளக்குவதாகும். இவருடைய பாடல்கள் பல, செந்தமிற் இன்பம் தோய்ந்தவை. இயற்கை வருணனை நிறைந்த கீழ்வரும் வரிகளைக்காண்க:


 


1 "மண்டபமுங் கோபுரமும் மாளிகை சூளிகையும்

மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்

கண்டவர்கண் மணங்கவரும் புண்டரிகப் பொய்கைக்

காரிகையர் குடைத்தாடுங் கலயநல்லூர் காணே"


 


2 "தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்

திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின் தென் கரைமேல்

கற்றினம்*நன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை

கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே"


 


இம்மூவர் அறிவுரை 


 


இம்மூவரும் சைவசமயப் பொதுமக்களுக்குக் கூறிய அறிவுரைகள் யாவை? "சமண-பௌத்த நூல்கள் பொய்ந்நூல்கள்; அவற்றை நம்பாமல் சிவனை வழிபடுங்கள்; தீவினை அற்று நன்மை அடைவீர்கள்; திருப்பதிகங்களைப் பாடிப் பயன் பெறுங்கள்: எவரும் ஐந்தெழுத்தோதி மேன்மை பெறலாம்; ஐந்தெழுத்தே நல்ல துணை; ஐம்பொறிகளையும் அடக்குங்கள்; மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினையுங்கள்; சிவனைக் காண்பீர்கள்; புலனடக்கம் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்த வல்லவர் சிவப்பேறு பெறுவர்" என்பன இவர்தம் அறிவுரைகளாகும். சம்பந்தரது திருக்கோடிகா திருப்பதியமும், நெஞ்சுக்கு அறிவுறுத்தும் முறையில் பாடப்பட்ட அப்பரது ஆரூர்த்திருத்தாண்டகமும், மக்களுக்கு ஏற்ற சமய அறிவுரைகளாகக் கொளளற்பாலன. பல பதிகங்களில் கோவில் வழிபாடு, கோவில் தொண்டு செய்தல், தல யாத்திரை, அடியார் கூட்டுறவு, அடியார்க்கு உணவளித்தல் என்பனவும் வற்புறுத்தப்பட்டுள்ளன.


 


எட்டாம் திருமுறை


 


மணிவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை எனப்படும்; இவர் காலத்துப் பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். அவன் இரண்டாம் வரகுணன் என்பது அறிஞர் பலர் கருத்து. மணிவாசகர் காலத்தில், சங்கரரது அத்வைதக் கொள்கை நாட்டில் மிகுதியாகப் பிரசாரம் செய்யப்பட்டது போலும்! இவர் அதனை "மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாறுதம் சுழித்தடித்து ஆர்க்கிறது." என்று குறித்துள்ளார். பெண்கள் பலவகை விளையாட்டுக்களின்போது இறைவனுடைய சிறப்பியல்புகளைப் பலபடியாக எடுத்துக் கூறி ஆடுவதாக இவர் பாடியுள்ளார். அவ்விளையாட்டுக்கள் (1) அம்மானை, (2) பொற்சுண்ணம் இடித்தல் (3) தும்பியாடல் (4) தெள்ளேணம் கொட்டல் (5) சாழல் (6) திருப்பூவல்லி கொய்தல், (7) உந்திபறத்தல் (8) தோள் நோக்கம் ஆடல் (9) ஊசலாடல் என்பன. இவ்வகை விளையாட்டுக்களில் இறைவன் புகழைப் பாடியாடுதல் சம்பந்தர் காலத்திலும் இருந்தது என்பது சம்பந்தர் பாக்களால் தெரிகிறது.


 


திருவாசகம் 


 


முதல் ஏழு திருமுறைகள் பண்ணோடும் தாளத்தோடும் பாடத்தக்கவை. ஆயின், திருவாசகப் பாடல்களுள் பெரும்பாலன அத்தகையவை அல்ல; முன்னவற்றுள் சமயப் பிரசாரம் காணப்படும்; திருவாசகத்தில் அது காணப்பெறாது; மாணிக்கவாசகர் எங்ஙனம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்றார் என்பதே இந்நூலிற் காணப்படுவது. இது படிப்பார் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. "உன் குறைகளை ஒப்புக் கொண்டு கடவுளுக்குமுன் அழு: அவனை அடையலாம்" என்பதே திருவாசகத்தின் உயிர்நாடிப் பகுதிகளில் ஒன்று. இங்ஙனம் தம் குறைகளை உள்ளவாறு உணர்ந்து வருந்திக் கடவுள் முன் அழுதல் என்பது எல்லோர்க்கும் எளிதில் இயல்வது அன்று; "கடவுளிடம் என்றும் இறவாத காதல் பெற விரும்பும் பக்தன், அன்பை அடிப் படையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து பழகவேண்டும்" என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் ஒன்று. இதனைச் சிவஞான போதம் 12-ஆம் சூத்திரம் நன்கு வற்புறுத்துகிறது. மாணிக்கவாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனை வேண்டுகிறார். இவ்விரண்டும் திருவாசகத்தின் உயர்நாடி என்று கூறலாம்.


 


திருக்கோவையார்


 


ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவியைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே திருக்கோவையார் என்னும் நூலிற் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் பொருளாழமும் உடையவை.


 


ஒன்பதாம் திருமுறை


 


இதனில் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது அடியார்கள் பாடிய பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவும் "திரு இசைப்பா" எனப்படும். திரு மாளிகைத் தேவர் திருவிடைமருதூர் மாளிகை மடத்தைச் சேர்ந்தவர். இவர் தில்லையைப் பற்றிய நான்கு இசைப்பாக்கள் பாடியுள்ளார்.


 


சேந்தனார் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகியவற்றின்மீது மூன்று திருவிசைப் பாக்களும், தில்லைமீது திருப்பல்லாண்டும் பாடியுள்ளார்.


 


கருவூர்த்தேவர் முதலாம் இராசராசன் காலத்தவர். இவர் சமாதி பெரியகோவில் திருச்சுற்றில் இருக்கிறது. இப்பெரியார், தில்லை, திருக்களந்தை- ஆதித்தேச்வரம், கீழ்க்கோட்டூர்-மணியம்பலம், திரு முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை-இராசராசேச்சரம், திருவிடை மருதூர் ஆகிய பத்துத் தலங்கள்மீது பத்துத் திரு விசைப்பாக்கள் பாடியுள்ளார்.


 


பூந்துருத்தி நம்பி காட நம்பி என்பவர் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தவர்; இவர் திருவாரூர், தில்லை என்னும் இருபகுதிகள்மீது இரண்டு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். இப்பெரியார் கணம்புல்லர், கண்ணப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகிய நாயன்மாரைத் தம் பாக்களில் பாராட்டியுள்ளார்.


 


கண்டராதித்தர், முதற் பராந்தக சோழன் மகனார். இவர் தில்லையைப்பற்றி ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார். அதனில் தம்தந்தை சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்பதைக் குறித்துள்ளார்.


 


வேணாட்டு அடிகள் என்பவர் தென்திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற்றியே ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்.


 


திருவாலி அமுதனார் சீகாழியை அடுத்துள்ள திருவாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற்றியே நான்கு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். "தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்" என்று தம் பாவில் குறித்ததிலிருந்து, இவருடைய தமிழ்ச் சுவையும் இசையறிவும் புலனாகின்றன.


 


புருஷோத்தம நம்பி என்பவர் தில்லயைப் பற் றியே இரண்டு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். சேதிராயர் என்பவர் திருக்கோவலூர் அரசர் என்று கருதுதல் தகும். இவர் தில்லையைப்பற்றி ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்.


 


தில்லையின் சிறப்பு


 


இவ்வொன்பதாம் திருமுறையில் பல பாக்கள் தில்லையைப்பற்றியே காண்பதற்குரிய காரணம் யாது? ஐந்தொழில் இயற்றுதற்கு ஏதுவாகிய திருநடனம் செய்யப்படும் ஒளி நிலையமாகத் தில்லை விளங்குவதால், அதனை எல்லாத் தலங்களினும் உயர்ந்ததாகச் சைவ நூல்கள் கூறும். அத்துடன், முதற்பராந்தகன் காலமுதல் சோழவேந்தர் தில்லையைப் பல்லற்றானும் சிறப்பித்து வந்ததும், தில்லைப் பெருமானைத் தம் குலநாயகன் என்று கூறிவந்ததும், தில்லையைச் சோழர் காலத்தில் உயர்த்திவிட்டன. இத்தகைய காரணங்களால் தான் தில்லை மேற்சொன்ன ஆசிரியர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்னலாம்.


 


பத்தாம் திருமுறை


 


திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. இதுபற்றிய விவரங்கள் சென்ற கட்டுரையிற் கூறப்பட்டுள்ளன.


 


பதினோராம் திருமுறை


 


இதனுட் கூறப்பட்ட பாக்களின்-நூல்களின் ஆசிரியர் (1) சிவபிரான், (2) காரைக்காலம்மையார், (3) ஐயடிகள் காடவர்கோன், (4) சேரமான் பெருமாள் நாயனார், (5) நக்கீரதேவநாயனார், (6) கல்லாட தேவ நாயனார், (7) கபிலதேவ நாயனார், (8) பரண தேவ நாயனார், (9) இளம்பெருமான் அடிகள், (10) அதிரா அடிகள், (11) பட்டினத்துப் பிள்ளையார், (12) நம்பியாண்டார் நம்பி என்போராவர்.


 


(1) சிவபிரான் பாணபத்திரருக்குப் பொன் தரும்படி சேரமான் பெருமாளுக்கு விடுத்த ஒரு பாடல் இத்திருமுறையில் முதலில் காணப்படுகிறது.


 


(2) காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்னும் மூன்று நூல்களைப் பாடியுள்ளார்.


 


(3) ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவர் ஒவ்வொரு சிவத்தலத்தையும் பற்றிப் பாடிய க்ஷேத்திர வெண்பா என்னும் நூல் அடுத்து இடம் பெற்றுள்ளது.


 


4. சேரமான் பெருமாள்-பொன் வண்ணத்தந்தாதி, திரு ஆரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானஉலா என்னும் மூன்றையும் பாடியுள்ளார். 


 


5. நக்கீரதேவநாயனார்-கண்ணப்ப தேவர் திருமறம் முதலிய பல நூல்களைப் பாடியுள்ளார்.


 


6. கல்லாடதேவநாயனார்-இவரும் கண்ணப்பரைப் பற்றி முப்பத்தெட்டு வரிகள் கொண்ட அகவற்பா பாடியுள்ளார். 


 


7. கபிலதேவ நாயனார் – இவர் விநாயகர்மேல் இரட்டை மணிமாலை பாடியுள்ளார்.


 


8. பரணதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலைப் பாடியுள்ளார். 


 


9. இளம்பெருமானடிகள் என்பவர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.


 


10. அதிகரா அடிகள் விநாயகர்மீது மும்மணிக்கோவை பாடியவர். 


 


11. பட்டினத்தடிகள் கோவில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை,

திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இவை படிக்கப் படிக்க இன்பம் தருவன. கோயில் நான்மணி மாலையில்,


"...நின்

தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்

தென்னையும் எழுத வேண்டுவன்"

எனவரும் அடிகள் உள்ளத்தை ஈர்க்கத்தக்கவை.


 


12. நம்பியாண்டார் நம்பி பத்துச் சிறுநூல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஆறு நூல்கள் சம்பந்தரைப் பற்றியவை. அவை (1) சம்பந்தர் திருவந்தாதி (2) சம்பந்தர் -திருச்சண்பை- விருத்தம். (3) சம்பந்தர்-திருமும்மணிக்கோவை, (4) சம்பந்தர் திருவுலாமாலை, (5) சம்பந்தர் திருக்கலம்பகம் (6) சம்பந்தர் திருத்தொகை என்பன. இந்த ஆறிலும் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புக்கள் அனைத்தும் அடங்கி விட்டன. (7) திருநாவுக்கரசர்- திரு ஏகாதச மாலையில் அப்பரைப் பற்றிய சிறந்த வரலாற்றுக் குறிப்புக்கள் காண்கின்றன. (8) கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் கண்ணப்பர், சேரமான், சுந்தரர், சாக்கியர், அதிபத்தர் கலிக்காமர், மாணிக்கவாசகர், வரகுணபாண்டியன் ஆகியோர் குறிக்கப்பட்டுளர். (9) விநாயகர் திரு இரட்டை மணிமாலை 20 செய்யுட்களைக் கொண்டது. (10) திருத்தொண்டர்-திரு அந்தாதி என்பது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றி விரித்துரைக்கப்பட்ட நூலாகும். இதில் 63 நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்களும் ஒன்பது தொகை அடியார் பற்றிய குறிப்புக்களும் காண்கின்றன. இந்த அந்தாதி சேக்கிழாரது பெரிய புராணத்திற்குச் சிறந்த அடிப்படையாகும்.


 


பன்னிரண்டாம் திருமுறை.


 


இது சுந்தரர் வரலாற்றையும் அவரால் திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பெற்ற அடியார் வரலாறுகளையும் கூறும் பெருங்காவியமாகும். இஃது ஏறத்தாழ 4250 செய்யுட்களை உடையது. தமிழ்நாட்டில் சைவ சமயம் பற்றிச் செய்யப்பட்ட முதற்காவியம் இதுவேயாகும். இது திருமுறைகளையும் கன்னபரம்பரைச் செய்திகளையும், நாயன்மார் வரலாறுகளை அங்கங்கே குறிக்கும் தில்லை- உலாப் போன்ற பிறநூல்களையும், சமண-பௌத்த சமய நூல்களையும், நாயன்மார் பற்றிய கல்வெட்டு- சிற்ப-ஓவியச் சான்றுகளையும் உறுகருவிகளாகக் கொண்டு செய்யப்பெற்றது. இது மொழிபெயர்ப்பு நூலன்று. நூலாசிரியர் காலத்தில் நடந்த வரலாறும் அன்று; அவர்க்கு முன்னர் ஏறத்தாழக் கி.பி.300 முதல் 900 வரை இருந்த நாயன்மார்களைப் பற்றிய வரலாறு. நாயன்மாரோ, வடக்கே காம்பீலியிலிருந்து தெற்கே மதுரை வரைப் பல நாடுகளில் வாழ்ந்தவர்-பல காலங்களில் பரந்துபட்டு வாழ்ந்தவர். பல சாதியார் ஆவர். அப்பெருமக்களுடைய பிறப்பிடம், சாதி, செய்த சமயத்தொண்டு முதலிய செய்திகளைத் திருமுறைகளை மட்டும் நம்பி எடுக்காமல், தாமும் நன்கு விசாரித்து, பல இடங்கட்கும் நேரில் சென்று ஆராய்ந்து, யாவற்றையும் திரட்டிக்கொண்ட பிறகே நூல் பாடினார் எனக் கருத அவர் நூலிற் பல சான்றுகள் உள. அப்பர் புராணத்தில் குணபர ஈசுவரத்தையும், சிறுத்தொண்டர் புராணத்தில் வாதாபிப் படையெடுப்பையும் அவர் கூறியிராவிடில், இன்று அப்பர்-சம்பந்தர் காலத்தை அறிய வேறு வழி இல்லை. சேக்கிழார் சிறந்த சைவர்; பெரும்புலவர்; இவற்றுடன் சோழப் பெருநாட்டின் முதலமைச்சர் ஆதலின், அவரது காவியத்தில் இலக்கிய நயம்- வரலாற்று உண்மைகள்-சைவ சித்தாந்த கருத்துக்கள் என்பன அங்கங்கே மிளிர்கின்றன.


 


சங்க காலத்திற்குப் பிறகு தமிழராய சோழராட்சியில் தமிழ்நாட்டு நாயன்மாரைப் பற்றித் தமிழர் பாடிய தமிழ்க் காவியம் இஃது ஒன்றே என்பது கவனிக்கத்தக்கது. இதன்கண் பிராமணர் முதல் பறையர் ஈறாக உள்ள பலசாதி மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு முறைகள், நாட்டின் பெரும் பிரிவுகள்-உட்பிரிவுகள், நாட்டு ஆட்சிமுறை, சமண-பௌத்த-சைவ சமயக் கருத்துக்கள் இன்ன பிறவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இதன்கண் கிடைக்கும் இச் செய்திகள் சோழர்கால இலக்கியங்கள் எதனிலும் கிடைக்கா. ஒரு பக்கம் பல்லவர் கால வரலாற்றையும் மற்றொரு பக்கம் சோழர்கால நாட்டு நிலையையும், மொழி நிலையையும், சைவ சமய நிலையையும், உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்நூல், தமிழர் நற்பேற்றின் பயனாய்த் தோன்றியது என்னல் மிகையாகாது. இந் நூலிலிருந்து சேக்கிழாரது இலக்கியப் புலமை, இலக்கணப்புலமை, திருமுறைப் புலமை, இசை- நடனம்-மருத்துவம்-வானநூல் முதலிய பல்கலைப் புலமை, சைவ சித்தாந்த அறிவு முதலியவற்றை நன்கறியலாம். இவை விரிப்பிற் பெருகும். பெரியபுராணம் ஏற்பட்ட பின்னரே அறுபத்துமூன்று நாயன்மார்கட்கும் சிற்பங்கள் ஏற்பட்டன; விழாக்கள் பெருகின என்னும் விவரங்களைச் சோழர்காலக் கோவில்களிலிருந்தும் கல்வெட்டுக்களிலிருந்தும் நன்கறியலாம்.

-------------------------



9. சித்தாந்த சாத்திரங்கள்


 


சைவசித்தாந்த சாத்திரங்கள்


 


1. திருவுந்தியார், 2. திருக்களிற்றுப்படியார், 3. சிவஞான போதம், 4. சிவஞான சித்தியார், 5. இருபா-இருபஃது, 6. உண்மை விளக்கம், 7.சிவப்பிரகாசம், 8. திருவருட் பயன், 9. வினா-வெண்பா, 10. போற்றிப் பஃறொடை, 11. கொடிக்கவி, 12. நெஞ்சுவிடுதூது, 13. உண்மை நெறி விளக்கம், 14. சங்கற்ப நிராகரணம் என்பன சைவ சித்தாந்த சாத்திரங்கள்,. இவை ஒவ்வொன்றைப் பற்றியும், இடச் சுருக்கம் கருதி, ஓரளவு இங்குக் காணலாம்.


 


1. திருவுந்தியார்.


 


இது சிவஞான போதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் [1]. இந்நூல் சிவஞான போதத்தைப் போலச் சித்தாந்தக் கருத்துக்களைக் கோவைபடக் கூறாது, அவ்வப்போது ஆசிரியர்க்குத் தோன்றிய உணர்ச்சி அநுபவத்தைக் கூறும் 45 செய்யுட்களை உடையது. ஆயின், இவ்வநுபவப் பாடல்கள், சமயசாத்திரங்கள் போலவே, கடவுள்-உயிர்-உலகம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத்தையும், பயன்களையும், பயன் அடையும் நெறிகளையும் விளக்குவனவாகும்.

------------

[1]. இந்நூல் கி.பி. 1147-இல் செய்யப்பட்டதென்பர்- சித்தாந்த சாத்திரம், இரண்டாம் பதிப்பு; P.669.


 


கடவுள் நிலை


 


பரம்பொருள் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்பது; இயற்கையாகவே மலம் அற்றது; அறிதற்கு அறியது; ஆயினும் உயிர்கள் உய்யுமாறு கருணையாக விளங்குவது; அவ்வருள் காரணமாக அருவத்திலிருந்து உருவமாக வெளிப்படுவது; அது தானாகவே அவ்வுருவைக்கொள்ளும். அப்பரம்பொருள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உயிர்கட்குக் கூட்டுவது; பாவனைக்கு அப்பாற்பட்டது; ஆன்ம அறிவால் அறியப்படாதது; உயிர்களைப் பக்குவப் படுத்துவதற்காகக் கள்ளனைப்போல மறைந்து நின்று, தியானம்-மந்திரம்-சைவ வேடம் இவற்றால் உயிர்களை நல்வழிப்படச் செய்வது; பக்குவம் முதிர்ந்தபோது குருவடிவில் வெளிப்பட்டு, தீட்சை செய்து, உண்மை ஞானத்தை உணர்த்துவது; உயிர்கள் செய்தவத்திற்குப் பயன் அளிப்பது; தன் தன்மை அருளி, உயிர்களை வீடு பெறச்செய்வது.[2]

-----------

[2]. செ. 1,5,9,12,13,20, 22.


 


உயிரின் இயல்பு


 


உயிர்கள் பல. அவை பாச பந்தத்தால் கட்டுப்பட்டவை. முத்தி நிலையில் பாசம் என்னும் மலம் அற்று நிற்பவை. மெஞ்ஞான நிஷ்டை கூடிய மக்கள் பிறவிப் பெருங்கடல் நீந்தினவராவர்; அவர்கள் ஞானக்கண்ணால் நோக்கும் இயல்பினர்; கசிந்த உள்ளம் உடையவர் ஆதலின் கடவுளை உணரும் சக்தி பெற்றவராவர்,. முத்தி நிலையிற் சிவமாந் தன்மை பெற்றவராயினும் உயிர்கள் உயிர்களே. [3]


 


சிவமாந்தன்மை பெற வழி


 


மக்கள் மலம் நீங்கி நிற்றற்கு முயற்சி, சிவன்பால் மறவாத அன்புடைமை, சிவத்தைப் பற்றியே எண்ணியிருத்தல் என்பவை வழிகள் ஆகும்; இவற்றால் உலகின்பாற் செல்லும் பற்றுச் சிவத்தின்பால் செல்லும்; வழிபாடு உறுதிப்படும்; அந்நிலையில் சிவம் குருவாக வந்து, சிவ-தீட்சை செய்து, சிவஞானம் சேர்க்கும். அதனால் திருவருட்சக்தி மனத்தின்கண் பொருந்தியிருக்கும்.[4] 


 


முக்தி நிலை


 


இது சொல்லொணா இயல்புடையது. அறிவிற்கு எட்டாத உயர்நிலையது; திருவருள் பெற்றவர் இன்புறு நிலை. இந்நிலை அடைந்தோரே, "தொண்டர்" எனப்படுவர். நனவில் தூய மேல் நிலையில் இருப்பவர். அவர்கட்குச் சிற்றின்பமும் பேரின்பம் ஆகும். அவர்கள் பித்தரைப் போலக் காணப்படுவர். ஆயின், அவர்கள் கருத்தும் உயிரும் இறைவன் நினைவை விட்டு நீங்கா இயல்பின. [5]

----------


[3]. செ. 2,3,7,11,36.

[4]. செ, 8, 10, 14, 16, 18, 19, 21, 23, 25, 27, 28, 34, 37-40.

[5]. செ. 4,6,29,30,31, 33-35.


 


2. திருக்களிற்றுப்படியார்


 


இதுவும் சிவஞான போதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் மேற்சொன்ன உய்யவந்த தேவ நாயனார் மாணவர்க்கு மாணவர். இவர் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் என்னும் பெயர் கொண்டவர். [6] இந்நூல் 100 வெண்பாக்களை உடையது. திருவுந்தியாரின் கருத்தைச் செவ்வையாக விளக்குவது. இது பொன்னம்பலத்திலுள்ள திருக்களிற்றுப்படியில் வைக்கப்பட்டுப் பாராட்டப் பட்டதாதலின், திருக்களிற்றுப் படியார் எனக் காரணப் பெயர் பெற்றது.[7] இந்நூலில், நாயன்மார் வரலாறுகளிலிருந்தும் உதாரணங்கள் தந்து வல்வினை, மெல்வினை என்பன விளக்கப்பட்டுள்ளன. சாத்திர விளக்கங்கள் சில உவமைகளால் தெரிவிக்கப்படுகின்றன. திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் கொண்டு அவற்றின் பொருளை விளக்கும் செய்யுட்கள் இன்பம் பயப்பன. [8]

-----------


[6]. இவர் காலம் கி.பி. 1177 என்பர்-சித்தாந்த சாத்திரம், இரண்டாம் பதிப்பு P 669 


[7] .S.C.P. 33.


[8]. "சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற் சார்புணர்தல் தானே தியானமுமாம்-சார்பு கெடவொழுகி னல்ல சாமதியுமாங் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று." (செ. 34)


 


இறை 


 


பரம்பொருள் சக்தி-சிவமாக விளங்கும். அவ்வாறு விளங்குவது உலகிற்குத் தாயும் தந்தையுமாகிய நிலையாகும். [9] தூய பொன்னின் நிறம், நகைகளாக மாறிய போதிலும் பொற்கட்டியாய் நின்றபோதும் ஒரு தன்மையாய் விளங்குதல் போல, இறைவன் உலகில் அத்துவிதமாகக் கலந்து ஒன்றன்றாய் இரண்டன்றாய் நிற்பன்.[10] கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுபோல, இறைவன் அருளாலே திருமேனி கொள்வான். இவ்வாறு கொள்ளும் திருமேனிகளுள் ஆசிரியத் திருமேனி சிறப்புடையது. 

------------

[9] செ. 1


"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் 

வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது-வேண்டினது

வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக

வேண்டாமை வேண்டுமவன் பால்." (செ.45.)


 


கடல் நீரை முகந்து சென்று நன்னீர் பொழியும் முகில்போல -ஆசிரியனாக வெளிப்படும் இறைவன் அநுபவப் பயனை அறிவுரையாக உபதேசிப்பன்.[11] இறைவன் மெய்ஞானிகளைச் சார்ந்து ஆவேசித்து நின்று உபதேசித்தலும் உண்டு. இவ்வுபதேசம் மெய்ஞ்ஞானிகளது செயலன்று; இறைவனது செயலே ஆகும்.[12]. மலம் எல்லாம் நாற்றம் உடையனவாயினும், தூய்மை பொருந்திய பசுவின் சாணம் பிறமலங்களை எல்லாம் நீக்குதல்போல ஆசிரியன் மக்களுள் ஒருவனே எனினும், சிவன் அவனை நிலைக்களமாகக் கோடலால், அவன் பிறவியை ஒழிக்க வல்லவனாவன். [13] கடலகத்தே அலைகளால் அலைப்புறாது ஆடும்படி நின்றவர்க்கும் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அளத்தல் அரிது. அதுபோலக் கடவுள் அருள் பெற்றவராயினும் அவர்கள் அவனது முழுப் பெருமையை அறிந்தவராகார். [14] உயிர்கள், தம் அறிவிற் சிவம் விளங்கத் தலைவனையும் (கடவுளையும்) தம்மையும் உணரும்; உணர்ந்த பிறகு உடலுடன் இருப்பினும் பற்று நீங்கப்பெற்றுச் செத்தாரைப் போலத் திரியும்; அவை சிவன் வயப்பட்டு நிற்குமாதலால் மீண்டும் உலக நிகழ்ச்சிகளில் புகா.[15] ஆற்றுநீர் கடலில் கலந்து கடல் நீராகி, மீண்டும் ஆற்றின் படுகையில் மேலேறினும் உப்புத்தன்மை மாறுவதில்லை. அதுபோல, சிவத்தோடு ஒன்றி நிற்கும் மாய்ஞ்ஞானிகளினது அறி- செயற்கருவிகள் மாயை நிலையில் இல்லாமல் சிவ கரணமாக விளங்கும். [16] அவர்களது பற்றற்ற நிலை மணியின்கண் தூங்கும் நாக்கிற்கு ஒப்பாகும். [17] படிகம் தன்னைச் சார்ந்துள்ள பொருளினது நிறத்தைக் காட்டும். தனது நிறத்தைக் காட்டாது. அதுபோல உலகத்தைச் சார்ந்து அவ்வண்ணமாய் இருத்தலும், முத்தி நிலையில் இறைவனைத் தழுவிநின்று அவன் வண்ணமாக இருத்தலும் உயிர் நிலையாகும் [18].

-----------


[10]. செ.79. [11]. செ.90. [12]. செ.66 [13]. செ.7.

[14]. செ.90. [15]. செ.47 [16]. செ.11. [17]. செ.32 [18]. செ.97 


 


சாதனம்


 


சரியை, கிரியை, யோகம், ஞானம், என்பன உயிர்கட்குச் சாதன நெறிகளாகும். சிவனறம்- வல்வினை, மெல்வினை என இருவகைப்படும். இறைவனைத் துணையெனக் கருதி ஒழுகுவதும், பூசை, தியானம், பாடல், ஆடல் முதலியன நிகழ்த்துவதும் மெல்வினை எனப்படும். [19] சிறுத்தொண்டர் பிள்ளை அரிந்ததும், சண்டீசர் தந்தையைக் கொன்றதும், அரிவாள் தாயர் தம் கழுத்தையே அரிய முயன்றதும் வல்வினைச் சிவனறமாகும். [20] திருவுருவ வழிபாடும், ஆறு ஆதாரங்களில் இறைவனைத் தியானித்தலும், "ஆதாதர யோகம்" எனப்படும். இறைவனை அகண்டமாய் அருள் வெளியில் மௌனமாக இருந்து வழிபட்டு அவனோடு ஒற்றுமையுற்று நிற்றல் "நிராதார யோகம்" எனப்படும் [21]. ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) இறைவனைக் காட்டும் இயல்புடையது. நாத தத்துவத்திற்கு அப்பால் உள்ள இறைவனை, யோக முடிவில் கேட்கும் சிலம்பொலி வழியே சென்று அடைய முயலவேண்டும். [22] "நான் பிரமம்" என்பது மயக்கவுணர்ச்சியேயாகும். [23] உயிரினிடம் சிவ வடிவமாகிய ஞானத்தைக் கண்டு வணங்கிச் சிவபெருமானுக்கு அன்பு நீரால் திருமஞ்சனமாட்டித் தன்னை அவனுக்கு வாடாத ஒரு மலராகச் சார்த்தி வழிபடின் பிறவி ஒழியும். [24] அறிவு நெறியும் அன்பு நெறியும் பிறப்பை அறுக்க வல்லவை.[25]

------------

[19]. செ. 16-18. [20]. செ. 18-20 [21]. செ. 22. 

[22]. செ. 25,33. [23].செ. 85 [24]. செ.44 [25].செ.100


 


இறைவனை அணைந்தோர் இலக்கணம்


 


இறைவனை அணைந்தவரே அடியாராவர். ஆலமரத்தைத் தன்னகத்தே அடக்கிய வித்துப் போலத் திருவருளைத் தன்னகத்தே அடக்கியவர் அடியார். [26] இறைவன் பெருமையை அடியார் அறிவர். அடியார் பெருமையை இறைவன் அறிவான். இதற்குக் கண்ணப்பரும் காளத்தியப்பருமே சான்றாவர்.[27] இறைவன் பக்தி வலையிற்படுபவன் என்பது தெளியலாம். [28] ஞான நெறி நின்றவர்க்குக் காலம், இடம், திசை, இருக்கை என்பன இல்லை [29]. சிவஞானமும், சிவபோகமும் வித்தும் முளையும் போல்வன.[30]

-----------

[26].செ. 57. [27].செ.52. 

[28].செ. 52. "சேந்தனாரமுது" என்று இப்பொழுதும் "திருவாதிரை-களி" என்று தில்லைப் பெருமானுக்கு நிவேதிப்பது வழக்கம். 

[29].செ.27-30 [30].செ. 57.


 


3. சிவஞானபோதம் 


 


இது மேற்சொன்ன 14 சாத்திரங்களில் தலைசிறந்தது. சித்தாந்த உண்மைகள் கோவைபடச் செய்யப்பட்ட செந்தமிழ் நூல். திருவெண்ணெய் நல்லூர்-மெய்கண்ட தேவர் என்னும் வேளாள அறிஞர் செய்தது; உரைநடைப் பகுதியும் செய்யுட் பகுதியும் உடையது; உரைநடைப்பகுதி மேற் கோள்களையும் ஏதுக்களையும் உடையது; செய்யுட் பகுதி 12 சூத்திரங்களாகவும் 81 வெண்பாக்களாகவும் உள்ளது. இப்பன்னிரண்டு சூத்திரங்களும் ரௌரவ ஆகமத்தில் உள்ள 12 வடமொழிச் சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு என்பது டாக்டர் ரமண சாஸ்திரி போன்ற ஒருசார் அறிஞர் கருத்து.[31] சுவாமி வேதாசலம், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்ற அறிஞர்கள் அது முதல் நூலே என்று கருதுகின்றனர். [32] தென்னிந்திய சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தலைவரான M.பாலசுப்பிரமணிய முதலியார் (B.A., B.L.,) சிவஞான போதம் மொழிபெயர்ப்பன்று என்பதற்கு 120 காரணங்கள் காட்டி 1949-இல் சிறுநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். [33]


 


மெய்கண்டார் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் பரஞ்சோதி மா முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். [34] இவர் நூலில் உள்ள முதல் மூன்று சூத்திரங்கள் பிரமாண-இயல் எனவும், அடுத்த மூன்றும் இலக்கண-இயல் எனவும், அடுத்த மூன்று சூத்திரங்கள் சாதன-இயல் எனவும், கடைசி மூன்றும் பயன்-இயல் எனவும் பெயர்பெறும்.

---------

[31]. Colos, 2, part I, P.531 including foot-note No. 43.

[32]. S.C. PP. 45-73; M.S. PP. 11-27.

[33]. இதன் விலை அணா 2. 34. S.M.P.9.


 


பிரமாண -இயல் பதி, பாசம், பசு என்னும் மூன்றும் உண்மை என்பதை 3 சூத்திரங்களால் விளங்கும். இலக்கண- இயல் பசு, பாசம், பதி என்னும் மூன்றன் இலக்கணங்களை முறையே மூன்று சூத்திரங்களால் விளக்கும். சாதன-இயல் என்பது சாதனம் அடைதற்குரியவர் உயிர்கள் என்பதையும், இறைவன் திருமேனி கொண்டு ஞானம் உணர்த்தலையும், அங்ஙனம் ஞானம் கைவரப் பெற்ற உயிர் ஐந்தெழுத்து ஓதிப் பயன்பெறலும் முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். பயன்-இயல் என்பது பாச நீக்கம், சிவப்பேறு, சிவப்பேற்றினை நிலை நிறுத்த நிகழ்வன இன்னவை என்பன முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். இவ்வுண்மைகள் யாவும் தருக்க முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 


 


1. பிரமாண இயல் 


 


முதற் சூத்திரத்தில் கடவுள் உண்மையும், அவர் எல்லாவற்றையும் ஒடுக்கி மீளத் தோற்றுவிக்கும் முதற் பெருமானாகிய சிவன் என்பதும் கூறப்பட்டுள்ளன. கடவுள் உயிர்களுடன் அத்து விதமாக நின்று அவைகட்கு வினைப்பயனை ஊட்டும் முறையும் உயிர்கட்கு மலபந்தத்தால் பிறப்பு இறப்பு நிகழும் முறையும் 2-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. மூன்றாம் சூத்திரம் உயிர் சூன்யத்தை அறிவது, பருவுடல், அறிகருவிகள், நுண்ணுடல், பிராணவாயு முதலியவற்றிற்கு வேறானது, தானே அறிவதன்றி உணர்த்த உணர்வது, உடற் கரணங்கள் கூடியிருப்பினும் அவற்றிற்கு வேறாய் நின்று அறிவது என்பன குறிக்கப்பட்டுள்ளன.


 


2. இலக்கண இயல் 


 


உட்காரணங்கள் ஆகும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பவவற்றுள் ஒன்று அன்றாய் வேறாய் நிற்பது உயிர். அது அநாதி கால முதலே ஆணவ மலத்தாற் கட்டுண்டு கிடப்பது. புற-அகக் கருவிகளும் உயிரும் அமைச்சும் அரசும் போல விளங்குவன. உயிர்கட்கு அக்கருவிகள் துணை செய்வன. இவை யாவும் தொழிற்படுங்காலம் உயிர்கட்கு "நனவு நிலை" எனப்படும். இவற்றுட் சில குறைந்த காலம் உயிர்கட்குக் "கனவு நிலை"; மேலும் சில குறைந்த பொழுது "உறக்க நிலை" எனப்படும். இவை யாவும் நீங்கி உயிர் தன்னிலை நின்றபோது "பேருறக்க நிலை" எனப்படும். உயிரின் அகங்காரமும் ஒடுங்கிய நிலை "உயிர்ப்பு அடக்கம்" எனப்படும். இவை அனைத்தும் நான்காம் சூத்திரத்துட் கூறப்பட்டுள்ள செய்திகள்.


 


கருவிகள் அறிவற்றன ஆதலின் தம்மையும் அறியா; தம்மைச் செலுத்தும் உயிரினையும் அறியா; அவைபோல உயிர்களும் தம்மை அறியா; தம்மைச் செலுத்தும் இறைவனையும் அறியா என்பது ஐந்தாம் சூத்திரத்துப் பொருளாகும். சத்து, அசத்து என்னும் இரு மொழிகட்கும் இலக்கணம் உரைப்பது ஆறாம் சூத்திரம். "சத்து" என்றும் *கெடின்றி விளங்கும் பொருள். எனவே, இறை ஒன்றே அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகும்; ஆயினும் சைவ சித்தாந்தத்தில் முப்பொருள்களாகிய இறை, உயிர், உலகம் என்பன என்றும் உள்ள பொருள்களாக ஒப்புக்கொள்ளப்பட்டவை. ஆதலின் அவை மூன்றும் "சத்தே" ஆகும். உயிரும் உலகமும் விகாரமடைகின்றமையின், அசத்தாதல் பெறப்படும். இம்மூன்றினையும் வேறு பிரித்து அறிதற்கு அவை முறையே சிவ-சத்து, சத-சத்து,சட-சத்து என்று குறிக்கப்பட்டன.


 


3. சாதன-இயல்


 


சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் சிறப்பிலக்கணம். அஃது அசத்தாகிய உலகத்தையும் சத்தாகிய பரம் பொருளையும் அறியவல்லது; அசத்தை விட்டுச் சத்தைப் பற்றக்கூடியது என்பது ஏழாம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. உயிர்களின் தவத்தால் இறைவன் குருபரன் வடிவங் கொண்டுவந்து, பக்குவம் உடையார்க்கு ஞானத்தை உணர்த்தித் தன்பால் அவர்களைச் சேர்ப்பன் என்பதை எட்டாம் சூத்திரம் விளக்குவதாகும்; ஞானம் பெற்றவர் ஐந்தெழுத்து ஓதி, ஞான நிலையைக் காக்க வேண்டும் என்பது ஒன்பதாம் சூத்திரத்திற் கூறப்படுகிறது.


 


4. பயன்-இயல் 


 


இவ்வாறு ஞானத்தைப் பேணும் -உயிர்கள் இறைவன் தம்முடன் ஒற்றித்து நிற்றலால் பாச நீக்கம் பெறும் என்பது பத்தாம் சூத்திரத்துள் விளக்கப்படுகிறது. இறைவன் உயிர்கட்குத் துணையாக நின்று சிவப்பேறு அல்லது முத்தி நிலையைக் காட்டுவான், அவை காணுமாறு உதவியும் செய்வான் என்பது பதினோராம் சூத்திரத்தில் கூறப்படுகிறது. சீவன் முக்தர்கள் மலநீக்கக் கருத்துடையவராய், அடியார் இணக்கம் உடையவராய், சிவ வேடத்தையும் சிவன் கோவிலையும் வழிபடும் நியமம் உடையவராய் நிற்பர் என்பது 12-ஆம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது.


 


4. சிவஞான சித்தியார் 


 


இதனையும் அடுத்துவரும் இருபா இருபஃது என்னும் நூலையும் இயற்றியவர் மெய்கண்டார் முதல் மாணவராகிய அருள்-நந்தி-சிவாசாரியர் என்பவர். "சிவஞான சித்தியார்" என்றும் நூல் சிவஞான போதத்தின் வழிநூல்; பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. சிவஞான போதத்தில் அவையடக்கம் கூறிய ஒரே பாட்டினை அடிப்படையாகக்கொண்டு, "பரபக்கம்" தோன்றியது. "சுபக்கம்", சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களின் பொருளை 12 அதிகாரங்களில் விரித்து விளக்குவது.


 


சிவ ஆகமப் பிரமாணங்களை ஒப்புக்கொள்ளாத சமயங்கள் புறச்சமயங்கள் எனப்பட்டன. வைதிகச் சார்பில்லாத சமயங்கள் "புறப்புறச் சமயங்கள்” எனவும். வைதிகச் சார்புடையவை "புறச்சமயங்கள்" எனவும் கூறப்பட்டன. புறப்புறச் சமயிகளுள் உலகாயதர், சௌத்ராந்திகர், யோகசாரர், மாத்யமிகர், வைபாடிகர் ஆகிய நால்வகைப் பௌத்தர், நிகண்டவாதிகள், ஆசீவகர் என்னும் இருவகைச் சமணர் அடங்குவர். பட்டாசாரியன் மதம், பிரபாகர மதம் என்னும் இருவகை மீமாம்சக மதமும், சத்தப் பிரமவாதம்-மாயாவாதம்- பாற்கரிய வாதம்-கிரீடப் பிரம வாதம் என்னும் நால்வகை ஏகான்ம வாதமும், பாஞ்சராத்ரிகம் என்னும் வைணவ மதமும் புறச்சமயத்துள் அடங்கும். இவர் அனைவருடைய சமயக் கொள்கைகளைக்கூறி, சித்தாந்தத்துடன் முரண்வனவற்றை மறுத்துச் சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதே "பர பக்கம்" என்பது. இது 301 செய்யுட்களைக் கொண்டது.


 


சுபக்கத்தில் சிவஞான போதப் பொருளே விரித்துரைக்கப்படுதலின், அது பற்றிய விபரம் இங்குத் தேவை இல்லை. இப்பகுதி 828 செய்யுட்கள் கொண்டது. சித்தியாரின் பெருமையை, "சிவனுக்கு மேல் தெய்வமில்லை, சித்திக்கு விஞ்சிய நூலில்லை" என்னும் பழமொழியாலும் தாயுமானவர் பாராட்டுரையாலும் நன்குணரலாம். [35]


 


5. இருபா-இருபஃது


 


இது, ஞான-குருவாகிய மெய்கண்டாரை முன்னிலையாக்கி, வினாவுதல் போலவும், அவர் விடை கூறுதல் போலவும், சித்தாந்தக் கருத்துகளை 20 செய்யுட்களில் கூறும் நூல். ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்பும் இதன்கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருள் தொடர்களாகிய "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே", "உன்னிலுன்னும் உன்னாவிடில் விட்டிடும்" [36] என்பவற்றுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. "இரு நிலனாய்த் தீயாகி" என்று தொடங்கும் அப்பர் திருத்தாண்டகத்திற்கும்.[37] "ஆட்பா லவர்க்கருளும் ஆதிமாண்பும்”38 என்றும் திருஞான சம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத்தகும் முறையிற் செய்யப்பட்டுள்ளது. இச்சிறுநூல் மெய்கண்டாரது பெருஞ்சிறப்பினை அறிவிக்கும் பெருமையுடையது.

------------

[35]. Ennatkanni, Gurumarabin -Vanakkam', V.5. 

[36]. தேவாரம், சாமிநாத பண்டிதர் பதிப்பு, பக். 1244 

[37]. அப்பர், பக். 510, செ. 138. சம்பந்தர். பக். 511. செ. 4;2


 


6. உண்மை விளக்கம் 


 


இது மெய்கண்ட தேவரது மற்றொரு மாணவரான திருவதிகை-மனவாசகம் கடந்தார் என்பவர் செய்தது; 53 வெண்பாக்களை உடையது; இது முப்பத்தாறு தத்துவங்களையும், [39] ஆணவம் இருவினை என்பவற்றின் இயல்பையும், [40] ஆன்மாவின் இயல்பையும் [41], கடவுளின் இயல்பையும், [42] ஐந்தெழுத்தின் உண்மையையும், [43] தம் ஆசிரியரிடத்துத் தமக்கு விளக்கும்படி வேண்ட, ஆசிரியர் விடையளித்ததுபோலச் செய்யப்பட்ட நூலாகும். முத்தியிலும் மூன்று பொருளாகும் இறை, உயிர், உலகம் உண்டு என்று விளக்கும் பெருமையுடையது இன்னூல். [44]

------------

[39].செ. 4-21, [40].செ. 22, [41]. செ. 23-26, 

[42]. செ. 27-29, [43]. செ. 30-44, [44]. செ. 50


 


உமாபதி சிவாசாரியார் இயற்றிய நூல்கள்


 


1. சிவப்பிரகாசம் 


 


இது சிவஞான போதத்திற்குச் சார்பு நூலாகும். இதன் பாயிரத்துள் திருக்கயிலாய பரம்பரை ஆசிரியர்கள் இன்னார் என்பதும், சைவ நூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஓதப்பட்டுள்ளன. நூலின் அவையடக்கத்தில் நூல்களை ஆராய்ந்து உண்மை தெரியும் முறை நன்கு விளக்கப்பட்டுள்ளது. பழமை பற்றி ஒன்றை நன்றென்றும், புதுமை பற்றி ஒன்றைத் தீதென்றும் கொள்ளுதல் தவறு என்பது ஆசிரியர் கருத்து.


 


இந்நூல் நூறு விருத்தங்களை உடையது. இதில், சைவ சித்தாந்த அத்வைத நிலை-உடலும் உயிரும், கண்ணொளியும் கதிரொளியும், உயிரறிவும் கண்ணொளியும் போல இரண்டறக் கலத்தல் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஆணவம், கன்மம், வினைப்பயன் வரும் வழிகள், மாயையின் பிரிவுகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பல சமயத்தாரின் முத்தி பேதங்கள் வகுத்துக்கூறி, அவற்றிற்கு மேலதாய்ச் சித்தாந்த முத்தி விளங்கும் முறைமை உணர்த்தப்பட்டுள்ளது.


 


2. திருவருட்பயன்


 


இது குறள் வெண்பாக்களால் ஆயது; பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வோர் அதிகாரத்தும் பத்துக் குறள்கள் உண்டு. இறைவனது இயல்பு கூறும் முதல் அதிகாரம் "பதிமுதுநிலை" என்னும் பெயருடையது. ஏனை அதிகாரங்களின் பெயரும் இவ்வாறே அவை கூறும் பொருளின் இயல்பை விளக்குவன. அவை உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுறு நிலை, அறியுநெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள்நிலை, அணைந்தோர் தன்மை என்பன.


 


3. வினா வெண்பா 


 


இது பதின்மூன்று பாக்களால் ஆகியது. இஃது ஆசிரியர், தம் குருவாகிய மறைஞானசம்பந்தரிடம் சாத்திர உண்மைகளைக் கேட்டுத் தெளியும் முறையில் அமைந்தது. இருளும் ஒளியும் ஓரிடத்தில் கூடல் அரிது என விதந்து, தன்பால் இறைவன் நின்ற வியப்பை அறிவிக்கும் பாடலும், காண்பான்-காட்சி-காட்டப்படும்பொருள் என்னும் மூவகை உணர்ச்சியை நீத்தவர் முத்தி நிலையை அடைவர் எனக் குறிக்கும் திருப்பாட்டும் நுட்பம் செறிந்தவை.


 


4. போற்றிப் பஃறொடை வெண்பா


 


இது, உயிர் தொழிற்படும் முறைமை உணர்த்தும் வாயிலாகத் தமக்குச் சிவஞானம் நல்கிச் சிவானுபவம் ஈந்த குருவைப் பஃறொடை வெண்பாவால் வாழ்த்திய நூலாகும். இறைவனது பரநிலையும் அவனது பொதுநிலையாகும் ஐந்தொழில் நடத்தும் திறமும், உயிர்களை மறைத்துநிற்கும் ஆணவத்தின் இயல்பும், அதனை ஒழிக்கவேண்டி இறைவன் சேர்க்கும் மாயை காரியமாகும் உடற்கருவிகள், போகங்கள், உலகங்கள் இவற்றின் பேருதவியும், உயிர்கள் கர்ப்பவாசத்திலும் துன்புறும் துன்பநிலைகளும், பிறகு வினைக்கு ஈடாக நேரும் மறுமைப் பயன்களும், பின்னைப் பிறவிகளில் கூடிய இருவினை யொப்பு முதலிய பக்குவ நிலைகளும், இறைவன் மூவகை உயிர்கட்கு அருளும் திறமும், உயிர்கள் சிவஞானம் பெற்றுச் சரியை முதலிய நெறிகளில் ஒழுகி அடைந்த சிவப்பேற்றின் நிலையும், "நாமே பிரமம்" என்பதன் இழிவும், சைவசித்தாந்த முத்திப் பெருநிலையும் முறையாக நன்கு விளக்கப்பட்டுள்ளன.


 


5. கொடிக்கவி


 


இது மிகச் சிறிய நூல்; நான்கு வெண்பாக்களால் ஆகியது. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்ற பகுதி இன்புறத்தக்கது. ஐந்தெழுத்தின் நுட்பம் இறுதி வெண்பாவிற் குறிக்கப்பட்டுள்ளது. இது தில்லையிற் கொடியேறும் பொருட்டுப் பாடிய நூலாதலின், "கொடிக்கவி" எனப்பெயர் பெற்றது.


 


6. நெஞ்சு விடு தூது 


 


இஃது ஆசிரியர் தமது உள்ளத்தை மறை ஞான சம்பந்தர்பால் மாலை வாங்கும்படித் தூதுவிடு முகத்தால் பல நூல்களின் பொருள் முடிபையும் விளக்குவது; கலிவெண்பாவினால் ஆனது; 129 கண்ணிகளை உடையது. தசாங்கம் விரித்துரைக்கும் பகுதி படித்து இன்புறத் தக்கது. ஞானாசிரியன் பாசநீக்கம் செய்யும் திறத்தினை விளக்கும் பகுதி குறிக்கத்தக்கது.


7. உண்மைநெறி விளக்கம்


 


இது தத்துவரூபம், தத்துவக் காட்சி, தத்துவ சத்தி, ஆன்ம வடிவம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவ போகம் என்னும் பத்துக் காரியங்களை இனிது விளக்கும் நூல். இத் தசகாரியம் பற்றிய குறிப் புக்கள் முன் சொன்ன சிவப்பிரகாசத்தில் உள்ளன. அவற்றின் விரிவே இந்நூலாகும்.


8. சங்கற்ப நிராகரணம்


 


இது அகச் சமயங்கள் பலவற்றின் கொள்கைகளைக் கூறி, அவற்றைச் சித்தாந்தப் பார்வையால் மறுக்கும் நூல். சிவஞான சித்தியார்-பரபக்கமும் இந்நூலும் சித்தாந்த சைவத்தின் வேறான சமயக் கொள்கை வேறுபாடுகளை அறிதற்கு மிகவும் பயன்படுகின்றன. நிமித்த காரண பரிணாம வாதி சங்கற்பத்தில் அப்பர், சம்பந்தர்தம் திருப்பதிகங்கள், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்பன எடுத்தாளப்பட்டன. சைவசித்தாந்த நிலையே பல்லாற்றானும் மிகச் சிறந்தது என்பதை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது.

-------------------------



10. சைவ சமய வரலாறு*


 


* இது திண்டுக்கல் அருள் நெறித் திருக்கூட்டத்தில் (1-5-55) அபிராமி அம்மன் கோவிலிற் பேசப்பட்டது.


 


சிந்து வெளியில்


 


சிவநெறி அல்லது சைவ சமயம் என்பதை நினைக்கும்போது சிவநெறிக்கே உரிய லிங்க வழிபாடு நினைவிற்கு வருகின்றது. இந்தியாவிலும் எகிப்திலும் மால்ட்டா முதலிய தீவுகளிலும் சிறியனவும் பெரியனவுமான சிவலிங்கங்கள் பல புதை பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. இந்தியாவில் மிகப்பழைய நாகரிக நகரங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் மொஹெஞ்சொதரோ, ஹரப்பா முதலிய இடங்களில் பல லிங்கங்கள் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600-க்கு மேற்பட்ட சிறு லிங்கங்கள் கிடைத்துள்ளன. பண்டை மக்கள் இச்சிறிய லிங்கங்களைத் தாயித்துகள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டியுருந்திருக்கலாம்.


 


சிந்து வெளியில் கிடைத்த ஒரு முத்திரையில், மூன்று முகங்களைக்கொண்ட மனித உருவம் ஒன்று யோகத்தில் அமர்ந்திருப்பது போன்று காணப் படுகின்றது. அதன் மார்பில் முக்கோண வடிவத்தில் அமைந்த பதக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும், இடப்புறம் எருதும் காண்டா மிருகமும் நிற்கின்றன. யோகியின் பீடத்திற்கு அடியில் இரண்டு மான்கள் இருக்கின்றன. சிவபிரான் யானைத் தோலைப் போர்த்தவர், புலித்தோலை அரையில் கட்டியவர், எருதினை ஊர்தியாகக் கொண்டவர், மானை ஏந்தியவர் என்ற நூற்கருத்துக்களை நோக்க, யோகியின் உருவம் சிவனைக் குறிப்பதாகலாம் என்று கூறுதல் பொருத்தமாகும். அந்த யோகியின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் இருக்கின்றன. இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் தலைவரான சர் ஜான் மார்ஷல், "இவ்வுருவம் சிவனைக் குறிப்பது" என்று கூறியுள்ளார். யோகியை அடுத்து விலங்குகள் இருத்தல், சிவன்-பசுபதி என்பதைக் குறிக்கின்றது. மூன்று தலைகள் முன்பு தெரிவதால் பின்பறம் இரண்டு தலைகள் இருத்தல் கூடும் என்று அறிஞர் கூறுகின்றனர்.


 


சிந்து வெளியில் விலங்கு வணக்கமும் காணப்படுகின்றது. நந்தி வணக்கம் சிறப்பிடம் பெற்றதென்று கூறலாம். ஒரு கோவில் முன் நந்தி நிற்பது ஒரு முத்திரையில் குறிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி மக்கள் சிறந்த வணிகர்கள். அவர்களுக்கு எருது மிகவும் பயன்பட்டது. அதனால் எருது வணக்கத்திற்குரிய பொருளாக மாறியிருக்கலாம். பின்னர் நாளடைவில் எருது வணக்கம் லிங்க வணக்கத்தோடு இணைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவை அனைத்தையும் ஒன்றுபடுத்திப் பார்த்த சர் ஜான் மார்ஷல் என்ற அறிஞர் "சிந்து வெளியிற் கிடைத்த புதுமைகளுள் முதலிடம் பெறத்தக்கது சைவத்தின் பழமையேயாகும். அது மாக்கல் காலம் அல்லது அதனினும் முற்பட்ட காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது; இன்றளவும் வழக்கில் உள்ள மிகப்பழைய சமயமாக விளங்குகிறது" என்று வியப்பும் மகிழ்வும் பொங்கக் கூறியுள்ளார்.*

-----


 


* Among the many reveltions that Mohenjo-Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivisam has a history going back to the chalcolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the worl." -Sir John Marshall in his preface to "Mohenjo -Daro and the Indus Civilization". vol.I. p. vii.


சங்க காலத்தில் சிவன் 


சங்க காலத்தில் சிவன்-ஆலமர் செல்வன், முக்கண்ணன், பெருந்தேவன் முதலிய பல பெயர்களால் வழிபடப்பட்டான். சங்க காலக் கடவுளர் வரிசையில் சிவனே முதலிடம் பெற்று விளங்கினான் என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை மதுரைக் காஞ்சி இவற்றால் அறியலாம். முருக வணக்கமும் கொற்றவை வழிபாடும் இருந்தன.


 


சங்க காலத்தை அடுத்த முதற் பல்லவர் காலத்தில் கோப்பெருஞ்சோழன் ஏறத்தாழ எண்பது சிவன் கோவில்களைக் கட்டினான் என்று தேவாரம் கூறுகிறது.


 


பக்தி நெறி 


 


வட இந்தியாவில் புத்தர் காலம் முதல் குப்தர் ஆட்சி வரையில் பௌத்த சமயமே செல்வாக்குடையதாயிருந்தது. குப்தர்கள் சைவ வைணவ மதங்களைப் போற்றி வளர்த்தனர். ஆதலால் அக்காலத்தில், அதுகாறும் பல நூற்றாண்டுகளாகக் கூறப்பட்டுவந்த செவிவழிச் செய்திகளெல்லாம் புராணங்களாக வடமொழியில் எழுதப்பட்டன. சாதி வேறுபாடுகள் வற்புறுத்தப்பட்டன. பொது மக்களுடைய உள்ளங்களைக் கவருவதற்காக ஆடல் பாடல்களைக் கொண்ட பக்திநெறி ஏற்பட்டது. இந்தப் பக்தி நெறி தென்னாட்டிலும் பரவத்தொடங்கியது. பாசுபதம், லகுலீச பாசுபதம், காபாலிகம், மாவிரதம், சக்தி வணக்கம், குமரனை வழிபடும் கௌமாரம் முதலியன தென்னாட்டில் பரவின. இவையனைத்தும் சைவ சமயத்தின் உட்பிரிவுகளாகக் கொள்ளப்பட்டன. ஏறத்தாழக் கி.பி. 400-500 கால எல்லைக்குள் செய்யப்பட்டதாகக் கருதப்படும் திருமூலர் திருமந்திரத்திலும் இவை இடம் பெற்றன.


 


"விரிசடை அந்தணர் விரதிகள் பாசுபதர் காபாலிகர்

தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே"

என்று கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும் இவர்களைக் குறிப்பிட்டுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மாருள் இப்பலவகைச் சைவரும் காணப்படுகின்றனர்.


 


கி.பி. 7-ஆம் நூற்றாண்டுமுதல் 9-ஆம் நூற்றாண்டு வரை இப் பக்திநெறி தமிழகத்தில் பெருவெள்ளமாகப் பரவியது. கோவில்கள் மிகப் பலவாகத் தோன்றின. ஆடலும் பாடலும் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. திகம்பர சமணமும் பௌத்தமும் நாட்டில் செல்வாக்கை இழந்தன. சைவரைப் பின்பற்றியே வைணவ ஆழ்வார்களும் பக்திநெறியைப் பரப்பினர். பல்லவ வேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தம் இரு கண்களாகக் கருதி வளர்த்துவந்தனர். அழிந்து விடக்கூடிய மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம், இவற்றால் ஆகிய கோவில்களைக் கட்டாமல், பல்லவ மன்னர் மலைச்சரிவுகளில் குடைவரைக் கோவில்களை அமைத்தார்கள்; பின்பு பாறைகளையே கோவில்களாக அமைத்தார்கள்.


 


அவை ஒற்றைக் கல் கோவில்கள் எனப்படும். அவற்றின் பின்னரே செங்கற்களைப் போலக் கருங்கற்களை உடைத்து அவற்றைக் கொண்டு சுவர் எழுப்பிக் கோவில் கட்டத் தொடங்கினர். இங்ஙனம் அமைக்கப்பட்ட முதற்கோவிலே காஞ்சி கயிலாசநாதர் கோவில். பல்லவ மன்னர் இவ்வாறு கோவில்கள் அமைப்பதிலும் சிற்பங்களையும் ஓவியங்களையும் அமைப்பதிலும் கோவில் ஆட்சியிலும் கருத்தைச் செலுத்தினமையால், சைவ வைணவ சமயங்கள் நன்கு வளர்ச்சி பெறலாயின. நாயன்மார்கள் நூற்றுக்கணக்கான சிவன்கோவில்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினர். பண்ணோடு பாடப்பட்ட அப்பாடல்கள் மக்கள் உள்ளங்களை இழுத்தன. அக்காலத்தில் சைவத்தில் சாதிவேறுபாடுகள் கவனிக்கப்படவில்லை.


 


"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார்

சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே"


 


என்னும் அப்பர் வாக்கை நோக்குக. இடையிடையே அடியாரிடம் சாதி வேறுபாட்டுணர்ச்சி காணப்பட்டது; ஆனால் அஃது அவ்வப்பொழுது மாற்றப்பட்டது என்பதும் நாயன்மார் வரலாறுகளால் இனிதுணரப்படும். சாதியற்ற சமுதாயம் தான் ஒன்று பட்டு வாழ இயலும். சமண சமயத்திலும் பௌத்த சமயத்திலும் சாதிகள் பேசப்படுவதில்லை. ஆதலால் அவற்றை ஒழிக்கப் புறப்பட்ட சைவமும் வைணவமும் சாதி வேறுபாடுகளை முதலில் கவனிக்கவில்லை. குருக்கள் மரபில் பிறந்த சுந்தரர் உருத்திர கணிகையான பரவையாரையும், வேளாளப் பெண்மணியாகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டமையே இவ்வுண்மையை விளக்கப் போதிய சான்றாகும். 


 


பௌத்தசமணங்கள் செல்வாக்கிழந்து சைவம் மட்டும் தனியரசுசெலுத்திய பிற்காலத்தில், சுந்தரர் செய்துகொண்ட திருமணங்கள் இரண்டும் முன் வினைப் பயனால் நேர்ந்தவை என்று கதை கட்டி விடப்பட்டது. கயிலாயத்தில் சுந்தரர்மீது காதல் கொண்ட இரு மாதரும் நிலவுலகில் சங்கிலியாராகவும் பரவையாராகவும் பிறந்தனர் என்பது அக்கதை. அங்ஙனம் பிறந்தவர்கள் சுந்தரர் தோன்றிய குருக்கள் மரபிலேயே பிறந்திருக்கலாம் அல்லவா? அவர்கள் ஏன் கணிகையர் மரபிலும் வேளாளர் மரபிலும் பிறத்தல் வேண்டும்? இவ் வினாக்களுக்குத் தக்க விடை கிடைத்தலரிது. மேலும், காதலைச் சுவைக்கப் பிறந்தவராகக் கூறப் பட்டவர் காதலைப் போதிய அளவு சுவைக்கவில்லை என்று பெரிய புராணமே கூறுகிறது.


 


சோழர் ஆட்சியில் 


 


சோழர் காலத்தில் கோவில்கள் பெருகின; வழிபாட்டு முறைகள் பெருகின; வழிவழிச் சைவரான சோழ மன்னர் எல்லாக் கோவில்களிலும் திருமுறை ஓதுவார்களை நியமிக்க ஏற்பாடு செய்தனர். இராச ராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் பண்பட்ட ஓதுவார் 48 பேர் அமர்த்தப்பட்டனர். ஆடல் பாடல்களுக்காக நானூறு பதியிலார் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கோவிலிலும் விழாக்கள் நடைபெறறன; சைவ சமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களான சிவஞான போதம் முதலிய நூல்கள் தோன்றின.


 


கோவில்களை அடுத்து மடங்கள் இருந்து சமயக் கல்வியை வளர்த்து வந்தன. அம்மடங்களில் யாத்திரிகர் உண்பிக்கப்பட்டனர். பெரிய கோவில்களில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையங்கள் இருந்தன. பெரிய கோவில்களில் மருத்துவ மனைகளும் அமைந்திருந்தன. அவற்றில் அறுவை மருத்துவரும் (Surgeon), நோய் மருத்துவரும் (Physician), தாதிமாரும் (Nurses) இருந்தனர். மருந்து வகைகளைக் கொண்டுவருவோரும், அவைகளைப் பக்குவம் செய்வோரும் இருந்தனர். கோவில் மண்டபங்களில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் வளர்க்கப்பட்டன. சிற்ப ஓவியக் கலைகள் கோவில்களில் வளர்ச்சி பெற்றன. கோவிலுக்குள்ளேயே ஊராட்சி மன்றமும் நடை பெற்றது. ஊரில் பஞ்சம் ஏற்பட்டு நாட்டு மக்கள் நலியும்பொழுது கோவிலில் உள்ள பொன் வெள்ளி நகைகளும் பாத்திரங்களும் உருக்கி ஊரார்க்குக் கடனாகத் தரப்பட்டது என்று ஆலங்குடிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தகைய முறைகளால் கோவில் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலைக்களனாய் இருந்து வந்தது. அரசன் முதல் ஆண்டி ஈறாக அனைவரும் கோவிலைத் தம் உயிராக மதித்தனர். கோவில் ஊர் நடுவிலே அமைந்து மக்களைத் தன்வயப்படுத்திவந்தது. 


 


சமயத்தின் உயிர்நாடி ஆட்டம்


 


இவ்வாறு சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஆனால் சைவத்துள் சாதி வேறுபாடுகள் தோன்றி வளர்ந்து வயிரம் பாய்ந்துவிட்டன. சமுதாயத்தில் பல சாதிகளுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. செருப்பு அணிந்துகொண்டு தெருவில் நடக்கச் சில சாதிகளுக்கு உரிமையில்லை. மாடிவீடு கட்டிக்கொள்ளச் சில சாதிகளுக்கு உரிமையில்லை. சில சாதியர் இசவ்வளவு தூரத்தின் நின்று பேசவேண்டும், சிலர் இவ்வளவு தூரத்தில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற வரையறைகள் ஏற்பட்டன. இக்கொடுமைகள் எல்லாம் பல கோவில் கல்வெட்டுக்களில் காணலாம். இக்கொடுமைகளால் சைவ சமுதாயம் வலிமை குன்றியது. மன ஒற்றுமை அகன்றது.


 


இந்தப் பரிதாப நிலையில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் படையெடுப்புத் தென்னாட்டில் நடந்தது. புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் கருவறை மட்டும் தப்பியது. எஞ்சிய கோபுரங்களும் திருச்சுற்றுக்களும் தரைமட்டமாக்கப்பட்டன. பெருங்கோவில்களில் இருந்த நகைகளும் பிறவும் கொண்டு செல்லப்பட்டன. நாடாண்ட பாண்டியன், மக்களை நட்டாற்றில் விட்டு ஓடிவிட்டான். சாதிக்கொடுமையால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் தன்மான உணர்வுடன் படையெடுத்தவரை எதிர்த்து நிற்க முடியவில்லை. பல கோவில்கள் தாக்கப்பட்டன. விக்கிரகங்களின் கைகால்கள் ஒடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 


 


சைவரும் வைணவரும் படையெடுத்தவர்க்குப் பணிவு காட்டினர். "போர்" என்றவுடன் துள்ளிக்குதித்த சங்ககாலத் தமிழன் - சாதி அறியாத தமிழன். மாலிக்காபூர் படையெடுத்தபோது வாழ்ந்த தமிழன் - சாதிக் கட்டுப்பாட்டால் நசுக்கப்பட்ட தமிழன். மூடக் கொள்கைகளாலும் சாதி வெறியினாலும் சமய வெறியினாலும் சைவ சமயம் தன் ஆற்றலை இழந்து எதிரிக்குப் பணிந்தது. சைவ சமய வரலாற்றில் இது இரங்கத்தக்கப் பகுதியாகும். பல்லவர் காலச் சைவர்கள் சமணரைக் கழுவேற்றினர்; பிற சமயத்தாரைக் கொடுமைப்படுத்தினர். சோழர்காலச் சைவர் வைணவரோடு ஒன்றுபட்டு வாழ மறுத்தனர்; இராமாநுசரைச் சோழ நாட்டிலிருந்தே விரட்டினர். இக்கொடுமைகளின் விளைவைத்தான் அயலார் படையெடுப்பால் சைவர்கள் அநுபவித்தனர். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது சைவ வரலாற்றில் உண்மையாகிவிட்டது.


 


சமய மாற்றம் 


 


சைவ சமயத்தில் சாதி என்னும் பெயரால் இழிவு படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம் ஆட்சி நிலையானதும், இந்து சமயத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழிவினால், சாதி அறியாத இஸ்லாத்தைத் தழுவினர்; வேறு சிலர் தங்களுக்குக் கல்வியும் மருத்துவ உதவியும் மனித உரிமைகளையும் உதவிய கிறித்துவ சமயத்தைச் சார்ந்தனர். கிறித்துவ சமயமும் சாதியறியாச் சமயம். 'சைவர்கள்' என்ற பெயருடன் பாமரராயும் விலங்குகளாயும் வாழ்க்கை நடத்திய தமிழர்கள், கிறித்துவ சமயத்தைத் தழுவிக் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறலாயினர். தாம் செய்துவந்த கொடுமைகளால் தமது சமுதாயம் வலுவிழந்தது. மக்கள் மதம் மாறினர் என்பன அறிந்தும், சமுதாயச் சீரழிவிற்கும் சமயச் சீரழிவுக்கும் தாம் காட்டிய சாதிவேறுபாடுகளே காரணம் என்பதை அறிந்தும், அக்காலத்து உயர் மக்கள் சுயநல வெறியினால் சாதிகளை ஒழிக்க முன் வரவில்லை. "சமயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்" என்ற ஆங்கிலேயர் வாக்குறுதி இவ்வுயர்ந்தவர் கொடுமைகளுக்கு அரண் செய்வது போல் அமைந்தது. மேன்மேலும் சாதிவெறி தலை தூக்கியது. கோவிலின் கருவறையில் இன்ன வகுப்பார் இருந்து வழிபடலாம், கருவறைக்கு வெளியே இன்ன வகுப்பார் நின்று வழிபடலாம், கோவிலுக்குள்ளே இன்ன வகுப்பார் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் வளர்ந்தன.


 


முற்போக்கு


 


ஆங்கிலக்கல்வி நாடெங்கும் பரவத் தொடங்கியது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் சாதிகள் இல்லை என்பதைப் படித்தவர் உணர்ந்தனர்; சாதிகள் இறைவனால் உண்டாக்கப்பட்டவை என்று தமக்கு மேலோர் கூறிவந்த கூற்று முழுப் பொய் என்பதை உணர்ந்தனர். அவ்வுணர்ச்சியே நமது சமுதாய மறுமலர்ச்சிக்கு அடிப்படை. நாடெங்கும் இவ்வுணர்ச்சி வளரத் தலைப்பட்டது. காந்தியடிகள் சாதி ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமையை அளித்தார், அவர்களுக்கும் கோவில் நுழைவு கிடைத்தது. இங்ஙனம் பெரியோர் பலர் முயற்சியின் பயனாக, இன்று கோவிலுள் சாதி வேறுபாடு காண்பது என்பது நிறுத்தப்பட்டது. ஆயினும் சமயம் சீர்திருந்தியதா?


 


சமயத்தில் பாசி 


 


இடித்தல், மழை பெய்தல் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளைத் தெய்வங்களின் செயல்களாகப் பண்டை மக்கள் நினைத்தனர்; தம் மனம் போனவாறு அவற்றிற்குக் கதைகள் கட்டினர். அக்கதைகள் நாடளடைவில் சமயத்திற்குரிய கதைகளாக மாறிவிட்டன. இந்நாட்டவர் எகிப்து, சுமேரியா முதலிய நாடுகளோடு கடல் வாணிகத்தில் தொடர்பு கொண்ட காரணத்தால், அவ்வந்நாட்டுக் கதைகள் சில இங்கும் பரவ வழியேற்பட்டது. இந்நாட்டுக் கதைகள் அந்நாடுகளிற் பரவ வழி ஏற்பட்டது. இதனால் சில கதைகள் பெயரளவில் வேறுபட்டும் பொருளளவில் ஒன்றுபட்டும் இம்மூன்று நாடுகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய பல கதைகள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இடம் பெற்றுவிட்டன. இவற்றின் பயனாக, "அன்பே சிவம்" என்பதை அடிப்படையாகக் கொண்ட சைவ சமயம், பௌராணிக சமயமாக மாறிவிட்டது. இம்மாறுதல் நாயன்மார் காலத்தில் தொடங்கியது; ஆயினும் காலப்போக்கில் பல கதைகள் சமயத்துறையில் சேர்க்கப்பட்டு, நவக்கிரக வழிபாடு போன்ற புதிய தெய்வ வழிபாடுகள் இணைக்கப்பட்டு, பௌராணிக சமயம் வளர்ச்சி பெற்றது. பாமர மக்கள் மிகுந்துள்ள இந்நாட்டில் இக்கதைகளே சமயத்தின் உயிர்நாடியாகக் கருதப் படுகின்றன.[1]

----------


"In Babylonia, as elsewhere, the priests utilized the floating material from which all mythologies were framed and impressed upon it their doctrimes."-Myths of Babylonia and Assyia, p, 189.


 


இவற்றைச் சொல்லிப் பிழைப்பவரும் பலராகி விட்டனர். இதனால் "அன்பே சிவம்" என்ற கொள்கை பாதாளத்திற் புதைக்கப்பட்டு, அதன் மீது அறிவுக்குப் பொருத்தமற்ற கதைகள் கட்டப்பட்டன. இக்கேட்டினால், பெரும்பாலான சைவ மக்கள் திருநீறு அணிவதோடு அமைந்தனர். தீய பழக்கவழக்கங்களைக் கைவிட்டிலர். சமய வரலாறும் அறிந்திலர். திருநீற்றை அணிந்து கொண்டே அடாத செய்கைகளைச் செய்யும் சைவர்கள் பெருகிவிட்டனர். தம் வீடுகளில் ஒரு மணி நேரமுதல் மூன்று மணி நேரம் சிவபூஜை செய்யும் சிலர் இருக்கின்றனர். இவர்களில் பலர் ஒழுக்கமற்றவர்களாகவும் தீய வழிகளில் பொருளீட்டுபவராகவும், ஆனால் கோவில் திருப்பணி செய்பவர்களாகவும் காண்கின்றனர். சமயப் போர்வையில் பலர் செய்கின்ற தீய செயல்களுக்கு அளவில்லை. ஒரு சைவன் பிற சைவனிடம் அன்பு காட்ட வேண்டுமென்பதையும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதையுமே சைவர் மறந்துவிட்டனர். கல்விச் செருக்காலும் செல்வச் செருக்காலும் பதவிச் செருக்காலும் சைவர் பலர் தம் சமயத்தைச் சேர்ந்த பிறருடன் பழகுவதும் இல்லை; மதிப்பதும் இல்லை. இத்தகைய பல காரணங்களால் சமுதாயத்தில் சைவர் ஒற்றுமையின்றி வலிமை குன்றிவிட்டனர்.


 


சைவ மடங்கள் 


 


சைவமடங்கள் சைவ சமயத்தை வளர்ப்பதற்கென்றே ஏற்பட்டவை. நாடாண்ட மன்னரும் பிறரும் இந்நன்னோக்கத்திற்கே செல்வத்தையும் பல வேலி நிலங்களையும் இம்மடங்களுக்கு உதவினர்; பல கோவில்களை இம்மடங்களின் ஆட்சியில் விட்டு வைத்தனர்; அறிவிலும் ஒழுக்கத்திலும் சமய சாத்திரக் கல்வியிலும் முதிர்ந்த பெருமக்களை மடத்துத் தலைவர்களாக வைத்தனர். பிற்காலத்தில் இந் நிலை மாறியது. மடாதிபதி ஜமீனை ஆட்சி புரியும் ஜமீன்தாரைப் போல மடத்துக்குரிய வரவு செலவுகளிலும் வழக்குகளிலும் பெரும் பொழுதைப் போக்கத் தொடங்கினர். ஒரு சிலர் ஒழுக்கம் தவறியும் நடக்கத்தலைப்பட்டனர். எனவே, கால வேறுபாட்டாலும் மடங்களின் நிலை வேறுபாட்டாலும் அரசியல் மாற்றத்தாலும் சைவசமய பிரச்சாரம் இல்லாமையாலும் பொதுமக்களுக்கும் சைவ மடங்களுக்கும் தொடர்பு ஏற்படவில்லை. பொது மக்களுக்குப் பொருள் விளங்காத நிலையில் சில நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தலும், படித்த ஒரு சிலருக்குப் பொன்னாடை போர்த்தலும், ஆண்டு விழாக்களில் சமயச் சொற்பொழிவு செய்வோருக்குச் சிறிது பொருள் கொடுப்பதுமே மடங்கள் செய்யும் சைவப் பணிகளாக இருந்துவந்தன. இன்று இந்த நிலை மாறி, இவற்றோடு பொது மக்களுககுப் பள்ளிக்கூடம் வைத்தல், மருத்துவ நிலையம் அமைத்தல், திருக்குறள் போன்ற அரிய நூல்களை வெளியிடுதல் முதலிய தொண்டுகளில் மடங்கள் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது,


 


மடங்கள் செய்ய வேண்டுவன 


 


1.பொது மக்களுக்குப் புரியும் வகையில்- எளிய வகையில் சைவசமய வரலாறு, சைவ சமயக் கொள்கைகள், சைவம் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ள தன்மை, திருக்கோவில்களின் சிறப்பு, அவற்றை மக்கள் பயன்படுத்தும் முறை, சைவ சித்தாந்தத்தின் தெளிவான கருத்து- இவற்றைச் சிறுசிறு நூல்களாக வெளியிட்டுப் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.


 


2. சைவ சமயத்தில் சாதி வேறுபாடு இல்லை என்பதை வற்புறுத்திச் சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும். எல்லோரும் ஒரே பந்தியில் உட்கார்ந்து உணவு கொள்ளும் முறை கையாளப்படுதல் வேண்டும். சாதி ஒழிப்புச் சட்டம் வரும் வரையிற் சைவர்க்குள் கலப்புமணம் வளர்தல் வேண்டும்.


 


3. பல சிற்றூர்களில் தொடக்க நிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்துச் சைவப் பிள்ளைகட்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும். அப்பள்ளிகளில் சிறுவர்க்கு சமய அறிவு கற்பிக்கப்படல் வேண்டும். அச்சிற்றூர்களில் மருத்துவ மனைகள், படிப்பகங்கள், நூல் நிலையங்கள் முதலியவற்றை அமைத்துப் பொதுமக்களுக்கும், மடத்துக்கும் தொடர்பு உண்டாக்குதல் வேண்டும். ஏழாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து இந்நாட்டுக்கு வந்த கிறுத்துவப் பாதிரிமார்கள் இவற்றைச் செய்தமையாற்றான் தங்கள் சமயத்தை வளர்த்தனர் என்ற உண்மையை நாம் உணர்தல் வேண்டும்.


 


4. ஆங்கில அறிவும், தமிழ் அறிவும் பெற்ற சமயப் பிரசாகரை நியமித்து ஒவ்வொரு மடமும் மக்களிடைச் சமயப்பிரசாரம் செய்வித்தல்வேண்டும். வீணானவையும் வாழ்க்கைக்குப் பயன் படாதனவுமான கதைகளைச் சொல்லி மக்களை மேலும் மூடர்களாக்காமல் சமய நெறியில் வாழ வழி அமைத்துத் தருதல் வேண்டும். 


 


5. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" என்ற முறை பற்றி பொதுமக்களுக்குச் சிறிதும் பயன்தராத விழாக்களையும் ஆரவாரங்களையும் ஒழித்து, அவற்றிற்குச் செலவாகும் பணத்தை ஏழைச் சைவ மக்களுக்கு உதவி, அவர்களைச் சிவநெறியில் வாழ்விக்க வழி செய்தல் வேண்டும். மக்களை வாழ்விக்கத்தகும் முறையில் "சிவபிரான் தொழிற்சால" போன்ற கடவுட் பெயர்களால் தொழிற்சாலைகளை நிறுவவேண்டும்.


 


இவை போன்ற முயற்சிகளில் மடங்கள் ஈடுபட்டால், சைவம் தழைத்தோங்க வழியுண்டு.


 


தமிழில் வழிபாடு


 


தமிழர் வரிப்பணத்தாலும் தமிழ் வேந்தர் முயற்சியாலும் உண்டாக்கப்பட்ட கோவில்களே இத் தமிழ்நாட்டில் இருப்பவை. இவற்றில் சைவத் திருமுறைகள் ஓதியே வழிபாடு செய்யப்பட்டு வந்தது. சிறந்த சிவத்தலங்களான திருமறைக்காடு "வேதாரண்யம்" எனவும், திருவெண்காடு "சுவேதாரண்யம்" எனவும், திருமுது குன்றம் "விருத்தாசலம்" எனவும் மாறிய காலத்தில், தமிழில் இருந்த வழிபாடு வடமொழியில் மாறிவிட்டது போலும்! சுவாமி, அம்மன் பெயர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குப் புரியாத அபீத குஜாம்பாள் முதலிய வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. இந்த அலங்கோல நிலை, கோவிலுக்குச் செல்லும் பொதுமக்களின் உள்ளத்தில் அழுந்திய பக்தி ஏற்படாது செய்துவிட்டது,. வழிபட வரும் மக்களுக்குப் புரியாத மொழியில் அர்ச்சனை செய்யப்படுமாயின், அதனால் வழிபடுவோர் உள்ளம் எவ்வாறு குழையும்? சைவம் சீரழிவதற்கும், கோவில் வழிபாடு குறைந்து வருவதற்கும் இது மிகச்சிறந்த காரணமாகும். அறநிலையப் பாதுகாப்பாளர்களும், மடங்களின் தலைவர்களும், சைவப் பெருமக்களும் இத்துறையில் உடனே கவனம் செலுத்துதல் வேண்டும். அறிவும் ஆராய்ச்சியும் கேள்வி கேட்கும் திறனும் பெருகிவரும் இக்காலத்தில், அறிவுக்குப் பொருந்த நடப்பதே சமயவளர்ச்சிக்கு ஏற்றது.


 


பொது மக்கள் தொண்டு


 


சைவ மக்கள் தங்கள் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சைவப் பெயர்கள் வைப்பது நல்லது. சிவநெறிச் செல்வன், தேவாரச் செல்வன், நெடுமாறன், கோட்புலி, கண்ணப்பன், கழற்சிங்கன் என்றாற்போல நாயன்மார் பெயர்களையும் திருமுறைகளில் வரும் அரும் பெயர்களையும் வைத்து வழங்குதல் பழமையைப் புதுப்பித்து நிலைக்கச்செய்வதாகும். இவ்வாறே பெண் பிள்ளைகளுக்கு மங்கையர்க்கரசி, சிவ அரசி, வெண்காட்டு நங்கை, சந்தன நங்கை முதலிய சைவப் பெயர்களை வைக்கலாம்.


 


சைவர் தம் ஊர்களில் ஏற்படும் புதிய தெருக்களுக்குச் சேக்கிழார் தெரு, சம்பந்தர் தெரு, ஆலால சுந்தரர் தெரு, எனச் சைவப் பெயர்களை வைக்க ஏற்பாடு செய்யலாம். இவ்வாறே தம் வளமனைகளுக்குச் 'சேக்கிழார் அகம்' 'சுந்தரர் அகம்' எனப் பெயர்களைச் சூட்டலாம்.


 


சிவநெறிச் செல்வரும் சைவ சங்கங்களும் சைவ சமய வரலாறு, சைவப் பெயர்கள், பாராயணத்திற்குரிய பதிகங்கள் போன்றவற்றைச் சிறுநூல்களக எழுதச் செய்து இலவசமாகவோ, குறைந்த விலையிலோ பரப்புதல் வேண்டும்; அடிக்கடி தக்காரைக் கொண்டு, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், சொற்பொழிவுகளின் வாயிலாகச் சைவ சமயப் பற்றை ஊட்டுதல் வேண்டும்; வாழ்க்கைக்கும் சமயத்திற்கும் உள்ள தொடர்பை தெரிவித்தலே மிக்க பயனுடைய சொற்பொழிவாகும்.


சைவ சமயம் முற்றிற்று


---------------------------------------


 

 Related Content  சேக்கிழார் - ஆராய்ச்சி நூல் Read more  Shaiva Lahari Radio Multilingual Shiva Devotional 

Read more at: https://www.shaivam.org/to-know/saiva-samayam-katturai-rasamanikkanar/#gsc.tab=0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி